Friday, 28 June 2013

உங்களுக்கு எப்போதும் பெண் வேண்டுமோ?

தோழனுடன் சாலை வழி நடக்கையில்
தரங்கெட்டவள் என்ற கண்துடைப்பில்
எனக்கொரு பாடம் என்று -
உங்கள் மூர்க்கம் தணித்துக்  கொள்ள

கார்ச்சறாய் யென்றாலும்  - கண்ணை
விடுத்து உடல் மறைத்தாலும் - பாதம்
தடுக்கச்  சேலை அணிந்தாலும்
என் ஆடையின்பின்  உங்கள் மோகம்
மறைத்து - உங்கள் உறுப்பு
கிளர்ச்சிக் கொள்ள

அயராது உழைத்தாலும்
வேர்வையில் நசிந்தாலும் -
வேலையின் போர்வையில் - என்
வறுமையை மோகித்து உங்கள் சிறுமையை
நியாயப்படுத்திக் கொள்ள

பொருட்கள் விற்கையில், சாலை கடக்கையில்
பேருந்தில் பயணிக்கையில், தனியே நடக்கையில்
என் உடலின் ஏதோ ஒரு பாகம்
தொட்டு - உங்கள் பரவச தேடலுக்கு
என்னை பகடைக் காயாக்கிக்  கொள்ள

புணரத்தான் பெண் வரிசையாய்
எவனோ எழுதி வைத்ததில் -
மகளென்றாலும்  மயக்கம் தெளியாமல் 
மிருகத்தினும்  கீழாய் சென்று -
மதத்தின் பெயரில் -
மனிதனென்று ஒளிந்துக் கொள்ள

நாளெல்லாம் நசித்து, உயிரை இறுக்கி
உரிமையின்  பெயரில் - உங்கள்
சாராய வேர்வையில்  - புகையின் 
முடை நாற்றத்தில் - இரவின் உறவில்
ஆளுமைக் கொள்ள

குழந்தை முதல் பேரிளம் பெண் வரை
ஆடையென்றும், அழகென்றும்
காதலென்றும், உரிமையென்றும்
நடத்தையென்றும், நாய்களென்றும்
காரணங்கள் மாற்றி மாற்றி
என் கருப்பையை கலங்கடித்துக் கொல்ல
உங்களுக்கு எப்போதும் பெண் வேண்டுமோ?

கருவில் இருக்கும் என் பெண் குழந்தை
அம்மணமாய் பிறக்குமே நாளை
நான் என் செய்ய?

2 comments:

  1. வணக்கம்...தங்களுடைய தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்த்துகள். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பில் பார்வையிடவும். நன்றி.
    http://blogintamil.blogspot.in/2013/08/5.html

    ReplyDelete
  2. எம்மா மூச்சந்தில் வைத்து சிறு ஊசியை உள்ளங்கால் வழியாக செருகி உச்சந்தலை வழியே எடுத்து மீண்டும் மேலிருந்து கீழ் எடுத்திடுவது போலிருந்தது எனக்கு. எந்தவொரு உணர்ச்சி பதிவை படித்திடும் போதும் பெறா வலியை பெற்றெனம்மா !? ஆண் வர்க்க வரவாய் நானும் இருப்பதால்

    இரு குறியீடுகள் மட்டுமே எனக்கு பெண் என்பவளிடம் !!! மற்றது ?

    அர்ப்பணிப்பு

    அடிமை

    ReplyDelete

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...