மனம்...இதுதான்
எல்லா உணர்வுக்கும் ஆன சாளரம்!
இந்த மனம் மிக
விசித்திரமானது, உணர்ந்தவர்களுக்கு சக்தி தரும், கடந்தவர்களுக்கு முக்தி தரும்,
அதன் போக்கில் போகும்போது
ஒன்று தெளிவு வரும் இல்லை குழப்பம் வரும்.... ... இதற்கான சக்தியை உணர்ந்தவர்கள்
மட்டுமே அறிந்தவர்கள்!
எனக்கு ஒரு ஆறேழு
வயது இருக்கும் போது, நான் வசித்த தெருவில் வசித்த ஒருவர், எப்போதும் என்னை பார்க்கும் போது மறக்காமல் ஒரு உளப்பூர்வமான புன்னகையை வீசிச்
செல்வார்...அந்த புன்னகையை தவிர அவருக்கும் எனக்குமான பந்தம் எதுவும் இருந்ததில்லை, நான் பள்ளி இறுதியாண்டு படிக்கையில், அவர் போலவே அவர்
மகனும் அதே புன்னகையோடு! எந்த உறவுமில்லாமல், எந்த
வார்த்தையையும் இல்லாமால் பார்க்கும் போதெல்லாம் கொண்ட அந்த மலர்ச்சியையும், புன்னகையையும் வேறு ஒருவரிடம் இதுவரை நான் கண்டதில்லை!
அவர்களை பற்றி
நான் ஏதும் அறிந்ததில்லை, ஆனால் அந்த புன்னகையின் பின்னே இருக்கும் மனம்
மிகவும் அழகாய் தெரிந்தது! இப்போது முகங்கள் நிழலுருவாய்த்தான் தெரிகின்றன, ஆனால் அந்த புன்னகை மட்டும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது!
உயிரூட்டும்
புன்னகை தரும் அழகான மனது!
-----------------------------------------------------------------------------------------------
அழகான மனம்
கொண்டவர்கள் அழகாய் புன்னகைக்கிறார்கள், மனம் முழுக்க
புழுக்கம் இருக்கையில் எந்த புன்னகையும் வருவதில்லை, புன்னகை இல்லாத
உதடுகள் இறுக்கம் அடைகின்றன, இறுக்கம் அடைந்த உதடுகள், மனம் கொண்ட இறுக்கத்தை வெளியே வெறுப்பாக, மனம் நோகும்
வார்த்தைகளாக, சில சமயம் ஒரு உயிர் போக்கும் கொலை
கருவியாகவும் உமிழ்கிறது!
பிடிக்கும் என்று
நாம் நினைக்கும் ஒன்று ஒருநாள் பிடிக்காமல் போகிறது, நமக்கு அதையோ, அவர்களையோ, அல்லது அவர்களுக்கு இதையோ, அல்லது நம்மையோ.....இது ஏன் நிகழ்கிறது?
கண்ணை மூடிக்
கொண்டு நாம் பொருட்களை வாங்கி இருக்கலாம், பிறர் கண்டு
நாமும் அதை கொண்டிருக்கலாம், நம்முடைய தேவை இப்போது மாறி இருக்கலாம், அது நமக்கு பரிசாய் வந்திருக்கலாம், பெரியவர்கள்
நமக்கு அதை தந்திருக்கலாம், அல்லது அதை விட சிறந்தது ஒன்று வந்திருக்கலாம்...எதுவாய்
இருந்தாலும் முதலில் ஏற்று கொண்ட மனது பிறகு மாறி விடுகிறது, பொருளை தூக்கி எறிகிறது, எறிகின்றது பொருளாய் இருக்கையில், பணம் மட்டுமே விரயம், அதுவே மனமாய் இருந்துவிட்டால்?
யாரோ ஒருவரின்
மனம் காயப்படும், அந்த மனம் காட்டிய வழியில் அந்த ஒருவரின்
வாழ்க்கை பயணமோ, அல்லது முடிவோ மாற்றி எழுதப்படுகிறது!
பாதை அமைக்கும், பயணம் மாற்றும் மனது!
----------------------------------------------------------------------------------------------------------
தூக்கி எறியும்
எல்லா பொருட்களும் உடைவதில்லை, கண்ணாடி உடையும், உருத்தெரியாமல்
அழியும், இரும்பிலும் துருபிடிக்கும்...சில நாணல்கள்
வளைந்து வாழ்கையை தொடரும்! அதுபோலவே மனிதர்கள், உடலளவில் எக்கு
போன்றவரும் ஒரு வார்த்தை தாங்காமல் உருகி வீணாவார், சில கண்ணாடி
இதயங்கள் தங்காமால் நொறுங்கி போகும், காலத்தின் கட்டயத்தால்
சில மனங்கள், தன்னை வளைத்து, சுயத்தை தொலைத்து
இயந்திரமாய் மாறிப்போகும்!
ஆக்கவும்
அழிக்கவும் வல்லது மனது!
