Friday, 16 October 2015

ஜீவமரணப் போராட்டம்!

 
வேடனின் கண்ணியில்
தப்பிய மானொன்று
புதைகுழியில் சிக்கியது

பற்றுதலென அது பற்றிய
மந்தாரையில் படர்ந்திருந்த
முறுக்கேறிய முல்லைக்கொடி
பாரத்தில் தள்ளாடியது

வேரோடியிருந்த முல்லையின்
பலத்தில் மானோ
மானை விடுவிக்கும்
போராட்டத்தில் முல்லையோ

விடுதலில் பற்றுதலில்
ஜீவமரணப் போராட்டம்
ஒன்றோயில்லை இரண்டுமோ
பிழைத்தல் யாரென்பது
காலத்தின் கருணையில்
 

Tuesday, 6 October 2015

வன்மம்‬

சொல்லெறிந்து ஏற்படுத்திய
காயத்தின் வலிகளை
உணர்தல் என்பது
கொன்றுப் புசித்த
மாமிசத்திற்கிரங்கி
கண்ணீர் விடுதலேயன்றி
வேறென்ன ?!
நீ எப்போதும் புசித்திட
நான் இப்போதும் புன்னகைக்கிறேன் !

Dress Code/ ‪ஆடை‬


1. குடித்து விட்டு ஆண்கள் திரிகிறார்கள், அவர்களுக்குப் பெண்ணின் உடை காமத்தை தூண்டும்

2. பெண், ஆணின் கண்ணை உறுத்தாமல் உடை அணிய வேண்டும்

3. பெண்ணென்றால் அடக்க ஒடுக்கமாய் இருக்க வேண்டும்

4. ஆண் ஆடையின்றித் திரிவான், பெண்ணால் அப்படித் திரிய முடியுமா?

5. அரைகுறை ஆடையும் கவர்ச்சி, முழுதாய் மறைத்தாலும் எதுவும் கண்ணை உறுத்தக் கூடாது

இப்படியே போகிறது, “ஆடை” பதிவை பகிர்ந்து ஆண்களின் பெண்களின் விமர்சனங்கள், எதையும் அரைகுறையாய்ப் படித்துச் சகட்டுமேனிக்கு விவாதம் செய்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.

பலதரப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பழகுகிறேன், சில நாடுகளுக்குத் தனியே பயணம் செய்திருக்கிறேன், இந்த லெக் கின்ஸ் கூட அணியாமல், ஆடைச் சுதந்திரத்துடன் பெண்களைக் கண்டிருக்கிறேன், அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவர்களின் கண்களைப் பார்த்துப் பேசும் ஆண்களையும் கண்டுக் கடந்திருக்கிறேன், எல்லா ஆண்களுக்கும் பெண்களின் உடை கிளர்ச்சித் தரும் என்ற வாதமே தவறானது!

துவைத்து உலர்த்திய பெண்களின் துணிகளைத் தொட்டுக் கிளர்ச்சியடையும் ஆண்கள் உண்டு என்று மனநலன் பற்றிய ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன், ஆண்களின் கிளர்ச்சி என்பது அவர்களின் வளர்ப்பு முறையை, அவர்களின் தனிப்பட்ட ஒழுக்க மனநலனைச் சார்ந்தது, அது இந்திய சமூகத்தில் பெரும்பாலும் பாழ்பட்டுக் கிடக்கிறது!

1. பலகீனமான சட்டம் பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு எந்தத் தீர்வையும் தரவில்லை,

2. சாராயமே வருமானம் என்ற அரசியல் ஆண்களை மேலும் பலவீனமாக்குகிறது.

3. பெண்களுக்கான அரசியல் வாய்ப்பு இன்னமும் 33 சதவிதம் என்ற அளவைக் கூட எட்டவில்லை,

4. எந்தக் குற்றம் நடந்தாலும் "அவ ஒழுங்கா இருந்திருக்கணும்" என்ற கூற்றிலேயே எல்லாம் முடிந்துவிடுகிறது,

5. அதே பாலியல் குற்றம் குழந்தைகளிடத்திலும் , முதிய பெண்களிடமும் நிகழும்போது இந்தக் காலச்சார ஆண்கள் கூட்டம் பதிலே இல்லாமல் வாயடைத்துப் போகிறது,

6. அப்போதும் குடியையும் வேறு ஏதோ காரணத்தையும் தேடி நியாயம் பேசுகிறது!

