Friday, 28 June 2013

மரணத்திற்கு பின்

கேட்க நினைத்து
கேட்காமல் புதைத்து
கேள்விகளால் எரிந்து போனேன்
என் சாம்பல் கரைத்து
படையல் கொடுத்து - நான்
பெறாத விடையனைத்தும்
வரங்களாய் கேட்டு  - வாழாத
தெய்வம் தொழுது - வேண்டி
நின்று என்ன பயன்?

உங்களுக்கு எப்போதும் பெண் வேண்டுமோ?

தோழனுடன் சாலை வழி நடக்கையில்
தரங்கெட்டவள் என்ற கண்துடைப்பில்
எனக்கொரு பாடம் என்று -
உங்கள் மூர்க்கம் தணித்துக்  கொள்ள

கார்ச்சறாய் யென்றாலும்  - கண்ணை
விடுத்து உடல் மறைத்தாலும் - பாதம்
தடுக்கச்  சேலை அணிந்தாலும்
என் ஆடையின்பின்  உங்கள் மோகம்
மறைத்து - உங்கள் உறுப்பு
கிளர்ச்சிக் கொள்ள

அயராது உழைத்தாலும்
வேர்வையில் நசிந்தாலும் -
வேலையின் போர்வையில் - என்
வறுமையை மோகித்து உங்கள் சிறுமையை
நியாயப்படுத்திக் கொள்ள

பொருட்கள் விற்கையில், சாலை கடக்கையில்
பேருந்தில் பயணிக்கையில், தனியே நடக்கையில்
என் உடலின் ஏதோ ஒரு பாகம்
தொட்டு - உங்கள் பரவச தேடலுக்கு
என்னை பகடைக் காயாக்கிக்  கொள்ள

புணரத்தான் பெண் வரிசையாய்
எவனோ எழுதி வைத்ததில் -
மகளென்றாலும்  மயக்கம் தெளியாமல் 
மிருகத்தினும்  கீழாய் சென்று -
மதத்தின் பெயரில் -
மனிதனென்று ஒளிந்துக் கொள்ள

நாளெல்லாம் நசித்து, உயிரை இறுக்கி
உரிமையின்  பெயரில் - உங்கள்
சாராய வேர்வையில்  - புகையின் 
முடை நாற்றத்தில் - இரவின் உறவில்
ஆளுமைக் கொள்ள

குழந்தை முதல் பேரிளம் பெண் வரை
ஆடையென்றும், அழகென்றும்
காதலென்றும், உரிமையென்றும்
நடத்தையென்றும், நாய்களென்றும்
காரணங்கள் மாற்றி மாற்றி
என் கருப்பையை கலங்கடித்துக் கொல்ல
உங்களுக்கு எப்போதும் பெண் வேண்டுமோ?

கருவில் இருக்கும் என் பெண் குழந்தை
அம்மணமாய் பிறக்குமே நாளை
நான் என் செய்ய?

Thursday, 20 June 2013

மரணம்


இலையின் நுனியில் இருந்து மறையும் பனித்துளி போல்,
கொடியிலிருந்து விழுந்து விடும் ஒரு மெல்லிய மலரைப் போல்,
கடமை முடித்து, எதிர்ப்பார்ப்புகள்  துறந்து,
ஏதுமற்ற ஒரு வேளையில்
சட்டென்று வாய்த்து விடும் ஒரு மரணம் கூட பெரும் வரமே!

Picture Courtesy: Google

போராளி


கற்கள் மேல் விழ
குருதி நிலம் நனைக்க
முட்கள் பாதை சாய
அவன் நடந்தான்

பார்வைகள் கேலி பேச
காட்சிப் பிழை இமை அழுத்த
கண்கள் நீர் இறைக்க
அவன் தொடர்ந்தான் 

குருதியில் பாதை செழிக்க 
பாதையில் பூக்கள் பூக்க
பிறர் வாழ்வு மலர
அவன் வாழ்க்கை முடித்தான்

