Friday 30 November 2012

இறுதியில் தொடங்கும் முதல்!


 ஒருமுறை.........................
அம்மாவின் மடியில் தலை சாய்த்திருக்கலாம்
அப்பாவின் தோழமையில் கரைந்திருக்கலாம்
தங்கையின் பாசத்தில் வாழ்ந்திருக்கலாம்
மனைவியின் நேசத்தில் மகிழ்ந்திருக்கலாம்
கணவனின் நெருக்கத்தில் கலந்திருக்கலாம்
குழந்தையின் அரவணைப்பில் மலர்ந்திருக்கலாம்
தோழமையின் நிழலில் நின்றிருக்கலாம்
காதலின் கனவை விதைத்திருக்கலாம்
கனிவாய் அவன் / அவள் கரம் பற்றியிருக்கலாம்

தன்னுயிர் போகும்முன்னே
பிற உயிர் போனபின்னே
ஒருமுறை ஒருமுறை - என
பலமுறை  நினைத்து - மனம்
ஒன்று மாய்ந்து போகிறது

சாகும் வரை வாழாத வாழ்க்கையை
சாகையில், பிணமாய் போகையில்
வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது
வாழ வைக்கத் தவிக்கிறது
உணராத அன்பையெல்லாம் உணர்ந்து
கண்ணீர் இங்கே வடிக்கிறது

அன்பில்லாமல் கடந்த வாழ்க்கையை,
மரத்து போய் மறித்து போன உயிரை,
தாராத அன்பு கொண்டு, தந்து விட முடியுமா?
வாராத அழுகை கூட்டி, வரச் செய்ய இயலுமா?

பூக்கள் காயும்முன் கண்ணீர் காய்ந்து விடும்
நாட்கள் போகும் முன் ஞாபகம் போய் விடும்

வாழும்போது வாழ்க்கையை வாழ்ந்து விட்டே சாகட்டும்..
நல்ல நினைவுகளால் உயிர் ஒன்று கூடு விட்டு போகட்டும்! 

Monday 26 November 2012

இல்லை - இருக்கிறது!

கண்கள் இல்லையென்ற
குறையில்லை - அழகை
வியப்பதற்கு!

இதயம் பழுதென்ற
நினைப்பில்லை - அன்பை
பொழிவதற்கு!

கைகள் இல்லையென்ற
கவலையில்லை - உதவி
புரிவதற்கு!

கால்கள் இல்லையென்ற
காலமில்லை - நட்பு
வேண்டியவர்க்கு!

மொழி இல்லையென்ற
வலியில்லை - பரிவை
காட்டுவதற்கு!

செல்வம் இல்லையென்ற
புலம்பலில்லை - உணவை
பகிர்வதற்கு!

உன்னுடல் உறுப்புகள் ஒழுங்காய்
அமைந்திட்ட பின்னரும் - ஏதுமில்லை
என்ற வருத்தமென்ன
படைத்திட்ட கடவுளிடம் கோபமென்ன
உறுப்புகள் அற்ற என்னை
ஊனமானவள் / வன் என்னும்
விந்தைதான் என்ன?

Saturday 24 November 2012

கானல் வரி


ஒன்றின் இயக்கத்தில்
இன்னொன்று ஊமையாகுது!

பதுமை ஒன்று தனை மறந்து
பொம்மையானது!

பொதுவுடைமை என்பது
பொய்யானது
தனிவுடமை என்பதே
மெய்யானது!

ஒன்றின் விருப்பம்
இன்னொன்றின் துயரமானது
கொன்றபின் வருவதே
ஞானம் என்றானது! 

இந்த வேடிக்கை விளையாட்டில்
மனம் ஒன்று சிக்கி சிதையுது!

Wednesday 21 November 2012

மனம்



மனம்...இதுதான் எல்லா உணர்வுக்கும் ஆன சாளரம்!

இந்த மனம் மிக விசித்திரமானது, உணர்ந்தவர்களுக்கு சக்தி தரும், கடந்தவர்களுக்கு முக்தி தரும், அதன் போக்கில் போகும்போது ஒன்று தெளிவு வரும் இல்லை குழப்பம் வரும்.... ... இதற்கான சக்தியை உணர்ந்தவர்கள் மட்டுமே அறிந்தவர்கள்!

