Tuesday 21 February 2017

அடுத்தகனவில் சந்திக்கலாம்

#அணுக்கதை!
காவல்துறையின் வன்முறை காட்சிகள் எல்லாம் "மார்பிஃங்"
பற்றியெறிந்த வாகனங்கள் எல்லாம் "டம்மி"
கர்ப்பிணியை மிதித்தது, அடித்தது எல்லாம் "ஜாலி"
அவர்கள் சிந்திய இரத்தம் எல்லாம் "போலி" "டோமெட்டோ சாஸ்"
நேற்று பார்த்த காட்சிகள் எல்லாம் "சினிமா ஷூட்டிங்"
காலையில் இருந்து இரவு வீடு சேரும்வரை நான் கடந்ததும் கண்டதும் எல்லாம் ஒரு "மோசமான கனவு"

காவல்துறை நல்லவர்கள், அவர்கள் பாவம், So sad, ரொம்ப பாவம்தான் அவர்கள், கையில் லத்தியைக் கொடுத்ததும் கைநடுங்கி அடித்ததில் மண்டை உடைந்துவிட்டது பலருக்கு, கர்ப்பம் கலைந்துவிட்டது பெண்ணுக்கு, தீக்குச்சியைத் தெரியாமல் எறிந்ததில் வண்டிகள் தீப்பற்றிக் கொண்டது, வாகனங்கள் தானாகவே விழுந்து தற்கொலை செய்துகொண்டது!
அவ்வளவுதான் கலைஞ்சுப்போங்க, வேற டாப்பிக் பேசுங்க, டாஸ்மாக் கடைகள் "வாக்குறுதிப்படி" "மூடாமல்" திறந்திருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார் சில்வர் ஸ்டார் படங்கள் வரும், பாலாபிஷேகம் செய்யலாம், அப்புறம் ஏ.டி.எம் வாசலில் நிற்க வேண்டும், முடிவாக போலோ "பாரத் மாதா கீ ஜெ!" தமிழில் சொல்லுங்க, "ஜல்லிக்கட்டிற்காக, மக்களுக்கு வேண்டிய சில்லறைக்காக உலகப்பயணத்தில் இருந்துக்கொண்டேயிருக்கும் "மோடிஜி" வாழ்க, "சின்னம்மா வாழ்க" "பெரியம்மா வாழ்க", "சு.சா ஆசாமி" வாழ்க, "காவல்துறை நண்பர்கள் வாழ்க!"
அடுத்தகனவில் சந்திக்கலாம்! இதையெல்லாம் கதைன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க?! 😜🙃🤕😶😑😠😷😷

போராட்டம்

எரிக்கப்பட்ட நிலத்தில் விழுந்த
ஒரு கடைசிவிதை
பெற்றுத்தந்தது சுதந்திரத்தை!
#போராட்டம்

அசிங்கம்_பார்ட்_4

#அணுக்கதை

சார், பசங்கள அடிக்கச் சொல்றாங்களே என்ன பண்ணலாம்?
அடிச்சுத்தூக்கு!
சார் டிவி காரனுங்க இருப்பானுங்களே?

நாம பசங்களோட வெறுங்கையோட பேசற வரைக்கும் இருக்கட்டும் அதுக்குப்பிறகு அவனுகள தொரத்து
(அடித்து துவைக்கப்படும் முதல் சீனுக்குப் பிறகு)
சார், ஏன் அடிச்சோம்னு கேக்குறாங்க சார்?

நாம வாசல்ல இருக்கற வண்டியெல்லாம் கொளுத்து!
சார் நாமதான் வழியெல்லாம் அடைச்சு, பசங்கள வெளியிலேயே விடலேயே சார், பசங்கன்னு எப்படி சார் நம்புவாங்க?

யோவ் நமக்கு கேஸ்ஸுல ஆள் கிடைக்கலைன்னா என்ன பண்ணுவோம், அந்தக் குப்பத்து பசங்கள தூக்கி உள்ளபோடு!
சார் எங்கயோ போயிட்டீங்க சார்!

(அடித்து துவைக்கும், கொளுத்தும், மண்டையுடைக்கும் காட்சிகள் தொடர்கிறது)

சார் சார் நாம அடிச்சதுல ஒரு பொண்ணோட கர்ப்பம் கலஞ்சுப்போச்சு சார்
யோவ், ஜனத்தொகையில ஒன்னு க்கொறஞ்சுப் போனா ஒன்னும் ஆகாது, வேணும்னா #%$@&

சார் வாங்க சார் நாம "திருட்டு" மீனு சாப்பிடலாம்
(எரிக்கும் உடைக்கும் காட்சிகள் தொடர்கிறது)

சார் சார் ஸ்மார்ட் போன வச்சு சில எழவெடுத்தவனுங்க நாம செஞ்சத படம் புடிச்சு பரவ விட்டுட்டானுங்க, என்ன சார் பண்றது?

ஏன்யா பதர்றே, நம்ம தலம பாத்துக்கும், ஒருத்தனையும் விடாதே!

சார் நீங்க சொன்ன மாதிரியே, வெளியூர்ல இருக்கற பயலுக பூரா நாம அமைதியா பேசினத மட்டும்தான் பாத்து இருக்காணுங்க, நாம பசங்களோட பசங்களா நின்னு போஸ் கொடுத்ததை வெச்சு சில பேரு நமக்காகவும் எழுதுறாங்க சார், நாம கொளுத்தினதைக் கூட நாம இல்லன்னு நம்ம தல அடிச்சுப் பேசிட்டாரு, இப்ப எல்லாரும் பசங்களத்தான் காரி காரி துப்புறாங்க!

இருந்தாலும் ஆதாரம் வெச்சு பேசினா என்ன சார் பண்றது?

யோவ் அதுதான் மொதல்லியே அந்த நாலுபேர நமக்கு சாதகமா நாம சொல்லிக்கொடுத்ததை பேச வெச்சுட்டோம் இல்ல, மேடத்துக்கிட்ட சொல்லி அவனுகள வெச்சு இன்னொரு தடவை அழச் சொன்னா போதும்!

(விழிவிரித்து)நீங்க ஒரு தீர்க்கதரிசி சார்!
(அடித்து துவைக்கும் காட்சி தொடர்கிறது)

சார் சார் கோர்ட் நாம பசங்கள தடை பண்ணக்கூடாதுன்னு சொல்லிடுச்சு!
யோவ் ஆர்டர் நம்ம கைக்கு கிடைக்கல, புரியுதா?
சார் எனக்கு புல்லரிக்குது சார்!

அடித்து துவைக்கும் காட்சிகள் தொடர்கிறது, கோர்ட்டில் நிறுத்தப்படுகிறார்கள் மக்கள்

(கிசுகிசுப்பான குரலில்) சார் சார், அவ்வளவும் செஞ்சது நாமதான்னு ஊரே ஆதாரம் கொடுத்தப்பிறகும், இப்ப எப்படி இவங்களுக்கு தண்டனைக் கொடுப்பாங்க?

யோவ், எல்லாக் கேஸூலயும் யார்யா ஆதாரம் கொடுப்பா?!
?!
நம்ம கேஸூலேயும் நாம கொடுக்கறதுதான் ஆதாரம்!
சார் (சல்யூட் அடிக்கிறார்)!

(தீர்ப்பு எதிர்ப்பார்த்தப்படி அமைகிறது)

வெளியே வந்து: சார் சார்
இன்னும் என்னய்யா?
சார் நிறைய வீடியோ வருது சார், ஜனங்க நம்ம மேல கோபமா இருக்காங்க சார்!
(அதிகாரி நச்சென்று அவர் வாயில் குத்துகிறார்)

(வாயில் பல் உடைந்து இரத்தம் வழிகிறது)

சார் என்ன சார் இப்படி பண்ணீட்டீங்க, நான் கேள்வி கேட்டது புடிக்கலைன்னா சொல்லியிருக்கலாமே சார் ?

யோவ் முண்டம், இப்ப நேரா ஆஸ்பிட்டல் போய் அட்மிட் ஆகு, உணர்ச்சிகரமா நான் சொல்லிக்கொடுக்கற மாதிரி பேசு, அதை வாட்ஸ்ஆப்புல எல்லாருக்கும் அனுப்பு!

சார் திரும்ப அடிச்சிடாதீங்க சார், இத்தனை பேர் நம்ம ஆளுங்க சுத்தி இருக்கும் போது, என் வாயில பசங்க அடிச்சாங்கன்னு சொன்னா யார் சார் நம்புவாங்க?
யோவ், அந்தளவுக்கு யோசிக்கற பயலுக இல்லையா இவனுங்க, நீ தைரியமா அனுப்பு!

(ஆஸ்பத்திரியில்)

சார் சார் இந்த ஹீயூமன் ரைட்ஸ் கமிஷன்லா வந்து விசாரிக்கிறாங்க சார், பயமாயிருக்கு சார்!

