Friday, 7 June 2013

பெற்றோர்களின் கவனத்திற்கு: பாகம் - 1

பெற்றோர்களின் கவனத்திற்கு: பாகம் - 1
(மேலும் சில கருத்துக்களுடன் - முழுவதுமாய் வாசியுங்கள்)

1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்!

26. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்!

27. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள்! ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்!

28. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள்! பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்பு நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)

29. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ  இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.

30. "நம்ம சாதிக்காரங்க இவங்க"," நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க" என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள்.

31. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ,  அடித்தாலோ, திட்டினாலோ, "திருப்பி திட்டு", "திருப்பி அடி" என்று வன்மம் வளர்க்காதீர்கள்! நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.

31. ஏன் அந்த தவறு நடந்தது? இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள்! மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்!

32. "கத்தாதே சனியனே" என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.
33. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.

34. "அண்ணன் சொல்வது போல நட", "அக்கா சொல்வது போல நட" என்று சொல்லாமல்," நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்" என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்!

35. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள்! அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

36. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்!

36. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...