Tuesday, 30 July 2013

நிழலற்ற அன்பு


வளர்ந்தவர்கள் குழுமி இருந்தார்கள்
குணம், நிறம், இனம், மனம் என்று
ஏதேதோ காரணிகளை நிரப்பி
சிறு குழுக்களாய் சிதறி இருந்தார்கள்

தாய் தொடர மழலையொன்று,
மலர்ந்த முகம் கொண்டு  உள்ளே வந்தது
அன்பெனும் புயல் கொண்டு
பல அற்பக் காரணிகளை - ஓர் சின்னச் 
சிரிப்பினால் சிதறடித்து சிட்டாய்ப் பறந்தது!

Monday, 29 July 2013

யாசிப்பு

மரங்களை வெட்டினோம்
மழைக் குறைந்தது
மனங்களை காயப்படுத்தினோம்
அன்பு தொலைந்தது
இன்று பொட்டல் காடுகளில்
வ(யா)சிக்கிறோம்!

GIST

பிறர் புரிந்து கொள்ளாத உணர்வுகளை, உங்களுக்குள் புதைத்துக்கொள்ளுதல் நலம்!

விட்டில் பூச்சிகளைப் போன்ற வாழ்க்கையில் உனதென்ன, எனதென்ன?

-------------------------------------------------
சாதி, மத, இன உணர்வு ஜெயிக்கும் இடத்தில், அன்பு தோற்கிறது, அன்பு தோற்கும் இடத்தில் குழப்பம் விளைகிறது, குழம்பிய குட்டையில், மனித நேயம் மடிகிறது!
---------------------------------------------------------
காயப்பட்டவருக்கு மட்டுமே காயம் ஏற்படுத்திய வலி புரியும், காயம் தந்தவர்களுக்கு அது ஒரு மன்னிப்பில் ஆறி விடக் கூடிய ஒரு சிறு புண் மட்டுமே!

# வலி உணராமல் கேட்கும் மன்னிப்பு, கேட்பவருக்கு நிம்மதியையும், அளிப்பவருக்கு பெரும் வலியையுமே அளித்திடும்!

------------------------------------------------------------------
வாழும் போது ஒருவரிடம் காட்டாத பரிவை, அவர் போனபின் அழுது புரண்டு ஊர் மெச்ச ஒப்பாரி வைக்கிறோம்!
------------------------------------------------------------
அடிமைகளுக்கு உணர்வு வந்தால்
ஆள்பவருக்கு அறிவு வரும்

-----------------------------------------------------------------------------
கடைநிலை பணியில் கூட, வயது உச்சவரம்பு வைத்து, பெரியவர்களுக்கு ஒய்வு கொடுத்து மதிக்கும் சட்ட அமைப்பும், பண்பும் கொண்ட நாட்டில்............,, நிர்வாகத்தை கவனித்து, குடிமக்களை காத்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் பல்வேறு நாற்காலிகளை மட்டும் இன்னமும் கொள்ளு தாத்தாக்களுக்கும், பாட்டிகளுக்கும் மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறோம்!

# உழைத்து உழைத்து சோர்ந்து (சேர்த்து) கொண்டிருக்கிறது முதிய தலைமுறை! 

---------------------------------------------------------------------------
Being yourself is the greatest beauty of yours and the freedom of which is adorable as long as it doesn't interrupts or hurts others' emotions!
# You are born to live but not to burn others!

------------------------------------------------------------------------------------
எந்த ஆணுக்கும் பெண்ணின் அறிவுரை பிடித்தமானது இல்லை, அவர்கள் எதையும் அனுபவித்தே அறிந்துகொள்ள விரும்புகிறார்கள்! பட்டபின்பு அந்தச் சுமை குறைக்க அல்லது தாங்கிட மறுபடியும் பெண்ணைத்தான் தேடுகிறார்கள் அல்லது அந்தப் பெண்ணையே காரணமாக்குகிறார்கள்!
----------------------------------------------------------------------------------------

நம்மை நாமே தள்ளி நின்று விமர்சித்துக் கொண்டால், நமக்கு நிகழ்வது எல்லாம் ஒரு நிகழ்வாய் மட்டுமே தோன்றும்!
--------------------------------------------------------------------------        