எனக்கு ஒரு ஆறேழு வயது இருக்கும் போது, நான் வசித்த தெருவில் வசித்த ஒருவர், எப்போதும் என்னை பார்க்கும் போது மறக்காமல் ஒரு உளப்பூர்வமான புன்னகையை வீசிச் செல்வார்...அந்த புன்னகையை தவிர அவருக்கும் எனக்குமான பந்தம் எதுவும் இருந்ததில்லை, நான் பள்ளி இறுதியாண்டு படிக்கையில், அவர் போலவே அவர் மகனும் அதே புன்னகையோடு! எந்த உறவுமில்லாமல், எந்த வார்த்தையையும் இல்லாமால் பார்க்கும் போதெல்லாம் கொண்ட அந்த மலர்ச்சியையும், புன்னகையையும் வேறு ஒருவரிடம் இதுவரை நான் கண்டதில்லை! 
அவர்களை பற்றி நான் ஏதும் அறிந்ததில்லை, ஆனால் அந்த புன்னகையின் பின்னே இருக்கும் மனம் மிகவும் அழகாய் தெரிந்தது! இப்போது முகங்கள் நிழலுருவாய்த்தான் தெரிகின்றன, ஆனால் அந்த புன்னகை மட்டும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது!

உயிரூட்டும் புன்னகை தரும் அழகான மனது!
-----------------------------------------------------------------------------------------------
அழகான மனம் கொண்டவர்கள் அழகாய் புன்னகைக்கிறார்கள், மனம் முழுக்க புழுக்கம் இருக்கையில் எந்த புன்னகையும் வருவதில்லை, புன்னகை இல்லாத உதடுகள் இறுக்கம் அடைகின்றன, இறுக்கம் அடைந்த உதடுகள், மனம் கொண்ட இறுக்கத்தை வெளியே வெறுப்பாக, மனம் நோகும் வார்த்தைகளாக, சில சமயம் ஒரு உயிர் போக்கும் கொலை கருவியாகவும் உமிழ்கிறது!
பிடிக்கும் என்று நாம் நினைக்கும் ஒன்று ஒருநாள் பிடிக்காமல் போகிறது, நமக்கு அதையோ, அவர்களையோ, அல்லது அவர்களுக்கு இதையோ, அல்லது நம்மையோ.....இது ஏன் நிகழ்கிறது?

கண்ணை மூடிக் கொண்டு நாம் பொருட்களை வாங்கி இருக்கலாம், பிறர் கண்டு நாமும் அதை கொண்டிருக்கலாம், நம்முடைய தேவை இப்போது மாறி இருக்கலாம், அது நமக்கு பரிசாய் வந்திருக்கலாம், பெரியவர்கள் நமக்கு அதை தந்திருக்கலாம், அல்லது அதை விட சிறந்தது ஒன்று வந்திருக்கலாம்...எதுவாய் இருந்தாலும் முதலில் ஏற்று கொண்ட மனது பிறகு மாறி விடுகிறது, பொருளை தூக்கி எறிகிறது, எறிகின்றது பொருளாய் இருக்கையில், பணம் மட்டுமே விரயம், அதுவே மனமாய் இருந்துவிட்டால்?

யாரோ ஒருவரின் மனம் காயப்படும், அந்த மனம் காட்டிய வழியில் அந்த ஒருவரின் வாழ்க்கை பயணமோ, அல்லது முடிவோ மாற்றி எழுதப்படுகிறது!

பாதை அமைக்கும், பயணம் மாற்றும் மனது!
----------------------------------------------------------------------------------------------------------
தூக்கி எறியும் எல்லா பொருட்களும் உடைவதில்லை, கண்ணாடி உடையும், உருத்தெரியாமல் அழியும், இரும்பிலும் துருபிடிக்கும்...சில நாணல்கள் வளைந்து வாழ்கையை தொடரும்! அதுபோலவே மனிதர்கள், உடலளவில் எக்கு போன்றவரும் ஒரு வார்த்தை தாங்காமல் உருகி வீணாவார், சில கண்ணாடி இதயங்கள் தங்காமால் நொறுங்கி போகும், காலத்தின் கட்டயத்தால் சில மனங்கள், தன்னை வளைத்து, சுயத்தை தொலைத்து இயந்திரமாய் மாறிப்போகும்!