யோவ் அவனுங்க விசாரிச்சு கேஸ்போட்டு முடியறதுக்குள்ள நீயும் நானும் ரிடையர்ட் ஆயிடுவோம், பொறந்து வளந்தததுக்குப்புறம் அப்பன்ஆத்தாளையே மறக்கறவனுங்க, ஐஞ்சி வருசத்திலே ஆட்சியை மறந்துடுவானுங்க நம்மளையும் மறந்துடுவானுங்க, பாரு யாருக்காக போராடி இப்ப ஜெயில்ல கிடக்கறானுங்களோ அந்த ஊர்க்காரனுங்களும், அந்தப்பசங்களும் கூட இவனுகள கண்டுக்கல, நம்ம தல சில பேர மட்டும் கண்துடைப்புக்காக கொஞ்ச நாள் தள்ளி வெச்சு அவங்களுக்கு வேற எங்கனா வேல கொடுப்பாங்க! இவனுகள பிரிக்க இருக்கவே இருக்கு சாதியும், மதமும் அப்புறம் நாமளும்!

யோவ் நீ கவலைப்படாதே இந்த மாட்டுக்கார பயலுகல நம்பி இன்னும் நூறு கொலைக்கூட பண்ணலாம்!

#அசிங்கம்_பார்ட்_4
(கதைப் படிச்சவங்க எல்லாம் போய் இளநீர் வாங்கிக்குடிங்க) 😜😜😜

கீச்சுக்கள்!

போலியான அன்பைவிட வெளிப்படையான வெறுப்பு சமாளிக்க ஏதுவானது!

***
காவலர்களே கள்வர்கள், கொடுங்கோலர்களின் ஆட்சியில்!

***
துரித உணவுகளைச் சாப்பிட்டு, எப்போதும் குளிர்பானங்களை வயிற்றில் தொடர்ந்து நிரப்பிக்கொண்ட பள்ளி நண்பன் தன் முப்பதாவது வயதில் சிறுநீரக கோளாறில் உயிரை இழந்தான்!
ஆறு மணிக்கு டாஸ்மாக் கடைநோக்கி செல்பவனும், உண்டபின் கோலாக்களை நோக்கி செல்பவனும் தெரிந்தேதான் தற்கொலை முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்!

***
ஒரு வன்முறையைக் கண்ணால் காணும் வரை, தனக்கு நேரும்வரை பலருக்கு வன்முறையின் கொடூர முகம் தெரிவதில்லை!
அங்கே எரியும் தீ இங்கே வரட்டும் பார்க்கலாம்! அதுவரை மற்றவருக்கு குற்றம் இழைப்பவர்கள் எல்லாம் நல்லவர்களே, நியாயமானவர்களே!

***




 

ஊழல் என்பது ஒழிக்க முடியாத ஒன்று

சமூக வலைத்தளங்களில் மக்களின் கருத்துக்கள் பற்றிய சர்ச்சையில், மக்கள் தங்கள் கருத்துகளை பகிர தடையில்லை, தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையென்றது நீதிமன்றம்!

காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ.க வின் விமர்சனங்கள் நாடறியும், பெட்ரோல் விலையேற்றத்துக்கு மன்மோகன் சிங்கை மோடி முதல் சுஷ்மா சுவராஜ் வரை கழுவி கழுவி ஊற்றியதை அவர்களே தங்கள் தளத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள்!

இப்போது அதே பா.ஜ.க வை அதே காரணத்துக்காக காங்கிரஸும் விமர்சிக்கிறது! எல்லாக் கட்சிகளும் ஆளும்போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக மாறும்போது ஒரு நிலைப்பாடும் கொண்டவர்கள்தான்! "உண்மையில் மக்களைப் பற்றிய சிந்தனையே கட்சிகளுக்கு ஆட்சியை இழந்து எதிர்கட்சியாக மாறும்போதுதான் வருகிறது என்பதே நிதர்சன உண்மை!"

அப்படி எதிர்கட்சியாக மாறியும் கூட மக்களுக்காக அவர்களும் கூட குரல் எழுப்பாமல் போகும்போது, ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்கள் கருத்தைப் பதிய ஒரு தளம் அவசியமாகிறது! தனியே இல்லாமலே ஒட்டுமொத்த மக்களும் ஒரு திசையில் குரல் கொடுக்கும்போது அது ஆள்பவர்களுக்கு கேட்கிறது, அவர்கள் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியத்தை அது உருவாக்குகிறது! அப்படி நிகழ்ந்ததுதான் ஜல்லிக்கட்டு! பிற்பாடு ஏற்பட்ட அரசியல் மற்றும் வன்முறை நிகழ்வுகளில் மீண்டும் ஒரு புரட்சி எழக்கூடாது என்ற எண்ணமும், பிண்ணனியில் நமக்குப் புரியாத அதே வஞ்சக சூழ்ச்சி அரசியலும் நிறைந்திருக்கிறது!

இன்றைய காலக்கட்டத்தில் கலப்பட உணவு முதல் கட்டாய திருமணம் வரை, கொலை, கொள்ளை, ஊழல் என்று எல்லாவற்றிற்கும் மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கின்றன, பல பொதுநல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடங்கப்படுகின்றன, இப்படிப்பட்ட ஒட்டுமொத்த நிலைப்பாட்டில்தான் நமக்கு இன்னமும் சிறிய அளவில் நீதியென்பது சாத்தியப்பட்டிருக்கிறது! இதெல்லாம் தான் நமக்கு எஞ்சியிருக்கும் கருத்துச் சுதந்திரங்கள்!

எப்போதும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பழித்துக் கொண்டு, ஒரு தேசம் அதே அளவுக்கு வன்முறையை காஷ்மீரில் நடத்துவதைக் கண்டிப்பது இதே கருத்துச் சுதந்திரம்தான்! ஓட்டு வங்கியில் மதத்துக்கு அப்பாற்பட்ட எல்லா மதங்களையும் உள்ளடக்கிய மனிதர்களை வைத்துக்கொண்டு மத்திய மந்திரி, "கடற்கரைப் போராட்டத்தில்" முஸ்லீம்கள் தொழுகை நடத்தினார்கள் என்று பேசியதும் கூட கருத்துச் சுதந்திரம்தான்!
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையில், பாலியல் பலாத்கார செய்திகளில், மத்திய மந்திரிகள் உதிர்த்த பொன்மொழிகள், மற்றும் தமிழர்களுக்கு எதிராக, எச்.ராஜா, சுப்பிரமணிய சுவாமி பாடிய வசைகள் யாவும் கருத்துச் சுதந்திரம்தான்!

வங்கி வரிசையில் மக்கள் பலமணிநேரம் இரண்டாயிரம் ரூபாய்க்காகவும், உழைத்தப் பணத்தை செலுத்த நின்றபோதும் "ஊழல்வாதிகள் எல்லாம் வரிசையில் நிற்கின்றனர்" என்று அந்த ஊழல்வாதிகள் தேர்ந்தெடுத்த பிரதமர் சொன்னதும் அதே கருத்துரிமையின் ஆணவம்தான், "திருமணம் கூட நின்றுவிட்டது!" என்று கேலிசெய்து சிரித்து பின் நாட்டிற்கு வந்தப்பின் வேறு அலைவரிசையில் கண்ணீர் விட்டு முழங்கியதும் அதே கருத்துரிமைதான்!
மக்களின் கருத்துகளைத் தேசத்துரோகம் என்றால், தமிழக மக்களைப் பொறுக்கிகள் என்றும், வன்கொடுமைகளில் பெண்களின் நிலையை விமர்சித்தும் ஆளுங்கட்சியில் இருக்கிற மந்திரிகள் உறுப்பினர்கள் உதிர்க்கும் கருத்துகளை அந்தக்கட்சியோ, பிரதமரோ கண்டித்ததாய் செய்திகள் இல்லை!

மக்களோ பிரதமரோ முதல்வரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த உறுப்பினரோ, யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது, அதே போல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விமர்சிக்கும்போது தரக்குறைவான வார்த்தைகளை மக்கள் பிரயோகப்படுத்துவது எப்படி கண்டனத்துக்குரியதோ அதைவிடவும் அதிக கண்டனத்துக்குரியது, முதலாளிகளாகிய மக்களை, அவர்கள் பணியில் அமர்த்தியிருக்கும் தேர்ந்தெடுத்த பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் உறுப்பினர்களும் விமர்சிப்பதும், அதை கண்டுகொள்ளாமல், அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்தென்று கடந்துப் போவதும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் (article 19) ஆர்டிகள் பத்தொன்பது கருத்துரிமையை வரையறுத்துள்ளது, ஒருவரை தரக்குறைவாக (defamation) பேசுவது குற்றம் என்று சொல்கிறதே தவிர, பிரதமரை விமர்ச்சிக்கவே கூடாது, அது தேசத்துரோகம் என்று வரையறுக்கவில்லை!