தன் பெண் குழந்தையைத் தேவதை என்று கொண்டாடும் தகப்பன்களின் கூற்றில் உண்மை இருக்குமென்றால், அடுத்தவர்களின் குழந்தையை, பெண்ணை அவர்கள் பார்க்கும் பார்வையில் கண்ணியம் இருக்கும்,
தன் தாயை தெய்வமென்று கொண்டாடும் ஆண்களின் கூற்றில் நேர்மை இருக்குமென்றால், அவர்கள் தன் மகன்களுக்குப் பெண்ணை சக மனுஷியாய் பாவிக்கும் மனநிலையை வளர்த்து விடும் முயற்சி இருக்கும்.

பளீரென்ற வர்ணத்தில் உடை உடுத்தினால் கண்ணை உறுத்தும், முழுக்கை சட்டை அணிந்து கால்சராய் அணிந்தாலும் அங்கங்கள் தெரியும், லெக் கின்ஸ் என்பது ஆபாசம், புடவை என்பது கவர்ச்சி, முழுதாய் பர்தா அணிந்து கொள்வது சரியாய் இருக்குமோ ?

பெண்களை விமர்சித்துக் கொள்ளுங்கள், கொஞ்சம் ஆண் குழந்தைகளின் மனநலனையும் கவனியுங்கள், உடலளவில் வலிமையான ஆண்களைச் சாராயப் போதையில் மூழ்கடித்து , அவர்களுக்குப் பெண்களையும் போகப்பொருளாய் மட்டுமே பயிற்றுவித்து, வெறும் சுயலாபத்திற்காகப் பெண்களைப் படம் பிடித்துக் கொண்டே சில பத்திரிக்கைகள் வியாபாரம் நடத்துகிறது, ஊழல்களில் அரசியலும் சீழ்ப்பிடித்துக் கிடக்கிறது! பலம் கொண்ட ஆண்களின் கூட்டம் பெரும்பாலும் இவைகளிலேயே முடங்கிப் போகிறது !

புரிந்து கொள்ளுங்கள், இந்திய மண்ணின் பிரச்சனை பெண்களின் உடையில் இல்லை, அது பலகீனமான ஆண்களின் மனதில் உள்ளது, மோசமான சமூகச் சூழலில் தன் தவறுகளை, குடியை என்று எதையும் பெண்களின் மீது சுமத்தி நியாயப்படுத்தும் ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லைதான்!
தலிபான்களின் உலகில் பெண் என்பவள் மனுஷியே இல்லை, பெண்களே உங்கள் உடைகளைச் சரிசெய்து கொள்ளுங்கள்!


 Despite a clear write up, I could see that men still wants to blame the ladies for everything!
Dress is given as the reason for crime and rape, unfortunately all the children, women of all age who became victims of sexual abuse and violence and murder were actually completely dressed. The so called exposure of skin happens mostly in wide screen and all these men are crazy followers of those cinema celebrities.
In real life, if a woman is not dressed up properly that is not an authorisation for you to neither bully the lady nor rape her. Who the heck are you?
A baby is born naked, elderly at rural areas are without blouses, tribes in some places are without dresses, now it's time to revive that so called 'chastity' in men's eyes than in your search for it in any women's womb!
Those who are glued to your conventional views and still have the grave in your eyes for sexuality, pls get the questions diverted to your women in your respective family!

ஆடை‬

யாரோ ஒரு பெண் சரும நிறத்தில் லெக் கின்ஸ் அணிந்து கொண்டு ரயிலில் பயணம் செய்கிறார், அதை யாரோ ஒருவர் படம் பிடித்துப் பெண்கள் இப்படித்தான் ஆடை அணிவதா என்று பொங்குகிறார், அதையும் பலர் ஷேர் செய்து வழி மொழிகிறார்கள்.

