Tuesday 6 August 2013

குலதெய்வம்


என்னில் கேள்விகள் இருந்தது
பள்ளி முடிந்து வந்து கேட்க
பாடம் முடிந்து கேட்க
காதல் சொல்வதற்கு முன் கேட்க
கைப்பிடிக்கும் முன் கேட்க
கரு சுமக்கும் முன் கேட்க
பிள்ளைப் பெறுகையில் கேட்க
அக்கேள்விக்கும்  முன் கேட்க

காத்திருப்பில்,
கட்டமைத்த சமூக அமைப்பில்
கேட்காமல் கேள்விக்குள் புதைந்துப் போனேன்
பதில் இல்லாக்  கேள்வியென்று 
எனக்குள் பலமுறை மறுகிப் போனேன்
கேள்விகளோடே ஒருநாள் எரிந்தும் போனேன்

இதோ என் சாம்பலை முன்வைத்து
என்னை சாமி என்று போற்றி
குலதெய்வம் என்றே வாழ்த்துகின்றீர்
வாழும் காலத்தில்,
நான் பெறாத வரங்களை
கைப்பிடி உணவு தந்து,
தா என்றே வேண்டி தொழுகின்றீர்

பெண்ணைக் கொன்று விட்டு
தியாகத்தில் திரு வுரு செய்து
பெண்மை போற்றுகின்றீர்
ஓங்கி அறைந்து
ஓர் உண்மை சொல்வேன்
மதித்து வாழ்தலே வரம் - அதுவே
வாழ்தலுக்கான அறம்!

இறையில் பெண் போற்றி -
உங்கள் அறையில் தூற்றதீர்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!