ஆக்கவும் அழிக்கவும் வல்லது மனது!
----------------------------------------------------------------------------------------------------------

உங்களின் ஐந்து, அல்லது பத்து வயது பெண் குழந்தையை, யாரோ ஒருவர் கடத்திச் சென்றால், அவரிடம் சென்று, பணத்தையும் தந்து, என் குழந்தையையும் பார்த்து கொள்ளுங்கள், பாப்பா, கடத்தியவரின் மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லும் தந்தையோ தாயோ இங்குண்டா? என்னை பொறுத்தவரையில் "உண்டு"....நீ என்ன பைத்தியமா, என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது!

இந்த நிகழ்வில் உங்கள் மனம் குழந்தை என்றே பதறும்...சற்றே முன்னோக்கி வாருங்கள்...இப்போது உங்கள் பெண் குழந்தைக்கு இருபது வயது கடந்துவிட்டது, அந்த குழந்தைக்கு எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், மாப்பிள்ளை தேடும் போது, எல்லாவற்றையும் ஆராயும் நீங்கள், முன்னே பின்னே ஆனால் என்ன, கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ, வரதட்சணை கொடுத்து திருமணம் முடிந்தால் போதும் என்று ஆசுவாசப்படுகிறீர்கள்...பிறகு கேட்கும் போதெல்லாம் தருகிறீர்கள், எத்தனை கொடுமை கண்டாலும், பொறுத்து போம்மா என்று சொல்கிறீர்கள், ஒருநாள் அந்த பெண் எதுவும் தாங்காமல், இறந்து போகிறாள், அப்போது ஓலமிட்டு, ஒப்பாரி வைக்கும் பெற்றோர் நீங்கள் என்றால், ஒரு ஐந்து வயது பெண் குழந்தையை பணத்தோடு கொள்ளைகாரனிடம் கொடுக்கும் பெற்றோரும் நீங்கள்தான்....

சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது மனது!   
------------------------------------------------------------------------------------
திருமணம் ஒன்றே வாழ்க்கை என்று பெண்ணின் மனம் நினைப்பதற்கும், கொடுமைகளை சகிக்க வேண்டும் என்று பதப்பட்டதற்கும் யார் காரணம்? வரதட்சணையாய் தரும் பணத்தை அந்த பெண் தன் முன்னேற்றத்திற்காய் பயன்படாமால் தடுத்தது எது?  

அது மனம்......., யாரோ ஒருவரின் மனம்! தான் நம்பியதை பிறர் நம்ப செய்கிறது, சமுக நம்பிக்கையாய் வளர்க்கிறது, நம்ப மறுக்கும் மனதைக் கொல்கிறது, பிறகு அங்கே வேறு புரட்சி வெடிக்கிறது...புதிதாய் ஒரு நம்பிக்கை....புதிதாய் ஒரு சமூகம்...இது ஒரு சக்கரம், முடிவேயில்லாதது!  

சமூக மாற்றம் கொண்டுவருவதும் மனதுதான்!
----------------------------------------------------------------------------------
மனித வாழ்க்கை நிச்சயமற்றது, நீங்கள் தேக்கி வைக்கும் செல்வம் நாளை தலைமுறைக்கு உதவலாம், ஆனால் தேக்காமல் நீங்கள் காட்டும் அன்பு, அதற்கான மனது இந்த தலைமுறையை வாழ வைக்கும், அது வீட்டிலோ, வெளியிலோ!

நம்பிக்கை கொண்ட மனது, நல்ல வார்த்தைகளை சொல்கிறது, நல்ல வார்த்தைகளை கேட்கும் மனது நம்பிக்கை கொள்கிறது!
ஏதோ ஒரு அவசரத்தில், ஏதோ ஒரு கோபத்தில், தன்வசம் இழக்கும் மனது, நொடியில் இறுக்கமான வார்த்தைகளை உமிழ்கிறது, அதை கேட்கவோ, கடக்கவோ நேர்கையில் ஒரு மனது நம்பிக்கை இழக்கிறது, ஏதோ ஒன்று முறிந்து போகிறது!