மூச்சுக்  காற்று அடங்கிட
இருள் அகற்ற விழிகள் தந்து
இதயம் மட்டும் தீயிலிட்டு
மீளாத் துயில் கொண்டான்
 # போராளி

Wednesday, 19 June 2013

வாழ்வியல் இயற்கை


விருட்சங்களின் வருடலில்
மலைமுகடுகளின் தடைகளில்
கார்கால பருவ மாற்றங்களில்
ஒன்றோடு ஒன்று துரத்தி
கண்மூடி அன்பில் திளைத்து
காற்றில் நெகிழ்ந்து - சட்டென்று
கரைந்திடும் மேகங்கள் - பெரு
மழையாக மண்ணில்!
தழுவி வரும் வெள்ளத்தில்,
பூமி நனைந்திடும் மோகத்தில்.........
அரும்பாய் முளைக்கின்றன - மேலும்
சில குறும்பு விருட்சங்கள்
காதல் விளையாட்டுத் தொடர!
# வாழ்வியல் இயற்கை

Friday, 14 June 2013

GIST

பொது மேடையில் வந்து வாக்குவாதம் செய்பவர்கள்தான், உண்மையில் அறிவு, ஆற்றல் கொண்டவர்கள், அமைதியாய் இருந்தால் கோழைகள் என்று அர்த்தம், என்று சூடாய் ஒரு சகோதரர் என்னிடம் கொதித்தெழுந்தார்.....

அவர் சொன்ன பொதுமேடை எல்லாம், FB குழும, சாதி மத பற்றிய மோதல்களையும், இடக்கு மடக்காய் அவர் சொல்லும் கருத்துக்கு எதிர்வினைகளையும் தான்!
வரமாய் அமையும் வாழ்க்கையிலும் வருத்தங்கள் காண்பவர் பலர்
வருத்தங்கள் நிறைந்த வாழ்க்கையையும் தவமாய் கடப்பவர் சிலர்!

--------------------------------------------------------------------------------------------------------- 
அவள், அவன், அவர்கள் என்னும் உயர்திணைகள், உயிர் விலகிய பின் எளிதாய், இது, அது, அவைகள் என்னும் பீடிகைகளில் அடங்கி விடுகிறது!
# வாழ்க்கை நிதர்சனம்!

----------------------------------------------------------------------------------------------------- 
வினையாற்றும் சுயநலவாதிகளாலும், வினை பேசும் பொதுநலவாதிகளாலும் ஒசோன் லேயர் ஓட்டையைத் தாங்கிக் கொண்டு இயங்குது உலகம்! 
------------------------------------------------------------------------------------------------------------------
கோபம் கொண்டு துடிக்கையில், "போய் தொலை" என்று உதடுகள் உமிழும் வார்த்தைகள் உண்மையானால், போன பின், மனம் துடிக்கும், நிரப்ப முடியாத வெற்றிடத்தை காலம் பரிசளிக்கும்!

# யாகாவாராயினும் நா காக்க

-----------------------------------------------------------------------------------------------------------------
   
வாக்குவாதம் செய்பவர்கள் எல்லாம் பொது மக்களுக்கு சேவை செய்பவர்கள் என்றால், சமூக சேவகர்கள் நிறைந்து இருப்பதுதானே கட்சிகள்?!!? சாதி, மத சண்டை இடுபவர்தான் நல்லவர்கள் என்றால், நல்லவர்களுக்கு நாட்டில் என்ன பஞ்சம்?

கவிதை, கட்டுரை எழுதுபவர்கள் எல்லாம், அவர் சொன்ன so called பொது மேடையில் வாதிட முடியாத கோழைகள் என்றும், விமர்சனத்திற்கு பயப்படுபவர்கள் என்றும் அவரே பொங்கி, அவரே வாழ்த்தியும் சென்று விட்டார்....

ஆனால், அந்த பொது நலவாதி, தன் பெயரையோ, புகைப்படத்தையோ இன்னும் வெளியிடவில்லை....fake id புரட்சியாளர்களால் வாழட்டும் சமுகம்!:-)

-----------------------------------------------------------------------------------------------

குழந்தைகளிடம் காட்டும் வன்முறைக்கு பெயர்தான் பலகீனம்
அவர்களிடம் கொட்டும் வெறுப்பில் எழுவதுதான் மிருககுணம்!
 
