Tuesday, 29 August 2017

கீச்சுக்கள்

ஒருவரிடம் நேருக்கு நேர் பேசும்போது கண்களைப் பார்த்தும், தொலைபேசியில் பேசும்போதும் காதை மட்டுமில்லாமல் கருத்தையுமூன்றிப் பேசுவது குறைந்தபட்ச மரியாதையும் மனிதாபிமானமும்!
**********************************************
பெண்களுக்கெதிரான குற்றங்களிலெல்லாம், ஆட்சியாளர்களின், அதிகாரத்தின் மோசமான மௌனத்தால், பெண்கள் விஷயத்தில் இந்தியா கற்கால நாகரீகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதையும் புதிய இந்தியா என்று பிரதமர் விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்!
**********************************************
அணுவுலைக்கு கூடங்குளத்தையும், ஹைடிரோகார்பன்களுக்கு தஞ்சையையும், காவிரிக்காக விவசாயிகளையும், நீட் போர்வையில் மாணவர்களையும், இந்திக்காக அரசுப்பணிகளையும், பதவிக்காக முதுகெலும்பையும் இழந்தவர்கள், மேகதாதுவில் அணைக்கட்டிக்கொள்ள அனுமதி அளிப்பதில் வியப்பென்ன? ஒரு ஓட்டு, மூன்று முதல்வர்கள், ஓட்டைத்திட்டங்களால் பறிபோகிறது, தமிழகத்தின் வளங்களும், எதிர்காலமும்!

#Hydrocarbon #Reservoir #Neet #Koodangkulam
**********************************************
ஒரு ஆப்பத்தை பூனைகளுக்குச் சரியாக பங்கீடுவதாக குரங்கு சொன்னதாம், உடனே ஆப்பம் தமிழ்நாடு, குரங்கு மத்திய அரசா என்று நீங்கள் கற்பனை செய்து வரிந்துக்கட்டினால் கம்பெனி பொறுப்பில்லை, முன்னோர்கள் கதையைச் சரியாக சொல்லியிருக்கிறார்கள்! அவ்வளவுதான்!
**********************************************
ப்ளூவேல் விளையாட்டை விளையாடி, 50 நிலைகள் கடந்து, மனநிலை தவறி, பிள்ளைகள் தற்கொலைச் செய்துகொள்ளும்வரை பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அடடா ஒரு ஆச்சர்யக்குறி!
****************************************************
தினமும் செய்தித்தாள்களில் சுற்றுலா சென்ற வேன், பஸ், பள்ளிப்பிள்ளைகள் சென்ற டெம்போ என்று இவையெல்லாம் எதனுடனோ மோதி விபத்தில் சிக்கி உயிர்ப்பலி என்ற செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது, இந்த வாகனங்களுக்குள் ஏன் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த கூடாது? ஏன் சீட் பெல்டை இந்த வாகன வடிவமைப்புகளில் அவசியமாக்கக் கூடாது?? தெர்மாக்கோலில் அணைகட்டிய அமைச்சர் போல் விபத்தைத் தடுக்க உண்மையான லைஸென்ஸ் போதும் என்று சொல்லும் அமைச்சர்கள் இருக்கும் வரை என்னதான் செய்வது!?
*************************************************
ஹரியானவில் ஒரு சாமியாரை வளர்த்துவிட்டு, இன்று தீர்ப்புக்கு முன்னேற்பாடாக பள்ளிக் கல்லூரிகள் விடுமுறையாம், இதைத்தான் "வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுகிட்டு குத்துதே குடையுதேன்னு சொன்னானாம்" என்று சொல்வார்கள்!

தமிழ்நாட்டில் இப்படித்தான் ஊருக்கு ஊர் சாமியார்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம், ஏற்கனவே ஒரு ஆசாமி பிரதமரையே விளம்பர தூதுவராக்கிவிட்டார், "பிரதமரே என் பக்கம், என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது" என்ற பறைசாற்றலே அது!

கடவுளுக்கும் தமக்கும் இடையில் இடைத்தரகர்களை மக்கள் நாடினால், இந்த நாட்டின் வளத்தையும், பெண்களையும், அரசுப்பதவிகளையும் தரகுத்தொகையென்று தரத்தானே வேண்டும்??

#சாமியார்கள்
********************************************
கொஞ்சம் மோசமான அளவிலான ஆட்சியை தரப்போவது யார் என்பதற்காக நடத்தப்படுவதுதான் நம்முடைய தேர்தல்!
******************************************
இன்னேரம் ஒரு ஆமையிடம் ஆட்சியைக் கொடுத்திருந்தால், அதுகூட வேகமாய் செயலாற்றி, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கும், ச்சை!
**********************************************

ஒரொயொரு சாமியார் ஹரியானாவில், அந்தச் சாமியாரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டும், அவருக்கு ஆதரவாக வன்முறை செய்து, பல பேரை கொன்று, பலருடைய உடைமைகளை கொளுத்தி சேதம் செய்து வருகிறது மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம், ஒரு மதவாத கட்சியை எங்கெல்லாம் வளர்த்து ஆட்சியைக் கொடுக்கிறீர்களோ அங்கெல்லாம் பொதுமக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படுகிறார்கள்! கோயம்புத்தூர் இதே தவறை ஏற்கனவே செய்துவிட்டது, திருநெல்வேலி செய்திருக்கிறது, பீகார் செய்துவிட்டது, டெல்லியும் மத்தியில் ஆட்சி அமைக்க செய்திருக்கிறது, இவர்களுக்காகத்தான் இங்கே தேசபக்தர்கள் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நாள்தோறும் பொங்குகிறார்கள்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாநில காவல்துறையை வைத்து ஒரே நாளில் நசுக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் முடியும் போது, ஹரியானாவில் இத்தனை உயிர்பலியை தடுத்திருக்க முடியாதா? காவல்துறையே உடந்தையாகும் போது, எல்லாமும் கட்டமைக்கப்படும் போது, வடநாடு என்றாலும் தென்னாடு என்றாலும், இந்தி என்றாலும், தமிழ் என்றாலும், செத்துவீழ்பவர்கள் யாரோ ஒருவரின் பிள்ளையோ, சகோதரனோ அல்ல, வெறும் கலவரத்தில் மாண்ட பிணங்களின் எண்ணிக்கையவர்கள்!
நாட்டில் நிறைய சாமியார்கள் இருக்கிறார்கள்,அவர்களைத் தேடித்தேடி காலில் விழுந்து அவர்களை குற்றவாளிகளாக, அரசியல் பின்புலம் அதிகரிக்கும் பலசாலிகளாக மாற்றிவிடாதீர்கள்! சாமியார்களின் உதவி அரசுயல்வாதிகளுக்கு தேவை, அவர்கள்தான் மக்களை மூளைச்சலவைச் செய்து ஆட்சியாளர்கள் விரும்பும் ஓட்டுக்களாய் மாற்றமுடியும்! ஆகவே "சாமியார்கள் ஜாக்கிரதை"

விதைப்பதே_முளைக்கும்

கணினியில் விளையாடும் ப்ளூ வேல் விளையாட்டில் 50 நிலை விளையாடி, தன்னை வருத்திக்கொண்டு, சாகும் பிள்ளைகள், கவனிக்காத மேல்தட்டு பெற்றோர்கள்

ஆசிரியை செய்த அவமரியாதை தாங்க முடியாமல் 12 வயது சிறுமி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை, அப்பா ஆட்டோ டிரைவர்
பெற்றோர் எந்த நிலையில் இருந்தாலும், பிள்ளைகளிடம் பெரிதாக எதையோ தவற விடுகிறோம், அவர்களுக்கான நம்பிக்கையை விதைக்க மறந்துவிடுகிறோம்! 😞

சில செய்திகள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்;

1. மதிப்பெண்கள் பிள்ளைகளின் அறிவை, திறமையை பறைசாற்றுவதில்லை

2. நீங்கள் எப்படி படித்தீர்கள்? எல்லா பாடத்திலும் எப்போதும் முதல் மதிப்பெண் பெற்றீர்களா? ஆம் எனில், உங்களின் அந்த அறிவு உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் எப்படி பயன்படுகிறது? இல்லையெனில், உங்கள் பிள்ளைகளை வருத்தாதீர்கள்

3. உங்களைப் பொதுவெளியில் உங்கள் மேலாதிகாரியோ, உங்கள் உறவோ, "நீ ஒன்றுக்குமே லாயக்கில்லாதவன்" என்று இகழ்ந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அதே வேதனையை ஏன் உங்கள் பிள்ளைக்கும் யாரோ ஒருவரின் பிள்ளைக்கும் தருகிறீர்கள்?

4. ஆசிரியர்களாக உங்கள் அறிவு பூகோளத்திலோ, விலங்கியலிலோ, சரித்திரத்தில் மட்டுமே, உங்களுக்கு எல்லாமும் தெரிந்துவிடுவதில்லை, பிள்ளைகள் எப்படி எல்லாவற்றிலும் அறிஞர்களாய் திகழ வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?

5. பாடம் நடத்தும்போது அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கு உங்களால் புத்தகத்தைத் தாண்டி உதாரணங்கள் சொல்ல முடிகிறாதா?? பிள்ளைகளின் கேள்விக்கு உங்களால் பதட்டமில்லாமல், எரிச்சலில்லாமல், புரியும் வகையில் பதில் சொல்ல முடிகிறாதா? தெரியவில்லை, அப்புறம் சொல்கிறேன் என்று எந்தக்கேள்விக்காவது தன்னம்பிக்கையோடு பதில் சொல்லியிருக்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் நல்லாசிரியர், இல்லையெனில் வேறு பணியை தேடிக்கொள்ளுங்கள்!

6. உருவத்திலும், நிறத்திலும் எந்தக் குழந்தையும் ஒரே மாதிரி அச்சு வார்த்தது போல் இல்லை, (அப்படியிருந்தால் நாட்டில் கலாச்சார காவலர்களுக்கும் குழப்பம் வந்துவிடும்) அப்படியிருக்கும் வேளையில், கல்வியிலும், திறமையிலும் எல்லாக்குழந்தைகளும் ஒன்று போலவே இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

7. அனைத்துக் குழந்தைகளும் ஒன்றுபோலவே தானாகவே பயின்று, தானாகவே திறமைசாலிகளாகிவிட்டால் பள்ளிகள் எதற்கு? ஆசிரியர்கள் எதற்கு?

8. கடைசியாய் உங்கள் குழந்தைகளிடம் அல்லது வகுப்பில் பிள்ளைகளிடம் எப்போது பேசி வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தீர்கள்?

9. எதுவாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் பயமின்றி தைரியமாக பேசுமா? அப்படி கடைசியாக பேசியது எப்போது, அப்போது உங்கள்எதிர்வினை என்ன? வன்முறையா, அலட்சியமா? அன்பா?

10. எந்த உணவைக் கொடுக்கிறீர்களோ அதற்கேற்ப ஆரோக்கியம், நீங்கள் எப்படி நடந்துக்காட்டுகிறீர்களோ, எதைப் எப்படி எந்த நேரத்தில் பிள்ளைகளின் மனதில் விதைக்கிறீர்களோ அதற்கேற்பவே பிள்ளைகளின் மனவளர்ச்சி!
#விதைப்பதே_முளைக்கும்

தன் சாதி

அதிகம் படிக்காத பல கிராமத்து / நகரத்து பெரியவர்களிடம் கண்ட பெரிய மனதையும், சாதிப்பாராட்டாத மாண்பையும் சில நகரத்து இளைஞர்களிடம் காண முடிவதில்லை, தன் சாதியை முன்னிறுத்தி அறிமுகப்படுத்திக்கொள்வதும், நட்பு பாராட்ட விழைவதும், குறுக்கு வழியில் ஆதாயம் தேட முனைவதையும் காணும்போது, இந்தக்கல்வி இவர்களுக்கு வெறும் பட்டங்களை மட்டுமே தந்திருக்கிறது என்றே தோன்றுகிறது! இன்றும் கூட, "என் திருமணம், இன்ன சாதிப்பெண்ணுடன் என்ற ஒரு பகிரங்க அறிவிப்பை கண்டேன், "_____
சாதின்னு சொல்றதே ஒரு கெத்துதான்" என்று இன்னொரு பதிவில் ஒருவரின் சுயத்தம்பட்டத்தைப் பார்த்தேன்! அவரவர் சாதியில் அவரவர், அவரவர் சாதியைத் தொங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது அவரவர் விருப்பம், எனினும், சில இளைஞர்கள், சுய சாதிப்பெருமையின் பின்னே இரண்டே குறிக்கோள்கள்களை முகநூலில் தெளிவுப்படுத்துகிறார்கள், ஒன்று தம் சாதியைச் சேர்ந்தவன் இருக்கும் பதவியோ பின்புலமோ தனக்கு உபயோகப்படும் என்ற நோக்கில் அறிமுகத்தை விரிவுப்படுத்திக்கொள்வது, இரண்டு, தம் பெருமை மட்டும் பேசாமல் பிற சமூகத்தினரை கேலி பேசி காயப்படுத்துவது! 

நட்பில் லாப நோக்கையும், பிறரைக் காயப்படுத்தி தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் காழ்ப்பும், வீண் வன்முறையைத் தூண்டும் மனநிலையும் தவிர நீங்கள் வேறு எதற்கு சாதியைப் பொதுவெளியில் உபயோகப்படுத்துகிறீர்கள்?? அவரவர் மனசாட்சியைத் தொட்டு பதில் கூறிக்கொள்ளுங்கள்!

சாதியில்/ சாதிகளால் உறவுகள் வரலாம், எனினும் நல்ல நட்பு என்பது நல்ல மனங்களால் மட்டுமே வரும்! மனிதர்களை மனம் திறந்து பார்ப்போம், மனம் நிறைந்து நட்பு பாராட்டுவோம், நன்றி கூறுவோம், சாதித்தெரிந்து அல்ல!

தமிழ்நாடு

அந்தச் செழிப்பான
மேய்ச்சல் நிலத்தில்
நுழைந்த சில நூறு மந்திகள்
ஆட்டம் போட
பலகோடி ஆடுகள்
வெறும் வாயை
அசைப்போட்டுக்கொண்டிருந்தன
மந்திகளை வேடிக்கைப்பார்த்துக்
கொண்டிருந்த ஆடுகளை
உணவாக்கி
பிரியாணி செய்ய
சில ஏவல் ஓநாய்களும்
வஞ்சக நரிகளும்
மேய்ச்சல் நிலத்தின்
நாடகங்களை
கண்காணித்துக்கொண்டிருந்தன
பயணத்திலிருந்த கொழுத்த
கிழட்டுச் சிங்கத்தின்
வரவுக்காக!

