Thursday 29 August 2013

தாமதம்

ஓர் நிலவு தேய்கையில்
ஒளி கொஞ்சம் குறைகையில்
உற்று நாம் நோக்குவதில்லை
முழுதாய் மறைகையில் மட்டும்
"அமாவாசை" என்கிறோம்!

Friday 23 August 2013

பதுக்கல்

சூழும் கருமேகங்களைக்
காற்று கடத்தத் துடிக்க 

நீண்ட நெடு மரங்கள்
பாங்காய் அதனைச் சிறை பிடிக்க 

காற்றில் நெகிழ்ந்து,
மரங்களின் வருடலில் சிலிர்த்து
மேகம் உருகிடும்...
மழையாய்

தோட்டத்தில் துள்ளும் கன்று
ஆடிக் கலைத்திட
அம்மா என்ற குரலில்
பசுவின் அருகில் சென்றிட 
கன்று நாவால் மடி வருட,
தாய்மையில் நிறைந்து
பசு, அன்பை சுரந்திடும்
 பாலாய்

எந்திர உலகத்தில்
நாளை வரும் என்ற சோம்பலில்
அன்பைக் கூட அளவிட்டு
மனமில்லாமல் மடிந்த பின்
தரும் நம் பதுக்கல்
ஆற்றல் மட்டும் கைவரவில்லை
ஏனோ இயற்கைக்கு இயற்கையாய்

Monday 12 August 2013

உளவியல்

"நான்", என்று நான்
சொல்லிக் கொண்டு இருக்கும்வரை
"நான்" அதிகம் காயப்படுகிறேன்

"நீ" என்று நீ
சுட்டிக் கொண்டு இருக்கும்வரை
"நீ" அதிகம் இழக்கிறாய்

"நாங்கள்" என்று நீங்கள்
ஒதுங்கி கொண்டு இருக்கும்வரை
"அவர்கள்" உங்களை ஆட்சி செய்வார்கள்

"மனிதர்களென்றே"
நினைத்து பழகுங்களேன்
மனிதர்கள் மனதால் வசப்படுவார்கள்


Thursday 8 August 2013

தேடல்

தேடித் தேடி அன்பு செய்வோம்,
அன்பாய் உடன் இருப்போரை அழ வைத்துவிட்டு!
# காதல், நட்பு, பெற்றோர்!

Tuesday 6 August 2013

தாய்மை

ஒரு தவறுக்காக
குழந்தையை கடிந்து கொண்டு - பின்
கடிந்து கொண்டதை பெரும் தவறென
தன்னையே கடிந்து கொள்ளும்
தாயின் மனம்!

ஒன்றின் ஆளுமை!

எனக்கு  பிடித்தமானது
உனக்கு பிடிக்கவில்லை
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்தமானதில்லை

எனக்கென்ன  பிடிக்கும்
உனக்கு தெரியவில்லை
உனக்கென்ன பிடிக்கும்
எனக்கு தெரியாததேயில்லை

உன்னில் குறையேதும் கண்டதில்லை
என்னில் நீ  குறைக்காணும் குணத்தைக் கூட 
எல்லாம் கடந்து மறந்து கடந்து
உனக்கு என்னை மட்டுமே பிடித்துப்போனது
என்னில் என்னையே  நான் தொலைத்தப்பிறகு!

குலதெய்வம்


என்னில் கேள்விகள் இருந்தது
பள்ளி முடிந்து வந்து கேட்க
பாடம் முடிந்து கேட்க
காதல் சொல்வதற்கு முன் கேட்க
கைப்பிடிக்கும் முன் கேட்க
கரு சுமக்கும் முன் கேட்க
பிள்ளைப் பெறுகையில் கேட்க
அக்கேள்விக்கும்  முன் கேட்க

காத்திருப்பில்,
கட்டமைத்த சமூக அமைப்பில்
கேட்காமல் கேள்விக்குள் புதைந்துப் போனேன்
பதில் இல்லாக்  கேள்வியென்று 
எனக்குள் பலமுறை மறுகிப் போனேன்
கேள்விகளோடே ஒருநாள் எரிந்தும் போனேன்

இதோ என் சாம்பலை முன்வைத்து
என்னை சாமி என்று போற்றி
குலதெய்வம் என்றே வாழ்த்துகின்றீர்
வாழும் காலத்தில்,
நான் பெறாத வரங்களை
கைப்பிடி உணவு தந்து,
தா என்றே வேண்டி தொழுகின்றீர்

பெண்ணைக் கொன்று விட்டு
தியாகத்தில் திரு வுரு செய்து
பெண்மை போற்றுகின்றீர்
ஓங்கி அறைந்து
ஓர் உண்மை சொல்வேன்
மதித்து வாழ்தலே வரம் - அதுவே
வாழ்தலுக்கான அறம்!

இறையில் பெண் போற்றி -
உங்கள் அறையில் தூற்றதீர்!

Monday 5 August 2013

மெல்ல வீழ்ந்திடும் தேசம்

அங்கே ஒரு திருட்டு
தொலைந்தது ஒரு பொருள்

அங்கே ஒரு கொலை
போனது ஒரு உயிர்

அங்கே ஒரு அணுவுலை
வந்தது அணுக்கசிவு

அங்கே ஒரு ஊழல்
இருண்டது பொருளாதாரம்

அங்கே ஒரு பூகம்பம்
குறைந்தது மக்கள்தொகை

அங்கே ஒரு மழலையின் பிச்சை
வீழ்ந்தது ஒரு பெரும் கனவு!

தொலைத்திடும் உறவுகள்!


வார்த்தைகளில் எனை வீழ்த்தி
மீளாத் துயரத்தில் ஆழ்த்தி
வழியெங்கும் மௌனத்தில் மூழ்கி
என் மரணத்தில் ஏன் அழுகிறாய்?

கிடைத்தற்கரிய வாழ்க்கையிது
அழுது கரைத்திட்டால் தீர்ந்திடாது
நல்லாற்றல் கொண்டு செதுக்கிடு
இனியேனும் பிறர் வாழ வாழ்ந்திடு!

Friday 2 August 2013

Gist

ஆசை, அன்பு, காதல் இவற்றை உணர்த்துவதை விட,கோபம், வெறுப்பு மற்றும் பிரிவினையை  உணர்த்துவதற்குத்தான் நமக்கு அதிக வார்த்தைகளும், நேரமும் தேவைப்படுகிறது!


இறுதியில் வரும் வெளிச்சம்

பாகுபாடுகளை மீறி,
அன்பை உணர்ந்து,
மன்னிப்பு வேண்டி, நெகிழ்ந்து,
ஒருவருக்குக்காக நாம் உருகும் வேளை
பெரும்பாலும்
அவர்களின் கல்லறைகளின் முன்புதான் நிகழ்கிறது!

அன்பின் அடித்தளம்

எந்த அன்பையும் சாதி கொன்றிடும்
எந்த உறவையும் செல்வம் முறித்திடும்
அன்பின் அடித்தளம் பலவீனமாகும் போது!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!