Sunday 27 July 2014

ஊழல் என்னும் விஷவாயு!



நேஷனல் ஜியாக்ரபிக் சேனலில் போபால் பேரழிவுக் குறித்த ஆவணப்படத்தைச் சற்றுமுன்புக் காண நேர்ந்தது. இன்னமும் தொடரும் பேரழிவு எச்சங்கள், நீதிக்கான நீண்ட நெடிய முப்பது வருடப்  போராட்டத்தில் அம்மக்களுக்கு இன்னமும் நீதிக்  கிடைக்கவில்லை, எனினும் மந்தையைப் போல் வாழும் இந்திய மக்களுக்கு நீதி என்பது ஆண்டுகள் ஆகியும், தலைமுறைகள் கடந்தும் போராடிப் பெற வேண்டிய ஓர்  அறியப்  பொருள் என்ற ஞானமும், அரசியல்வாதிகளின், கார்ப்போரேட் முதலைகளின் பேராசைகளுக்கும், புதிய முயற்சிகளுக்கும் ஏற்ற ஓர் ஆய்வுக்கூடம் இந்தியா என்பதும், ஆய்வுக்கூட எலிகள் இந்தியர்கள் என்பதும் ஒரு மாற்றப் படாத விதி என்றாகி விட்டது.

 போபால் பாடத்தில் இருந்து மக்கள் கற்றுக் கொண்டது என்னவோ, ஆனால் அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பணம் செய்யலாம் என்று கற்றுக் கொண்டிருக்கிறார்கள். எதுவும் நடக்கட்டும், சில நூறுகளையோ, சில ஆயிரங்களையோ, சில கைததடிக்களுக்கும் புல்லுருவிகளுக்கும் இறைத்துவிட்டால் போதும், இந்திய அடிமைகளை, சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், எல்லைகளின் பெயரால், நீரின் பெயரால், மொழியின் பெயரால் பிரித்தே வைத்து ஆளும் சூழ்ச்சியை வெள்ளையரிடம் இருந்து கற்றுக் கொண்டு இன்றும் தொடருகிறார்கள்.

 பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, மார்க்கெட்டைக் கடந்து ஒரு முஸ்லிம் தோழியுடன், அவள் வீட்டிற்கு நடந்து கொண்டிருந்தோம், விநாயகர் ஊர்வலம் கடந்து கொண்டிருந்தது, என்ன நடந்தது என்று அறியும் முன்பே, அடிடா, வெட்டுடா என்று கூச்சல், கொஞ்ச நேரத்தில் ஏதேதோ காரணம் சொல்லிப் பெரும் மதக்கலவரம், வைத்திருந்த பொட்டு இடம் மாறி, நாங்கள் இருவரும் ஹிந்துவாகவும்,  முஸ்லிமாகவும் மாறி அவரவர் வீடு சேர்ந்தோம்.   அன்றிலிருந்து இன்றுவரை, பிள்ளையார் பாதுகாப்புடன் கடலில் கரைகிறார் ஒவ்வொரு வருடமும். ஏதோ ஒருவன், ஏதோ ஒரு கூட்டம் அன்றைய காலக்கட்டத்தில் எழுதி வைத்த வழிமுறைகளில், அவர்கள் சந்தித்த கயமைகளை மட்டும் படமாய் எடுத்துக் கொண்டு, அவர்களின் செதுக்கி வைத்த பகைமையை, தொடங்கி வைத்த மடமையை, இன்றும் மதமென்றும் சாதி என்றும், இனம் என்றும் கொண்டாடி மகிழும், சண்டையிட்டு மடியும் சமூகத்தை, ஒரு சில வார்த்தைகளில், சில நூறு பணகட்டுகளில் பிரித்தாள்வது இந்தத் தலைவர்களுக்கு எளிதுதானே?

 எதில் ஊழல் இல்லை? எதற்கு நீதிக்  கிடைத்திருக்கிறது? குறைந்தப்பட்சம் கருத்துரிமைக்குக் கூடத் தடை விதித்துச் சட்டம் இயற்றுகிறார்கள், மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல், வேட்டிகளைக் கிழித்துப் போராட்டம் செய்கிறார்கள், மைக்குகளை வீசி அடித்து வேடிக்கைக்  காட்டுகிறார்கள், பல கோடிகள் கொட்டி ராக்கெட் அனுப்பும் திருநாட்டில், மக்கள் பிரச்சனைகளுக்கு, இன்னமும் கடிதம் மட்டுமே அனுப்புகிறார்கள்.......இருப்பினும் தங்களுடைய சம்பளத்தை மட்டும் 24 மணிநேரத்தில் சட்டம் இயற்றி மாற்றி அமைக்கிறார்கள்.

 போபால் தொடங்கி, கூடங்குளம், மீதேன், கெயில், மரபணு மாற்ற விதைகள் வரை இந்தக் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் மக்களின் வாழ்வாதாரம் என்பது ஒரு விளையாட்டாகப் போய் விட்டது, சிறிதுச் சிறிதாய்  இப்படிச் சுரண்டி மண்ணை மலடாக்கி, மனிதனைப்   பகடையாக்கி, சுவிஸ் வங்கியில் மெதுவாய் பணம் சேர்ப்பதற்குப் பதில், எங்களிடம் இருந்து மொத்தமாகவோ குத்தகைக்கோ அடிமைகள் விற்கப்படுவார்கள், அவர்களிடம் நீங்கள் சாதி என்றும் மதம் என்று மட்டும் கூறாமல் இருந்து விட்டீர்களானால், நாங்கள் தரும் அடிமைகள் மிகவும் நல்லவர்கள், அவர்களை நீங்கள் கடைசிச் சொட்டு ரத்தம் சுண்டும் வரை, அவர்களின் உழைப்பை, சில நூறு ரூபாய்களில் சுரண்டிக் கொள்ளலாம் என்று அறிவிப்புச் செய்து விடலாம் அல்லது மொத்தமாய் ஆய்வுக் கூட எலிகளாய் விற்றுவிடலாம்.

விஷவாயு இன்னமும் தீரவில்லை !

1 comment:

  1. ஆமாங்க விஷவாயு இன்னம் தீரவில்லை... இன்னமும் நாம் அடிமைகள்தான்

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!