Sunday, 27 July 2014

சாதிய வரலாறும் சாக்கடை வார்த்தைகளும்!


பலரது பதிவுகளைப் படிக்கும்போது, சாதி, மத வரலாற்றை எவ்வளவு தூரம் ஆய்வு செய்து இருக்கிறார்கள் என்பது புரிகிறது, சில மேம்போக்காய், சில புனைவுகளுடன், சில அதிப் பயங்கரக் கற்பனைகளுடன்!

அருகில் இருந்து பார்த்தவர்கள் போலவே எழுதுவதைப் படித்தால் நூற்றாண்டுகளைக் கடந்து இங்கே வாழ்பவர்களோ இவர்கள், என்ற சந்தேகம் வருகிறது. வரலாறு நமக்கு மிகவும் முக்கியம், ஆனால் வரைமுறையின்றி வாழ்ந்து மறைந்தவர்களைப் பற்றி இப்போது நீங்கள் தூற்றி என்ன ஆகப்போகிறது?

சாதியினாலும் மதத்தினாலும் நீங்கள் அவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் உங்கள் சாதியை நீங்கள் உங்கள் பெயருக்குப் பின்னால் சுமந்துத் திரிய வேண்டாமே? அல்லது இப்போது உள்ள சாதித் தலைவர்களையும், ஊழல் அரசியல்வாதிகளையும் சாடித் தீர்க்கலாமே?

 மறைந்தவர்களைப் பற்றிப் பேசுவது நமக்கு எளிதாய் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் யாரும் தங்கள் தரப்பு வாதத்தை வைக்க இப்போது எழப் போவதில்லை, குண்டர்களையும், தொண்டர்களையும் அனுப்பி வன்முறையில் ஈடுப்படப் போவதில்லை. சாதிகளும் மதங்களும், மனிதனின் வாழ்வியல் சார்ந்து, தொழில்முறை தொடங்கி, மனிதனின் சுயநலம் பொருத்து வளர்ந்தும் தேய்ந்தும் வந்திருக்கிறது, கடந்து போன சங்கடங்களை, வன்முறைகளை, அறிந்து கொண்டு, நடந்து கொண்டிருக்கும் கயமைகளை நொறுக்குவதே, நாளை சமூகத்திற்கு நல்லதொரு விடியலைத் தரும்.
அதைவிடுத்து, பெயருக்குப் பின்னால் சாதியையும், ஊர் சார்ந்த சாதிப் பாசம் என்று தேடித் தேடி நட்பு பாராட்டுவதையும், தன் சாதிச் செய்யும் தவறுக்கு ஊமையாகவும், பிற சாதிச் செய்தால் பொங்கி எழுந்து கழுவி ஊற்றுவதையும், எந்தச் சாதி என்றாலும் பெண் என்றாலே ஆபாசமாய்ப் பேசுவதையும், நீங்கள் நிறுத்திக் கொண்டாலே சாதிக் கொடுமைகள் கொஞ்சமேனும் ஒழியும்.

உண்மையில் இங்கே பணத்தைத் தாண்டிப் பெரிய சாதியோ, பதவியைத் தாண்டிப் பெரிய மதமோ இருந்துவிடப் போவதில்லை. உங்கள் நிலைத் தாழ்ந்துப் போகும் போது, எந்த வித பிரதி உதவியும் எதிர்பாராமல் எவனொருவனும் அல்லது எவலொருவளும், உங்களுக்கு வந்து உதவிக் கரம் நீட்டபோவதில்லை, அவர் எந்தச் சாதியைச் சேர்ந்தவராய் இருந்தாலும், மதத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும்.