விமர்சனம் செய்பவர்கள் செய்து கொள்ளுங்கள், ஆனால் ஒரு பெண்ணின் சுய விருப்பத்தைப் படம் பிடித்துக் காட்ட நீங்கள் யார்? அந்தப் பெண்ணின் புகைப்படம் எடுத்து அநாகரீகம் என்று கருத்து சொல்லும் கனவான்களுக்கு, அனுமதியில்லாமல் ஒரு பெண்ணை வெளிச்சப்படுத்துவது அநாகரீகம் என்று தெரியவில்லையா?

கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் சகட்டு மேனிக்குப் புகைப்படம் எடுத்து விமர்சிக்கலாமா? இந்தக் கருத்துக் கனவான்கள் எல்லாம் டாஸ்மாக் கடை வாசலில் குடித்து விட்டு நிர்வாணமாய் விழுந்துக் கிடக்கும் ஆடவரை புகைப்படம் எடுத்துக் கலாச்சாரம் சீர்கெடுகிறது என்று ஏன் சொல்ல முடியவில்லை? ஏனெனில் நாளை தாமும் குடிப்போம் என்ற மனக்கலவரமே காரணம்.

எந்தப் பெண்ணின் ஆடை விலகுகிறது, எந்தப் பெண்ணின் உடை சரியில்லை என்று பார்ப்பதை விட்டு விட்டு ,

1. அலங்கோலமாய் விழுந்துக் கிடக்கும் ஆண் குலத்திற்கு ஒரு வேட்டியை வாங்கிக் கொடுங்கள் ,

2. கூட்டமாய் இருக்கும் பேருந்துகளில் முழுதாய் உடை அணிந்து வரும் குழந்தைகளையும் பெண்களையும் உரசும் ஆண்களுக்கு நல்ல சரும நோய் மருத்துவரிடம் காண்பித்து மருந்து வாங்கித் தாருங்கள்,

3. நடு வீதியில் குடித்துவிட்டு, கட்டிய மனைவியை மானபங்கப் படுத்துபவனைக் கொஞ்சம் தட்டிக் கேளுங்கள்.

4. மனநிலை பிறழ்ந்து அல்லது வறுமையில் கிழிந்த ஆடை அணிந்து கொண்டு இருக்கும் பெண்களின் மானம் காக்க ஆடை வாங்கிக் கொடுங்கள்,

5. பயணத்தில் குழந்தைகளுக்கு ஆடை நெகிழ்த்திப் பால் தரும்
தாய்மார்களைக் காணும் போது உங்களுக்குப் பால் கொடுத்த அம்மாவையோ உங்களின் குழந்தைக்குப் பால் தந்த உங்கள் மனைவியையோ நினைத்து, பார்வையில் கண்ணியம் கூட்டுங்கள்

6. முடிந்தால் வீட்டில் வளரும் வருங்காலத் தலைமுறைக்குப் பெண்களோ ஆண்களோ அவர்கள், மனிதர்கள் மட்டுமே போகப் பொருளில்லை என்று சொல்லிக் கொடுங்கள், இடத்திற்குத் தக்க ஆடை அவர்களின் விருப்பம் என்று புரிய வையுங்கள் ...

அதுவரை உங்கள் மனைவியோ, சகோதரியோ, அம்மாவோ, மகளோ முதுகுத் தெரிய ஜாக்கெட் அணிந்தால் , மார்பும், தொப்புளும் தெரிய, சேலை அணிந்தால் , கெண்டைக்கால் தெரிய ஆடை உயர்த்தி, வேலை செய்தால், சொல்லி வையுங்கள் ,

"என்னைப் போல் ஒரு தகப்பனோ, கணவனோ, சகோதரனோ, மகனோ, நண்பனோ, கையில் ஸ்மார்ட் போனுடன் காலச்சாரம் காக்கத் திரிவான் , அவன் உங்களைப் புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் சமூக வலைத் தளத்தில் பதிந்து பல்வேறு நிறம் கூட்டி உங்களை வதை செய்வான் என்று"
புரிந்து கொள்ளுங்கள் யாரோ ஒருவரின் மனைவியை , மகளை , சகோதரியை, அம்மாவை , தோழியை விமர்சிக்க அவர்களின் புகைப்படத்தைப் பகிர உங்களுக்கு உரிமையில்லை!