Life Stream

ஒரு பள்ளித் தோழி, செல்வத்திற்கு குறையில்லை, தன் பெயருக்குப் பின்னே பல பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் கனவு அவளுக்கு இருந்தது. வாழ்க்கையின் மிக நெருக்கடியான ஒரு சிரமத்தசையில், இழுத்துப் பிடித்து என் பள்ளிப்படிப்பு தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், "நீயெல்லாம், எப்படி மேலே படிக்கப்போறியோ தெரியலை..................", என்று என் வறுமையையையும், "இந்த நிலைமையிலும் அப்படி என்ன பரோபகரா ...................... வேண்டி இருக்கு", என்று என் குணத்தையும் அவள் கிண்டல் செய்ய தவறியதேயில்லை.

எந்த கிண்டலுக்கும் நான் உணர்ச்சி வசப்பட்டதேயில்லை, அப்போதைய தேவை படிப்பு, "செருப்பில்லையே என்று வருத்தப்படுவதை விட, கால் இருக்கிறதே", என்று சந்தோசப்படு என்று என் தந்தை சொன்னதை நினைவுப்படுத்தி கொள்வேன், எப்போதும் வெறுமனே ஒரு சிரிப்பு மட்டுமே என் பதிலாய் இருக்கும்.

பல வருடங்களுக்கு பிறகு, அவளை இன்று, ஓர் இடத்தில் எதிர்பாரா அதிசயமாக சந்திக்க நேர்ந்தது! நெடுநாட்களுக்கு பிறகான ஒரு இனிமையான உரையாடலில், ஒரு இளங்கலை பட்டத்திற்குப் பின், அவள் கல்விக் கனவு சாத்தியமாகவில்லை என்று தெரிந்தது, திருமணதிற்கு பின் ஒரு இயல்பான சோம்பேறித்தனத்தை அதற்கான காரணமாய் பகிர்ந்தாள்! என்னை பற்றிக் கேட்க, இன்று வரை படித்ததை பகிர, தவறாய் ஏதும் தோன்றிவிட கூடாது, என்ற ஒரு சிறு கூச்சத்தில், பகிர்ந்த போது, ஒரு சில நொடிகள் ஒரு கனத்த மௌனம் நிலவியது. சில நிமிடங்களுக்கு பின் சொன்னாள், "யாருக்கு எது நடக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்", ஒன்றும் பதில் சொல்லாமல் இப்போதும் ஒரு புன்னகையை மட்டுமே தர முடிந்தது, அவள் கரங்களை நட்புடன் அழுந்தப் பற்றி!

# ஏனோ தோன்றியது, குறிக்கோள் தெளிவாய் இருந்து, மனதில் உறுதியும், உடலில் சுறுசுறுப்பும் இருந்தால், வெற்றிக்கு வேண்டிய மற்றவை, வேண்டாமல் தானாய் வரும்! பணம் மட்டுமே பாதை காட்டாது! நம்பிக்கை தான் கடவுள்!

Wednesday, 17 July 2013

உயிர்ச் சிறகு

 
ஒரு கணத்தில்
ஒரு கனம் உருவாகி - சிறு
உயிர்ச் சிறகு உதிர்ந்து போக
தொடரும்  கணங்களில் - ஓர்
மனம் பெரும் கனம் சுமக்கும்!

வெளிச்ச உண்மை!


பாரம்

பண்டமாற்று முறை போய்
பணமாற்று முறை வந்தபின்
மக்கள் மனமாற்றம் அடைந்து,
காகிதத்தின் பாரம் தாங்காமல்
கவலையில் மூழ்கிக் கொண்டிருக்கின்றனர்!

அப்பாவிற்கு பின்............gist

அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு...........
அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்!

-------------------------

சாதாரண மனிதன், அசாதாரண மனிதன் ஆகிவிடுகிறான் அரசாங்க வேலை கிடைத்தவுடன்.........

ஓட்டு மூலம் ஆட்சி மாற்றம் செய்யும் அசாதாரண குடிமகன், சாதாரண மனிதன் ஆகிவிடுகிறான், அரசு அலுவலகங்களில்!