அட எருமைகளா, இவர்கள் துறவிகள் இல்லை

10000 bc என்று ஒரு படம், கடவுள் என்று ஒருவனை வைத்துக்கொண்டு, ஏகப்பட்ட அட்டூழியங்கள் செய்யும் அந்தக்கூட்டம், பிற பழங்குடி கூட்டங்களை அடிமையாக்கி, அந்தக்கடவுளுக்கு கோவில் என்று அடித்துத்துன்புறுத்தி வேலை வாங்குவார்கள், ஒரு பழங்குடித் தலைவன் மீட்பனாக, ஹீரோவாக இறுதியில் பல தடைகள் கடந்து, அடிமைப்பட்ட மக்களை ஒன்றினைக்கும் வேளையில், கடவுள் என்று நம்பப்படுபவன் வந்து நின்றதும், இயல்பாய் ஊறிய நம்பிக்கையில், அச்ச உணர்வில் எல்லோரும் தரையில் விழுந்து வணங்க, இறுதியில் ஹீரோ தன் வேல்கம்பை கடவுளாக மதிக்கப்படும் மனிதன் மீது "அவன் கடவுள் இல்லை" என்று சொல்லிக்கொண்டு எறிய, அந்தக்கடவுள் கொல்லப்பட்டு கீழே விழுகிறான், பின்பு ஒரு வழியாய் மக்களுக்கு வீரம் வருகிறது, விடுதலை கிடைக்கிறது!
இப்போது பஞ்சாபில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாபா என்ற ஆசாமியால் கலவரம், கொலைகள் என்று பார்க்கும் போது, நாட்டில் எல்லா பாபாக்களையும் நினைத்துப்பார்க்க தோன்றுகிறது!

ஒருவன் காடுகளை அழித்துவிட்டு, பிள்ளைகளுக்கு மரங்களைப் பற்றி, நீர்நிலைகளை பாதுகாப்பதைப் பற்றி பாடம் எடுக்கிறான், இன்னொருவன், வாழும் வழி காட்டுகிறேன் என்று யமுனா நதியை அசுத்தமாக்கினான், இந்த ஒருவன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு குற்றவாளியாகிறான், இன்னொருவன் கஞ்சா புகைத்து உழன்று, திடீரென்று யோகாவில் இறங்கி இப்போது தொழிலாதிபராய் மாறிவிட்டான், பிரேமானந்தா, நித்யானந்தா என்ற வரிசையில், அயோக்கியத்தனத்தில் பிற மத குருமார்களின் பங்களிப்பும் உண்டு! துறவு என்றால் எல்லா ஆசைகளையும் துறப்பது, நம் நாட்டில் சாமியார்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அந்தரங்கத்தில் பல பெண்களுடன் ஆடைத்துறக்கிறார்கள், உயர்ரக வாழ்க்கை வாழ்கிறார்கள், மந்திரிகளுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள், பொய் சொல்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், செல்வம் குவிக்கிறார்கள், இவர்கள் உடையின் நிறத்தைத் தவிர வேறு எதுவுமே துறவை குறிப்பதில்லை, "அட எருமைகளா, இவர்கள் துறவிகள் இல்லை, மக்களுக்கு நன்மை நினைப்பவர்கள் கூட இல்லை, இவர்கள் ஜஸ்ட் கேடுகெட்ட அயோக்கியர்கள்" என்று10000 Bc யைப்போல் இந்த 21st a c யில் யாராவது வெடியை இவர்கள் மீது போட்டு சட்டத்தின் வாயிலாகவோ, தர்மத்தின் வாயிலாகவோ கதைமுடித்தால்தான் இந்தத் தேசம் மூச்சுவிடும் நிம்மதியாய்!

மனதில் தெளிவில்லாதவர்களுக்கு, கொஞ்சம் மந்த புத்திகாரர்களுக்கு, காணும் உயிர்களிடத்தில், இயற்கையிடத்தில், கோவில்களில் உள்ள தெய்வங்களிடத்தில் வராத நம்பிக்கையெல்லாம், சாமியார்கள் என்ற போர்வையில் வரும் ஆசாமிகளிடம் வந்துவிடுகிறது!

நம் நாட்டிற்கு உடனடி தேவை மனநல மருத்துவர்களே, இல்லையென்றால் மத்திய அரசின் கருணையில் புதிய கேடி தாதாக்கள், மன்னிக்கவும், பாபாக்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்!

அங்கிள் கேஎப்சி சாம்பார் இருக்கா?

Image may contain: one or more people and people sitting

கரித்தூள், உப்பு போன்றவற்றை தேய்க்காதீர்கள், அது உங்கள் ஈறுகளை சேதப்படுத்தும். மஞ்சளை முகத்தில் பயன்படுத்தாதீர்கள், அது உங்கள் முகத்தை மிக விரைவில் முதுமையடையச் செய்யும். செக்கு எண்ணெய் அடர்த்தியாய் மிகுந்த கொழுப்பு நிறைந்து உள்ளது, பளீரென்று அடர்த்திக்குறைவாய், சுத்திகரிப்புச் செய்த எண்ணெயை உபயோகப்படுத்துங்கள், உங்கள் உடலில் கெட்டக்கொழுப்பு சேராது! இதெல்லாம் என்ன என்று உங்களுக்குத் தெரிகிறதா?

இந்தியப் பராம்பரியம், உணவு பழக்கம் எல்லாவற்றையும் குறை சொன்ன கார்ப்பரேட்டுகள், இந்திய மக்களை அவர்கள் பழக்கத்தை விட்டு, மேலே கூறியது போல் விளம்பரம் செய்து, நெடுந்தொலைவுக்குத் தள்ளி, பின்பு வியாதிகளை அதிகரித்து, அதற்கும் மருந்துகள் கொடுத்து, அப்படியே ஒரு யூ டர்ன் போட்டு, "என்ன உங்கள் பேஸ்ட்டில் உப்பு இல்லையா? மஞ்சளும், கற்றாழையும் கலந்த சிறந்த கிரீம்கள், கெட்டக்கொழுப்பு நல்ல கொழுப்பு என்றில்லை, கொழுப்பு அவசியம், செக்கு எண்ணெய் நல்லது, உங்கள் ஆரோக்கியத்திற்கு செலவு செய்யுங்கள், பளீரென்ற அரிசி வேண்டாம், கருப்பருசி, பழுப்பரிசி சாப்பிடுங்கள், நார்ச்சத்து சேரும்", இப்படியே மாற்றிப் பேசுபவர்கள் யார்? அதே கார்ப்பரேட்டுகள் தான்!

முதலில் சொன்னது சரியா அல்லது இப்போது சொல்வது சரியா? முதலில் சொன்னது தவறென்றால், அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரையும் விட்டவர்களுக்கு இந்தக் கார்ப்பரேட்டுகள், பணத்தை வாங்கிக்கொண்டு எல்லாவற்றிற்கும் அனுமதிக்கொடுத்த அரசாங்கம் சொல்லும் பதிலென்ன, தரும் நீதி என்ன? இந்தியாவில் சர்க்கரை வியாதியும், புற்றுநோயும் ஏன் அதிகரித்தது? இந்திய மக்கள் ஏன் சர்வதேச மருந்து சந்தைக்கு சோதனை எலிகளாக ஆனார்கள்?

உண்மையில் இதற்கெல்லாம் பல்வேறு காரணங்களை அடுக்கினாலும், யார் என்ன சொன்னாலும், குறிப்பாய் திரைத்துறையைச் சார்ந்தவர்களோ, விளையாட்டு, மருத்துவம் இன்னபிற துறைகளைச் சார்ந்த பிரபலங்களோ வந்து எதைச்சொன்னாலும் நம்பிவிடும் அறியாமையும், தெளிந்த கல்வி இல்லாமையும், இன்னமும் பல இடங்களில் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்னும் பிற்போக்குத்தனமுமே பிரதான காரணங்கள் என்று சொல்லலாம் அல்லவா?

எப்போது வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று பிரபலங்கள் சொல்வதை உண்மையென்று நம்பி, நம் ஆரோக்கிய, நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவுப்பழக்கவழக்கங்களில் இருந்து மாறிப்போனோமோ அப்போதே நம் ஆரோக்கியமும் சீர்குலைய ஆரம்பித்துவிட்டது! எப்போது ஆரோக்கியம் சீர்குலைய ஆரம்பித்ததோ, அப்போதே நமக்குச் சோம்பலும் சோர்வும், வியாதிகளும் வந்து சேர்ந்துவிட்டது!

நிறைந்திருக்கும் வியாதிகளை மருந்துகளின் மூலம் வியாபாரமாக்கும் கார்ப்பரேட்டுகள், மக்களின் சோம்பலையும் கூட மூலதானமாக்கிக்கொண்டார்கள், குறைந்தப்பட்சம் ஒரு மஞ்சளையோ, மிளகையோ கூட பெரும்பாலானோர் வீட்டிலேயே வறுத்துப் பொடி செய்துக்கொள்வதில்லை, இன்று சாம்பார் வைப்பதும், ரசம் வைப்பதும் கூட ரெடிமேட் பொடிகளால் முடிந்துவிடுகிறது, அப்பாத்தாக்களுக்கு தெரிந்த சமையல் ரகசியம், உழைப்பு, அம்மாக்களிடம் பாதி வந்தது, அம்மாக்களின் மசாலாக்கள் இப்போதுள்ள சமைக்கும் இல்லத்தரசிகளிடம், இல்லத்தரசன்களிடம் கலர் கலராய் பிளாஸ்டிக் கவர்களில் வந்துச் சேர்ந்திருக்கிறது, நாளை பிள்ளைகளுக்கு உணவே கூட கவர்களில் வரலாம், இப்போதே வந்திருக்கிறது! ஏதோ காரணத்தால் முடியாதவர்களைத் தவிர்த்து விடுவோம், மற்றவர்களுக்கு இருப்பது சோம்பல் இல்லாமல் வேறென்ன? தோழியொருவர் சொன்னது, "காய்கறி கட் பண்ணியே கைவலிக்குது அமுதா!?" வெறும் இரண்டு பேருக்கான மதிய சமையலுக்கு சொன்னது!

வெளியே சாப்பிட்டுக்கொள்ளலாம், ரெடிமேட் உணவுகளை வாங்கிக்கொள்ளலாம், எப்போதும் விருந்து மருந்து என ஊர்சுற்றலாம், பல மணிநேரம் சீரியல்கள் பார்க்கலாம், சினிமா பார்க்கலாம், பிள்ளைப்பேறைக்கூட கத்தி வைத்து முடித்துக்கொள்ளலாம் என்றிருந்தால், ஆரோக்கியம் என்பது எங்கிருந்து வரும்?! இப்போது சொல்லுங்கள், உடலுழைப்பில்லாமல் வியாதிகள் சேர்ந்து அதற்கு மருந்துகள் என்று கொள்ளையடிக்கும் நிறுவனங்கள், சோம்பலையும் கூட எவ்வளவு அழகாக மூலதனமாக்குகிறார்கள்?

உதாரணத்திற்கு ஒன்று, சமோசா என்பது பெரும்பாலானோருக்கு பிடித்த நொறுக்குதீனி, அதுவும் மைதாவில் செய்யப்படும் ஆரோக்கியமில்லாத நொறுக்குத்தீனி, ஒரு விளம்பரம் பார்த்தேன், ஒரு விடுமுறையின் மாலையில் பிள்ளைகள் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருக்க, விளம்பர இடைவெளியில், "இரண்டு அம்மாக்கள் சமோசா செய்கிறார்கள், ஒரு அம்மா இரண்டு மணிநேரமோ மூன்று மணிநேரமோ சமோசா செய்கிறார், அதாவது, உருளைக்கிழங்கை வேக வைத்து, மாவு பிசைந்து, வடிவமாக்கி, இன்னொருபுறம் மற்றொரு அம்மா, பாக்கெட்டைப் பிரிக்கிறார், ஏற்கனவே அதில் உள்ள சமோசாவை எண்ணெயில் போடுகிறார், பொரித்தெடுக்கிறார், அவ்வளவுதான் சில நிமிடங்களில் சமோசா ரெடி!" இதில் இரண்டு உத்தி உள்ளது, ஒன்று இரண்டு குழந்தைகளுக்கு சமோசா செய்வது மலைப்போன்ற காரியமென்றும், வேர்த்து விறுவிறுத்து பலமணிநேரம் வீணாகும் என்றும், அதே சமயம் இந்த விளம்பரம் குழந்தைகளை மையப்படுத்தி அவர்கள் காத்திருந்து சோர்வுறுவது போலவும், எது சிறந்தது?" என்று அவர்களை மையப்படுத்தி வரும் விளம்பரம்! அன்று நானும் மகனும் உண்மையில் சமோசா செய்ய பலமணிநேரமாகுமா என்று சோதிக்க முடிவு செய்தோம், அதுவரை நான் சமோசா செய்ததே கிடையாது, சில நிமிடங்கள் நெட்டில் குறிப்பெடுத்து, மைதாவை தவிர்த்து, கோதுமையை மாற்றாக்கி, மசாலா செய்வது முதல், மாவுப்பிசைந்து வடிவமாக்கி, சமோசா செய்து, சிறிது புதினா கொத்தமல்லிச் சட்னி செய்து, தட்டில் பரிமாறும்வரை ஆன நேரம் ஒரு மணிநேரத்திற்கும் குறைவே, அதுவும் 7 பேர் சமோசாவை சுவைத்தார்கள்! எனக்கு மூன்றுமணிநேரம் ஆகவில்லை!
 
இப்போது வரும் விளம்பரங்கள் மக்களின் உளவியலை சரியாக வியாபாரமாக்குகிறது, அது சிறந்ததாய் இருந்தால் பரவாயில்லை, இது சிறந்தது என்று பணம் வாங்கி, வாய்கூசாமல் பொய் சொல்லும் பிரபலங்கள் அதை பயன்படுத்துவதில்லை, எத்தனைப்பெரிய மோசடி இது!
உணவென்றில்லை, இன்றைய பிள்ளையார் சதுர்த்தியில், சும்மா போடச்சொன்னால் போட மாட்டார்களென்று முன்னோர்கள் பிள்ளையாருக்கு போடச் சொன்ன தோப்புக்கரணம் எப்படி பலனளிக்கிறது என்பதையும் நமக்கு வெள்ளைக்காரர்களே சொல்ல வேண்டியிருக்கிறது, நண்பர்கள் தோப்புக்கரணம் நல்லது என்ற வெள்ளைக்காரர்களின் ஆராய்ச்சி காணொளியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்! உணவே மருந்து, மருந்தே உணவு என்று கரடியாய் கத்தினாலும் இவர்களுக்கு காதில் ஏறாது, பார் கமல் சொல்லியிருக்கிறார், நயன்தாரா வந்திருக்கிறார், வெள்ளைக்காரன் சொல்லியிருக்கிறான் என்றால் உடன் காதுகொடுப்பார்கள்!

பல்வேறு ஆங்கில எழுத்தாளர்களின் புத்தங்களை படிக்கும் போதெல்லாம் இவர்கள் நம்முடைய முன்னோர்கள் சொன்னதைத் தாண்டி எதையும் சொல்லிவிடவில்லை என்று ஆணித்தரமாக தோன்றுகிறது, உதாரணத்திற்கு, இந்த இயற்கைக்கு நன்றி சொல்லுங்கள் என்று ஒருவர் சொல்கிறார், நம்முடைய பொங்கல் பண்டிகை அதைத்தான் செய்கிறது, அதை ஏன் நாம் உணரவில்லை,ஏனேனில் நம் முன்னோர்கள் எதையும் சரியாக ஆவணப்படுத்தவில்லை, ஏன் எதற்கு என்று கேள்விகளை ஊக்குவிக்கவில்லை, அதை நம்முடைய பெற்றோர்கள் கேட்டுத்தெளியவில்லை, ஆவணப்படுத்தவில்லை, வேப்பிலை நல்லது என்று ஆராய்ச்சி செய்து வெளிநாட்டவன் காப்பீட்டு உரிமை என்று வரும்போது பொங்கி எழுகிறோம், உடற்பயிற்சி முறைகளான யோகாவை, உடற்பயிற்சி என்று சொல்லாமல் சாமியார்களை வைத்து மதமாக்குகிறோம், நல்ல கருத்துகளை, ஆவணங்களை அரசுடமையாக்கமால் விட்டு விடுகிறோம், கேடுகெட்ட ஊழல்வாதிகளால் நிரம்பிய ஆட்சிகள் பணத்தையும் பதவியையும் தவிர எதிலும் அக்கறைக்கொள்வதில்லை!