நம் மக்களுக்கு பெண்களை விமர்சிப்பதில் வரைமுறையே கிடையாது, தொழிலில், பணியில், அரசியலில், பொதுவாழ்க்கையில் என்று பெண்கள் வெளியே வரும்போது, அவர்களை நிலைகுலைய வைக்க அவர்களின் ஆடையைப்பற்றியும், தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றியும் கூட்டியும் குறைத்தும் பேசுவதே வழக்கம், அதே பழக்கம்தான் அதே ரீதியில் அரசியல்வாதிகளை அவர்கள் ஊழலைக்கொண்டு, மறந்த வாக்குறுதிகளைக் கொண்டு விமர்சிக்கும் போது, அது தடம் மாறி தனிமனித தாக்குதலாக கீழ்த்தரமான வார்த்தைகளில் முடிகிறது!

"ஊழல் என்பது ஒழிக்க முடியாத ஒன்று, அரசியல்வாதிகள் ஊழல் செய்வதென்பது தவிர்க்கமுடியாத ஒன்று" என்பதெல்லாம் அரசியல் சட்டத்தில் இல்லை, இருப்பினும் சுதந்திரத்திற்குப் பின்னான அடிமைப்பட்ட இந்தியாவில் இத்தகைய மனநிலையை ஆள்பவர்கள் மக்களுக்கு தங்கள் "சிறப்பான" ஆட்சியின் வழி தந்திருக்கிறார்கள்! அதே அணுகுமுறைதான், பிரதமரை, அதிகாரத்தில் உள்ளவர்களை "விமர்சிப்பதும்" கூட "தேசத்துரோகம்" என்று மக்கள் மனதில் பதிய வைக்க முனைகிறது!

ஆள்பவர்களுக்கு எதிராக, அவர்களின் ஊழலுக்கோ மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் காரியத்திற்கோ விமர்சனமே கூடாது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டால், கருத்துரிமை என்னும் ஆக்ஸிஜன் குழாய்க்கொண்டு மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் மக்களாட்சி, முழுதும் முடிந்து, அரசாட்சி மலரும்!

வானத்தின்_கீழ்_உள்ள_கூரைகள்

Image may contain: one or more people and people sitting
 சாலையோரத்தில்
அந்த வீடு இடிக்கப்பட்டிருக்கிறது
ஆப்பிள் துண்டை
இருபாதி வெட்டமுயன்றவன்
அவசரத்தில் வெட்டியது போல
இரண்டரை அடிக்கும்
குறைவான அகலத்தில்
மூன்று அறைகளைக் காண்கிறேன்
ஒன்று கழிவறையாக
மற்றொன்று குளிக்கும் அறையாக
இருக்கலாம் என்கிறேன்
இல்லையில்லை
அது வசிப்பிடம்தான் என்றான்
நண்பன் அவசரமாக
ஓர் எட்டுக்கு எட்டு
முற்றத்தில்
ஒட்டியிருக்கும் அந்த
மூன்றரைகளில் மனிதர்கள்
வசிப்பது சாத்தியம் இல்லையே
என்கிறேன் நான்
குறுகிப் போயிருக்கும் மனிதர்கள்
தங்களை மேலும் குறுக்கிக்கொள்ள
இந்த நிழலைத்தான் நம்பியிருந்தார்கள்
என்றான் நண்பன்
கூரையில்லாத நடைபாதைகளில்
வசிப்பதை விடவும் கொடியதோ
இந்த இரண்டரை அடி அறை
என்று அயர்கிறேன் நான்
வசித்துப்பார் தெரியும்
என்றான் நண்பன்
உற்றுநோக்குகிறேன்
அவன் கண்களை
வழியும் கண்ணீர் சொன்னது
வீடிழந்த
ஆயிரம் அறைகளின் கதைகளை!

நிம்மதியான உறக்கம்

இனம் குலம் சாதி மதம்
தேடி, அன்புபாராட்டி
நீங்கள் வாழ்த்துப்பாடி முடிக்க
சக மனிதத்தின்
நற்செயல்கள் யாவும்
நீர்த்துப்போகும்!
களைத்த வேளையில்
கிடைத்த உணவு
யார் சமைத்ததோ
விழுகையில்
எழுப்பி விட்டது
யார் கரமோ
துவள்கையில்
வாய்ப்பளித்தது
எம் மனமோ
மரணப் படுக்கையில்
பிழைக்க வைத்தது
யார் உதிரமோ
ஊமையாய்ப்
பொங்கிய கண்ணீரை
துடைத்தது எந்தக் காதலோ
ஒரு புன்னகையை
பரிசளித்தது
எந்த விழிகளோ
வசவுகளை உடனுக்குடன்
கொட்டிவிடுதல் போல
வாழ்த்துக்களையும் உடனுக்குடன்
தெளித்தாவது விடுங்கள்
முன்னதில் உறக்கம்
தொலைத்தாலும் தொலைந்தாலும்
பின்னதில்
நிம்மதியான உறக்கம்
இருவருக்கும் வரும்!

மனசாட்சியைக் கேள்விக்கேட்டு ஒத்துக்கொள்ளுங்கள்

மனசாட்சியைக் கேள்விக்கேட்டு ஒத்துக்கொள்ளுங்கள், நம்முடைய இந்திய அரசாங்கத்துக்குப் பேரிடர் மேலாண்மையில் குறைந்தபட்ச அறிவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆர்வமோ அக்கறையோ இல்லையென்று!

திட்டங்களை அவசர அவசரமாக அறிவிப்பதும், தொலைநோக்குப் பார்வையில்லாமல், குறுகிய கால (பண) பலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு மீடியாக்களில் அறிவிப்புச் செய்து விளம்பரம் தேடிக்கொள்வதுமே முதன்மையானது!

ஒரு மழைவெள்ளம் நமக்கு மந்திரிகள் அதிகாரிகள் மக்களுக்காக இல்லை என்று தெளிவாகக் காட்டியது, நாம் விழிக்கவில்லை, மர்ம தேசமாய் 75 நாட்கள் ஆனது தமிழகம், இப்போதும் ஆட்சியும் அதிகாரமும் யார் கையில் என்பதும் மர்மம்தான்!

புயல் வந்தது, இப்போது கடலில் எண்ணெய் கொட்டியிருக்கிறது! மீடியாக்கள் தான் ஜனநாயகத்தின் தூண்கள் என்று நம்பினால், அதிலும் தென்னகத்தின் அவலங்கள் வருவதில்லை, மெரினா போராட்டத்தில் களத்தில் நின்ற மீடியாக்கள் சில வன்முறையின்போது பின்வாங்கின! களத்தில் இல்லாதவர்கள் ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்கள்! அரசியல்வாதி தோற்று, பத்திரிக்கைகள் தோற்று, மக்கள் தோற்காமல் இருக்க, நீதிமன்றங்கள் வேண்டும், அந்த நீதிமன்றங்கள் யாவும் பொதுநல வழக்குக்காகக் காத்திருக்கிறது, சுவாதிக்காகத் தானே முன்வந்து பொங்கிய நீதிமன்றமும் பத்திரிக்கைகளும் அரியலூர் நந்தினி வழக்கில் மௌனமாய் இருக்கிறது!

நன்றாக யோசித்துப் பாருங்கள், மத்திய அரசாங்கம், அது காங்கிரஸ் ஆனாலும் பா.ஜ.க ஆனாலும், பேரிடர் மேலாண்மையில் தங்கள் பலவீனங்களை உணர்ந்தே இருக்கிறார்கள், ஒருவேளை உயிரிழப்புகள் ஏற்பட்டால் அது தமிழகத்தில் இருக்கட்டும் என்ற நிலைப்பாடுதான், அணுவுலை, கெயில், நியூட்ரினோ என்று எல்லா அழிவு திட்டங்களையும் தமிழகத்தை நோக்கியே நகர்த்தும் காரணம், பூகோள அறிவியல் உண்மைகள் என்று இதற்கும் முட்டுக்கொடுக்கத் தமிழர்களே வருவதுதான் மற்றுமொரு அவலம்!

தமிழகத்தை ஆள்பவர்களை எளிதாகச் சரிகட்டுவது போல, கேரளத்தையோ, கர்நாடகத்தையோ, ஆந்திராவையோ மத்திய அரசால் பணிய வைக்க முடிவதில்லை! முல்லைப்பெரியாரும், காவிரி வாரியமும் இன்னமும் உறங்கிக்கொண்டுதான் இருக்கின்றன!