--------------------------------------------------------------------------------------------------
When a doctor says, 'Dear, you are counting your days and live your life peacefully for the rest of the days to come......'
Our life and thought process changes drastically all of a sudden and a selfless soul emerges!
The reality is, the almighty said so when each soul is born in this world, but our selfishness will change only when a doctor says those lines!
Live every moment!
# Tsunami Truth
---------------------------------------------------------------------------------------------------------------
 

விளம்பர பலகைகள்

யாராய் இருந்தாலும்
வளைந்துதான் ஆக வேண்டும்
அம்மாவிடம்,
நடைபாதைகளை அடைத்து
நிற்கும் விளம்பர பலகைகள்!

பிரசவ வாழ்க்கை


 கார்மேகமாய்
கறுத்துத் திரள

வெளிச்சக் கீற்று
இருள் துளைக்க
நிறைக்கும் வலியில்
நீர் இறைத்து

துளிர்க்கும் நம்பிக்கையில்
மிளிரும் விழிகள்!
#பிரசவ வாழ்க்கை!

வல்லமைதிக்கு தெரியாத காட்டில்
திகைத்து நின்றிடும் மானுக்கு
புள்ளி கூட புயலாய் தோன்றும்
நொடியில் தேர்ந்த இலக்கு
தெளிவானால் - பாய்ந்து
வரும் புலி கூட
பாதம் படும் புல்லாகும்
அயராத ஓட்டத்தில்
காலப் பட்சிகள்
அனைத்தும் திகைத்தோடும்!

Friday, 7 June 2013

பெற்றோர்களின் கவனத்திற்கு: பாகம் - 1

பெற்றோர்களின் கவனத்திற்கு: பாகம் - 1
(மேலும் சில கருத்துக்களுடன் - முழுவதுமாய் வாசியுங்கள்)

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்!

26. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்!

27. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள்! ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்!

28. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள்! பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்பு நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)

29. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ  இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.

30. "நம்ம சாதிக்காரங்க இவங்க"," நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க" என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள்.

31. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ,  அடித்தாலோ, திட்டினாலோ, "திருப்பி திட்டு", "திருப்பி அடி" என்று வன்மம் வளர்க்காதீர்கள்! நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.

31. ஏன் அந்த தவறு நடந்தது? இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள்! மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்!

32. "கத்தாதே சனியனே" என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.
33. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.

34. "அண்ணன் சொல்வது போல நட", "அக்கா சொல்வது போல நட" என்று சொல்லாமல்," நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்" என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்!

35. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள்! அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

36. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்!

36. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

Tuesday, 4 June 2013

பகுத்தறிவு!


 வீணடிக்காமல் உணவு சேர்க்கும்
எறும்புகளின் அணிவகுப்பு
தேன் சுமந்து கூடு செதுக்கும்
தேனீக்களின் சுறுசுறுப்பு
பசித்தால் மட்டுமே வேட்டையாடும்
சிங்கங்களின் கட்டுகோப்பு .......

ஓர் அறிவு குறைந்து,
ஐந்தறிவுக்குள் அகப்பட்டும்
இயற்கை அழிக்கும் செயல்கள்
சிறிதுமில்லை இவைகளிடம்!
ஓர் அறிவு கூடி
ஆறறிவுக்குள் பகுத்தறிந்தும்
இயற்கை காக்கும் குணங்கள்
கைகூடவில்லை மனிதர்களிடம்!

Monday, 3 June 2013

தொலைக்கும் கணங்கள்!


உயர் ரக வாகனத்தை வேகமாய்
ஒட்டி, சேறடித்து சென்றவன்
பார்த்திருக்க நியாயமில்லை
கொட்டிக் கிடந்த மஞ்சள்
சரக்கொன்றை மலர்களை - அதில்
விளையாடி பூத்திருந்த குழந்தைகளை!