சரி நாம் என்ன செய்கிறோம், ரசம் பொடியில் வருவதில்லை, அதை மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து, தாளித்து வருவது என்ற அடிப்படை விஷயங்களை, மஞ்சள், கற்றாழை, நலங்கு மாவு, சீயக்காய், என்ற பாரம்பரியங்களை, குனிந்து நிமிர்ந்து வேலை செய்வது, பலமணிநேரம் பார்க்கும் தொலைக்காட்சியின் நேரத்தை குறைத்துக்கொண்டு, உணவு, ஆரோக்கியம், உடற்பயிற்சி, உழைப்பு, நல்ல புத்தகங்கள் என்று இந்த தலைமுறை தன்னையும் மாற்றிக்கொண்டு, வருங்காலத் தலைமுறைக்கு நல்ல செய்திகளைக் கடத்தலாம், ஆவணப்படுத்தலாம், இல்லையென்றால், "அங்கிள், உங்க கடையிலே கேஎப்சி சாம்பார் வந்துடுச்சான்னு அம்மா கேக்கச் சொன்னாங்க" என்று அடுத்த தலைமுறை கேட்கும்!

எத்தனை கோடிகள் வரிக்கொடுத்தால்??

குறைந்த கூலி, அதிக வேலை என்று கட்டிடத்தொழிலாளர்களாக வட இந்தியர்களை வரவழைத்தீர்கள், பின்பு அப்படியே படிப்படியாக செக்யூரிட்டி வேலை, எடுபிடி வேலை என்று மொத்தமாய் அவர்கள் ஆக்கிரமிக்க, இன்னொரு பக்கம், மத்திய அரசு அலுவலகங்களில், வங்கிகளில் எல்லாம் வடஇந்திய மயம், பின்பு குற்றங்கள் அதிகரித்தது!

பின்பு இவர்களுக்காக நீங்கள் இந்திப்படித்தால் என்ன என்று நெடுஞ்சாலைகளில் தமிழ் அழிக்கப்பட்டது, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் இருந்து, ஐடி கம்பெனிகள் வரை இந்தியின் ஆதிக்கமே, நெல்லையில் இருந்து தமிழ்மக்களின் ஒட்டுகளை வாங்கி டெல்லிக்கு எம்பியாய் எம்பிச் சென்ற பாஜக மந்திரி முதல், தமிழகத்தின் அமைச்சர்களாய் வலம் வரும் அரசியல்வாதிகள் வரை அத்தனைப்பேரும் விடாது இந்தி மொழிக்காக பாடுபடுகின்றனர், அதனுடைய இன்னொரு நீட்சியாக "நீட்"!

ஏற்கனவே தமிழ்நாடு "வட இந்தியர்களுக்கும்" கல்விக்கூடமாய் இருந்த நிலைமாறி, இனி தமிழ்நாடு வட இந்தியர்களுக்கும், லட்சகணக்கில் செலவிட தயாராயிருக்கும் தமிழர்களுக்கும் "மட்டுமே" கல்விக்கூடமாய் இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறது! இனி இப்படியே போனால், காய்ச்சலுக்கு மருத்துவரிடம் போனால் கூட இந்திக்கற்றுக் கொண்டு போக வேண்டும்! தமிழ் இனி மெல்லச்சாகும் என்பதை உண்மையாக்குவது முதுகெலும்பில்லாத நம் பிரதிநிதிகள்தான், பதவிக்காக கூழைக்கும்பிடு போட ஆரம்பித்த நாள் முதல், மொழிப்பற்று என்பது தொலைய ஆரம்பித்துவிட்டது, மக்களுரிமை என்பதும் வெறும் கேலிக்கூத்தாகிவிட்டது!

இந்தித் திணிக்கப்பட்ட மாநிலங்களில் எந்த முன்னேற்றமும் மக்கள் பெரிதாக அடைந்துவிடவில்லை! வட மாநில பெண்களும் கூட தமிழ்நாட்டில் தான் மரியாதையோடு வாழமுடியும், அந்த நிலையும் கூட இனி மாறலாம், இனி மருத்துவம் தாண்டி, ஒவ்வொரு துறையிலும் இந்தி நுழையும், இன்னமும் பெண்கள் விஷயத்தில் காட்டுமிராண்டி மனநிலையில் இருந்து மாறாத ஆண்கள் பெருகி, பெண்களின் முன்னேற்றம் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறலாம்!

இந்த ஆட்சியில், ஆட்சியைக் காப்பாற்றும் போராட்டமே நாள்தோறும் நிகழ்கிறது, மற்றப்படி எந்தத்துறை இயங்குகிறது என்பது யாருக்குமே தெரியாத அப்பல்லோ மர்மம் போன்றது!

மாட்டுக்குப் போராட முடிந்ததும் கூட ஆட்சியாளர்களின் தந்திரம்தான், இப்போது ஆட்சிக்காக , "நீட்" என்று நீட்டாக திணிப்பதும் அதே தந்திரம்தான், தொழிலாளிகள் தொடங்கி, விவசாயிகள், இப்போது மாணவர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை மத்திய அரசும் மாநில அரசும், இனி நீதிமன்றங்கள் மக்கள் உரிமையை மீட்டுக்கொடுக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இந்தக் காத்திருத்தலின் அயற்சியில், சலிப்புடன் இதைக்கேட்கிறேன், இந்தக்கல்வியை இன்னும் எத்தனை கோடிகள் வரிக்கொடுத்தால் இந்த அரசு இலவசமாக்கும்???
#நீட் #Neet

நீட் நுழைவுத்தேர்வு எதற்கு

சிபிஎஸ்சி என்றாலும் மெட்ரிக் என்றாலும் +1, +2 வில் பிள்ளைகள் படிக்கும் பாடங்கள் என்பது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்துதான், மருத்துவர் என்றால் சயின்ஸையும், பொறியாளர் என்றால் அதனுடன் கணிதத்தையும், கணக்களார் என்றால் வணிகவியலையும், இப்படித் தனித்தனியே குருப் என்று எடுத்துதான் படிக்கிறார்கள், அந்த அடிப்படையில் இடம் கொடுப்பதை விட்டுவிட்டு இந்த நீட் நுழைவுத்தேர்வு எதற்கு??

படிக்காதவர்கள், டீ விற்றவர்கள், சாராய வியாபாரிகள், குவாரித் திருடர்கள் என்று பிள்ளைகளின் படிப்பையும், கனவையும் பற்றித் தெரியாத தற்குறிகளுக்கெல்லாம் ஓட்டுப்போட்டால் இப்படித்தான் வியாபாரம் செய்ய வழிக்கண்டுப்பிடிப்பார்கள்! 

ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்தாலும், "இந்திய சட்டம், இந்திய அரசியல், பொருளாதாரம், உலக அரசியல், பொருளாதாரம், வரலாறு, புவியியல், வேதியியல், இயற்பியல், கணினி, கணக்கு, வணிகவியல்" என்று எல்லாப்பாடங்களிலும் இருந்து ஒரு இரண்டாயிரம் மதிப்பெண்களுக்கு ஆறு மணிநேரம் பரீட்சையெழுதி, கட் ஆப் 1999 வாங்கினால் தான், மக்கள் தேர்ந்தெடுத்தது செல்லும் என்று சட்டம் இயற்றினால் என்ன??

அப்படிச்செய்தால் இங்கேயிருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் வீட்டுக்குத்தான் செல்லவேண்டும்
நீட் பரீட்சை எழுதாதவன் மருத்துவன் ஆக முடியாது என்றால், ஐஏஎஸ் மற்றும் மேலே சொன்ன பாடங்களின் பரீட்சையில் தேறாதவன் எப்படி அமைச்சராக முடியும்??

கல்வித்தகுதி இல்லாதவர்கள் கல்வி அமைச்சராகவும், சாராய வியாபாரிகள் மக்கள் நல அமைச்சராகவும், விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியாதவர் விளையாட்டு அமைச்சராகவும், அறுபதை கடந்தவர்கள் இளைஞர்கள் நலத்துறை அமைச்சர் என்பதும், மதக் கட்சியைச் சார்ந்தவர், பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்களுக்கு பிரதமர் என்பதும் இந்தியாவில் நடக்கும் கேலிக்கூத்து! இவர்கள் இருக்கும்வரை கல்வியென்பதே வெறும் கடைச்சரக்கு!

யாருக்கோ வலிக்கிறது

சில நாட்களுக்கு முன்பு, ஒரு ஒன்பது வயது பெண்குழந்தை டெங்குக்காய்ச்சலால் தனியார் மருத்துவமனையில் ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்க, அவளின் உடல்நலனுக்காக, இரத்ததானத்திற்கும், பணத்தேவைக்கும் பதவிவிட்டிருந்தேன்! இந்தக்குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக இன்று காலையில் செய்தி வந்தது! இருப்பினும் மருத்துவர்கள் அரசாங்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்திருக்கிறார்கள்! ஏற்கனவே போட்ட பதிவை நீக்கி விட்டேன்!

உங்கள் பிரார்த்தனைகளே அந்தக்குழந்தைக்கும், ஏற்கனவே கணவனை இழந்துவிட்ட அந்தத் தாய்க்கும் தேவை! நிற்க
ஒன்பது வந்து பெண்குழந்தைக்கு, காய்ச்சலின் காரணம் தெரியாமல் ஏதோ மருந்துகள் கொடுத்து, பின் வீரியம் அதிகரிக்க, உறுப்புகள் பாதிக்க, மருத்துவமனையில் சேர்க்க, டயாலிஸிஸ் போன்ற வலி நிறைந்த சிகிச்சைமுறை வரைச்சென்றும், கடையில் வலிமிகுந்த மூளைச்சாவு என்று செய்திவரும்போது, அது கடும் மனஉளைச்சலைத் தருகிறது!
ஜனனம் ஒன்று இருந்தால் மரணமும் நிச்சயம்தான் எனினும், இளம் வயதில் குழந்தைகளின் பெரும்பாலான மரணங்கள் நிகழ்வது அலட்சியத்தாலும் அஜாக்கிரதையாலும் தானே? டெங்குவுக்கு காரணமான கொசுவை ஒழிக்க குறைந்தபட்சம் சுத்தத்தை மக்களும் அரசும் உறுதி செய்திருக்கிறார்களா என்றால், இல்லை! குப்பைகளை இந்த அரசு மறுசுழற்சி செய்கிறாதா, இல்லை, அது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் மாறுகிறது, அவ்வளவே!

நிலவேம்பு குணமளிக்கிறது என்றால் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏன் போதிய அளவில் அரசாங்கம் ஏற்படுத்துவதில்லை? ப்ரேக்கிங் நியூஸ் பார்க்கும் மக்களுக்கு ஆரோக்கியத்தைப் பற்றிய தேடலும் குறைந்துதான் போயிருக்கிறது! அரசாங்கம் ஏன் எல்லா மருத்துவமனைகளிலும் நிலவேம்பை கட்டாயப்படுத்துவதில்லை?
ஓ எம் ஆர் சாலைகளில் நாள்தோறும் விபத்துக்கள், அரசாங்கம் செய்வது என்ன, செப்டம்பர் ஒன்று முதல் எல்லோரும் அசல் லைசென்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும், அவ்வளவுதான், புற்றீசல் போல் பெருகிக்கிடக்கும் வாகனங்களை, ஒவ்வொரு பெரிய சாலையிலும் ஒரேயொரு காவல்துறை அதிகாரி நின்றுகொண்டு என்ன செய்து சீர்படுத்துவார்??

ஓட்டைப்பேருந்து, லைசன்ஸ் இல்லா ஓட்டுநர், சில குழந்தைகளின் மரணம், பின்பு ஒரு கண்துடைப்பு நாடகம், நீச்சல் குளம், மின்விசிறிகள், மின்தூக்கிகள், டிவி பெட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள், சாலையில் தொங்கும் மின்சார கேபிள்கள், தூக்குமாட்டிக்கொள்ளட்டும் என்ற ரீதியில் ஊஞ்சலாடும் பல்வேறு ஒயர்கள், ஆக்ஸிஜன் இன்றி பறிபோகும் உயிர்கள், குண்டும் குழியுமாய் சாலையில் நிறைந்திருக்கும் மரண பள்ளத்தாக்குகள், பாலியல் வன்கொடுமைகள், ப்ளூவேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகள், தலைக்கவசமின்றி, சீட் பெல்ட் இன்றி, ஓரே பைக்கில் பணத்தை மிச்சம் செய்ய நான்கு பேர்கள் என்று பிள்ளைகளை வைத்து சாகசப்பயணம் மேற்கொள்ளும் அப்பன்களாலும், ஆத்தாக்களாலும், வேடிக்கைப் பார்க்கும் அரசாலும் என்று இந்த நாட்டில் விபத்துகளாலும், நோய்களாலும் குழந்தைகளின் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன!

கொத்துக்கொத்தாய் மக்கள் செத்தாலும், எல்லாவற்றிற்கும் நிவாரணம் என்று மக்கள் வரிப்பணத்தை தன்னுடைய கையாலாகத்தனத்திற்கு எடுத்து நீட்டும் அரசாங்கம், ஒவ்வொரு மரணமும் வெறும் எண்ணிக்கையாக பார்க்கப்படும் நாட்டில் உயிர்களுக்கு மதிப்பில்லை, பிரிட்டிஷ் ராஜ்ஜியத்திற்கும் இன்றைய இந்த ஆட்சியாளர்களுக்கும் உருவமும் நிறமும் மட்டுமே வித்தியாசம், மற்றப்படி பதவி பணம் என்ற இரண்டிற்காகவும் எதையும் செய்கிறார்கள் ஆட்சியாளர்கள், யாருக்கோ வலிக்கிறது எனக்கென்ன என்று இருக்கிறோம் நாம்!