With all humbleness I would like to say that no girl take pictures of guys who are half naked on streets with shorts in the name of trend or fully naked on streets Bcoz of Tasmac. Boys are grown up with the thought process of vulgarity and sexuality being imposed on girls. What is a proper dress? The views varies in different men's eyes, girl is not a commodity to change their living to the whims and fancies of guys!
Grandmother in villages even in some places don't wear blouses, from a kid to elderly, women are raped despite age, despite dress code.
So what is needed is a code of conduct for guys to treat the other gender with respect and not a dress code for girls!

Monday, 5 October 2015

விளம்பரம்

மரங்களை வெட்டி
 சாலைகளை விரிவுப்படுத்தி
 தட்டிகளும் பலகைகளும்
 அமைத்து -
 தட்டிகளுக்குள் ஆள்பவர்
 உருவம் வரைந்து
 அவைகளையும் பாதைகளையும்
 பச்சை நிறத்தில் முக்கியெடுத்து
 பசுமைத்தமிழகம்
 மலர்ந்துவிட்டதாய் விளம்பரம்
 செய்தனர்

 உழைக்கும் வர்க்கத்தின்
 ஒவ்வொரு துளி வேர்வையையும்
 சாராயத்தில் சுரண்டியெடுத்து
 அவன் குடும்பத்திற்கு
 மலிவான இலவசங்களை அளித்து
 பூனைகள் குடிப்புகுந்த அடுப்புக்களுக்கு
 மாற்றாய் மலிவு விலை உணவு தந்து
 வள்ளல் ஆகியதாய் விளம்பரம் செய்தனர்

 கல்விக் கூடங்கள் மூடி
 குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கி,  
 மனிதவளம் பெருக்கியதாய்
 கனிம வளங்களைச் சுரண்டி
 நீரின்றி விவசாயம் சாக
 இலவச இணையத் தொடர்பை
 நல்கி
 வேளாண் வளம் சிறந்ததாய்
 ஆளுக்கொரு தொலைகாட்சியில்
 அரசு புகழ் பாடி
 விளம்பரம் செய்தனர்

 ஓட்டுக்காக மக்கள்முன்பு வந்து
 பிறகு நாட்டை விட்டே பறந்துபோன
 ஒரு கிளி -
 கோடிகளைச் சிதறவிட்டுச் செலவு செய்து
 தெருக்கோடியில் இருக்கும்
 மக்களுக்கு
 ஒவ்வொரு முறையும் கொண்டு வருவது
 வெளிநாட்டு முதலீடென
 சளைக்காமல் விளம்பரம் செய்தனர்

 கங்கையாற்றைச் சாக்கடையாக்கி
 வெளிநாட்டு விஷபானங்களுக்கு
 சிவப்புக் கம்பள வரவேற்பளித்து
 பிளாஸ்டிக் வாணிபத்தைப் பெருக்கி
 கையில் ஒரு துடைப்பத்தோடு
 இந்தியாவைச் சுத்தப்படுத்த
 கோரிக்கை வைத்து
 அழகாய் விளம்பரம் செய்தனர்

 ஊழல்வாதிகளின் மத்தியில்
 திண்டாடிக் கொண்டிருக்கும்
 மக்களின் மனவளத்திற்கும்
 உடல்நலத்திற்கும் சிறந்ததென்று
 உள்நாட்டு யோகக்கலைக்கு
 சீனத்துப் பாய்களில் படுத்துக்கொண்டு
 ஒருநாள் விளம்பரம் செய்தனர்

 மந்தைகளாக மாறிக் கொண்டிருக்கும்
 குடிமகன்களில்
 நீதிக்காகப் போராடுபவனை
 வன்முறையாளனென்றும்
 அடக்கு முறையை எதிர்ப்பவளை
 நடத்தை
 பிறழ்ந்தவ ளென்றும்
 தனித்துப் போராடுபவர்களை
 விளம்பரப் விரும்பிகளென்றும்
 நாட்டில் நடப்பது நல்லாட்சி யென்றும்
 நாள்தோறும் விளம்பரம் செய்தனர்

 முற்றிலுமாய் நனைந்திடல்
 வேண்டும்
 வெள்ளமாய் மழைப் பொழிகிறது
 எனும் விளம்பரத்திற்காக 
 காத்திருக்கும் நான், 
 ஒரு
 இந்தியாவின் மகள்!நன்றி அகல்!
http://www.pratilipi.com/read?id=5928333632077824