-----------------------------
அப்பாக்களால் மட்டுமே மகள்களை மன்னிக்க முடியும்! அம்மாக்களால் மட்டுமே மகன்களை அரவணைக்க முடியும்!
-----------------------------
குடித்து விட்டு, பிரேக் இல்லாமல், பந்தயம் வைத்து, லைசன்ஸ் இல்லாமல், வரைமுறை இல்லாமல், கண்டபடி வாகனம் ஓட்டி, மக்கள் உயிர் எடுக்கும் நல்லவர்கள் பலர் இருப்பதால் தான் என்னவோ, மாண்புமிகு மந்திரிகள் வலம் வருகையில், பாதுகாப்பு கருதி, மக்கள் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன?

# ரியர் வியு கண்ணாடிகள் கூட தலைக்கேசம் சரிப்படுத்த மட்டுமே!


----------------------------------
பணக்கார அல்லது பாசக்கார அப்பாக்கள், விலை உயர்ந்த கார்களை, இரு சக்கர வாகனங்களை, பதினெட்டு வயது நிரம்பாத தன் பிள்ளைகளுக்கு பரிசளித்து, அவர்கள் பந்தயம் வைத்து வேகத்தில் துரத்தி, பிற உயிர்களுடன் விளையாட............

அப்பாக்கள் பிள்ளைகளின் குற்றங்களுக்கு வாரி இறைக்க, அயராது பணம் துரத்திக் கொண்டு இருக்கிறார்கள்!

குருதி மழையில், இடைத் தரகர்களின் காட்டில் பணமழை!
 
 
 

நான்

எல்லாம் கடந்து கடந்து
செல்லும் மனிதனால்
தன்னை கடந்துச் செல்ல
மட்டும் முடிவதில்லை
எப்போதும்!

இருப்பதின் அருமை!

கால்கள் துவளும் வரை
தூரம் அறிவதில்லை
பிரிவு நேரும் வரை
வெறுமை உணர்வதில்லை!
இழப்பு நேரும்வரை
இருப்பவ(ற்)றின்/ரின் அருமை புரிவதில்லை!

வானமே எல்லை

வருவேன் என்ற சொன்ன யாரும் வருவதில்லை
தருவேன் என்று சொன்ன எதையும் தருவதில்லை
வானமே எல்லை வாக்குறுதிகளுக்கு
ஒவ்வொரு பொழுதும் விடிகையில்!

Wednesday, 10 July 2013

மக்களாட்சி

  

இது, மற்றுமொரு தகவல்
என சாமான்யர்கள் - வழக்கம்போல்
கடந்துச்செல்ல

உண்மையறிய, தகவல் வேண்டி
மறுபுறம் உணர்வாளர்கள் - விடாது
போராடிக்  கொண்டிருக்க

ஏதோ ஒரு தகவலில்
வன்முறை வெடித்து - பற்றாளர்கள்
சடுதியில், கொலைக்களம் காண

பேரம்  படிந்தால்
ஒரு தகவலில் உயிர் எடுக்க
கொலையாளர்கள்  தினவெடுத்து
காத்திருக்க

மக்களால் மக்களுக்காக
செவ்வன செழித்து நிற்கிறது
"மக்கள் "ஆட்சி!

Picture courtesy:Google


Monday, 8 July 2013

பெற்றோர்களுக்காக சில துளிகள்

பெற்றோர்களுக்காக சில துளிகள்:-

1. அம்மா என்றால் சமையல் செய்பவள், அப்பா என்றால் சம்பாதிப்பவர் என்ற கருத்துக்களை குழந்தைகளின் மனதில் விதைக்காதீர்கள். யார் வேண்டுமானாலும் எந்த வேலையையும் செய்யலாம், உயர்ந்தது, தாழ்ந்தது ஏதுமில்லை என்ற எண்ணங்களை விதையுங்கள்!

2.. எதுவாய் இருந்தாலும் அம்மா மட்டுமே அல்லது அப்பா மட்டுமே, அல்லது வீட்டில் உள்ள பெரியவர் மட்டுமே முடிவு செய்ய வேண்டும் என்று இப்போதே கருத்து சுதந்திரத்தை மறுக்காதீர்கள்!