முரண்களின்_பரிணாமங்கள்"ஓ...ஏக்கு லடுக்கிக் கோ
தேகா தோ ஹெசா லகா"
காற்றில் தவழ்ந்த கானம்
தட தடவென்ற தட்டச்சு வகுப்பில்
மறைந்து நின்று பாடிய
அவனின் குரலின் இனிமையில்
காதலாகி கசிந்துருகி ஓடியது


உன் பெயரின் அர்த்தமென்று
இந்தச் சின்னப்பெயருக்கு
ஒருபக்கக் கடிதமெழுதி
வாழ்க்கையின் வழிக்காட்டியென்று
நன்றியுரைத்துச் சென்ற
மற்றொருவன் வார்த்தைகளின்
கண்ணியத்தில்
அன்புப் பொங்கி வழிந்தது

தனியா போகாதே கண்ணா
என்று தனித்தப் பயணங்களில்
எப்போதும் கவலையுற்று
அவசர வேலைகளை ஒதுக்கி
ஓடிவந்து
வயிற்றுக்கு உணவும்
கருத்துக்குப் புத்தகமும்
வாங்கித் திணித்து
வழியனுப்பும் நண்பனின்
கருணையின் செயல்களில்
நட்பு சாமரம் வீசியது

பார்வையின் வீச்சில்
அவசரமாய் அள்ளிவிழுங்கி
கோர்த்த விரல்களை
பிரிக்கமுடியாமல் பிரித்து
சந்தித்துப் பிரிந்த
வேலைகளிலெல்லாம்
உன்னுடைய கண்களில்
ஆழ்ந்த காதல்
நிரம்பித் தளும்பியது

அவனாக நண்பனாக
யாரோவாக இருந்தபோதில்
அன்பும் பரிவும் தேடலும்
கண்ணியமும் கருணையும்
நிரம்பி வழிந்த
உன் ஆணினம்
காதலும் திருமணமுமென்ற
உறவுக்குள் நுழைந்தபின்
பெண்ணைப்
பொருளின் மாற்றாக
நினைத்துக் கசக்கியது

ஆயினுமென்ன
பூத்த பூ உதிர்வதும்
உதிர்வது உரமாவதும் போல
மாறுபாடுகளைத் தாங்கி
இடைவிடாது தோள்கொடுக்கும்
பெண்மையென்பது
மிஞ்சியிருக்கும்
இக்காலத்தின் முரணானது

அவள் கடக்கும் அவனின்
முகங்களும் பரிணாமங்களும்
எப்போதும் அவளைச் சாய்த்துவிடாது
உழல்வதல்ல உருகுவதல்ல
எழுவதே வாழ்க்கையென்ற
நம்பிக்கையும் தோற்றுவிடாது!!!
#முரண்களின்_பரிணாமங்கள்!

சிக்னல்_கவிதைகள்

அந்தப்பக்கம்
ஆளுங்கட்சியின் வாகனங்கள்
போக்குவரத்தை
நிறுத்திவிட்டு மறைகிறது
இந்தப்பக்கம்
எதிர்க்கட்சியின் வாகனங்கள்
போக்குவரத்தில்
ஒலி மாசு ஏற்படுத்தி
கொடிகள் மின்ன
விரைகிறது
கட்சிக்கொருக் கொடியோடு
ஒவ்வொரு அரசியல்வாதியின்
வாகனமும்
சாலையில் நிற்க முடியாமல்
பறக்கிறது
இப்படி வேகமாய் சென்று
இவர்கள் செய்த
சாதனையில்தான்
தமிழகம்
இந்தியாவிற்கு
தேர்ந்தொரு
குப்பைத்தொட்டியாய்
மாறியிருக்கிறது
இச்சாதனைகள்
அளப்பரியதுதான்
வேகமாய் செல்லட்டும்
வழிவிட்டுவிடுங்கள்
மக்கள் சாகட்டும்!
#சிக்னல்_கவிதைகள்

மனப்பறவை

No automatic alt text available.

 உட்புகுந்த மணற்துகள்கள்
உறுத்தியதில் சிப்பிக்குள்
முத்து உருவானது
வேய்ந்திருந்த கூடுடைந்ததும்
பட்டாம்பூச்சியொன்று
பறந்துச்சென்றது
அடைக்காத்த அண்மையில்
முட்டையுடைந்து
பறவைக்குஞ்சு வெளிவந்தது
உளியால் காயப்பட்ட கற்கள்
செதுக்கப்பட்ட சிலைகளானது
யாரோ கொட்டிய கடுமையான
வார்த்தைகள்
யாருக்கோ நெஞ்சுரமானது
உடையும் பொழுதுகளிலெல்லாம்
உருப்பெறும் அஃறிணைகளும்
சில உயர்திணைகளும்
விடாது நடத்தும்
வாழ்க்கைப்பாடத்தை
நெஞ்சில் வழியும் குருதியோடு
கையில் தேநீர் குவளையோடு
மழைச்சாரலின் வழி
ரசித்துக்கொண்டிருக்கிறேன்
உன் கத்திகளை நீ இன்னமும்
கூர் செய்துக்கொள்ளலாம்
சிதிலமாகும் புள்ளிவரைச்
செதுக்கிக்கொள்ளலாம் / கொல்லலாம்
வா, வாழ்க்கையே
இக்கூட்டினுள்ளேயொரு மனம்
எப்போதோ சிறகடிக்கும்
பறவையானது!!!

#மனப்பறவை

உறுத்தாத இடைவெளியில்தேடாத அம் மனதை
தேடாதே என்று
தேடும் என் மனதை
துண்டித்து வைத்தல்
மாபெரும் தண்டனைதான்
துரத்தும் மனதை
துறத்தல்
துறவாகினால்
மனம்
சிறகு விரிக்கும்
தனிமைச்
சுதந்திரமாகும்
ஆதலால்
பறந்து போகலாம்
வா மனமே
தூரத்தாத தூரத்தில்
யாருக்கும் உறுத்தாத
இடைவெளியில்
தனியாக!

கீச்சுக்கள்

"மத்திய"ஸ்தராக வடிவேலு;
"டேய் பூரா பயலுகளும் கொஞ்ச நாள் ராணிய வெச்சு, போலீஸ் திருடன் விளையாட்ட அமைதியா வெளாண்டிங்கல்லே, இப்போ அதமாதிரி, முதலமைச்சர் வேஷத்த ஆளுக்கு ரெண்டுமாசம்ன்னு பிரிச்சுக்கிட்டு, சத்தம் போடாம அங்கிட்டு ஓரமா போய் வெளாண்டுக்கங்க, இல்லேன்னா ஆட்டத்தக் கலைச்சிடுவேன், பாத்துக்க, ஷ்ஷப்பாஆஆஆஆஆ இப்பவே கண்ணக்கட்டுதே, பூராவும் எமகாதக பயலுகளா இருக்குதுங்க!" 😱

********************************************************************


செந்தில்;
அண்ணே, இந்த ஒபிஎஸ் இபிஎஸ் சேர்ந்து நடத்தப்போறது, காவிரி மீட்புப் போராட்டமா, நீட் தேர்வு ரத்து பண்றதா? தஞ்சைய மீட்கறதா? கூடங்குளத்தை மீட்கும் படலமா? விவாசாயிகளின் கடன தள்ளுபடி செய்யப்போறாங்களா? சாராயக்கடைகளை மூடுற போராட்டமா? இல்லைன்னா தமிழ் மொழி காக்குற அறப்போராட்டமா? சொல்லுங்கண்ணே
கவுண்டமணி;
டேய், உன் வீட்டு குழாயுல தண்ணி வந்துச்சா? வரலைன்னா என்ன செய்வே? இந்த அரசியல்வாதிக செய்யப்போறது கட்சி மீட்பு, கடைசிவரைக்கும் அதே மெரீனா மர்மம், அதே சொத்துக்குவிப்பு, இதுக்கா இத்தனை பில்டப்பு? போ நாயே, குண்டக்க மண்டக்க கேள்விக்கேக்கறத விட்டுட்டு போ, பக்கத்துத்தெருவிலே போய் இரண்டு கொடம் தண்ணிய எடுத்துட்டு வா!

***************************************

ஆளுங்கட்சியில் கவுண்டமணி;
"டேய் சும்மா சும்மா பிரச்சன பிரச்சனைன்னு கத்தாதீங்கடா, காவிரியில வர வேண்டிய தண்ணிய எதிர்கட்சிதான் தடுத்துது, நேத்து என் வீட்டுல கரண்ட் வராதத்துக்கும் எதிர்கட்சிதாண்டா காரணம், நான் பிரதமருக்கு போன் பண்ணி எல்லாத்தையும் சரிபண்ணிடுறேன், ஆ சரிங்க மக்களே உங்க பிரச்சனைக்காக நான் டெல்லிப் போறேன்..ஆ வணக்கமுங்கோ!"
கூட்டத்தில் இருந்து வடிவேலு;
"அடேய் நாதாரிப்பயலுகளா, என் வெள்ள வேட்டி வென்று, அவன் செய்யலைங்கறதாலதான் நீ ஆளுங்கட்சி, நீ எப்படி இதைச் செய்யப்போறேன்னு சொல்லு, அவனையே கைகாட்டிக்கிட்டு இருக்கறதுக்கு நீ எதுக்கு ஆட்சியிலே? முடியலைன்னா ராஜினாமா பண்ணிட்டுப் போடா என் டுபுக்கு"

கவுண்டமணி; டேய் நாராயாண இந்தக் கொசுத்தொல்ல தாங்க முடியல, அத அடிச்சுக்கொல்லுங்கடா...ஆஆ...சரிங்க மக்களே இதையெல்லாம் நம்பாதீங்க, இதெல்லாம் எதிர்கட்சியோட சதி, மழைக்காலம் வரப்போகுது, மக்கள் எல்லாம் மூழ்காம இருக்கறதுக்கு நாங்க தெர்மாக்கோல் கொடுக்கப்போறோம், நான் உடனே போக வேண்டியிருக்கு, நான் உத்தரவு வாங்கிக்கிறேன்!
வடிவேலு: அண்ணே போங்கண்ணே, எங்களுக்கு தெர்மாக்கோல கொடுத்துட்டு, நீங்க அப்படியே மாட்டுவண்டி புடிச்சுப் போனீங்கன்னாஆஆ..அப்படியே டெல்லி வந்துடும்ண்ணே..ஹி ஹி ஹி..அண்ணே ஓடாதீங்கண்ணே, டெல்லியில நம்ம தலைவருக்கு குச்சிமுட்டாய் வாங்கீட்டு போங்கண்ணே!

******************************************

 


Thursday, 17 August 2017

வண்ணக்குதிரைகள்


ராதிகாவை அந்த அலுவலகத்தில் தான் முதன்முதலில் பார்த்தேன், நெடுநெடுவென்ற உயரத்தில், இரண்டு கரிய முட்டைகளா, இல்லை நாவல் பழமா என்ற அளவிற்குப் பளீரென்ற பெரிய கண்கள், அழகிய கருமை நிறம், ஆமாம் அத்தனை அழகாய் இருந்தது அக்காவின் கண்கள் மட்டுமல்ல, ஈர்க்கும் அந்தக் கருமை நிறமும்தான், எனக்கு அத்தனை வசீகரமாய்த் தோன்றியது!

கிட்டத்தட்ட எட்டு வயது மூத்தவளை அக்கா என்று சொல்ல மனம் வரவில்லை, பார்த்தவுடன் நெடுநாள் பழகியது போல், "ஹேய் குட்டி" என்று வந்து அணைத்துக்கொண்டாள். கொஞ்சம் பூசினார் போல இருந்ததால் "சப்பிச் சீக்ஸ்" என்று அவ்வப்போது கன்னத்தையும் கிள்ளி எடுத்துப் பாடாய்ப் படுத்தியவளை எப்படி அக்கா சொக்கவென்று அழைப்பது. அன்றுமுதல் அவளை ராதி என்றே அழைக்கலானேன். ராதிகாவுக்குப் பெரிய பின்புலம் இருந்தது பின்னே தெரிய வந்தது, தி நகரில் பெரிய கடை வைத்திருக்கும் முதலாளியின் செல்ல மகள்களில் இவள் ஒரு மகள், சொந்தக்காலில் தான் நிற்பேன் என்று போர்க்கொடித் தூக்கி அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அந்தத் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அமைதியாய் கஸ்டமர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்தால், நடுவே வந்து சத்தமாய் எதையோ கேட்டுவிட்டுக் கொஞ்சம் என்னைத் திருத் திரு வெனக் குழப்படித்து முழிக்க வைத்துச் செல்வதில் அவளுக்கு அப்படியொரு ஆனந்தம்.

பரபரப்பாய் வேலையில் மூழ்கி இருந்த ஒரு நாளில், ராதி வந்தால், "ஹேய் குட்டி, உனக்கொரு சர்ப்ரைஸ், கொஞ்சம் வாயேன்" என்றால். "குட்டி இல்லைடி எருமை, ஐ ஹவ் எ நேம்" என்ற சிடுசிடுக்க, "சரிதான் வாடி" என்று இழுத்துப்போனாள்.

ஆறடி உயரத்தில் அக்காவிற்கு ஏற்ற அளவில், மைதாவைக் குழைத்துப் பூசியது போல ஒருவன் நின்றிருந்தான். ஆமாம் அவன் வெள்ளையாய் இருந்தான், அது எனக்கு மைதாவை பூசியது போல என்றுதானே தோன்றியது. "அடடா அழகு" என்று நான் சொல்ல ராதி எதிர்பார்க்க, "பச்" என்று உதட்டைப் பிதுக்கி, "ஹலோ" என்றேன்.

இந்தப் பக்கம் கருமை நிற அழகி, அந்தப்புறம் மைதாவில் நிறத்தில் ஓர் ஆண்மகன், மன்னிக்கவும் எனக்கு அன்று அப்படிதான் தோன்றியது. அந்தக் கண்களை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம், அந்தக்கண்களை உற்றுநோக்கினேன், "ம்ம், சம்திங் மிஸ்ஸிங், ஒகே கேரி ஆன்" என்று நகர்ந்துவிட்டேன்.

ராதி நிறையச் சண்டைபோட்டாள், மரியாதை தெரியாதவள் என்றாள், "சரி இருந்து தொலையட்டும், போ" என்றேன்.

காதல் ஒன்று வந்துவிட்டால் தோழியின் நிலைமை கந்தல்தான், எத்தனை சொன்னாலும் ராதியின் காதல் புராணம் ஓயவில்லை. "அவன் ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம், சின்ன வயசிலே இருந்து என்னையே சுத்தி சுத்தி வாரான், ரொம்பவும் போர்ஸ் பண்ணினான், அப்புறம் ஒத்துக்கிட்டேன்" என்றவள், "ஏய் சொல்லு, நான் கருப்பாத்தானே இருக்கேன், அம் ஐ ஏ குட் மேட்ச் ஃபார் ஹிம்?" என்று சந்தேகித்தாள்.

"ஏய் லூசு, கருப்பா இருந்தா என்ன, நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு அண்டர் ஸ்டாண்டிங் ல இருக்கீங்க, உங்களுக்கு என்ன முக்கியம்ன்னு பாருங்க, போதும்"

கால வெள்ளத்தில் நான் வேறு ஒரு வேலைக்கும், ராதி ஒரு தீம் பார்க்கிலும் வேலைக்குச் சேர்ந்தாலும், தொடர்பு விட்டுப்போகவில்லை.
ராதியின் புண்ணியத்தில், ராதையின் கண்ணனுக்கு அவளே வேலையும் வாங்கிக்கொடுத்து, அவனுக்குரிய வசதிகளையும் தன் உழைப்பில் செய்துக்கொடுத்திருந்தாள்.