உங்களை நேசிக்கும் ஒருவரோ, நட்புப் பாராட்டும் ஒருவரோ, அல்லது மனிதத்தன்மை கொண்ட ஒருவரோ தான் உங்களுக்கு உதவப் போவது, அப்போது நீங்கள் உங்கள் சாதியிலேயே உறுதியாய் இருந்து உதவியையும் அன்பையும் மறுத்து விட்டால், உண்மையிலேயே நீங்கள்தான் சாதிமான். ஆனால் என்ன செய்வது, பிற சாதியை மறுத்து, மதத்தை மறுத்து நீங்கள் உங்கள் காலைக் கடனைக் கூடக் கழித்து விடமுடியாது, நீங்கள் உபயோகப்படுத்தும் பற்பசையும், சோப்பையும் கூட உங்கள் சாதிதான் தந்தது என்று உங்களால் சொல்லி விட முடியுமா? நிற்க உதாரணங்கள் ஆயிரம் உண்டு சாதி இல்லை என்று சொல்ல, ஆயினும் சாதியப் போராட்டம் தேவையாய் இருக்கிறது பல இடங்களில், மனிதர்களின் அடிப்படை வாழ்வதாரத்துக்காக.

இங்கே சாதி வேண்டுமா வேண்டாமா என்று விவாதிக்க வரவில்லை, ஆனால் சாதிக் கொடுமைகள் தெரிந்துக் கொண்டபின், இனி அவை போன்ற கொடுமைகள் நிகழா வண்ணம் தடுக்க வேண்டும், அதை விடுத்து, உன் பாட்டன் ஒரு புறம்போக்கு, உன் முப்பாட்டன் ஓர் அடிவருடி என்று காழ்ப்புகளில் மூழ்கி வசவுகளில் இறங்கினால், இன்றைக்குச் செய்ய வேண்டியவை நீர்த்துப் போய், நாளை சந்ததிகள் நம்மையும் வசவுகளில்....திட்டித் தீர்க்கும்!

சாதியை மேனியிலும், மொழியிலும் பார்க்காமல், ஆணோ பெண்ணோ, கசப்பை நீக்கிச் சக உயிராய்க் காண்போமே? வரலாற்றைத் தெரிந்து கொண்டு, தூற்றுவதை நிறுத்தி ஆக்கபூர்வமான செயல்களைச் செய்தால், வருங்காலச் சந்ததிக்கு இதுபோல் கழுவி ஊற்றும் வேலையேனும் மிச்சமாகும், நாளை நல்லதொரு விடியலாய் அவர்களுக்கு அமையும்!

ஊழல் என்னும் விஷவாயு!நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் போபால் பேரழிவுக் குறித்த ஆவணப்படத்தைச் சற்றுமுன்புக் காண நேர்ந்தது. இன்னமும் தொடரும் பேரழிவு எச்சங்கள், நீதிக்கான நீண்ட நெடிய முப்பது வருடப்  போராட்டத்தில் அம்மக்களுக்கு இன்னமும் நீதிக்  கிடைக்கவில்லை, எனினும் மந்தையைப் போல் வாழும் இந்திய மக்களுக்கு நீதி என்பது ஆண்டுகள் ஆகியும், தலைமுறைகள் கடந்தும் போராடிப் பெற வேண்டிய ஓர்  அறியப்  பொருள் என்ற ஞானமும், அரசியல்வாதிகளின், கார்ப்போரேட் முதலைகளின் பேராசைகளுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஏற்ற ஓர் ஆய்வுக்கூடம் இந்தியா என்பதும், ஆய்வுக்கூட எலிகள் இந்தியர்கள் என்பதும் ஒரு மாற்றப் படாத விதி என்றாகி விட்டது.

 போபால் பாடத்தில் இருந்து மக்கள் கற்றுக் கொண்டது என்னவோ, ஆனால் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பணம் செய்யலாம் என்று கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எதுவும் நடக்கட்டும், சில நூறுகளையோ, சில ஆயிரங்களையோ, சில கைததடிக்களுக்கும் புல்லுருவிகளுக்கும் இறைத்துவிட்டால் போதும், இந்திய அடிமைகளை, சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், எல்லைகளின் பெயரால், நீரின் பெயரால், மொழியின் பெயரால் பிரித்தே வைத்து ஆளும் சூழ்ச்சியை வெள்ளையரிடம் இருந்து கற்றுக் கொண்டு இன்றும் தொடருகிறார்கள்.

 பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, மார்க்கெட்டைக் கடந்து ஒரு முஸ்லிம் தோழியுடன், அவள் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தோம், விநாயகர் ஊர்வலம் கடந்து கொண்டிருந்தது, என்ன நடந்தது என்று அறியும் முன்பே, அடிடா, வெட்டுடா என்று கூச்சல், கொஞ்ச நேரத்தில் ஏதேதோ காரணம் சொல்லிப் பெரும் மதக்கலவரம், வைத்திருந்த பொட்டு இடம் மாறி, நாங்கள் இருவரும் ஹிந்துவாகவும்,  முஸ்லிமாகவும் மாறி அவரவர் வீடு சேர்ந்தோம்.   அன்றிலிருந்து இன்றுவரை, பிள்ளையார் பாதுகாப்புடன் கடலில் கரைகிறார் ஒவ்வொரு வருடமும். ஏதோ ஒருவன், ஏதோ ஒரு கூட்டம் அன்றைய காலக்கட்டத்தில் எழுதி வைத்த வழிமுறைகளில், அவர்கள் சந்தித்த கயமைகளை மட்டும் படமாய் எடுத்துக் கொண்டு, அவர்களின் செதுக்கி வைத்த பகைமையை, தொடங்கி வைத்த மடமையை, இன்றும் மதமென்றும் சாதி என்றும், இனம் என்றும் கொண்டாடி மகிழும், சண்டையிட்டு மடியும் சமூகத்தை, ஒரு சில வார்த்தைகளில், சில நூறு பணகட்டுகளில் பிரித்தாள்வது இந்தத் தலைவர்களுக்கு எளிதுதானே?

 எதில் ஊழல் இல்லை? எதற்கு நீதிக்  கிடைத்திருக்கிறது? குறைந்தப்பட்சம் கருத்துரிமைக்குக் கூடத் தடை விதித்துச் சட்டம் இயற்றுகிறார்கள், மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல், வேட்டிகளைக் கிழித்துப் போராட்டம் செய்கிறார்கள், மைக்குகளை வீசி அடித்து வேடிக்கைக்  காட்டுகிறார்கள், பல கோடிகள் கொட்டி ராக்கெட் அனுப்பும் திருநாட்டில், மக்கள் பிரச்சனைகளுக்கு, இன்னமும் கடிதம் மட்டுமே அனுப்புகிறார்கள்.......இருப்பினும் தங்களுடைய சம்பளத்தை மட்டும் 24 மணிநேரத்தில் சட்டம் இயற்றி மாற்றி அமைக்கிறார்கள்.

 போபால் தொடங்கி, கூடங்குளம், மீதேன், கெயில், மரபணு மாற்ற விதைகள் வரை இந்தக் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் மக்களின் வாழ்வாதாரம் என்பது ஒரு விளையாட்டாகப் போய் விட்டது, சிறிதுச் சிறிதாய்  இப்படிச் சுரண்டி மண்ணை மலடாக்கி, மனிதனைப்   பகடையாக்கி, சுவிஸ் வங்கியில் மெதுவாய் பணம் சேர்ப்பதற்குப் பதில், எங்களிடம் இருந்து மொத்தமாகவோ குத்தகைக்கோ அடிமைகள் விற்கப்படுவார்கள், அவர்களிடம் நீங்கள் சாதி என்றும் மதம் என்று மட்டும் கூறாமல் இருந்து விட்டீர்களானால், நாங்கள் தரும் அடிமைகள் மிகவும் நல்லவர்கள், அவர்களை நீங்கள் கடைசிச் சொட்டு ரத்தம் சுண்டும் வரை, அவர்களின் உழைப்பை, சில நூறு ரூபாய்களில் சுரண்டிக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்து விடலாம் அல்லது மொத்தமாய் ஆய்வுக் கூட எலிகளாய் விற்றுவிடலாம்.