இந்த அளப்பரிய சக்தி கொண்ட மனம், நமக்காக மட்டுமில்லை அது பிறருக்காகவும்தான்!

நல்ல எண்ணங்கள் சூழ்ந்தது நல்ல மனம், நல்ல மனம் சூழ்ந்தது நல்ல குடும்பம், நல்ல குடும்பம் சூழ்ந்தது நல்ல சமுதாயம்.....அந்த சமுதாயம் வளர்த்தெடுக்கும் நல்ல மனங்களை!

நம் மனம் நல்ல மனமாய் அமைந்து மணம் வீசட்டும்!

வெள்ளத்தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிருப்ப காய்கவர்ந்தற்று! 
-------------------------

போர்க்களம்


ஒரு வலியில் பிறந்தோம் 
ஒரு வலியில் எழுந்தோம்
ஒரு வலியில் விழுந்தோம்
வலி தாங்கினால் வழி ஒரு பாடம்
வலி தாக்கினால் நாம் ஒரு பாடம்
எப்படியோ ஒரு பாடம்
யாருக்கு வலித்தால் என்ன?

வழிமுழுதும் அந்த வலியோ,
வலிகடக்கவும் எந்த வழியோ?

உன் வலி கடந்து வழி அமைத்துத் தா
நாளை அவர்கள் நிம்மதியாய் கடக்கட்டும்
தானாய் ஒரு பூ உன் கல்லறையில் பூக்கட்டும்!

Monday 19 November 2012

Gist

When you are ill treated, belittled and taken for granted, then better remain in silence and move away, bcoz true love and care will understand the pain of silence rather than words! If there is no realisation, then realise that you are blind folded all these while! :-)

பிறாக்காதவர்களும், இறந்துவிட்டவர்களும் மட்டுமே நிம்மதி கொண்டவர்கள்! அடுத்து பிறப்பதற்கோ, அல்லது வாழ்ந்து முடிப்பதற்கோ போராடுபவர்களே இடையில் வாழ்பவர்கள்!

If you are cursed to be alone and to fail, don't expect any savior to enlighten and show the glory, rather learn to struggle, endure until you die! Whether you win or lose, ensure you give a tough fight!

Life is all the more speculative and calculative now a days! You can be in solace only when ur heart sans expectations!

Every moment gone, every word expressed, every heart that was stabbed would never come again and never you could gain and never you could fill those bruises with anything but to leave them and see them as scars for ever! Prevention is better than cure, love is better than hatred!    

பெண் கல்வி

பெரும்பாலான பெண்கள், பள்ளி வந்து ஆசிரியரை பார்க்கும் போது, அவர் ஏதேனும் குறை சொன்னால், அங்கேயே குழந்தையை துணி துவைப்பது போல் அடிப்பதும், ஏதோ செய்ய கூடாத குற்றத்தை, தானும் தன் குழந்தையும் செய்து விட்டது போல பயப்படுவதும் வேதனை தருகின்றன!

பள்ளி கல்வி முறை பெற்றோருக்கும் ஒரு சுமையாகி விட்டதா, இல்லை இந்த பெண்களுக்கு வெறும் ஏட்டு கல்வி மட்டும் பழகி போனதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை!
 
சாலை கடப்பது முதல், குழந்தை வளர்ப்பது வரை, சரியான வழிகாட்டுதலை எந்த அரைகுறை கல்வியும், சமூகமும் பெண்களுக்கு தந்துவிடுவதில்லை.....பல பெண்கள் இன்றும் பட்டுப்புடவையும், தங்க நகைகளும், வரிசையாய் பிள்ளை பெறுவதுமே வாழ்க்கை என்று வாழ்கின்றனர், இதை விட குழந்தை கல்வி மந்திரத்தால் மாங்காய் பறிப்பது போன்று, தடியேடுத்தால் தானாய் நடந்து விடும் என்று நினைப்பதும் மாற வேண்டும்!