அன்று ராதியின் தீம் பார்க் அலுவலகத்துக்குச் சென்றேன், அடடா என் ராதியா இது, எந்த விழிகளைப் பார்த்து அழகியென்று கொண்டாடினேனோ அந்த விழிகளில் ஜீவனில்லை, எந்த நிறம் பார்த்து ரசித்தேனோ அது சோபை இழந்திருந்தது. "என்ன ஆச்சு ராதி?", பதிலேதும் சொல்லாமல் அவள் கண் நோக்கிய திசையில் செல்ல, ராதையின் மைதா மாவு கண்ணன் (பின் வேறு எப்படிச்  சொல்ல?) வேறொரு மைதா கோதையிடம் அளவளாவி கொண்டிருந்தான். "என்ன இது, என்னமோ மிஸ்ஸிங் னு சொன்னேனே அது இதுதான், அவன் படிப்புக்கு உதவி செஞ்சே, வேலை வாங்கிக்கொடுத்தே, பைக் வாங்கிக்கொடுத்தே, ஹி ஹாட் யுடிலைஸெட் யு (அவன் உன்னை உபயோகப்படுத்திகிட்டான்) ", என்று நறநறவென்க

"குட்டி, அவன் காதல் இல்லைன்னு சொன்னாலும், ஒரு நண்பனா இருந்திருந்தா கூட அவனுக்கு இதெல்லாமும் நான் செஞ்சிருப்பேன், அவனுக்கு அவனோட ஏழ்மை பிடிக்கலையாம், நான் கருப்பா இருந்தாலும் (அழுகிறாள்) எதை அழகுன்னு சொன்னானோ, அதையே சொல்லி (மீண்டும் அழுகிறாள்) ...நான் கருப்பா இருந்தாலும் என்னைக் காதலிச்சது என் பணத்துக்காகத்தானாம், கருப்பா இருந்தாலும் பணம் தனி அழகை கொடுக்குமாம், என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சானாம், இப்போது இந்தக் கம்பெனியின் முதலாளியின் பொண்ணு ப்ரொபோஸ் பண்ணினதால, என்னை விட அவ பெட்டெர் ஆப்ஷனாம், அவனோட அம்மாவுக்கும் வெள்ளையா இருக்கறவனுக்கு நான் சரியான மேட்சா இருக்க மாட்டேன்னு பீல் பண்றங்களாம்" சொல்லிவிட்டு இன்னும் அழுகிறாள்.

அவளை அழவிட்டு அந்தக் கண்களை யோசித்துப் பார்க்கிறேன், பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த நான் பார்த்த அதே ஆணின் கண்ணை அது ஒத்திருந்தது, அலைபாயும் அந்தக் கண்களை ஏன் காரணேமேயில்லாமல் எனக்குப் பிடிக்காமல் போனது என்று தாமதமாகப் புரிந்தது. "ராதி, நீ அவனை அப்படியேவா விட்டே, அவன் உன் வீட்டுக்கு பக்கத்திலே தானே? அவன் அம்மா இப்படியெல்லாம் சொல்லியிருப்பாங்களா? அவன் கதை சொல்றான், நீ ஏன் அவனை எதுவும் கேக்கலை? சரி இப்போ இங்கேயே இரு, நானே அவனை உண்டு இல்லைன்னு பண்ணிட்டு, அவன் வண்டவாளத்தை அந்தப்பொண்ணுகிட்டேயே சொல்லிட்டு வரேன்" என்றவளை, கையைப் பிடித்து இழுத்தவள்,

"குட்டி, அவளுக்கு அவன் என்னைக் காதலிச்சது தெரியும், இருந்தும் அவ அவனை இழுத்துகிட்டா, இவனும் ஓடிட்டான், இப்பவே ஓடியது நல்லதுதானே, கல்யாணத்துக்கு அப்புறம் அவளை விடவும் பணக்காரிக் கிடைச்சா அவன் ஓடுவான், அதோட குட்டி, உனக்கு ஒரு கதை தெரியுமா, என் அப்பா தராதரத்தைப் பத்தி உணர்த்த இதை எனக்குச் சொல்லுவாரு, ஜெர்மனி பிரிவுபட்டிருந்தபோது பெர்லின் சுவர் அவங்களை இரண்டா பிரிச்சு வெச்சிருந்தது, அப்போ கிழக்கு பிராந்திய மக்கள், அந்தச் சுவருக்கு அந்தப்பக்கம் உள்ள மக்களுக்கு லாரி நிறையக் குப்பைகளைப் போட்டாங்களாம், அவங்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்த மக்கள் குப்பைக்கு மாற்றா நிறையா உணவுப் பண்டங்களையும் பரிசுகளையும் சுவர் மேல அடுக்கி வெச்சு, யார்கிட்டே எது இருக்கோ அதைத்தானே தர முடியும், நாங்க உங்களுக்கு இதைத்தரோம்ன்ன்னு எழுதி வெச்சாங்களாம். யார்கிட்டே என்ன இருக்கோ அதைத்தானே அவங்க தருவாங்க, என்கிட்டே அன்பு இருந்தது, அவன்கிட்டே சூழ்ச்சி இருந்தது, அவன் சூழ்ச்சியும் பொய்யில்லை, என் அன்பும் பொய்யில்லை, அவன் நல்லா இருக்கட்டும், விட்டுடு குட்டி" என்றாள்.

அழும் அந்தக் கண்கள் அத்தனை அழகாய்த் தெரிந்தது எனக்கு. நான் கடைசியாக அந்தக் கண்களை அன்றுதான் பார்த்தேன், நான் கடைசியாகப் பார்த்த அழகிய கண்களும் அவளுடையதுதான்.


Wednesday, 16 August 2017

அன்பும்_நன்றியும்

Image may contain: food

பெய்யும் சிறு மழைக்கு
காத்திருந்த மனிதருக்கு
கையில் கிடைத்த காசுக்கு
காலை சுற்றும் பூனைக்கு
வாலை குழைக்கும் நாய்க்கு
உதவி செய்த நண்பனுக்கு
உருகி அணைத்த காதலுக்கு
கன்னத்தில் முத்தமிட்ட குழந்தைக்கு
பாதம் சுமக்கும் செருப்புக்கு
அன்னமிட்ட அன்னைக்கு
கண்டித்த ஆசிரியருக்கு
வீசிய காற்றுக்கு
நிழல் தந்த மரத்திற்கு
தாகம் தீர்த்த நீருக்கு
பசி தீர்த்த உணவுக்கு
உடல் சாயும் நிலத்துக்கு
வெப்பம் தரும் கதிரவனுக்கு
குளுமை தரும் நிலவுக்கு
நாம் சுமக்கும் உடலுக்கு
ஐம்புலன்களைச் செவ்வனே
இயக்கும் பாகங்களுக்கு
நித்தம் நித்தம் வாழ்வை
கடத்தும்
நிதம் வாழ்வை அழகாக்கும்
இவைகளையும்
அவர்களையும்
எதைத்தான் நாம்
போற்றியிருக்கிறோம்?
யாருக்குத்தான் நாம்
நன்றியுரைத்திருக்கிறோம்?

வெள்ளைப்பலகையிலிருக்கும்
கரும்புள்ளியை மட்டும்
மனம் முழுக்கப் பூசி
வலம் வருவதைப்போல
கிடைக்கும் வரை போராடி
கிடைத்தபின் துச்சமெனத்
தூக்கியெறிந்து
பின் இல்லாத ஒன்றிற்காக
ஏங்கி தவிக்கும் மனக்கூட்டை
விட்டு வெளியே வரலாம்
கரைந்து பாயும் மழைமேகமாய்
நீங்கள் நன்றிகூறி!
 

நினைவுப்பரிசு சமைத்த உணவை
ஆறவைத்தால்
சுவையில்லையென்றாய்
எழுதத் தொடங்கிய வரிகளை
முடிக்காவிட்டால் அது
படைப்பில்லையென்றாய்
காண வந்த நட்பிடம்
பேசா விட்டால்
நட்பில்லையென்றாய்
நினைத்த வியாபாரம்
கிடைக்காவிட்டால்
லாபமில்லையென்றாய்
உலகம் சுற்றும் நேரங்களில்
பேசவும் நேரமில்லையென்றாய்
எதையும்
உடனே உடனேயென்றுக்
கொண்டாடும்
உன் பரந்த ரசிக மனதுக்கு
காத்திருக்கும் காதலின்
ஒவ்வொரு கணத்தையும்
நான் நினைவூட்ட
முயலும் போதெல்லாம்
காத்திருந்தலில்
எனக்கொன்றும்
கனமில்லையென்றாய்

கணங்களை யுகங்களாக்கி
நான் தேய்ந்துப்போகும்
வேளைகளில்
உன் கைகளில் எண்ணப்படும்
ரூபாய் நோட்டுகளின்
சில தாள்கள்
நானாக இருந்திருந்தால்
இழக்கும் ஒவ்வொரு நொடியும்
பணவிரையம் என்று
நீ பதறியிருப்பாய்
புதிய வியாபாரத்தின்
கச்சாப் பொருளாய்
நான் மாறியிருந்தால்
மனதில் மகுடமென
நினைவைவிட்டு நீக்காமல்
தீபமென நீ
என்னை ஏற்றிவைத்திருப்பாய்

அவைகளாக நான் இல்லாமல்
உன் காதல் மனைவியாக
மட்டும் ஆனதில்
உன் உணர்வுகள் விழிக்கும்வரை
என்னைக் காத்திருக்கப் பழிக்கிறாய்
நானும் நினைவுகளைச்
சேமிக்கிறேன் நாள்தோறும்
உனக்குப் பரிசளிக்க
என்னிடம் எஞ்சியவைகளாய்!!!

உரிமை இல்லாத ஜனநாயகம்

அரசின் திட்டங்கள் எதை விமர்சித்தாலும், மோடியை கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்பார்கள், உண்மையில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், புதிது புதிதாய் திட்டங்கள் இயற்றினாலும், அதை செயல்படுத்துவது யாரென்று பாருங்கள்! அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்று உயர்நிலை முதல் கடைநிலை வரையிலான ஊழியர்களில் எந்த மாற்றமும் இல்லை!

ஒரு கட்சி ஊழலுக்கு ஆதரவாய் இருந்தாலும், இன்னொரு கட்சி ஊழலுக்கு ஆதரவை சதவீத அளவில் விலக்கிக்கொண்டாலும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் காசைக்கொடுக்காமல் வேலையை முடிக்க முடியுமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!

சுவச் பாரத் என்று மூன்று வருடங்களாக முழங்கி, கொள்ளை கொள்ளையாக வரிக்குவித்தும், அதே தரமற்ற சாலைகள், அதே அறுந்து தொங்கும் பலவிதமான ஒயர்கள், சாலையில் குப்பைகளை பறக்கவிடும் அதே குப்பை லாரிகள், எந்த மாற்றத்தை பார்ததுவிட்டோம் நாம்?

கச்சா எண்ணெயின் விலை அதிகமான போது, பெட்ரோல் டீசல் விலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, அவர்களின் இந்த மூன்று வருட ஆட்சியில், கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இன்னமும் விலையை கூட்டிக்கொண்டே போவதும், ஒரே வரி என்று முழக்கமிட்டு, பெட்ரோல் டீசலை மட்டும் அதில் சேர்க்காமல், காங்கிரஸின் ஜிஎஸ்டி யை எதிர்த்துவிட்டு, 18 சதவீதம் என்று இருந்ததை 28 சதவீதம் என்றாக்கி, வாகனங்களுக்கு 43 சதவீதம் என்று ஏற்றுவதெல்லாம் எந்த யோக்கியத்தனத்தில் வரும்?

இத்தனைப் பெயரில் வரி வாங்கி, ராணுவத்தை பலப்படுத்துகிறார் மோடி என்று வழக்கம்போல தேச பக்தர்கள் கருத்து தெரிவித்தார்கள், அந்த வாதத்திலேயே சுவச் பாரத், க்ருஷிக் கல்யாணி என்று வாங்கியதெல்லாம் கண்துடைப்பு என்றாகிறது, இந்திய ராணுவத்தின் டாங்கிகள் இப்போது அதற்கான போட்டியில் பாதியிலேயே வெளியேறிவிட்டது என்ற செய்தியும் வரும்போது, ராணுவமும் இந்தக் கதிதான் என்றால் இதெல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால், 1100 கோடி பிரதமரின் சுற்றுலா செலவு என்று ஆர்டிஐ தகவல் சொல்கிறது!

மோடி நல்லவர், பாஜக நல்லவர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஒரு அரசாங்க மருத்துவமனையில் 60 லட்ச பாக்கித்தொகைக்காக 60 குழந்தைகள் உயிரிழக்க, பத்துகோடி நிவாரணம் அளிக்கிறேன் என்கிறது அரசு, பத்துகோடி ரூபாய் 60 உயிர்களை திரும்பக்கொண்டு வருமா? 60 லட்சம் மக்களின் பணம், அதைக்கொடுக்கமுடியாத அரசு, அதேமக்கள் பணத்தில் 10 கோடி கொடுக்கிறேன் என்கிறது, ஒரு ஆட்சியின் லட்சணத்தை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்!

கதிராமங்கலத்தில் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் எடுப்போம் என்கிறது ஓஎன்ஜிசி, ஏற்கனவே ஏற்பட்டுள்ள கசிவுகளுக்கு என்ன காரணம் என்று எந்த செய்தியும் இல்லை, கூடங்குளத்தில் இயங்காத நிலையங்களுக்கும், அணுவுலை வெடித்தால் என்ன ஆகும் என்றும் யாருக்கும் தெளிவில்லை!
போபால் விஷவாயு வழக்குக்காவது போராட மனிதர்கள் இருந்தார்கள், அணுவுலை விபத்தேற்பட்டால் புல்பூண்டு கூட மிஞ்சாது!

இப்போதைகெல்லாம் இணையம் வழியாக ஒரு பிறப்புச்சான்றிதழையும், இறப்புச் சான்றிதழையும் மட்டுமே காசுக்கொடுக்காமல் வாங்க முடிகிறது, மற்றதெல்லாமும், இதுவும் கூடவும் கேள்விக்குறிதான் இந்தியாவில்!
இந்தியாவில் போலி மருந்துகளை உற்பத்திச் செய்யலாம், கலப்பட உணவுப்பொருட்களை விற்கலாம், தேசப்பற்று பேசி சீனப்பொருட்களை அடையாளம் காணலாம், ஆனால்இறக்குமதி ஆவதை அரசு தடைச்செய்யாது, குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம், எந்த அரசுத்துறையின் அலட்சியத்திலும் உயிர்களை இழக்கலாம், விபத்துக்கள் ஏற்படலாம், அப்போதெல்லாம் அரசு இழப்பீடுகள் தரும், நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு வயதாகும் வரை அல்லது சாகும்வரை விசாரித்து, குற்றவாளிகள் இல்லையென்று தீர்ப்பெழுதும்! மக்கள் மந்தைகளைப்போல வழக்கம் போல ஓட்டுப்போடுவோம்
அதே அரசுத்துறை அதிகாரிகள், அதே ஊழல் எந்திரங்கள், அதே கட்சிகள்,அதே அதரப்பழசான சட்டங்கள், அதே ஓட்டு எந்திரங்கள், எந்த பாதிப்பு நேர்ந்தாலும் நிவாரணம் பெற்றுக்கொண்டு ஊமையாகும் மக்கள், பொய்வழக்குகளினால் விலகிப்போகும் மக்கள், தனக்கு எதுவும் நேரும்வரை வலியுணராத மக்கள், இப்படி அதே மக்கள், மாற்றம் என்பது எங்ஙனம் வரும்?