விஷவாயு இன்னமும் தீரவில்லை !

Tuesday, 22 July 2014

அன்பெனும் கூற்று


நீ கடந்த காலங்களில்
நான் எங்கோ சுற்றித்திரிந்த
மேகம்!

நீ கடக்கும் இப்பொழுதில்
நான் உன் பாதையின்
வழித்தடம்!

நீ கனவுக் காணும்
நாளையில்
நான் உன் விடியலின்
நிதர்சனம்

அன்பெனும் கூற்று
அள்ளித்தரும்
நம்பிக்கை,
சிறகடிக்க,
எவ்வலியிலும்,
எவ்வெளியிலும்!

Friday, 11 July 2014

இலையுதிர் காலம்!

தந்துத் தீர்த்த முத்தங்களின்,
நினைவின் சேமிப்பிலும்,

சேமித்த வார்த்தைகளினூடே
கோர்த்து நின்ற ஏக்கத்திலும்,

ஏங்கி நின்ற விழிகளின்
தேங்கி நின்ற நீரிலும்,

நீராய் நெகிழ்ந்த விரல்களின்
நடுங்கும் பிணைப்பிலும்,

பிணையாய்ச் சிக்குண்ட
இதயத்தின் ஓயாதத் துடிப்பிலும்,

துடியாய்த் துடிக்கும்
உயிரின் ஓசையிலும்,
 
ஓசையின்றிக் கசிந்துருகும்
மௌனத்தின் அழுத்தத்திலும்,

அறிந்திடாத அன்பை - இனி
எதைக் கொண்டு உணர்த்திட?
தீர்ந்துப் கொண்டிருக்கும்
இச்சிறு மெழுகின் ஆயுளுக்குள்?!

தொண்டன்!

 
போட்டிருந்த விளம்பரத் தட்டிகளின்
பலகைகளைக் கொடுத்திருந்தால்
ஒரு சிறு கூரையை அளித்திருக்கும்!

வழியெங்கும் கம்பங்களில் கட்டியிருந்த
கட்சிக் கொடிகளை தந்திருந்தால்,
உடலில் உடையாய் மாறி இருக்கும்!

வெற்றுக் கோஷங்களை அணிந்து
தினம் நீங்கள் வீசும் பாராட்டுகளில்
எங்கள் வயிறு நிறையவில்லை,
இந்த வறுமையும் தீரவில்லை!

அரசாங்கம் என்று நீங்கள் அமைக்கும்
எதிலும் எங்கள் பணி எளிதில்
நடப்பதில்லையே,
மாற்றம் ஒன்றே மாறாதது - அது
ஆட்சியிலேயன்றி - எங்கள்
வாழ்விலேயில்லையே!

கல்வி மறுத்து,
பிச்சையெடுத்து - எங்கள்
அடுத்தத் தலைமுறை
உங்கள் கூலியாய் உயரட்டும்!

யாரின் ஏவலுக்கும் கையை
வெட்டி, நாவை வெட்டி
உடலை எரித்து,
உண்மைத் தொண்டனாய்
மாறட்டும்!
 
நாளை வரும் தேர்தலுக்கு
நீங்கள் பவனி வரும் வீதியில்
அவனும் ஒரு கூலியாய்
தட்டிக் கட்டட்டும்,
கோஷம் இடட்டும் - இல்லை
தெருவொரு கூட்டத்தில்
ஒரு பிச்சையாய் மாறட்டும்!

ஏதோ ஒரு நாளில்,
ஓட்டுக்கு,
நீங்கள் விசும் சில்லரையும்
டாஸ்மாக் வழி வந்து - உங்கள்
கஜானாவையே சேரட்டும்
கறைப்படா
வெள்ளை வேட்டிச் சட்டைகளில்,
சீறி வரும் மகிழுந்துகளில்
உங்கள் பவனி
எப்போதும்போல் தொடரட்டும்!