3. குழந்தைகள் பற்றிய முடிவுகளை, அவர்களிடம் கருத்துக் கேட்டு, அவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுத்து முடிவு செய்யுங்கள். அவர்கள் சொல்லும் கருத்து அல்லது விருப்பம் உங்களுக்கு ஏற்புடையது அல்ல என்றால், அதை ஒரு தோழமையுடன் எடுத்துச் சொல்லுங்கள்! ஒருபோதும் உங்கள் அதிகாரத்தை பிரயோகிக்காதீர்கள்!

4. பகிர்ந்து உண்ணுதல், விலங்குகளிடம் அன்பு செலுத்துதல் போன்ற பழக்கங்களை விதையுங்கள். குழந்தையுடன் செல்கையில் நீங்களே ஒரு நாயையோ, பூனையையோ கல்லெடுத்து விரட்டி, வன்முறையை விதைக்காதீர்கள்! பெரும்பாலும் வீட்டு விலங்குகளுடன் பழகும் குழந்தைகளிடம் அன்பு நிறைந்திருக்கும், வன்முறை குறைந்திருக்கும். (அன்பு நிறைந்திருக்க நீங்கள் இங்கு கூறிய எல்லாவற்றையும் செயல்படுத்த வேண்டும்)

5. அந்த மாமா வந்தால், அப்பா வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ, அந்த கடன்காரன் பேசுறானா போனில், நான் வீட்டில் இல்லை என்று சொல்லு என்றோ இப்போதே பொய் கூற பழக்காதீர்கள்.

6. "நம்ம சாதிக்காரங்க இவங்க"," நம்ம மதத்தை சேர்ந்தவங்க இவங்க" என்ற அறிமுகத்தை விட்டுவிட்டு, உறவுமுறை கொண்டோ, நட்பின் பின்புலம் கொண்டோ அறிமுகம் செய்யுங்கள்.

7.. உங்கள் குழந்தையை, உங்கள் மற்றொரு குழந்தையோ அல்லது வேறு ஒருவரின் குழந்தையோ, அடித்தாலோ, திட்டினாலோ, "திருப்பி திட்டு", "திருப்பி அடி" என்று வன்மம் வளர்க்காதீர்கள்! நாளை இவர்கள்தான் ஆயுதம் எடுப்பார்கள்.

8.. ஏன் அந்த தவறு நடந்தது? இனி இப்படி நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று சம்பந்தப்பட்ட குழந்தைகளிடமே தீர்வு கேளுங்கள்! மெதுவாய் இணக்கமான சூழ்நிலை உருவாகும். நாளை நல்ல சட்ட வல்லுனர்கள் உருவாகலாம்!

9."கத்தாதே சனியனே" என்று நீங்கள் கத்தி கொண்டு இருக்காதீர்கள். மலர்களை கொடிய வார்த்தைகளில் அர்ச்சிக்காதீர்கள்.

10.. பலபேர் முன்னிலையில் ஒருபோதும் உங்கள் குழந்தையை திட்டி, குறை சொல்லி வேதனை படுத்தாதீர்கள். குழந்தைகளுக்கும் சுயகௌரவம் உண்டு, எந்த வயதானாலும்.

11. "அண்ணன் சொல்வது போல நட", "அக்கா சொல்வது போல நட" என்று சொல்லாமல்," நீங்கள் இருவரும் பேசி முடிவு செய்யுங்கள்" என்று சமத்துவம் உருவாக்குங்கள். பெரியவர் முதுகில் சுமையையும், சிறியவர் மனதில் தாழ்வுணர்ச்சியையும் ஏற்படுத்தாதீர்கள்!

12. கூட்ட நெரிசல் மிக்க இடங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்து விடுங்கள்! அழைத்து செல்ல நேர்கையில், பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

13. ஒருபோதும் குழந்தையின் முன்னிலையில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது, அல்லது அதை வாங்கி வர பணிப்பது போன்ற அடாத செயல்களை செய்யாதீர்கள்!