உலகிலேயே மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத, மனித உரிமை பற்றிய புரிதலும், வழிகாட்டுதலும் இல்லாத ஒரே ஜனநாயக நாடு, நம் நாடாகத்தான் இருக்கமுடியும்!

பெண்மனம்

Image may contain: water, ocean, sky, cloud, outdoor and nature

காற்றுப் பயணப்படும்
திசைகளில்
கடல் செல்வதில்லை
அது அலைகளை
அனுப்பி ஏய்த்துவிட்டு
ஆழ்கடலில் தியானிக்கிறது!

#கடல்
#பெண்மனம்

சிக்னல்_கவிதைகள்

இருபெரும் கனரக
வாகனங்களுக்கிடையே
மின்னலெனப் புகுந்த
இருசக்கர வாகனத்திலிருந்த
இளைஞனின்
கடைசியாசை
என்னவாக இருந்திருக்கும்?!

மழைவேண்டுமா வேண்டாமா
என்று கேட்பதில்லை
இவ்வளவா அவ்வளவா
என்ற கணக்கில்லை
நேசிக்கிறாயா வெறுக்கிறாயா
என்ற பேதமில்லை
எப்படியும்
எந்தநேரத்திலும்
வரும் மழைக்கு!

மழையைப்போலச்
சில மனிதர்கள்
வாழ்தலின் பொருட்டு
பெய்யெனப் பெய்கிறது
மழை,
ஊற்றேன வாழ்விக்கிறது
அன்பு!!!
 

அன்பானவர்கள்

ஒருவரிடம் நிறைந்திருக்கும் அன்பு அவரை அழகாக்கும்
அவர் வெளிப்படுத்தும் அன்போ இருவரை அழகாக்கும்
அன்பானவர்கள் எப்போதும் அழகாய் இருக்கிறார்கள்

கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துக்கொண்டு கற்களை எறிகிறீர்கள்தெரிந்த குடும்பம், கணவன் குடித்துவிட்டு, மனைவியைப் பிடித்து இழுத்து அடிப்பான், அவனுடைய வாயில் இருந்து வராத வார்த்தைகளே கிடையாது, அத்தனை நாராசமாகப் பெண்ணின் ஒழுக்கத்தைக் கேலிப்பொருளாக்கும் அவன், அவளுடனே குடும்பம் நடத்தி, பிள்ளைகளைப் பெற்று, வளர்க்க துப்பில்லாமல், மனைவியின் உழைப்பில், உடலில், சுகம் கண்டு வீணாய்ப்போனவன். இதுபோன்ற வீணாய் போனவர்களைப் பலரும் கடந்திருக்கக் கூடும், அல்லது அந்த வீணாய்ப்போனவர்களில் ஒருவர் நம் குடும்பத்திலும் இருந்திருக்கக் கூடும்

ஒரு பெண்ணை இகழும்போது, அவள் மனைவி என்றாலும், தோழி என்றாலும், காதலி என்றாலும், அல்லது யாரோ ஒரு பெண் என்றாலும், சில ஆண்கள் பெண்களை இகழ்வதாய் நினைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி, பறைசாற்றிக்கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆண்கள் இப்படியென்றால், சில பெண்களும் சளைத்தவர்கள் இல்லை. ஓர் ஐந்தாறு வயது சிறுவனைக் கையில் பிடித்துக்கொண்டு கணவன் நடக்க, உடனொற்றி நடந்து வந்த மனைவி, அவன் ஒரு ஐந்து ரூபாயை தொலைத்துவிட்டான் என்று, கேட்பவர் கூசும் வண்ணம், அவனைக் கையாலாகாதவன், பொட்டை என்று நடுத்தெருவில் ஏசிய காட்சிகளைக் கடந்ததுண்டு.

ஒருவரை இகழும்போது, அதை எதிர்கொள்பவரை விட, வார்த்தைகளை விடும் மனிதர்களின் நிலையே கேள்விக்குரியது. கணவன் மனைவிக்குள், பிள்ளைகளுக்குள், நண்பர்களுக்குள், உறவுக்குள் கருத்து மோதல்கள் இருக்கலாம், அது கருத்தளவில் மட்டுமே இருந்துவிட்டால் பரவாயில்லை. யாரோ ஒருவர் தோற்கும்போது, அல்லது யாரோ ஒருவர் சலிப்படையும்போது, கருத்தை, காற்றில் விட்டுவிட்டு, தனிநபரின் ஒழுக்கத்தை, உடையை, வெளிப்புறத் தோற்றத்தை, பாலினத்தை, உறுப்புகளை, அவர்களின் திறமையின்மையை என்று மோதலாக மாற்றி, செவிகளில் அறைந்து, மனதைச் சுருக்கும் வார்த்தைகளாக மாற்றும் போது, அந்த உறவு சேதமடைகிறது.

தன்னைப் பெற்றவளை "தே $%*" என்று இகழும் மகன்களைக் கண்டிருக்கிறேன், அவன் தன்னை இகழ்ந்துகொள்ளும் கவலையின்றிச் சேற்றை வாரித்தூற்றிக்கொள்வதை என்ன சொல்வது? பொதுவாகப் பெரும்பாலும் இந்திய ஆண்களின் எண்ண ஓட்டம், சேலை கட்டி, நெற்றியில் குங்குமம் இட்டவள் குடும்பப்பெண் என்றும், கால்சராய் அணிந்துக்கொண்டு, கூந்தலை விரித்துக்கொண்டு செல்பவள், அழைத்தால் வந்து விடுபவளாகவும் தோன்றும் ஒரு வளர்ப்பின் போக்கும், ஆணுக்குரிய இலக்கணம் என்று இந்தச் சமூகம் கட்டமைக்கும் போக்கும், அவனை ஒரு பெண்ணிடம் வாதத்தில் போட்டியிட முடியாமல், கொச்சையான வார்த்தைகளில் தான் ஆண் என்று நிரூபிக்க நினைக்கிறது.
இந்தியாவில் எந்தத் திரைப்படங்களைக் கண்டாலும், எந்தக் கதைகளைப் படித்தாலும் (பெண் எழுத்தாளாராய் இருந்தாலும் கூட) ஆண் எந்தத் தவறு செய்தாலும் அது சாதாரணம் என்றும், பெண் என்பவள் ஒழுக்கத்தின் இருப்பிடமாகவும் இருக்க வேண்டும் என்ற போதனையையே மீண்டும் மீண்டும் இந்தச் சமூகம் பறைசாற்றுகிறது.

ஆடையில் ஆரம்பித்துப் பெண்ணின் உச்சகட்ட ஒழுக்கத்தை அவளின் யோனியில் வைத்திருக்கும் சமூகம், ஆணின் ஒழுக்கத்தை மட்டும் வரையறுக்கவில்லை.

சூப்பர் ஸ்டாரின் இருந்து நேற்று வந்த விடலைப்பையன் வரை திரைப்படங்களில், ஸ்டைலாகப் புகைவிட்டு, தண்ணியடித்து, பெண்ணின் கையைப்பிடித்து இழுத்து, அவளை வன்புணர்ச்சி செய்து, அவளை அவமானப்படுத்தி, அவளைக் கொன்று, அவளுக்குப் பெண்மையின் மகத்துவத்தைப் போதித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.
இன்னமும் காதலை ஆண் சொன்னால் அவன் யோக்கியன் போலவும், பெண் சொன்னால், அவள் காமத்துக்கு அலைபவள் போலவும் காட்டுகிறது பெரும்பாலான திரைப்படங்கள். பெண்ணின் முலையைத்தாண்டி, யோனியைத் தாண்டி, பெண் என்பவளின் மனஉணர்வுகளைப் பெரும்பாலான ஆண்கள் உணர்வதேயில்லை. அதுதான் ஒரு பெண் தான் பார்த்தத் திரைப்படத்தை விமர்சனம் செய்ததைக் கூடத் தாங்கமுடியாமல் பொங்குகிறது. தமிழ்நாடு சாராயத்திலும், நடிக நடிகையரின் வழிபாட்டிலும், வெறிபிடித்த ரசனையாலும் நாசமாய்ப் போகிறது, எந்நாளும் பிம்பங்களின் விமர்சனத்தில் மக்கள் மூழ்கிக்கிடக்க, ஆளும் நாட்டாமைகளுக்குக் கேள்வியற்றுப் போய்விட்டது.

பெண்ணை ஆண் அடக்கி ஆள்வதோ, ஆணைப் பெண் அடக்கி ஆள்வதோ சிறந்த குழந்தைகளை உருவாக்குவதில்லை, பாதுகாப்பான சமூகத்தைக் கட்டமைப்பதில்லை. படித்தவர்களோ, படிக்காதவர்களோ, தெளிந்த அறிவு கொண்ட பெற்றோர்கள், ஒருவர் சுயத்தை ஒருவர் மதிக்கும் பண்பு கொண்டவர்கள், ஒரு சிறந்த ஆண்மகனையும், ஒரு சிறந்த தெளிவுமிக்கத் துணிச்சலான பெண்மகளையும் வளர்த்தெடுக்கிறார்கள். இணையர் இருவரில் ஒருவருக்குப் போதிய அறிவோ, சுறுசுறுப்போ, தெளிவின்மையோ, கண்மூடித்தனமான கோபமோ, பிறரைப் பற்றிய கீழ்த்தரமான எண்ணங்களோ இருந்தால், கூடுதல் சுமையை மற்றவர் சுமக்க வேண்டியிருக்கலாம், இல்லையென்றால் பெண்ணை இகழும் ஆணும், ஆணை இகழும் பெண்ணும் என வித்துகள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம், அப்படிப்பட்ட வித்துகள் சமூகத்தின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும், கொலை செய்யும், சேற்றை வாரிப்பூசும், ஊழல் செய்யும், பெண்ணைப் போகப்பொருளெனக் கொள்ளும் / கொல்லும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும், பொதுவெளியில், அல்லது நான்கு சுவர்களுக்குள், எந்தக் காரணங்களுக்குச் சண்டை வந்தாலும், கருத்து முரண்பட்டாலும், காரணத்தையோ, கருத்தையோ விட்டுவிட்டு, பெண்ணின் நடத்தையை, உருவத்தை, உடல் உறுப்புகளை, அவளின் வளர்ப்பை, அவளின் உறவுகளை, அவளின் ஆடைகளை, என்று தான்தோன்றித்தனமாகத் தாக்கும் ஆண்கள், அல்லது பெண்கள், சமூகத்தில் பிச்சைக்காரர்களாக, எழுத்தாளர்களாக, பெரிய கூத்துக்காரர்களின் ரசிகர்களாக, அல்லது சமூகத்தில் எந்த நிலையில் இருப்பவர்களாக இருந்தாலும், ஒன்று அவன் மனநிலைப்பிறழ்ந்தவர்களாகவோ, அல்லது நல்ல தகப்பனை வழிகாட்டியாய் கொண்டிருக்காதவர்களாகவோ, அல்லது தாயை மதிக்காதவர்களாகவோ, ஆண்மை, பெண்மை என்பது உடல் உறுப்பைப் பொறுத்து மட்டுமே என்று தவறாகக் கற்பிக்கப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடிய சாத்தியங்களே அதிகம்!

மரபணு மாற்ற விதைகளைப் போல இந்தியாவில் இதுபோன்றவர்களின் மக்கள்தொகைப் பெருகிக்கொண்டே போனாலும், சீரான ஆரோக்கியம் மிக்க மலர்கள் மலர்ந்துகொண்டுதான் இருக்கின்றன, அவர்கள் மாற்றத்தைக் கொண்டு வரலாம் வருங்காலத்தில்!

மழைஒரு துளி
சிலிர்ப்பூ!
பெரு வெள்ளம்
ஆனந்தம்!
மூழ்கினாலும்
தவறில்லை
மழையில்,
விண்ணைவிட்டு
மண்ணில் பாயும்
மழைப்போல்
கரைகிறது மனது
ஈரக்காற்றில்!
வெறுமையான
இப்பொழுதில்
மரணம் கூட
விடுதலையே
பேரன்பின்
நினைவில்!!

 

அன்பும்_மழையும்அன்பையும் மழையையும்
அலட்சியப்படுத்துகிறோம்
நம் சுயநலக் காரியங்களுக்காக
தூற்றுகிறோம்
பின்பொரு பாலைநிலத்தில்
நின்றுகொண்டு
வெற்று இதயக்கூட்டை
சுமந்துகொண்டு
அப்போதும் நம்
சுயநலத் தாகம் தீர்க்க
வேதனைச் சுமந்து மறைந்த
அன்பையும்
பொய்த்துப்போன மழையையும்
வா வா என்றழைக்கிறோம்
கரைந்துருகும்
தாய்மையைப்போல்
குற்றம் மறந்து வருகிறது
மழை
மீண்டும் மீண்டும்!
எப்போதும் தூற்றும்
மாறாத
மனித இயல்பில்
அன்பும் மழையும் மட்டும்
மாறுவதேயில்லை
காலங்கள் கடந்தும்!

#அன்பும்_மழையும்

மழை

இந்த மழைக்கு ஏன்
இத்தனை கோபம்
இடி மின்னல் காற்று!

Friday, 4 August 2017

அப்பாவின் கரங்கள்

Image may contain: one or more people, people standing and outdoor

பெண் பிள்ளையென
மகிழ்ந்து
தளிர் கரங்களை
பற்றியிருந்த
அப்பனின் கரங்கள்
காப்புக் காய்ச்சி
முரட்டுத்தனமாயிருந்தது

பெண்ணின்
விழியில்
மொழியில்
நடையில் எல்லாம்
அப்பனின் மனம்
லயித்திருந்தது

காற்றில் நம்பிக்கை
வரைந்து
எழுத்தில் உறுதிப்பெறும்
உலகத்தில்
மதிப்பெண் பட்டியல்
எதுவாய் இருந்தாலும்
கண்ணை மூடி
கையெழுத்திடும்
அப்பனின் அன்பில்
நம்பிக்கையிருந்தது

புறம்பேசும் உலகில்
பெண்ணின் இளகிய
எண்ணம் இதுவென
உறுதியாய் இருந்த
அப்பனின் வார்த்தையில்
எப்போதும்
உண்மையிருந்தது

அறியாப்பிள்ளையின்
ஓவிய ஆர்வத்திற்காக
ஓய்வில்லாமல் உழைத்து
எடுத்துவந்த
கூலியை
அள்ளித்தரும்
கணக்கற்ற நேசமிருந்தது

பெண்ணின்
தவறுக்கெல்லாம்
செய்கையில்
வார்த்தையில்
வன்முறை தவிர்த்து
பாங்காய் எடுத்துச்சொன்ன
வார்த்தைகளில்
கருணை இருந்தது

தன்னிடம் ஓயாது
வாயடிக்கும் பெண்
மேடைகளில் முழங்கி
வெற்றிக்கோப்பைகளை
எடுத்து வந்த போதெல்லாம்
அப்பனின் பார்வையில்
பெருமிதம் இருந்தது

கூடிக்கொண்டே போன
பட்டங்களில்
குவித்துக்கொண்டே போன
வெற்றிகளில்
என் மகளுக்கு இது
சாதாரணம் என்ற
அப்பனின் வார்த்தைகளில்
கர்வம் மிகுந்திருந்தது

பொன்னில்லை
பொருளில்லை
உனக்குச் செல்வம்
கல்விதான் என்ற
அப்பன்
வாரித்தந்த
புத்தகங்களில்
அவனுக்கு மறுக்கப்பட்ட
கல்வியின் வாட்டமெல்லாம்
தீர்த்துவிடும்
வேகமிருந்தது

நம்பிக்கைத் தந்த
அப்பன்
பெண் நம்பிக்கை
கொன்று
நோயில் விழுந்து
பிணமானான்
கடைசி நொடிகூட
விழிப்பார்க்க முடியாமல்
கண்மூடினான்
அப்பன் கேட்ட
மகிழுந்தை
வாங்கமுடியா நேரத்தில்
இறுதியாத்திரையை
ஒரு மகிழுந்தில்
முடித்துவைத்தாள் மகள்
விழி முடிய அப்பனின்
கண்களில் உறைந்த கண்ணீரில்
பெண்ணுக்கு ஏதோ
செய்தியிருந்தது

தனித்து நின்ற மகளுக்கு
வாழ்க்கையின் போராட்டங்களில்
பற்றிய கரங்களில்
மட்டுமே மென்மையிருந்தது
அந்தக் காப்புக் காய்ச்சிய
முரட்டுக் கரங்களின்
மலரினும் மெல்லிய
மனம் கொண்ட அப்பன் மட்டும்
எப்போதும் அவளுக்கு
வாய்க்கப்போவதில்லை
அப்பனின் இறுதிச் செய்தியும்
தாமதமாய் அவளுக்குப்
புரிந்திருந்தது!