பசுப் புனிதமானது என்று, பசுவின் பெயரில் தமிழகத்திலோ, பிற்படுத்தப்பட்ட வட மாநில மக்களையோ கட்சியினர் மிதிப்பது போல, மாட்டுக்கறியை உணவாக விரும்பி உண்ணும் கேரளத்துப்பக்கம் அவர்கள் நிழல் கூட விழாது! பிற மாநில அரசாங்கங்களும் தமிழகத்தின் பலவீனத்தை உணர்ந்தே தொடர்ந்து நீர் விஷயத்தில் ஏய்த்து வருகின்றன! கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படும் அவலமும் அதன் எதிரொலிதான்! ஆந்திரா தடுப்பணை சுவற்றை எளிதாக உயர்த்திக் கட்டிக் கொண்டதும் அதன் நீட்சிதான்!

இந்தக் கடல், பேரிடர் மேலாண்மையின் லட்சணத்தை நமக்கு உணர்த்தியுள்ளது! இன்னமும் கூடங்குளத்துக்காக ஆதரவு நிலைப்பாட்டைத் தேசப் பக்தர்கள் என்ற போர்வையில் எடுக்காதீர்கள்! தேசமென்பது மக்களைச் சார்ந்தே செழிக்கும்!

இதற்குத் தீர்வுதான் என்ன? தமிழகத்தின் இந்த நிலைக்குத் தமிழர்களே காரணம், குடிகாரர்கள் பெருகிப் போன நாட்டில் கல்விப் பெற வேண்டிய வயதில் பிள்ளைகள் பணிசெய்து பிழைக்கிறார்கள், இவர்கள்தான் அடிமட்ட கூலிகளாய், பிற்காலத்தில் அடிமையாட்களாய் படித்த பதவியில் இருக்கும் கூட்டத்திற்காக உருவாகிறார்கள், அல்லது உருவாக்கப்படுகிறார்கள்! தெளிவான கல்வியும் அறிவும் இல்லாத ஒரு சமுதாயம் யாரை எப்படிக் கேள்விகேட்கும்?

கல்விக் கற்ற மற்றொரு சமுதாயம் வெளிநாடுகளில் இருக்கிறது, முனைந்து போர் தொடுக்கும் மற்றொரு சமுதாயம் இந்த அடிமைப்பட்ட சமுதாயக் கூட்டத்தால் அச்சுறுத்தப்படுகிறது! மீடியா என்பதும் பலவான்களின் பிடியில் அல்லது கையில்!

கல்விக்கொடு என்று கேட்பதற்குப் பதிலாக இலவசப் பொருட்களில் திருப்தியடைகிறோம்! சாராயக் கடைகளைக் கண்டால், சாப்பாட்டைக் கண்ட மந்தைகளைப் போல் பாய்கிறோம், ஒருவன் குரல்கொடுத்தாலும் உடன் நிற்காமல் நமக்கென்ன என்று ஒதுங்கிப்போகிறோம், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்லிக்கொண்டு எல்லா வளங்களையும் சுரண்ட பன்னாட்டுகளுக்கு அனுமதித்தருகிறோம், போராட்ட களங்களில் இன்னமும் சாதி மதப் பேதங்களால் ஒன்றிணையாமல் தயங்கி நிற்கிறோம், இனி உண்மையில் வாழ வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் இயற்கையைப் பாதுகாக்க தன்னால் முடிந்ததைச் செய்யவும், தவறிழைக்கும் அரசு பணியாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கவும் பல மாற்றங்கள் மலர (மலர் டீச்சர் மாற்றத்தைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் , இந்த மாற்றம் எப்படி வரும் என்பதும் பெருத்த யோசனைதான்) வேண்டும்!

எல்லாவற்றுக்கும் மேலாக, "மறதி" என்பதில் இருந்து எழுந்து, தேர்தலில் சரியானவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்! வாக்குகளை விற்றுவிடாதீர்கள் மீண்டும், தேசத்தை இழந்துக்கொண்டிருக்கிறோம், இன்னுமொரு முறை தவறு செய்தால், நம் சந்ததிகளுக்குத் தமிழக எல்லையில்லை!
#Chennaioilspill

ஆங்கிலேயன் நல்லவன்

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வுகளுக்கு ஒப்பானது காய் நகர்த்திச் சில காய்களை வெட்டி, மக்களை முட்டாளாக்கும் இன்றைய காலகட்டத்தின் அரசியல் செயல்பாடுகள்! முன்னோர்கள் ஒரே குண்டில் செத்துவிட்டார்கள், நாம் மட்டும் தினம் தினம் சாக!

சில கோடி முட்டாள்கள், நீலிக்கண்ணீருக்கும், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், சில நூறு ரூபாய் தாள்களுக்கும் ஓட்டுரிமையை விற்று விட, பலகோடி மக்கள் வருந்துவதுதான் ஜனநாயகம்!
"அரசியல் வேண்டாம் என்று வீட்டுக்குள்ளே இருந்தால், அரசியல் நம் வாழ்க்கையின் உள்ளே வரும்" என்று எங்கோ படித்த விபரீத வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!

மக்கள் குமுறி குமுறி பொங்குவதெல்லாம் ஆற்றாமையின் வடிகால்தானே ஒழிய தீர்வு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்! பணம் என்ற தாளுக்கு மட்டுமில்லை, பெருத்த வன்முறையின் சூழ்ச்சிக்கும் அரசு எந்திரங்கள் பலியாகுவதன் நீட்சிதான் இப்படிப்பட்ட பின்வாசல் தந்திரங்கள்!

குமுறி வெடிக்கும் தொண்டனை மந்திரியே அடிக்கும் அவலம் கண்டு என்ன பயன், யாரிடம் புகார் கொடுப்பது, ஆட்சியையும் அதிகாரமும் அமைதியாய் பக்கத்தில் வேடிக்கைப் பார்க்கும்போது நீதி எங்கே கிடைக்கும்?

கொலையாளியின் மங்கலான புகைப்படத்தில் உள்ள துப்பை வைத்துப் பொதுமக்கள் வழக்கை முடிக்கும் துறைக்கு, துறை சம்பந்தப்பட்ட குற்றங்களின் வீடியோ ஆதாரங்கள் கூட நடவடிக்கை எடுக்கப் போதாதது எனும் போதே அந்தத்துறையின் லட்சணம் தெரியவில்லையா? இதில் அவர்கள் எங்கே மக்களுக்கு உதவுவது?

ஊழல் வழக்குகளில் இதுவரை ஆட்சியில் இருந்த, இருக்கும் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்ததேயில்லை, நூறு ரூபாய்க் கட்டத்தவறினால் பொதுமக்கள் நாயினும் கீழாய் நடத்தப்படுவர், கோடிக்கணக்கில் நிகழ்த்தப்படும் திருட்டுக்கு ஊழல் என்று பெயரிட்டு, சாட்சிகள், குற்றவாளிகள் எல்லாம் தானாய் மாண்டுபோகும் வரை விசாரணை நிகழும் சட்ட அமைப்பில் மக்கள் யாரிடம் நீதிக் கேட்டு நிற்க முடியும்?

இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டில் இன்னமும் குறைந்தபட்சக் கல்விக் கூடத் தரமாய் இலவசமாய் ஆகாததற்குக் காரணம் மிகப்பெரும் மந்தைகள் மந்தைகளாகவே இருக்க வேண்டும் என்ற காரணமே ஆகும்!

இந்திய மந்தைகள் ஒன்று கூடுவது என்பது அபூர்வம், ஒன்று கூடினால், அதே மந்தைகளின் ஒரு பகுதியைக் கொண்டே சாதி, மதம், பணம், வன்முறை என்ற ஏதோ ஒன்றில் கலைத்துவிடும் கலை அரசியல்வாதிகளுக்குத் தெரியும்!

பிரிட்டிஷ் ராஜ்யத்தில் பிரிட்டிஷாரை மட்டுமே நம்பியிருந்தால் இந்த இந்தியாவை அவன் வசப்படுத்தியிருக்கவே முடியாது, ஏதோ ஒன்றில் தலையாட்டி அவனுடன் இணைந்த பெரும் இந்திய மந்தைகளின் ஒரு பகுதியே அவனுக்கு அவன் வேலையை எளிதாக்கி இருந்திருக்கிறது!

பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயன் கற்றுக் கொடுத்துப் போனதை இந்திய அரசியல்வாதிகள் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டார்கள்!

செல்லரித்துப் போன அரசியல் சட்டங்களை இன்னமும் மாற்ற, மேம்படுத்த நம்முடைய அரசியல்வாதிகளுக்கு மனமில்லை, சட்டம் படித்த கூட்டமும், செயல்படுத்தும் கூட்டமும் இந்த இந்திய அமைப்பில் மந்தையின் ஒரு பகுதிதான், பிரிட்டிஷ் ராஜ்யத்தில் ஒரு மந்தைத் துணைபோனது போலவே, சில நூறு அரசியல்வாதிகளின் தவறுகளுக்குப் படித்துப் பதவியில் இருக்கும் மனங்களும், படிக்காமல் அரிவாள் தூக்கும் மூளைமழுங்கடிப்பட்ட மனங்களும் ஒன்று கூடுகிறது, இந்த மந்தைகளுக்குத் தாம் வெட்டும் குழி, தமக்கே வருங்காலத்தில் வரும் என்பது இன்னமும் உரைக்காததுதான் வருத்தம்!