இரைச்சல் வடிகட்டிய இறுக்கமான
குளிரூட்டப்பட்ட வாகன இருக்கையில்
அவன் கேட்டிருக்கவும்  வாய்ப்பில்லை
கூடடைந்த பறவைகளின் சப்த பரிமாற்றங்களை
ஹோவென்ற  குழந்தைகளின் மகிழ்ச்சி கூச்சலை!
இறக்கை கட்டிப் பறக்கிறது இயந்திர உலகம்!

குருதியின் ஒரே நிறம்!பொன்னும் பொருளும் பூட்டி,
இரும்பு வேலியும் அமைத்து,
காத்திடு என்று கடவுளை
வேண்டி நின்றோம்!

பாலும், வெண்ணையும்
சாற்றி - தேனும் நெய்யும் ஊற்றி
பசியின் குரலை புறந்தள்ளி
வெறுமையை வேண்டித்  தின்றோம்!

நித்தம் தொழுது - சரித்திரம் போற்றி
பிறர் ரத்தத்தில் திளைக்கிறோம்
படைத்தவன் ஒருவனே எனச் சொல்லி
சக மனிதனை வெட்டிச் சாய்க்கிறோம்!

பாவம் மன்னித்து - பணம் இறைத்து,
மந்தையில்  ஆடுகள் சேர்த்தோம்
வறுமையை ஏய்த்து - தேவனின் பெயரில்
கல்விக் கொள்ளை கலாச்சாரக் கொலை தொடர்கிறோம்!

எல்லாம் துறந்து போனவனை
தொழுது - ஏதும் துறக்க இயலாமல்
கொன்று குவித்தோம் - காவி உடையின்
கறையில், சிசுவின் ரத்த சிகப்பு சேர்ந்தே அணிந்தோம்!

வனங்களில் திரிந்து சிலைகளில் பிரிந்து
மதங்களில் வகுத்து அறிவினை கெடுத்து 
சாதியில் சிதைந்து உயிரினை கொடுத்து
எதைத் தேடுகிறோம்? - எந்த  உயிர்
இழந்த பின் தெரியும் - பெருகி வரும்
குருதியின் ஒரே நிறம்!

Saturday, 1 June 2013

உணர்வுகள்துரிகை சுமந்த வண்ணம் ஓவியமாகும்
ஓவியம் அறிவதில்லை துரிகை தேய்கையில்
நெஞ்சில் நிறைந்த அன்பு காவியமாகும்
அன்பு தெளிவதில்லை நெஞ்சம் மறக்கையில்
அறிந்த பின் உறவே வாழ்க்கையாகும்
வாழ்க்கை இனிப்பதில்லை உறவு பொய்க்கையில்

ஆற்றல் முரண்!சிந்திய பருக்கைகள் 
சில உயிர்களுக்கு உணவாகும்
தெளித்த சில துளிகள் 
ஒரு விதையின் தாகம் தீர்க்கும்
காற்றில் எழும் நாதம் 
சிறு குழந்தைத்  துயிலும் கீதமாகும்
காக்கையின் கழிவும்
ஒரு விருட்சத்தின் விதையாகும்
தூசி துகள்கள் ஒன்று சேர்ந்து
பூமியை வளமாக்கும்
எரிந்து போகும் கரித்துண்டும்
ஒருநாள் வைரமாகும்
பேசாத இயற்கை வினையாற்றும் 
நிற்காமல் பூமி காக்கும் கடமை செய்யும்!

நம்மிடமும் உண்டு அள்ளித் தர
அக்னி கங்குகள் ஆயிரம்
கிள்ளித் தர  மட்டும்
ஏதும் இல்லை இவ்விடம்
ஆற்றல் முரணாய் மானிடர்
வாழ்வே வரம் - வாழ்ந்திடோம் தினம்!

இதய மொழிக் கொண்டு
இயற்கை வழி இசைந்து, வினையாற்றும் அன்பில் 
இயங்கிடும் உலகம்,
இயல்பில் வாழும் மனிதம்!