----------------------------------------------------------------------------------------------------------
உங்களின் ஐந்து, அல்லது பத்து வயது பெண் குழந்தையை, யாரோ ஒருவர்
கடத்திச் சென்றால், அவரிடம் சென்று, பணத்தையும் தந்து, என் குழந்தையையும் பார்த்து கொள்ளுங்கள், பாப்பா, கடத்தியவரின் மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லும் தந்தையோ தாயோ
இங்குண்டா? என்னை பொறுத்தவரையில் "உண்டு"....நீ
என்ன பைத்தியமா, என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது!
இந்த நிகழ்வில்
உங்கள் மனம் குழந்தை என்றே பதறும்...சற்றே முன்னோக்கி வாருங்கள்...இப்போது உங்கள்
பெண் குழந்தைக்கு இருபது வயது கடந்துவிட்டது, அந்த குழந்தைக்கு
எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், மாப்பிள்ளை தேடும் போது, எல்லாவற்றையும் ஆராயும் நீங்கள், முன்னே பின்னே ஆனால் என்ன, கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ, வரதட்சணை கொடுத்து திருமணம் முடிந்தால் போதும் என்று
ஆசுவாசப்படுகிறீர்கள்...பிறகு கேட்கும் போதெல்லாம் தருகிறீர்கள், எத்தனை கொடுமை கண்டாலும், பொறுத்து போம்மா என்று சொல்கிறீர்கள், ஒருநாள் அந்த பெண் எதுவும் தாங்காமல், இறந்து போகிறாள், அப்போது ஓலமிட்டு, ஒப்பாரி வைக்கும் பெற்றோர் நீங்கள் என்றால், ஒரு ஐந்து வயது பெண் குழந்தையை பணத்தோடு கொள்ளைகாரனிடம் கொடுக்கும் பெற்றோரும்
நீங்கள்தான்....
சமூகத்தால்
கட்டமைக்கப்பட்டது மனது!
------------------------------------------------------------------------------------
திருமணம் ஒன்றே
வாழ்க்கை என்று பெண்ணின் மனம் நினைப்பதற்கும், கொடுமைகளை சகிக்க
வேண்டும் என்று பதப்பட்டதற்கும் யார் காரணம்? வரதட்சணையாய்
தரும் பணத்தை அந்த பெண் தன் முன்னேற்றத்திற்காய் பயன்படாமால் தடுத்தது எது?
அது மனம்......., யாரோ ஒருவரின் மனம்! தான் நம்பியதை பிறர் நம்ப செய்கிறது, சமுக நம்பிக்கையாய் வளர்க்கிறது, நம்ப மறுக்கும்
மனதைக் கொல்கிறது, பிறகு அங்கே வேறு புரட்சி வெடிக்கிறது...புதிதாய்
ஒரு நம்பிக்கை....புதிதாய் ஒரு சமூகம்...இது ஒரு சக்கரம், முடிவேயில்லாதது!
சமூக மாற்றம்
கொண்டுவருவதும் மனதுதான்!
----------------------------------------------------------------------------------
மனித வாழ்க்கை
நிச்சயமற்றது, நீங்கள் தேக்கி வைக்கும் செல்வம் நாளை
தலைமுறைக்கு உதவலாம், ஆனால் தேக்காமல் நீங்கள் காட்டும் அன்பு, அதற்கான மனது இந்த தலைமுறையை வாழ வைக்கும், அது வீட்டிலோ, வெளியிலோ!
நம்பிக்கை கொண்ட
மனது, நல்ல வார்த்தைகளை சொல்கிறது, நல்ல வார்த்தைகளை கேட்கும் மனது நம்பிக்கை கொள்கிறது!
ஏதோ ஒரு
அவசரத்தில், ஏதோ ஒரு கோபத்தில், தன்வசம் இழக்கும் மனது, நொடியில் இறுக்கமான வார்த்தைகளை உமிழ்கிறது, அதை கேட்கவோ, கடக்கவோ நேர்கையில் ஒரு மனது நம்பிக்கை
இழக்கிறது, ஏதோ ஒன்று முறிந்து போகிறது!
இந்த அளப்பரிய
சக்தி கொண்ட மனம், நமக்காக மட்டுமில்லை அது பிறருக்காகவும்தான்!
நல்ல எண்ணங்கள்
சூழ்ந்தது நல்ல மனம், நல்ல மனம் சூழ்ந்தது நல்ல குடும்பம், நல்ல குடும்பம் சூழ்ந்தது நல்ல சமுதாயம்.....அந்த சமுதாயம் வளர்த்தெடுக்கும்
நல்ல மனங்களை!
நம் மனம் நல்ல
மனமாய் அமைந்து மணம் வீசட்டும்!
வெள்ளத்தனையது
மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது
உயர்வு
இனிய உளவாக
இன்னாத கூறல்
கனிருப்ப
காய்கவர்ந்தற்று!
-------------------------
No comments:
Post a Comment