14. குழந்தையின் சில சிறு வயது குறும்புகள், விலங்குகளையோ, பெரியவர்களையோ, சக குழந்தையையோ துன்புறுத்துவதாக அமைந்தால், குழந்தையின் எதிரே அந்த குறும்பை கண்டு சிரித்து, ரசிக்காதீர்கள். உங்கள் சிறு குழந்தை, குறும்பாய் வீட்டில் பாட்டியின் பல்லை உடைத்தாலோ, பூனையின் வாலைத் பிடித்து தூக்கி எறிந்தாலோ, குழந்தைக்கு எவ்வளவு வலிமை, பயமேயில்லை என் குழந்தைக்கு என்று குழந்தையின் எதிரே ரசித்தீர்கள் என்றால், பின்னாளில் வளரும் வன்முறையில் நீங்கள் ரசிப்பதற்கு ஏதும் இருக்காது!

15. உங்களால் செய்யக் கூடிய செயல்களை, தரக் கூடிய பொருள்களை, குழந்தையை அழ வைக்காமல் செய்து விடுங்கள், கொடுத்து விடுங்கள். அடம் பிடிக்க வைத்து, அழ வைத்தபிறகு செய்தால், குழந்தைக்கு அழுவதும், அடம் பிடிப்பதும் மட்டுமே இயல்பாகும்.

16. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர, அதுவே நோய் அல்ல. உடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் பொருட்டு இயற்கையாய் உடலில் ஏற்படும் வெப்பம் அது. குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டால், சிறந்த குழந்தை நல மருத்துவரை கண்டு, எதற்கான காய்ச்சல் என்று கண்டறிந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகளை குறித்த வேளையில், குறித்த இடைவெளியில் மட்டுமே தருக. நாமே மருத்துவர் ஆவதை தவிர்த்தல் நலம்!

17. பலபேர் முன்னிலையில் எப்போதும் குழந்தைகளை குறை கூறுவதோ, அடிப்பதோ, திட்டுவதோ...இது போன்ற எந்த செயல்களையும் செய்யாதீர்கள். உங்களை இதுபோல் பிறர் செய்தால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

18. குழந்தைகள் சின்னஞ்சிறு பெரிய மனிதர்கள், இன்று நீங்கள் விதைப்பதை நாளை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். நல்லன விதைத்தால் நாளை நல்ல சமுதாயம் மலரும்!

19. நல்ல கல்வி, சுய சிந்தனை, கைத்தொழில், சத்துள்ள உணவு, மரியாதை, ஆரோக்கியம் மற்றும் உள்ளார்ந்த அன்பு இவையே எல்லா குழந்தைகளுக்குமான அடிப்படை தேவைகள்! உங்கள் வன்முறை அல்ல!

Wednesday, 3 July 2013

மழை

சொல்ல மறந்த வார்த்தைகளின்
சுமைத் தாளாமல்
மௌனத்தில் மூர்ச்சையானது உடல்
கேட்க மறந்த செய்திகளின்
வீரியம் தாளாமல்
பொங்கி ஆர்பரித்தது  கடல்
பொய்யாய் ஆறுதல் புனையும்
மனிதர்களிடையே - மெய்யாய் வந்து
கண்ணீர் அழித்தது மழை!

Tuesday, 2 July 2013

தனிமை

காலையில் சண்டையிடும் அப்பெண்ணோ
சாலையில் உயிர் வதைத்த இவ்வாகனமோ
வாசலில் மகிழ்ச்சி குவிக்கும் அக்குருவியோ 
சன்னலில் தலை சாய்த்து கரையும் இக்காகமோ
தோளில்  தலைச்சாய்த்துப் புன்னகைத்த அம்மழலையோ
ஆவலில் சந்திக்க விழையும் இவ்வுறவோ
காண்கையில் பதைத்து விலகிய அம்மனமோ
வார்த்தையில் உதவிகள் வரையும் இவ்வுதடுகளோ?..............

காட்சியில் லயித்து - நிதம்
பாடங்கள் பயின்று - சிறிது சிரித்து,
உள்ளுக்குள் இறுகி
சிந்தையில் தெளிந்து,
வெறுமையை வெறித்து ............

ஏதுமற்ற ஓர் தனிமையில்
பல எண்ணச் சிறகுகள்  
மனம் வருடிச் சென்றது
மனித சிற்பம் வடித்தபடி!