அடித்து அடித்து ஒரு ஏழு வயது குழந்தையை மனநிலை சிதைத்து, இருபது ஐந்து வயதில் அவன் காணாமால் போக செய்தார்கள், தினம் தினம் மனம் புழுங்கி அவனை இன்றும் தேடுகிறார்கள்!

என் மாமனையே நான் கட்டிக்கிட்டேன், குழந்தை மனவளர்ச்சி சரியில்லை, இதோட மல்லு கட்டுறேதே எனக்கு தலைவேதனையா போச்சு என்று அழும் பெண்கள் கூட அடுத்தடுத்து பிள்ளை பெறுவதிலும் சளைக்கவில்லை..........

ஆண்களை விட குழந்தையின் வளர்ப்பில் ஒரு பெண்ணின் பங்கு மிக பெரிது, அதற்கான சரியான கல்வி முறையும், மனப்பாங்கும் எல்லா பெண்களுக்கும் வேண்டும்!

உணவு படைப்பதை விட என்பது வேலை; சரியான ஊட்டம் நிறைந்த உணவு படைப்பது என்பது அக்கறை! குழந்தை உருவாகுதல் காதலோ, காமமோ; ஆனால் சுமப்பதும், பெறுவதும் ஒரு வரம், வளர்ப்பது ஒரு முக்கிய பொறுப்பு!.................எதுவாயினும் ஒரு பெண் எல்லாவற்றையும் விரும்பி செய்தால்தான் வாழ்க்கையில் சுவை இருக்கும்! அந்த சுவை வேண்டும் என்றால் இங்கே மாற்றம் வேண்டும்!

மாற்றமென்பது, ஒரு பெண்ணிற்கு சிறந்த கல்வியும், எதையும் தானே சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலும், சரிக்கு சரியாக தோழமையுடன் பார்க்கும் மனப்பாங்கும், அவள் துவள்கையில் தாங்கும் கரமுமாக எப்போது ஒரு வீடும், சமுதாயமும் மாறுமோ அப்போது இங்கே எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக உருவெடுப்பார், புதியதாய் ஒரு சமுதாயமும் உருவாகும்!

Wednesday 14 November 2012

வேடம்

தங்கம் தேய்ந்து துரும்பாகும்
இரும்பும் கூட துருவாகும்
பழகா கருத்தும் பாழாகும்
படிக்கா எழுத்தும் வீணாகும்
பகிரா காதல் பிணமாகும்
தாங்கா நட்பு தள்ளாடும்
அன்பிலா உறவும் அனலாகும்

இருப்பதை மறைப்பதால்
இயல்பினை மறுப்பதால்
இழப்பது பலவாகும்

தொலைப்பதை தவிர்
இழக்கும் முன் பகிர்
வாழ்க்கை வளமாகும்!

எண்ணங்கள்


இலகுவாய் ஒரு இறகை
உதிர்த்து சென்றது பறவை
பயணத்தை தொடர்ந்தபடி! 

உதிர்க்கத் தெரியாமல்
சேர்த்து கொண்டிருக்கிறது மனது
எண்ணங்களை வளர்த்தபடி!

Tuesday 13 November 2012

பணம்

கடமை ஆற்றவும் பணம்
கடமை மீறவும் பணம்
எத்தனை வரி கட்டினாலும்
எத்தனை ஊழல் செய்தாலும்
இவர்கள் வறுமை மட்டும்
மாறுவதேயில்லை இந்த
இந்திய திருநாட்டில்!

Saturday 10 November 2012

நிமிட நேர வாழ்க்கை


ஆசையுடன் வரும் பிள்ளைகளுக்கு
நாளைக்கென எதுவும் சேர்க்கவில்லை
இன்று வேண்டிய அன்பைத்
தவறாமால் தந்துவிடுகிறேன்!

தேடி வந்த காகங்களை
போவேனச் சொல்லவில்லை 
இன்று வேண்டிய உணவைத் 
தயங்காமல் தந்துவிடுகிறேன்!

காசுக்காக கை நீட்டியவர்களிடம்
நியாய தர்மம் பேசவில்லை
அவருக்கு வேண்டிய ஒரு ஒற்றைத்தாள் 
மறைக்காமல் தந்துவிடுகிறேன்!

