Friday, 29 May 2015

வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவள்!


 ஆற்றின் ஓரத்தில் அவ்வப்போது
 மனிதர்கள் கல்லெறிந்துச்  சென்றார்கள்
 இருட்டின்  மூலையில் புதரின்
 மறைவில் ஒடுங்கிருந்த என்னை,
 அவன் கண்டிருக்க வாய்ப்பில்லை,
 எத்தனை வெறுப்போ எத்தனை வன்மமோ
 அத்தனை வார்த்தைகளையும் கற்களாக்கி
 அந்த ஆற்றின் மீதே அவனும் காய்ந்து கொண்டிருந்தான்
 ஆறு சேறாக மாறிக்கொண்டிருந்தது!

 ஆறு ஆறு என நீராக ஓடிக்கொண்டிருந்தை
 கல்லெறிந்து  கலக்கி சேறு சேறு என
 இகழ்ந்து கொண்டிருந்தான் அவனும்,
அந்த வார்த்தைகளை நான் கேட்டிருக்கிறேன் 
அந்த அவமானத்தை இதற்கு முன் கடந்திருக்கிறேன்,
எங்கோ எவளோ என்னைப் போல ஏதோ
ஓர்  ஆற்றின் குறுக்கே பாய்ந்திருக்கலாம்
ஏதோ ஒரு தண்டவாளத்தைக் கடந்திருக்கலாம்
ஒரு நாளின் இருபத்து மணி நான்கு நேரத்தில்
வயிற்றுக்கு ஈயாத ஓர்  ஒலி மரண ஓலமாய்
செவிகளை அறைகிறது - அதைவிட
நாராசமாய் அவன் வார்த்தைகள் இதயத்தை
கிழிக்கிறது - கல்லெறிந்து ஆற்றை
கலக்கிக்  கொண்டிருக்கும் அவன் யாகம்
தீரப்போவதில்லை - மனிதர்களும் 
கற்களோடு 
வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

ஏனோ ஆறாய் சேறாய் நீராய்
மாறிக்கொண்டிருக்கும் ஆற்றை
அந்த இருட்டின்
மூலையில் இருந்தே  உற்றுப்பார்க்கிறேன்,
ஆற்றுவாரின்றி ஆறும் - தேற்றுவாரின்றி நானும்!

பெண்ணுக்குப்  பெண்ணே துணையென
ஆற்றின் நிலை பொட்டில் அறைய,
மேலெங்கும் சேற்றை இறைத்த
வார்த்தைகளின் வறுமையைப் 
பொறுத்துக்கொண்டு,
ஆற்றைச் சலனப்படுத்த விரும்பாமல்
ஒற்றையடிப்  பாதையில் நீராய்ப் பாய்கிறேன்,
விதைகளைச் செழிப்பாக்கிப்  பின்
ஒருநாள் கடலில் கலந்துவிடும்
விதிப்பயணத்தின் வழியில்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு! 

Wednesday, 27 May 2015

நின்ற மரம்

கல் தடுக்கி விழுந்தபோது
கண்டுகொள்வாரில்லை
கனவுகள் கலைந்தபோது 
நீயோ நிழலோ உடனிருந்ததில்லை
அவ்வப்போது நிறைந்த வலியில்
நின்று விடும் என்ற பயத்தில்
பேரிரைச்சலாய் எழும்பிய 
இதயத்தின் ஒலிக்கும் 
எதிர்திசையின் எந்த எதிரொலியுமில்லை,
வழியும் இது குருதியோ வியர்வையோவென,
களைப்பின் மயக்கத்தில்,
பற்றிச் சாய்ந்ததோ  ஒரு மாமரத்தடி,
பூத்து  உதிர்த்து காய்க்கும் மும்முரத்திலும்
மெலிதாய் வீசிய காற்றின் வழி 
பூக்கள் தூவி இமைகள் வருடி
இதம் தந்தது, நீண்டிருந்த அம்மரம்,
நின்ற மரமாய் நின்றிருந்த
மனிதர்களுக்கிடையே!

Tuesday, 19 May 2015

மரண அறிவிப்பு!

 
அது
அவளுக்கோ இல்லை அவனுக்கோ?
எப்போது நிகழ்ந்ததென்று தெரியவில்லை!

அம்மா பால் மறுத்த பொழுதா,
தொட்டிலில் ஆதரவற்றுக்  கிடத்திய பொழுதா,
பள்ளி என்பது கனவாகிய பொழுதா,
வேலை இல்லாத  வறுமையின் பொழுதா,
காதல் தோல்வியுற்றப்  பொழுதா,
கடன் கழுத்தை நெரித்த பொழுதா,
அந்தத் துரோகத்தின் பொழுதா,
என்றோ நேர்கொண்ட வன்முறையின் பொழுதா,
அவ்வப்போது சந்தித்த தோல்விகளின் பொழுதா,
நேற்று கடந்த யுகத்தின் பொழுதா,
இன்று கடந்த அவமானத்தின் பொழுதா???

எப்பொழுதோ எப்படியோ நிகழ்ந்துவிடும்
அவரவர் சந்தித்த அந்த மரணத்தின் பொழுதுகள்,
எப்போது நிகழ்ந்ததென்று யாருக்கும் தெரியவில்லை!
எனினும் மரணம் என்ற அறிவிப்பில்
இன்று கிடத்தப்பட்டிருக்கும்
இந்த உடலின் பொருட்டே
 என் கண்ணீர்! 
 

Sunday, 10 May 2015

ஒரு கோப்பைத் தேநீர்!

ஆண்டுகள் கடந்த
காதலென்றாய்,
வாழ்க்கை முழுமைக்குமான
பயணமென்றாய்,
 பிடித்த வாசிப்பு, பிடித்த நிகழ்வு
 பிடித்தவற்றைப் பட்டியலிட்டாய்
ஒரு  நீண்ட தொலைவில்,
 விரல் பிடித்து நடைத் தொடர
ஆசையென்றாய்,
 காதலால் கசிந்துருகி
ஒரு கோப்பைத் தேநீரைப்,
பருகும் இடைவெளியில்
மிடறு மிடறாய் நீ ரசித்து
காதலென்று கூறி, கொட்டிடிடும்
ஆசைகளின் நடுவே
நீ எனக்காய் வாங்கிய தேநீர்
ஆறிக்கொண்டிருக்கிறது - நான்
தேநீர்ப்  பருகுவதில்லை யென்று
உன்னிடம் எப்படிச் சொல்ல?

#மகன் #மகள்

உடன்பிறந்தவளோடு சிணுங்கி
சண்டையிட்டாலும் அவளுக்காய்
பரிந்து பேசுவான்,
பிடிவாதம் காட்டிக்
குறும்பு செய்யும் நேரத்திலும் - யாரும்
காணா அன்னையின் கண்ணீரை
கண்டு கொள்ளுவான்,
வார்த்தைகள் இன்றிக் கேள்விகள் இன்றி
அம்மாவின் கண்ணீர்த் துடைத்து
அணைத்துக் கொள்ளுவான்,
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரத்திலும்
அலுவல் முடிந்து அருகே வரும் அம்மா
சாப்பிட்டாளா என்று உறுதி செய்வான்,
அவள் உண்ணும் வரை உறக்கம் தவிர்ப்பான்,
பேசித் திரியும் பட்டாம்பூச்சியாய் மகள்கள்
வாழ்க்கையின் சோலையில் மகரந்தம்
தூவும் தேவதைகள் என்றால்,
அமைதியாய் அரவணைத்துக் கொள்ளும்
மகன்கள் கடவுளர்கள் அன்றோ!

#மகன் #மகள்