"ஒன்றை செய்யமுடியவில்லை என்றால் விலகியிரு!" என்பது சரியான அறிவுரைதான், ஓட்டுபோடவேண்டிய நாட்களில் ஓட்டுபோட்டிருக்க வேண்டும், யாரையும் தேர்ந்தெடுக்கப் பிடிக்கவில்லை எனில், அதற்கான மாற்றுவழியைச் சட்டம் கொண்டு சரிப்படுத்தி இருக்க வேண்டும், இதில் எதையுமே செய்ய முடியாமல் கையாலாகாத தனத்தைக் கோபத்தை ஆற்றாமையை நாம் எழுதியும் பேசியும் கரைத்துக் கொண்டிருக்கிறோம்! எதிர்க்கட்சி என்ற ஒன்றும் எதிர்ப்பை வலுவாய்க் காட்டாமல் அமைதியாய் இருக்கும்போது மக்களும் அமைதியாய் இதையெல்லாம் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி ஏது?

ஒடுக்கப்பட்டவனைக் கைதூக்கி விட்டிருக்க வேண்டும், பேதங்களைக் கடந்து நீயும் மனிதனே என்று சக மனிதர்களிடம் நேசம் பாராட்டி இருக்க வேண்டும், பல கோடி மக்கள் ஒன்றுகூடி நின்றிருந்தால் சில நூறு அரசியல்வாதிகளால் என்ன செய்து விட முடியும், ஆனால் நிதர்சனம் என்னவெனில் ஒருவனை நான்குபேர் ஒன்று கூடி அடிக்கும்போது பல நூறு பேர் அமைதியாய் வேடிக்கைப் பார்க்கிறோம், ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்து நான்குபேர் கொலைசெய்யும், தவறு பெண்ணின் மீதா ஆணின் மீதா என்று தர்க்கங்களில் பிரிந்து நிற்கிறோம், ஒரு குற்றம் நிகழ்ந்தால் ஓங்கிக் குரல் கொடுத்து, தடுக்காமல், வீடியோ பதிவாக எடுத்துப் பரப்பிக் கொண்டியிருக்கிறோம், இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒரு தொகுதி மக்கள் ஆளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று தங்கள் வாக்குரிமையை விற்க தயாராகிக் கொண்டிருப்பார்கள், அந்த அறியாமையின் விளைவு ஒரு தேசத்தின் மீதே வந்து விழும்! இதுதான் இந்தியாவின் நிலை, இதுதான் மாநிலங்களில் நிலை!

கொள்ளைக்காரனும் கொலைகாரனுமான "ஆங்கிலேயன் நல்லவன்" என்று நினைக்குமளவுக்கு இறங்கியிருக்கிறது இந்தியாவின் ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை! எத்தனை பணம் எத்தனை அதிகாரமிருந்தாலும் ஒன்றும் உதவிடாது என்று அந்த 75 நாட்கள் எல்லோருக்கும் உணர்த்தியிருக்கும், அதை அரசியல்வாதிகள் மட்டும் இன்னமும் உணராதது வருத்தமே! வருங்காலத்தில் ஓர் அரசியல் மாற்று நிச்சயம் வரும், மாணவர்கள், இளைய சமுதாயம் களமிறங்கும், அப்போது அவர்களைப் படித்த படிக்காத கூலிப்படை எந்திரங்கள், அதிகார மட்டங்கள் அழுத்தி விடாமல் இருக்க மக்கள் ஒன்று கூடி நிற்க வேண்டும், மாற்றம் வரும்! தமிழகம் ஒளிரும்!
#SaveTN

எமன்டா

வாய்தா வாங்க முடியாத
பணத்தைக் கொண்டு சரிகட்ட முடியாத
பொய்சாட்சி உருவாக்க முடியாத
கண்ணீர் வடித்து தப்பிக்க முடியாத
ஆயுதம் கொண்டு மிரட்ட முடியாத
ஒரு நேர்மையான நீதிபதி உண்டு
#எமன்டா

நல்ல ஆட்சி

ஒருவர் ஒருமுறை முதல்வராகி ஐந்து வருடம் ஆட்சிசெய்தபின் மறுமுறை முதல்வராக முடியாது

குறைந்தப்பட்ச கல்வித்தகுதியில்லாமல் ஒருவர் முதல்வராக முடியாது
தேர்தலில் நின்று வெற்றிப்பெறாமல் எத்தனை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆதரவு தந்தாலும் ஒருவர் முதல்வராக முடியாது
குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் அவர் பொதுச்சேவைகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்

அவருக்கோ அவரின் வாரிசுகளுக்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசாங்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருக்கக்கூடாது
அவருக்கோ அவரின் வாரிசுகளுக்கோ சாராயக் கடைகளில் உரிமை இருக்கக்கூடாது

தேர்தலில் நிற்பவர்கள் தங்கள் சாதியினர் மிகுதியாக உள்ள இடங்களில் நிற்கக்கூடாது

தேர்தலின் போது, கட்சிகள் ஒரு ரூபாய்கூட பணமாக செலவழிக்கக்கூடாது
தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தல் முடியும்வரை எந்த மதுக்கடையும் திறந்திருக்கக்கூடாது

தேர்தலின் பிராச்சாரக் கூட்டங்களில் பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, அதிலும் பெண்களைத் தரக்குறைவாக பேசக்கூடாது, பேசினால் அப்போதே அந்த வேட்பாளரை நீக்கிவிட வேண்டும். பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அப்படியே பேசினால் அந்தக்கட்சியையே செல்லாது என்று அந்தத்தேர்தலில் இடைநீக்கம் செய்யவேண்டும்

தேர்தல் சமயத்தில் ஒரு குண்டூசிக்கூட இலவசமாய் மக்களுக்கு வழங்கப்படக்கூடாது, செய்தால், மேலே சொன்ன இடைநீக்கத்தைச் செய்யவேண்டும்

கல்வியை மருத்துவத்தை அரசுடைமையாக்க வேண்டும்

இப்போதிருக்கும் அத்தனை அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படவேண்டும், கழிவறையைத்தவிர!

கட்சி சாராமல், அரசுக்கென்று ஒரு பத்திரிக்கையும், தொலைக்காட்சியும், சமூகவலைத்தள பக்கங்களும் இயங்கவேண்டும்! அரசு சார்ந்த அத்தனை செய்திகளையும், அரசு அலுவலக சிசிடிவி கேமரா நிகழ்வுகளையும் மக்களுக்கு அதன் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும்!

அரசு நிறுவனங்களுக்கான டெண்டர் விடும் நிகழ்வுகளை, அது தொடர்பான சந்திப்புகளையும் நேரடியாக ஒளிப்பரப்புச் செய்ய வேண்டும்

அரசு வங்கிகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்திலும் நுகர்வோர் குறைக்கேட்பு மையம் அமைத்து உடனுக்குடன் குறைகளைக் களைய வேண்டும்
............................................................................................................................................
இன்னும் நிறைய இருக்கு திட்டங்கள், நல்ல ஆட்சி அமையும்போது சொல்லலாம்! 😍
#SaveTN

அவரவர் குழந்தைகள்

மைலாப்பூரில் ஒரு பாத்திரக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு, வெளியில் வந்தால், ஒரு ஹோண்டா ஆக்டிவா மீது இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு பாலகன் ஏறி உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான், வாகனத்தின் அந்தப்பக்கம் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது! "யார் பையன்" என்று எல்லோரிடமும் கேட்க, கடையின் முதலாளி வெளியில் வந்து, "கடைக்கு வந்த யாரோட குழந்தையாச்சும் இருக்கலாம், இருங்க கேக்குறேன்" என்று செல்ல, அந்தக்குழந்தைத் திமிறிக்கொண்டு அப்படியும் இப்படியும் ஒட, ஒருவழியாய் ஒருவர் சாவகாசமாய் வந்து, "இவனை நான் அங்கே தானே இருக்கச் சொன்னேன், இங்கே தெருவுக்கு எப்படி வந்தான்?" என்று என்னிடம் கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் குழந்தையைத் தூக்கிச்செல்ல, "ஹலோ சின்னக்குழந்தையை ஒரு இடத்துல உட்கார்ன்னு சொன்னா உட்கார்ந்துக்குமா? பஸ் போற ரோட்டில் இப்படி விடலாமா, பார்த்துக்கங்க" என்று சொல்ல, அந்த மனிதனுக்கு அத்தனை நேரம் சாலையின் குறுக்கே ஓடிவிடாமல் குழந்தையைப் பிடித்துவைத்து, தந்தையைத் தேடி ஒப்படைத்த நன்றியுணர்ச்சி இல்லையென்றாலும் கூடப் பரவாயில்லை, இனிமேலும் ஜாக்கிரதையாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கூடத் தரவில்லை!