அம்மைக்குப் பிறகு
தாய்மையின் அன்பு கிடைக்கலாம்
அப்பனுக்குப் பிறகு
பெண்ணுக்கு
வேறொரு அப்பனில்லை!

Thursday, 3 August 2017

சிக்னல் கவிதைகள்


கூடவே எமனை
வேகத்தில் வைத்துக்கொண்டு
பயணிக்கும் ஆண்களுக்கு
அவர்களின் குலசாமியெல்லாம்
யாரோ ஒருவரின் வாகனத்தின்
பிரேக்கில் அமர்ந்துக்கொண்டு
அவ்வப்போது அருள்பாலிக்கிறார்
****************************************************

இருபெரும் வாகனங்களின்
இடைவெளியில்
மின்னலென நுழைந்து
கட்டைவிரலை உயர்த்திக்காட்டி
அந்த இளைஞர்கள்
பைக்கில் விரைந்தோட
வேகத்தைக் குறைத்து
வழிவிட்ட பேருந்து ஓட்டுனருக்கு
சாலைவிபத்தில் இறந்துபோன
மகன் நினைவிலாடினான்!
****************************************************
"கடவுளே,
வேகத்தை கட்டுப்படுத்தி
கொலைகள் செய்யாமல்
நான் பார்த்துக்கொள்கிறேன்
சாலைகளின் நடுவே
தடுப்புசுவரில் ஏறி
யாரும் வாகனத்தின்
முன்குதித்து
தற்கொலைச் செய்துகொள்ளாமல்
நீ பார்த்துக்கொள்!"
என்று வேண்டிக்கொண்டு
வண்டியை எடுத்தார்
அந்த வாடகை வண்டியின்
ஓட்டுநர்
****************************************************
அவனுடைய தலைக்கு
தலைக்கவசம் அணிந்துக்கொண்டு
புடவைக் காற்றில் பறக்க
பின்னே அமரவைத்துக்கொண்டு
செல்லும் கணவனை
தெய்வமெனவும்
தன் சின்னஞ்சிறிய
கைகளை
வாகனத்தின் எரிபொருள்
தொட்டியில்
எந்தப் பிடிப்புமில்லாமல்
வைத்திருக்கும் குழந்தை
தன் அப்பனை
கதாநாயகன் எனவும்
நினைத்துக்கொள்கிறது
அப்பன் கொல்கிறான்
****************************************************
பாலத்தின் இறங்கும்
வழியில் ஏறியும்
ஏறும் வழியில்
இறங்கியும்
பாதைமாறும்
பயணிகள்
பலரின் வாழ்க்கையையே
மாற்றி அமைக்கிறார்கள்
சாலையில்
****************************************************
ஒரு கத்தியின் முன்
வராத வீரம்
ஒரு கொடுமைக்கு
எதிராக
வராத வீரம்
அரச அடக்குமுறைக்கு
எழும்பாத வீரமெல்லாம்
தன்னை முந்திச்செல்லும்
வாகனத்தை ஓட்டுவது
பெண்ணென்றால்
வந்துவிடுகிறது
பெரும்பாலான ஆண்களுக்கு
சென்னை மாநகரச் சாலைகளில்!
****************************************************
நான்கு கால் நாய்
சிவப்பு ஒளிர்ந்த பொழுதில்
நம்பிக்கையுடன் சாலையை
கடக்க
இரண்டு கால் நாயொன்று
சிக்னலை மதிக்காமல்
விர்ரென்று இடைபுகுந்து
நாயை கொன்றுச்சென்றது
****************************************************

பிக் பாஸ்

சுற்றிலும் தங்களுடைய நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது என்று தெரிகிறது, அதையே அவர்களிடம் திரும்பவும் போட்டுக்காட்டியும் கதைக்கேற்ப மீண்டும் மீண்டும் சிலர் அதே தவறுகளைச் செய்கின்றனர், யாருக்கு மக்கள் பொங்க வேண்டும், யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிற அளவுக்கு சரியாய் காட்சிகள் கட்டமைக்கப்பட்டு ஒளிப்பரப்பப்படுகிறது! இத்தனை தெரிந்தும் இதனை உண்மையென்று நம்பி தினந்தோறும் இதே மயக்கத்தில் தானாறியாமல் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்யும் ஆர்வலர்கள் மத்தியில் இப்போது பத்திரிக்கையாளர்களும் சேர்ந்து கொண்டனர்! 

இதற்கிடையில் மாணவி வளர்மதியின் கைது, போராட்டங்கள் , தடியடிகள், அடக்குமுறைகள் பற்றி பேசும்போது, ஒரு முன்னாள் காவல்துறை நண்பர், வடக்கை ஒப்பீடும்போது, தமிழ்நாட்டில் மக்கள் சாதுவானவர்கள், பெரிதாக எந்தப்போராட்ட வடிவமோ அவர்களால் வராது, இந்த சில நடவடிக்கைகளிலேயே அவர்கள் பயந்துவிடுவார்கள், ப்ராவிடண்ட் ஃபண்ட பிரச்சனையில் கூட போராடியது எல்லாம் பெங்களூர்வாசிகளே என்றார், ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவில் வந்தது, அதையும்
கூட தங்கள் இலக்கை அடைந்ததும், அந்தப்போராட்டம் அதிகாரிகளால் கலைக்கப்பட்டவிதம் நாடறியும்! தமிழ்நாடு அமைதிப்பூங்கவாக திகழ எப்போதும்
அதன் தனித்துவம் தெரியும்!

நிச்சயம் தமிழ்நாட்டின் மக்கள் தனித்துவமானவர்கள், எனினும் சினிமா விமர்சனங்கள் செய்து கடந்துவிடுவது போலல்லாமல் ரியாலிட்டி ஷோக்களில் மூழ்கியும், அதற்கு கோனார் உரை முதற்கொண்டு உளவியல் கட்டுரைகளை எழுதியும், கதாபாத்திரங்களுக்காக கண்ணீர் விட்டும், வீட்டில் உள்ளவர்களையோ, உடன் பழகும் மனிதர்களையோ வாய்விட்டு மனம்விட்டு பாராட்டாதவர்கள், நடிக நடிகயரை பாராட்டியும், தூற்றியும் என்ன உளவியலை கற்றுக்கொள்கிறார்கள், அதை யாரிடம் பயன்படுத்தப்போகிறார்கள் என்பதெல்லாம் அடடா என்ற ஆச்சரியக்குறி! இதையெல்லாம் பார்க்கும் போது எத்தனை நெடுவாசல் களம் கண்டாலும், எத்தனை வளர்மதிகள் கைதுசெய்யப்பட்டாலும், இன்னும் எத்தனை ஊழல்கள் நிகழ்ந்தாலும் இன்னும் பலநூறு வருடங்களுக்கு இதே கட்சிகள் இதே அரசியல்காட்சிகள் மாற்றமில்லாமல் தொடர்ந்துகொண்டேயிருக்கலாம், தமிழ்நாடு பொட்டல்காடாகும்வரை அல்லது மக்கள் தெளியும்வரைச் சுரண்டல்கள் தொடரவும் செய்யலாம்!

விந்தை மனிதர்கள்


Image may contain: one or more people and people sitting

மனந்திறந்து அழுத வேளையில்
உலகம் மௌனமாய் இருந்தது
வாய்விட்டுச் சிரித்த வேளையில்
பரவாயில்லையே என்றது
ஏதுமில்லை என்றபோதில்
உன்னிடம் தான் தவறென்றது
அழுவதா சிரிப்பதா
எது தவறென்று புரியாத
பொழுதில்
மௌனமே சிறந்ததென்று
வாய்முடி மௌனியானேன்
உலகம் பின்னால் வந்தது
நான் தனித்து நின்றேன்!

 

மூன்று கண்கள் நான்கு கால்கள்

ஆடை அவிழ்த்துப் பார்த்தபின்
பெண்ணுக்கும் ஆணுக்கும்
சாதியைப் பொறுத்து
உறுப்புகள் மாறியிருந்ததா?

உயர்சாதி மேல்சாதி
என்று வகுத்த நியதிப்படி
மூன்று கண்கள்
நான்கு கால்கள் என்று
உறுப்புகள் பெருகியிருந்ததா?

கர்ப்பிணிப் பெண்ணின்
வயிற்றைக் கிழித்தபோது
அவளின் சாதியைப்பொறுத்து
கர்ப்பப்பை இடம் மாறியிருந்ததா?

உயர்சாதிக் காதலில்
கலவி வாய்வழியாகவும்
கீழ்சாதிக் காதலில்
கலவி கால்களுக்கிடையேயும்
நிகழ்ந்திருந்ததா?

சாதிக்கண்டு ஒருவனை
வெட்டிச் சாய்த்தபோது
வீழ்ந்தவனின் குருதி
நீலமாகவும்
வெட்டியவனின் நரம்பில்
குருதிச் சிகப்பாகவும்
ஓடியிருந்ததா?

மனங்களின் அழுக்கெல்லாம்
சாதியாக ஓடும் நாட்டில்
ஆறுகளெல்லாம் மணலோடி
கிடக்கும் காட்சியில்
வியப்பேதும் தோன்றியிருந்ததா?

கீழென்றவன் கைகட்டி
நின்றாலும்
மேலென்றுரைத்தவன்
மீசை முறுக்கினாலும்
தன்னுயிர் போல
மண்ணுயிர் காக்கும்
கடையெழு வள்ளல்களில்
ஒருவன் இல்லாவிட்டாலும்
சொல்லாலோ செயலாலோ
பிற உயிரை வஞ்சனை
செய்யாத எல்லோரும்
உயர்சாதிதான்
ஒருவரின் உரிமையை
உயிரை
மிரட்டிப் பறிப்பவன்
எல்லாம் கீழ்சாதிதான்
இதில் மாற்றுக்கருத்தும்
இருக்கிறதா?

அம்மா, அங்கே என்ன விட்டுட்டுப் போகாதே - பிள்ளைகளும் பெற்றோர்களும்!

"அம்மா, அங்கே என்ன விட்டுட்டுப் போகாதே", "அப்பா, அந்த அங்கிள் என்னை கிள்ளிட்டாரு", "அம்மா, தாத்தா, மாமா வ பார்த்தா எனக்கு பயமாயிருக்கு"
இது போன்ற குழந்தைகளின் கூக்குரல்களை எவ்வளவு எளிதாக பெற்றவர்கள் அலட்சியம் செய்கிறார்கள்? "அட குழந்தைங்க, அது சும்மா சொல்லுது" உளவியல் ரீதியாக குழந்தைகள் எதையும் "சும்மா" சொல்வதில்லை என்பதுதான் உண்மை!

குழந்தைகளின் மழலை வார்த்தைகள் தேனோசையென்றால், குழந்தைகளின் பயம், மற்றும் மறுப்பு வார்த்தைகள் எச்சரிக்கை ஓசைகள்!
ஏழு வயது பெண் குழந்தையை தனியே விட்டுவிட்டு குடும்பமே ஷாப்பிங் செல்ல, ஒரு குழந்தை வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்டது, சண்டிகரில் 10 வயது பெண்குழந்தை பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பம், ஹரியானாவில் 15 வயது சிறுமி உறவினர் இருவரால், பெற்றவர்களை கொன்று விடுவோம் என்று பயமுறுத்தி வன்புணர்ச்சி செய்யப்பட்டு கர்ப்பம், இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வருகின்றன, தொடர்ந்து பல பெற்றவர்களும் "யாரின்" மீதோ வைக்கும் நம்பிக்கையை பிள்ளைகளின் மீது வைக்காமல், பெண் குழந்தைக்கு நம்பிக்கையையோ, தங்களின் செவிகளையோ, நேரத்தையோ தராமல் அலட்சியப்படுத்துவதில் இந்த அவலங்கள் தொடர்கதையாகிறது!

"அவன் ஆம்பிளை" என்ற ஆண் பிள்ளைகளின் வளர்க்கும் முறையையும் இந்த இந்தியச் சமுதாயம் மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்!

பெண் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் நம்பிக்கையே வைப்பதில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான், பெரும் வரதட்சணை தரப்பட்டு செய்யப்படும் திருமணம், ஜார்ட்டட் அக்கவுண்டன்ட் படித்த தங்கள் பெண்ணை நூறு பவுன் நகைக்கொடுத்து, முப்பது லட்சம் ரொக்கம் கொடுத்து, 15 லட்சம் கார் கொடுத்து, ஒரு மருத்துவனுக்கு திருமணம் செய்து வைக்க, வரதட்சணைக் கொடுமையால் பெண் தாங்க முடியாத வேதனையுடனும், பயத்துடனும் பெற்றவர்களை தேடி வந்தப்போதெல்லாம், அவளின் மூன்று வயது குழந்தைக்காக, "அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்ற அதே புளித்துப்போன அறிவுரையைச் சொல்லித் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள், விளைவு, புகுந்த வீட்டு பெரிய மனிதர்கள் வேறு பெண்ணை பெரும் வரதட்சணையுடன் மகன் திருமணம் செய்து கொள்ள, மொத்த குடும்பமும் சேர்ந்து அவளைக் கொன்றிருக்கிறார்கள்! நன்றாக படிக்க வைக்கும் பெற்றோர் ஏட்டுக்கல்வியுடன், பெண்ணுக்கு
தன்னம்பிக்கையையும், உறுதியையும் வளர்த்து, வரதட்சணையாக யாருக்கோ கொடுக்கும் பணத்தை, அவளிடம் கொடுத்தால்கூட அவளின் வாழ்க்கை நல்லபடியாய் அமைந்திருக்கும் தானே?