துயரம் கொட்டியத் தோழமைகளிடம் 
தோளில் வலி என்று சொல்லவில்லை
அவருக்கு வேண்டிய நட்பை 
நட்போடு தந்துவிடுகிறேன்!

நாளைக்கென என்னிடம் எதுவுமில்லை
நாளை வரும் என்ற நம்பிக்கையை தவிர!

இன்று மட்டும் காண்கிறேன்
இயன்றவரை வாழ்கிறேன்!


Saturday 3 November 2012

தோழன்/ தோழி


புத்தக வாசிப்பு 
கற்றுத் தந்தது நேசிப்பு 
நேசிப்பு கொண்ட நெஞ்சம்
புத்தகத்திடமே தஞ்சம்!


மன வழிச் சாலை!

http://2.bp.blogspot.com/-Arkn9L4jlOc/T5eGUvQKSAI/AAAAAAAAAGo/Yl5lg5nNlDw/s1600/dark,fog,girl,lonely,mist,photography,rain,sadness,water,woman-0e8de59231e9fcd92e1f73f50856ac17_m.jpg
சாரல் அடித்த தூறல்
ஏன் நின்று போனது?
பெருமழையாய்
நிலம் சேருமோ? - இல்லை
காற்று வழிச் சென்று - பின்
காணாமால் நின்று
பாறை ஏகி ஒழுகுமோ
நிலம் பாலை ஆகுமோ?
ஆற்றுபடுத்தும் ஆற்றல்
நிலத்துக்கு இல்லை
காற்று வழி மாற்ற
மழைக்கும் மனதில்லை!

Thursday 1 November 2012

ஏன் கண்ணீர்?

Heartbreaking sad eyes tears photography7 Heartbreaking sad eyes & tears photography
எனக்கான கஞ்சி
நான் அழுதால் கிடைத்திடுமோ?
சொல் அழுகிறேன்....

எனக்கான நேசம்
நான் அழுதால் வந்திடுமோ?
சொல் அழுகிறேன்...

எனக்கான கனவு
நான் அழுதால் பலித்திடுமோ?
சொல் அழுகிறேன்

கண் வலிப்பதால் அல்ல
கண்ணீர்
மனம் வலிப்பதால் - அது
புரியாதவரிடம்
ஒருபோதும் அழுவதேயில்லை!

அழுதழுது கரைய நான் உப்பில்லை 
ஆழ உறைந்து
வைரமாய் தணன்று
கொண்டிருக்கும்
ஒரு கரித்துண்டு! 

ஒற்றைச் சொல், ஒரு செயல் வாழ்க்கை



ஒரு வரியில் முடிந்து விட்டது
ஒரு வாழ்க்கை
ஒரு வார்த்தையில் முடிந்துவிட்டது
ஒரு நட்பு
ஒரு கேலி பேச்சில் சுருங்கி விட்டது
ஒரு மனம்
ஒரு அலைக் கழிப்பில் விழுந்து விட்டது
ஒரு கனவு
ஒரு கோபத்தில் தொலைந்து விட்டது
ஒரு உயிர்
ஒரு வன்கொடுமையில் கரைந்து விட்டது
ஒரு கற்பு

இருவர் ஒருவராகி - பிறப்பெடுக்கும் 
ஒரு உயிர்....
ஒருவரின் சிறுமைப்பட்ட
ஒரு செயலால்
ஒடுங்கி விடுகிறது...
.... 
வீழ்வதற்குப் பல சொற்கள்
வாழ்வதற்கு இல்லையோ,
ஒரு சொல்????

வீழ்த்துவற்குப் பல காரணம்
வாழ வைப்பதற்கு இல்லையோ,
ஒரு காரணம்????

   



 

நம்பிக்கை




 
இந்த புயலில்
நிகழ்ந்திருக்கின்றன
சில மரணங்கள்
சாலை முழுதும்
நேற்றைய மரங்களின்
சுவடுகள்....

நாளை புதிதாய்
துளிர்க்கும் - மீண்டும்
கிளைப் பரப்பும்!   









வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!