நம்மை மீறி, குழந்தைக் கடத்தலோ விபத்தோ நடக்கும்போது ஒன்றும் செய்ய இயலாது, ஆனால் அலட்சியத்தால் நடக்கும் விபரீதங்கள் வாழ்நாள் துயரத்தைத் தரும்!

கடைகளில் பொருட்களை வாங்கும்போது, கடற்கரையில் காற்றுவாங்கும்போது எதைத் தொலைத்தாலும் நீங்கள் வாங்கிவிடலாம், குழந்தைகள் அப்படியல்ல, அவர்களின் கையைப் பிடித்துக்கொள்வதில் அப்படியென்ன அசௌகரியம் வந்துவிடப் போகிறது? பிள்ளைகளைப் பக்கத்துவீட்டிற்கு, எதிர்த்த வீட்டிற்கு, வெளியில் தெருவில் என்று விளையாட விட்டுவிட்டு நம் வேலைகளிலோ, சீரியல்களிலோ மூழ்கிவிட்டு, பிறகு "ஐயோ அம்மா!" என்று ஆர்ப்பாட்டம் செய்வதில் என்ன பயன்?

கடைத்தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு, குழந்தையை வண்டியின் மீதே உட்காரப் பணித்துவிட்டு, கடைக்குச் செல்லும் மனிதர்களைக் கண்டிருக்கிறேன், ரெண்டு நிமிஷம்தான் என்று கூறும் சப்பைக்கட்டுகள்தான் வாழ்நாள் சோகத்தைத் தருகின்றன! குழந்தைகளைக் கவனிக்க முடியாவிட்டால், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருந்துவிடலாம்!
அவரவர் குழந்தைகள், அவரவரின் அக்கறை! வேறு என்ன சொல்ல!?

பாலியல் வக்கிரங்கள்

நாள்தோறும் பீகார், ஒரிசா, டெல்லி என்று வேறு மாநிலத்தில் இருந்து கட்டிட வேலைக்காக, பல்வேறு பணிகளுக்காக ஆட்கள் வந்துக்கொண்டேயிருக்கின்றர்! அதிலும் பிச்சையெடுப்பதற்கு சென்னை அவர்களுக்கு ஏற்ற ஒரு புனிதத்தளமாய் இருக்கிறது!

இவர்கள் தங்களுடைய பாலியல் வடிகாலுக்கு குழந்தைகள், முதியவர்கள், விலங்குகள் என்ற பேதமில்லாமல் பாய்வது வழக்கமான செய்தியாகிவிட்டது! (இங்கே இருப்பவர்கள் புனிதர்கள் என்று நான் கூறவில்லை)

கண் எதிரே போதையில் குழந்தையை மயக்கி பிச்சை எடுத்தாலும் காவல்துறை கண்டுக்கொள்ளாது! கமிஷன் வாங்காத துறையே இல்லை எனும்போது, அவர்களே மக்களின் பொதுசொத்தை எரிக்கும்போது, சொல்வதற்கு ஒன்றுமில்லை! 

படிப்புக்கட்டாயம் என்று சொல்லும் நாட்டில் கண் எதிரே குழந்தைகளுக்கு எதிரான அத்தனை அக்கிரமங்களுக்கும் இந்த நாட்டில் அமைதிதான் நீதி! பெண்கள் கொல்லப்பட்டால் அது டெல்லியிலா, தமிழ்நாட்டிலா என்பதைப்பொறுத்து நீதி மாறுபடும்! தமிழகத்தில் பெண் கொல்லப்பட்டால் அவளின் சாதியைக்கொண்டு நீதி மாறுபடும்!

பாலியல் வக்கிரங்களுக்கும், கொலைகளுக்கும் இவை ஏதோ ஒன்று காரணமாகிறது;

1. அதரப்பழசான சட்டம்
2. கட்டற்ற இணைய வழித்தகவல்கள்
3. சரியான பாலியல் கல்வி இல்லாமை!
4. ஆண் பெண் பேதங்கள், ஒழுக்கம் ஆணுக்கில்லை என்னும் சமுதாய அமைப்பு
5. காசுக் கொடுத்தால் மட்டுமே இயங்கும் அரசு எந்திரங்கள்
6. மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசுகள்
7. பெற்றோரின் கவனக்குறைவு, வளர்ப்புமுறை!
8. பொதுவெளியில் கடுமையான தண்டனை இல்லாத நிலை
9. பெண்களுக்கான உடல் உறுதியில், ஊட்டச்சத்தில், தற்காப்புக் கலைகளில் அக்கறைக் கட்டாத பெற்றோர் மற்றும் சமுதாயம்
10. பெண் என்பவள் "வெள்ளையாய்" "அழகாய்" "சரியான உடல் அளவுகளில்" "ஆணின் ஜட்டிக்கும்" கூட அவசியமென்னும் பிற்போக்குத்தனமான விளம்பரங்கள்!
11. ஆண் பொறுக்கியாய், ரவுடியாய் கூட இருக்கலாம், அவன் விரும்பிவிட்டால், எப்படிப்பட்டவளாய் இருந்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையென்றால் அந்தப்பெண்ணைக் கொன்று விடவேண்டும் என்று சீரழிக்கும் திரைத்துறை!
12. பெண் என்பவள் ஒருவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்யும்போது எதிர்ப்புக்காட்டாமல் இருக்க வேண்டும், பெண் என்பவள் ஒழுக்கமாய் ஆடை அணியவேண்டும் என்று பொன்னானக் கருத்துகளை உதிக்கும் அரசியல் பொறுக்கிகள்!

பாலியல் வக்கிரங்கள் என்னும் தீ ஆள்பவர்களின், அதிகாரத்தில் இருப்பவர்களின் வீட்டின் கதவைத்தட்ட வெகுநாள் ஆகாது, அப்போதாவது விழித்துக்கொள்ளட்டும் பெரிய மனிதர்கள்!
உயிரின் மதிப்பறியா மனிதர்கள் ஆள்பவர்களாகவும், காவலர்களாகவும், பெற்றோர்களாகவும் இருக்கும் தேசத்தில், பணமே பிரதானம் என்று ஓட்டுகளை விற்கும்
மந்தைகள் நிறைந்த தேசத்தில் நாம் கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

அதிகாரம்

தீவிரவாதிகளுக்கும்
அரசியல்வாதிகளுக்கும்
ஒரே வித்தியாசமாய்
எஞ்சியிருப்பது
"அதிகாரம்"
மட்டுமே

மக்களுக்கு விருப்பமில்லாத ஒருவர்

மக்களுக்கு விருப்பமில்லாத ஒருவர், சட்டப்படி ஆட்சிக்கு வந்தாலும், அது மக்கள் விரோத ஆட்சிதானே? இங்கே யாரை எதிர்ப்பீர்கள், ஓட்டை உடைசலான சட்டத்தையா, இல்லை நம்மை ஏமாற்றி ஓட்டுவாங்கி ஆட்சியைக் கைமாற்றி விட்டவர்களையா?
இந்தியாவில் சராசரியாக ஒரு வழக்கை விசாரித்து முடிக்க நீதிமன்றங்கள் 5 வருடங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்று எங்கோ படித்தேன், ஓட்டை உடைசலான எல்லாச் சட்ட முறைகளையும், சட்டங்களில் உள்ள ஓட்டை உடைசலை அடைக்கவும் இன்னொரு அம்பேத்கர் வரமாட்டார், மக்கள் நலன் விரும்பும் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாமே முன்வந்து அதைச் செய்ய வேண்டும் அல்லது அரசாங்கத்துக்கு அதை முன்மொழிய வேண்டும்! அரசியல்வாதிகள் தாமே முன்வந்து மக்களுக்காக எதையும் மாற்றமாட்டார்கள், பெரிதாய் எழுச்சி வரும்போதே செவிசாய்ப்பார்கள்!
அதற்கு மூன்று உதாரணங்களைச் சொல்கிறேன்;

1. டெல்லியில் ஜோதிசிங் கொடூரமாய்க் கொல்லப்படும்வரை பெண்களின் பாதுகாப்புக்கு அவர்கள் அவசரச் சட்டம் இயற்றவில்லை, ஆனால் ஒரு ஜோதிசிங்கின் மரணம் புதிய சட்டங்களை இயற்ற வைத்தது, அவ்வளவே! எனினும் தண்டனைகளைக் கடுமையாக்கவும், சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்குப் பரப்பவும் இன்னமும் போதிய நடவடிக்கை இல்லை! வரிசையாய் பெண்கள், குழந்தைகள் சாக "தண்டனைக்கான" அழுத்தம் வரவில்லை, மற்றுமொரு கொடூர முறையில் சுவாதி கொல்லப்பட, நீதிமன்றம் தாமே முன்வந்து அழுத்தம் தர அந்த வழக்கு "முடித்து" வைக்கப்பட்டது, இப்போதும் வயது வித்தியாசமில்லாமல் கொடூரமாய்ப் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள், கடுமையான சட்டம் கொண்டு கொலையாளிகளைத் தண்டிக்க இந்த மரணங்கள் போதவில்லை என்றே தோன்றுகிறது, சட்ட வல்லுநர்கள் அரசுக்கு அழுத்தம் தந்தாலொழிய இதில் மாற்றம் நிகழாது!