சரி, கொடுமைகள் எல்லாம் பெண்களுக்குதானா? இல்லை, வன்புணர்ச்சி நிகழ்வுகள் பெண்குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சரிபாதி ஆண்குழந்தைகளுக்கும் நிகழ்வதாக என்சிஆர்பி கூறுகிறது!

இதற்கெல்லாம் அரசின் வினையாற்றும் வீச்சென்பது கண்துடைப்புத்தான்! ஒவ்வொரு முறையும் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே இந்த அரசாங்கம் செயல்படுகிறது, நிர்பயா முதல் பேருந்து ஓட்டையில் விழுந்திறந்த குழந்தை முதல் நீங்களே யோசித்துப்பாருங்கள், விளைவுகள் ஏற்படும்போதே அரசு அதிகாரிகளும், ஆள்பவர்களும் விழிக்கின்றனர், அல்லது விழித்தது போல் நடிக்கின்றனர்! இதுவரை அவர்களின் குழந்தைகள் இதுபோன்ற பயங்கரங்களை எதிர்கொள்ளவில்லை, காவல்துறைக்கும் ஆளும் காய்ந்த மரங்களுக்கும் எந்தக்குழந்தைக்கு என்ன ஆனாலும் அது வெறும் எண்ணிக்கை கணக்குத்தான், சில நூறுகளையோ, சில லட்சங்களையோ நிவாரணமாக வீசி எறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்வதோடு அவர்களின் வேலை முடிந்துவிடும், ஆனால் ஒவ்வொரு பெற்றவர்களுக்கும், அவரவர் குழந்தைகள் எண்ணிக்கை கணக்கல்ல, அவர்களின் வாழ்வாதாரத்தின் நம்பிக்கை கணக்கு, ஆதலால்;

*பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்
*அவர்களுக்கு உங்கள் செவிகளையும் மனங்களையும் தாருங்கள்
*பிள்ளைகளை தனித்திருக்கவோ, யாரையோ நம்பி விட்டுச்செல்லாதீர்கள்
*குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுங்கள்
*ஆண்பிள்ளையையும் பெண்பிள்ளையையும் வளர்க்கும் முறையில் வித்தியாசம் காட்டாதீர்கள்
*ஆண்குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
*ஆண்குழந்தையோ, பெண் குழந்தையோ நல்ல உணவோடு ஆரோக்கியம் பேணுங்கள்
இருவருக்கும் உடல் பலமும் மன பலமும் அவசியம்
*குழந்தைகள் வெளியே விளையாட பார்வைக்கூர்மையாகும், அவர்களின் மீது உங்கள் பார்வையும் கவனமும் இருக்கட்டும்
*இறுதியாக குழந்தைகளின் கல்வியில், திறனில் அக்கறைக்கொள்ளுங்கள், அவர்களின் திறனில், வார்த்தைகளில் "நம்பிக்கை" வையுங்கள்
பெற்றவர்களின் நம்பிக்கையும், அன்பும், அக்கறையும் மட்டுமே குழந்தைகளைக் காத்து நிற்கும் , இடர்பாடு ஏற்பட்டாலும் அதுவே அவர்களைத் துவண்டுவிடாமல் தாங்கிநிற்கும்!

மனமெனும் நந்தவனம்


  
அது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடித்து, பதினொன்றாம் வகுப்பில் காலடியெடுத்து வைத்த தினம். மொத்தம் வகுப்பும் எந்தப் பாடப்பிரிவை எடுத்திருந்தாலும், கணிதத்தை ஒரு விருப்ப பாடமாக எடுத்திருந்தது. ஆசிரியர் வந்தார், அதே பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர், அவருக்குள் பல முன்முடிவுகள், போன வருடத்தில் இருந்தவனோ / இருந்தவளோ உருவத்தில் மாறியிருந்தாலும், திறமை என்னவோ தெரிந்துதான் போயிருக்கும் என்பது அவரது கணிப்பு. முதல் நாள் வகுப்பில் "நீங்கள் நினைப்பது போலக் கணிதம் அவ்வளவு எளிதில்லை, இந்த வருடம் நீங்கள் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்" என்றார். சலசலப்பில் இருந்த கூட்டத்தில் தேவையில்லா ஓர் இறுக்கம் சூழ்ந்து கொண்டது. அடுத்த நாள் வகுப்பில், இன்ஜினீரியரிங் படித்தே தீருவேன் / படித்துதான் தீர வேண்டும் என்ற அளவில் இருந்த மாணவர்களும், ஒரு மாணவியும், கணிதத்தை விரும்பிய மற்றுமொரு மாணவியும் மட்டுமே வகுப்பில் இருந்தனர், மற்றவர் எல்லாம் கணிதம் தவிர்த்து வேறு பாடங்களை எடுத்து சென்று விட்டனர். அந்தப்பள்ளி அந்த வருடம் மிகக்குறைந்த அளவிலேயே கணிதப் பிரிவு மாணவர்களைப் பெற்றிருந்தது!

அவ்வப்போது நான் நினைவுறுத்திக்கொள்ளும் கதை ஒன்று உண்டு, ஒரு பெரும் காலணிகள் செய்யும் நிறுவனம், ஒரு தீவில் தங்களுடைய கிளையைத் தொடங்குவதற்காக, இரு ஊழியர்களை அந்தத் தீவின் நிலவரம் பற்றி அறிய அனுப்பியது. ஒருவர் திரும்பி வந்து, அந்தத் தீவில் யாருமே செருப்பணியவில்லை, அதனால் அங்கே வியாபாரம் தொடங்குவது வீண் என்க, இன்னொருவர் திரும்பி வந்து, அங்கே யாருமே காலணி அணியவில்லை, நிச்சயம் நமக்கு நல்ல வாய்ப்பு, நம் காலணிகளைச் சந்தைப்படுத்தலாம் என்றாராம்.

ஒருவரைப் பற்றிய நம் பார்வை, நம் நோக்கு எல்லாமே சில நிகழ்வுகளாலும், நாம் வளர்க்கப்பட்ட பின்னணியினாலும், நம்முடைய எண்ண ஓட்டங்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரைப் பற்றிய முன்முடிவை நாமாக எடுத்துக்கொள்ளும் முன், நாம் ஏன் பேசத்தயங்குகிறோம்? கசகச வென்று களைகளைப் போல் நம்மால் நினைவுகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது, அந்தக்களைகள் நமக்கு அழகானதாகத் தோன்றுகிறது, அந்தக் எண்ணக் களைகள், நம்முடைய "நான்" எனும் தன்மையால் மேலும் மேலும் உறுதிபெறுகிறது, சட்டென்று ஒரு நொடியில் அழுத்தப்பட்ட அத்தனையும், ரகசியக்களைகளாக வளர்க்கப்பட்ட அத்தனையும் வெறுப்பையும், வன்மத்தையும் வாரி உமிழ்கிறது! சாதியினால் ஏற்படும் சண்டைகளும், கொலைகளும் கூட ஒரு தலைமுறை இன்னுமொரு தலைமுறைக்கு எண்ணக் களைகளாகக் கடத்தப்பட்டவையால் விளைவதுதான்.

ஒரு குழந்தைத் தவழ்ந்து, நடந்து, ஓடினாலும், பெற்றவர்கள் கண்களுக்கு அது குழந்தையாகவே தெரியும், அது இயல்பு, எனினும், ஒரு குழந்தையைச் சிறந்த குழந்தையாக மாற்றுவதும், அல்லது மோசமான வழியில் நடத்துவதற்கும் எப்போதும் வறுமையோ, செல்வமோ காரணமாவதில்லை, பெற்றவர்களின், மற்றவர்களின், சமூகத்தின் எண்ண ஓட்டத்தில் அந்தக்குழந்தைக்குக் கடத்தப்படும் எண்ணங்களும் சூழலுமே காரணமாகிறது!

ஒருவரைக் கைநீட்டி அடிப்பது உடலுக்கு எத்தனை வேதனை தருமோ, அதை விட அதிக வேதனையை "சொற்களால்" காயப்படுத்தும் போது மனம் உணரும் என்பதை அவ்வப்போது என் அப்பா "வார்த்தையை விட்டுடாதே" என்பார்! வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தை, சில நம்பிக்கை துரோகங்களைக் கடந்தவேளையில் எல்லாம், யாரையும் நான் சபித்ததோ, கடினமான வார்த்தைகளை உமிழ்ந்து என்னை ஆற்றுப்படுத்திக்கொண்டதோ இல்லை, அதிகபட்சமாகச் சாலையில் செல்லும்போது ஏற்படும் விதிமீறல்களில் ஏதோ ஒரு சலிப்பும் எரிச்சலும் வந்தாலும், மனதிற்குள் திட்டிக்கொள்வேன், அதுவும் கூட நம் மனநிலையைப் பாதிக்கும் ஒரு விஷயம்தான் என்று விட்டுவிட்டேன்!

அவ்வப்போது காதல் தோல்விகளில் ஏற்படும் கொலைகளும், தூற்றிக்கொள்ளும் வார்த்தைகளும், அதுவரை அங்கே நிகழ்ந்த காதல் பொய் என்றுதானே எடுத்துச்சொல்கிறது? இந்தக் காழ்ப்பும் கோபமும் வார்த்தைகளும் எத்தனை விஷயங்களைப் புரட்டிப்போட்டு விடுகிறது?

அந்தச் சிறுவனின் பெயர் ஜாக், எப்போதும் அவனுக்கு அளவுக்கு மீறி கோபம் வரும், தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஜாக்கைப் பற்றி அவனின் தகப்பனிடம் குறை சொல்கிறார்கள், ஜாக்கின் அப்பா ஜாக்கிடம் நிறைய ஆணிகளைக் கொடுத்து, என்றெல்லாம் நீ கோபப்படுகிறாயோ அன்றெல்லாம் ஒரு அணியைத் தோட்டத்தைச் சுற்றியிருக்கும் வேலியின் பலகையில் அடித்துவா என்கிறார், ஜாக் வேலி முழுக்க ஆணிகளை அறைகிறான். ஒருநாள் அவனின் தந்தை, "ஜாக், ஒவ்வொருமுறையும் நீ கோபப்பட்டு உமிழும் வார்த்தைகளும், உன் செய்கைகளும் இப்படித்தான் ஒரு ஆணியை அதை எதிர்கொள்பவரின் மனதில் அறைகிறது என்க, ஜாக் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. பின்பு, அவனிடம் நீ காயப்படுத்தியவரிடம் மன்னிப்பு கேள், எந்த ஒரு நல்ல செய்கை செய்யும்போதும், இங்கே நீ அறைந்த அணிகளில் ஒவ்வொன்றாய் எடுத்துவிடு என்று சொல்கிறார். ஜாக் சில மாதங்களில் வேலி முழக்க அறைந்த ஆணிகளையெல்லாம் எடுத்துவிடுகிறான், பின்பு தந்தையை அழைக்க, இப்போது தந்தைக்கு நிம்மதி. வேலி முழுக்க அணி எடுத்த இடங்களில் எல்லாம் ஓட்டைகள், வெளிப்பலகைகள் முழுதுமே ஓட்டையாய் காட்சி அளிக்கிறது. "ஜாக், அறைந்த ஆணிகளை எடுத்துவிட்டாலும், இந்த ஓட்டைகளைப் போலவே உன்னால் துன்பப்பட்டவர் மனதும் காயப்பட்டு, அதனால் தீரா தழும்புகள் ஏற்பட்டிருக்கும், புரிகிறதா?!" என்கிறார் என்பதாகக் கதை முடியும். நம்மில் பல ஜாக்குகள் இப்படித்தான் இருக்கிறோம், வீட்டில் வெளியில் என்று அகப்பட்டவரிடம் ஆணிகளை அறைகிறோம்!

கடுமையாய் வசைபாடும் ஒருவரிடம், புன்னகையை மட்டும் பரிசளித்துவிட்டு அமைதியாய் சென்று விடுங்கள், எல்லோரும் புத்தரில்லை என்று ஒவ்வொருவரும் வசைபாடிக் கொண்டே இருந்தால், இங்கே சலசலப்பும் கண்ணீரும் மட்டுமே மிஞ்சும்! புத்தர் பிச்சையெடுக்கும் வேளையில் தொடர்ந்து ஒரு பெண்மணி அவரை வசைபாட, பொறுக்க முடியாத சீடர்களை ஆற்றுப்படுத்திய புத்தர், "நாம் ஒருவரிடம் பிச்சை கேட்கிறோம், அவர் கொடுப்பதை நாம் மறுத்துவிட்டால் அந்தப்பொருள் அவரிடம் இருந்துவிடும், பொருளுக்கு நிலைமை இப்படியென்றால், ஒருவர் நம் மனம் ஏற்காத வார்த்தைகளில் நம்மை வசைப்பாடும்போது, நாம் அதை ஏற்காமல் மௌனமாய் நகர்ந்துவிடும்போது அது அவர்களிடமே தங்கிவிடுகிறது" என்றாராம்! தனிமனிதர்களிடம் கோபமாய்ப் பேசுவதோ, வன்முறையில் இறங்குவதோ, வஞ்சித்து ஏமாற்றுவதோ, தூற்றுவதோ வீரம் இல்லை, எல்லாவற்றிற்கும் அன்பையோ, மன்னிப்பையோ பரிசளித்து நகர்ந்துவிடுவதே வீரம்!

சமீபத்தில் ஒரு காணொளிப் பார்த்தேன், செடிகளுக்கும் நினைவும் உணர்வும் உண்டு என்ற சில ஆய்வுகளின் தொகுப்பு அது. நல்ல வார்த்தைகளைக் கேட்கும் செடி வேகமாய்ச் செழித்து வளர்கிறது, கடினமான வார்த்தைகளைக் கேட்கும் செடி வாடுகிறது, தன் துணைச் செடியை ஒருவன் வெட்டிசாய்க்க, பலபேருக்கு மத்தியிலும் ஒரு செடி அவனை மட்டும் அடையாளம் காண்கிறது, தன் பயத்தினை அதிர்வலைகளாக வெளிப்படுத்துகிறது! அஃறிணை என்று மனிதர்கள் வரையறுத்திருக்கும் செடிகளுக்கே நல் வார்த்தைகள் தேவைப்படும்போது, உயர்திணை மனிதர்களுக்கு அது எத்தனை இன்றியமையாதது என்பதை அறிவோம். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பது முதுமொழி, வெல்வதற்கு வழிகாட்டுகிறோமோ இல்லையோ ஒருவரையும் கொன்றுவிடாமல் பார்த்துக்கொள்வோம்! நெஞ்சில் எழும்பி, ஆத்திரத்தில் நாவில் துடிக்கும் சொற்களை, உதடுகளின் வழி தப்பிவிடாமல், விரல்களின் வழி தப்பிவிடாமல் ஒரு நிமிடம் கட்டுப்படுத்தினால், ஒரு தழும்பு தவிர்க்கப்படும்தானே?

எல்லோரின் எண்ணங்களிலும் நாம் புகுந்து வரமுடியாது, அவரவர் மனதில் இருப்பது என்ன என்ற முன்முடிவுகளைத் தவிர்த்து, ஒரு நிமிடம் நம் மனதில் உள்ள களைகளை அகற்றிவிட்டால் நம்முடைய மனம் என்பது நந்தவனம்தான், மனம் மணம் பரப்பட்டும்!