2. பெருகும் சாலை விபத்துகளால், "தலைக்கவசம் போடு, இல்லையென்றால் அபராதம்" என்று பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு, பிறகு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டாலும், அதைச் செயல்படுத்துவதில் சுணக்கம்!

மேடும் பள்ளமுமாய் ஆகிறது சாலைகள், சுங்கச்சாலைக் கட்டணம் கட்டினாலும், பல நெடுஞ்சாலைகள் புயலுக்குப் பின்பு சீரமைக்கப்படாமலேயே உள்ளன, கட்டணம் மட்டும் கட்டிக்கொண்டே இருக்கிறோம்! சாலையைச் சீர்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமை, வாகனம் வாங்கும்போது சாலைக்கும் சேர்த்தே வரிக் கட்டுகிறோம், எனினும் தனியாருக்கு விட்டு, கூடுதல் சுமையை ஏற்றுகிறது அரசு! பிறகு ஏன் சாலைக்கு வரி வாங்குகிறீர்கள் என்று அரசை யார் கேட்பது?
விதிகளை மதிக்காத சில மனிதர்களால் பல நூறு பேர்கள் உயிரிழக்கின்றனர், விபத்துக்கள் தொடர்கதையாகின்றன, சாலை கட்டமைப்புக்களைக் கண்காணிக்கும் முறைகளை, செயல்படுத்துதலை எப்போது தீவிரப்படுத்துவார்கள்? மாசத்தின் இறுதி நாட்களில் மட்டுமா?
மந்திரிகள் வரும்போது சாலையே ஸ்தம்பித்துப் போவதால் ஒரு விபத்தின் பாதிப்பு அவர்களுக்குப் புரியவில்லை, புரியும் நாளில், இருக்கும் சட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும், அப்படி வந்தால் அதுகூடப் போதும் விபத்தைத் தடுப்பதற்கு!

3. இது ஜல்லிக்கட்டு, அவசரச் சட்டம் கொண்டுவருவதெல்லாம் ஆள்பவர்களுக்குத் தெரியாததல்ல, மாணவர்கள் போராட்டத்தின் பின்னே நிகழ்ந்ததற்கு ஆயிரம் அரசியல் இருந்தாலும், மக்கள் இன்னமும் முழுதாய் உறங்கிடவில்லை, போராட்டம் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்கு இது மாற்றுமொரு சான்று!

அதேபோல அரசு அவசரமாய் இயற்றும் சட்டங்கள் எல்லாம் மக்களின் நேரடி நன்மைக்கு என்று நம்புவதும் முடியாது, அந்த அளவுக்கே இருக்கிறது மக்களின் அனுபவங்கள்! புதிபுதிதாய் வரும் மருந்துச் சந்தைகள், மரபணு மாற்றுச் விதைகளுக்கான அனுமதி, கூடங்குளம் எல்லாம் அதற்குச் சில பருக்கை உதாரணங்கள்!

பொதுநல வழக்குகளும், நீதிமன்றங்களும் சில நியாயங்களை மக்களுக்குப் பெற்றுத்தந்திருக்கின்றன, போராடியே ஒவ்வொன்றையும் பெரும் நிலைக்குக் காரணம் யார், உண்மையில் எந்தச் சட்டமுறைகளை முதலில் மாற்ற வேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம் நாம்!
"ஒட்டுப் போட்டாச்சு இல்லே, யாரை வேணும்னாலும் நாங்க முதல்வரா தேர்ந்தெடுப்போம்" என்று ஓட்டுப்போட்ட மக்களை நோக்கி இகழ்வாகப் பேசும் நிலையில் இருக்கிறது இன்றைய விதிமுறைகள், உண்மையில் இதுதானே மாற்றப் படவேண்டும்?

ஒரு மாநிலத்துக்கே முதல்வர், அவரின் உடல்நலம், அவரைப் பற்றிய தகவல்களைக் கூட நம்மால் தெரிந்துக்கொள்ளமுடியவில்லை, தாம் தேர்ந்தெடுத்த தலைவரின் நலனைக் கூடத் தெரிந்துக் கொள்ளமுடியாத அளவுக்கு இருந்தது மக்களுக்கான ஜனநாயக உரிமை, இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம்!

இதையெல்லாம் சொல்வதற்கு யாரும் சட்ட வல்லுனர்களாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன், சட்டம் என்பது மக்களுக்காக இருக்க வேண்டும், மக்களுக்கும் காலத்துக்கும் ஒவ்வாத விதிமுறைகளை மாற்றி அமைத்து மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை, வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சட்டமானது இருக்க வேண்டும், அதிலும் இதெல்லாம் "உரிய காலத்தில்" "விரைவாக" கிடைக்க வேண்டும்! இன்று நான் வழக்குப் போட்டால் என் கொள்ளுப்பேரன் காலத்தில்தான் நீதி கிடைக்கும் என்ற அளவில் தாமதமாகும் நடைமுறைகளில் தான் ஊழல்கள் ஒரு முடிவேயில்லாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, மக்களின் உணர்வுகளும் எள்ளல் செய்யப்படுகிறது, குற்றங்களும் தொடர்கதையாகிறது!!

ஏனோ தோன்றுகிறது, வெகு காலத்திற்கு மக்களை முட்டாள்களாக வைத்திருக்க முடியாது!

#நம்பிக்கை

மாட்டுச்சந்தை - மனிதமந்தை

#அணுக்கதை
"யோவ் வா, துண்டுப்போட்டாச்சு, கையப்புடி, எவ்வளவு? ம்ம் ..கட்டாது கட்டாது"
"இந்தம்மா நீ வா, ஆங்...ம்ம் சரி சரி பார்ப்போம்"
"இந்தய்யா, இந்தம்மா, நல்ல கொழுத்த மாடு, ரெண்டு பேரும் மச மசன்னு பேசாமா, நல்ல ரேட்டா போட்டு சொன்னீங்கன்னாதான் யாருக்காச்சும் ஒருத்தருக்கு முடிக்க முடியும், முதலாளி நல்ல ரேட் எதிர்பார்க்கிறாரு" ("என் கமிஷனா வேற எடுக்கணும் நானு - ஏஜெண்டின் மைண்ட் வாய்ஸ்)
ஆணும் பெண்ணும் ஒரே குரலில் "அடி மாடா போகப்போற மாட்டுக்கு இன்னும் எவ்வளவு தருவாங்க, ம்க்கும்! "
ஏஜெண்ட் "என்னது அடிமாடா, இன்னும் அதோட இரத்தம் வர வரைக்கும் கறந்து, தோல் வத்திப் போறவரைக்கும் உங்களுக்கு இந்த மாட்ட விட மனசு வராதுன்னு எனக்குத் தெரியும், எடக்குமடக்கா பேசி அந்தா நடுவுல இருக்குற முதலாளியே மாட்ட பத்திட்டுப் போற மாதிரி பண்ணீடாதீக, சாதுவா பாத்துட்டு இருக்குற மாடு வேற உங்க எகனமொகன பேச்ச கேட்டு மிரளுது, மாடு முட்டறதுக்குள்ள பேரத்தை முடிங்க!"
பேரம் முடிந்து ஒருவர் கயிற்றை இழுத்துக்கொண்டுப் போக ஜல் ஜல் என சலங்கையொலிக்க மாடுத்துள்ளிச் சென்றது!
யாருக்கு மாடுன்னு கேக்கறீங்களா? "அடிமாட்டுக்கு" முதலாளி யாரா இருந்தா என்ன? 😜
#மாட்டுச்சந்தை #மனிதமந்தை

தூக்கமில்லை

ஆட்சியைப் பிடிக்கும்வரை
அரசியல்வாதிகளுக்கு
தூக்கமில்லை
ஆட்சியைக் கொடுத்தபின்
மக்களுக்கு
தூக்கமில்லை
#இந்திய_அரசியலில்!

தோற்றுப்போனவர்கள்

தோல்வியில்
தோற்றுப்போனவன்
சாமான்யாகிறான்
தோல்வியில்
கற்றவன்
வெற்றியாளனாகிறான்
தோல்வியில்
காயப்பட்டவன்
அமரனாகிறான்
தோல்வியில்
வெறிக்கொண்டவன்
சில நேரம்
கொலைகாரனாகிறான்
பெரும்பாலும்
அரசியல்வாதியாகிறான்

வெட்கப்பூக்கள்

Image may contain: 1 person, outdoor
 இந்த இரவில்
மின்னும் நட்சத்திரங்கள்
விடியலில்
மறைந்துவிடும் மாயமோ
காதல்?

அன்றி
வெப்பம்
சூழ்ந்த நிலத்தில்
வீசும் வேம்பின்
காற்றோ
காதல்?

இச் சாமரம்
வீசும் காற்றில்
ஓயாது
சலசலக்கும்
இலைகளின் குரலா
காதல்?

கிளைக்குக் கிளைத்
தாவி
அன்றில்கள்
ஒன்றின்மேல் ஒன்று
தழுவிக்கொள்ளும்
வேட்கையா
காதல்?

ஒருமணித்துளியில்
மலரும் காதல்
ஒரு மழையிரவில்
கரையும் காதல்
காதலின் வகையை
காதலே அறியா
தேசத்தில்
தோல்வற்றிச்
சுருங்கி
எலும்புகள் தேய்ந்து
பாக்குரலில்
வெற்றிலையிடிக்கும்
பாட்டியொருத்தி
அதில்
ஒரு பிடிச் சூழற்றி
தாத்தனுக்கூட்ட
ஆண்டுகள் கடந்த
காதலில்
அதே
வெட்கப்பூக்கள்
வாசனையோடு!
#வெட்கப்பூக்கள்

பேய்களின் ஆட்சியில்!

வருமானத்தில் வரி
செலவினத்தில் வரி
சேமிப்பிற்கு வரி
மருந்துகளுக்கு வரி
மருத்துவத்துக்கு வரி
அணிகலன்களுக்கு வரி
கல்விக்கு வரி
தண்ணீருக்கு வரி
சாலைப் பயன்பாட்டுக்கு வரி
எரிபொருட்களுக்கு வரி
உணவுக்கு வரி
ஏற்றுமதிக்கு வரி
இறக்குமதிக்கு வரி
வரிக்கு மிஞ்சியதில் வரி
இப்போது
கல்யாணத்துக்கு வரி
நாளை இறப்புக்கும்
கருமாதிக்கும் வரிகள்
மிச்சமிருக்கிறது
இந்தப் பேய்களின் ஆட்சியில்!

விடியும்

வறண்ட பூமி,
பெய்தும் பெய்யாமலும்
தீர்க்கும் மழை
கடும் குளிர்
சுடும் அனல்
திருட்டுக்கூட்டம்
தண்ணீர் பற்றாக்குறை
சாராயத்தின் ஆறு
கூன் மந்திரிகள்
கொலைக்கார செங்கோல்
செல்லாத நோட்டுகள்
பறந்துக்கொண்டேயிருக்கும்
மத்திய அதிகாரத்தட்டு
சாதிய ஓநாய்கள்
காவல் நரிகள்
குழந்தைகளின் சவக்குழிகள்
சுடுகாட்டுப் பேய்கள்
அறிவற்ற ஆடுகள்
கொடூர விபத்துகள்
மர்ம மரணங்கள்
காகிதத் தாள் உலகம்
இத்தனையும் மீறி
வாழ்தல் பேராதிசயம்
இருண்டு கொண்டேயிருக்கும்
புலர் காலைப் பொழுதாக
இதைக் கருதினால்
சட்டென்று விடிந்துவிடும்
நேரம் அருகில்தான்
வினைவிதைத்தவன்
வினை அறுப்பான்
வெளிச்சப்புள்ளி வந்துவிடும்
காத்திருப்போம்
காலம் கனியும்வரை!

மக்களின்வெறுப்பு

#அணுக்கதை
முன்னொரு காலத்தில், வணிகரொருவர் எப்போதும் செருப்பை வெளியே விட்டு, குடையை உள்ளே வைக்கும் கதையைக் கேட்டு நொந்துக்கொண்டிருந்த செருப்பு, கலியுகத்தில் தனக்கு வந்த வாழ்வையெண்ணி, குடையிடம் சொல்லியது;

செருப்பை வைத்து ஆட்சி
செய்தது இதிகாசம்
செருப்பே ஆட்சி
செய்வது
ஜனநாயகம்! 


இதைக்கேட்ட குடை;

வைக்க வேண்டிய
இடத்தில்
உன்னை வைத்தவரை
மனிதர்கள்
வாழ்ந்தார்கள்
அரியணையில்
வைத்த நாள்முதல்
நிலை தாழ்ந்தார்கள்

என்று சொல்லிவிட்டு,

வறண்ட வானத்தை
பார்த்துக்கொண்டே
இருந்தது குடை
கையறுநிலை
மக்களைப்போல!
பி.கு: இது அரசியல் பதிவல்ல
#மக்களின்வெறுப்பு

இங்கே_உயிர்கள்_விற்பனைக்கு

நகர நிர்வாகம் மோசமாகி
நகரம் மழைநீரில் தத்தளித்தால்
சில நூறு மக்கள் இறந்துபோனால்
சில நூறு ரூபாய்கள் மக்களுக்கு!

நீர் மேலாண்மை மோசமாகி
வறட்சி மேலோங்கி
விவசாயிகள் தற்கொலைச் செய்துகொண்டால்
சில நூறு ரூபாய்கள் விவசாயிகளுக்கு!

குடியால் குடிகெட்டு
கொலையிலோ விபத்திலோ
யாரேனும் மரணமடைந்தால்
சில நூறு ரூபாய்கள் குடும்பத்துக்கு!

காமம் மிகுந்து
எளிதாய் உயிர்களைக் களவாடி
பெண்களையும் குழந்தைகளையும் கொன்றால்
சில நூறு ரூபாய்கள் குடும்பங்களுக்கு!

நிலத்தில் வாயு எடுத்து
தனியார் கொழிக்க
நிலம் மலடாகி வாழ்வாதாரம்
பொய்த்துப்போனால்
சில நூறு ரூபாய்கள் குடும்பங்களுக்கு!

சில ஆயிரம் ரூபாய் கடன்களைக்
கொடுக்க முடியாமல்
கல்வியைத் தொடர முடியாமல்
மாணவன் தற்கொலைச் செய்துக்கொண்டால்
சில நூறு ரூபாய்கள் அவன் குடும்பத்துக்கு!

கட்சி அபிமானத்தில்
பேருந்திலோ பள்ளியிலோ குளத்திலோ
பெண்களைக் குழந்தைகளை மக்களை
யாரோ சிலர் எரித்தாலும் புதைத்தாலும்
சில நூறு ரூபாய்கள் அவரைச் சார்ந்தோர்க்கு!

கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள்
பிச்சை எடுத்தாலும்
அதிலும் சில நூறுகள் அதிகாரவர்க்கத்துக்கு!

யாரின் மின்சாரத்துக்கோ கூடங்குளம் அமைக்க
யாரின் நலத்துக்கோ குழாய் பதிக்க
யாரின் கழிவுகளையோ கொட்ட நிலம் சமைக்க
தமிழகப் பூமி சில கோடி ரூபாயில் தனியாருக்கு!

இத்தனையும் மறக்க
எஞ்சியிருக்கும் சாம்பலையும் விற்க
சில நூறு ரூபாய்கள் போதும்
இந்த அடிமை கூட்டத்துக்கு!
தமிழகம் விற்பனைக்கு
என்ற அறிவிப்புப் பலகை மட்டும்
காணவில்லை
அதை ஏதோ ஒரு மந்திரி
திருடிக் கொண்டு போயிருக்கலாம்
அல்லது யாரோ ஒருவன்
சில நூறு ரூபாய் கூலிக்காக
எங்கோ ஒரு மூலையில்
உருவாக்கிக் கொண்டிருக்கலாம்!

#இங்கே_உயிர்கள்_விற்பனைக்கு

போதும்!

நகையில்லையென்றாலும்,
ஆடையிருந்தாலும்,
குழந்தையென்றாலும்
கிழவியென்றாலும்
கசக்கப்படுவதற்கும்
கொல்லப்படுவதற்கும்
அவர்கள் பெண்கள் என்பதே
போதும்!


எதிரேயிருப்பது
மகளா மனைவியா தாயா
என்று தெரியாத அளவிற்கு
புணரும்
மனிதர்களின்
காமத்துக்குக் காரணம்
அவரின் போதையில்லை
பெண்களின் ஆடையில்லை
அவர்கள் தறிகெட்ட
ஆண்கள் என்பதே
போதும்!

ஒருவனைக்கூட
கடுமையாய் தண்டிக்க முடியாத
உங்கள் சட்டம் மாறாதவரை
உங்கள் வழக்கு விவாதங்களைத்
தள்ளிவைத்துவிட்டு
பெண்ணற்ற பூமியாக
இதை மாற்றிக்கொள்ளுங்கள்
கொல்லுங்கள்
#போதும்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!