Friday, 29 May 2015

வறுமைக்கு வாழ்க்கைப்பட்டவள்!


 ஆற்றின் ஓரத்தில் அவ்வப்போது
 மனிதர்கள் கல்லெறிந்துச்  சென்றார்கள்
 இருட்டின்  மூலையில் புதரின்
 மறைவில் ஒடுங்கிருந்த என்னை,
 அவன் கண்டிருக்க வாய்ப்பில்லை,
 எத்தனை வெறுப்போ எத்தனை வன்மமோ
 அத்தனை வார்த்தைகளையும் கற்களாக்கி
 அந்த ஆற்றின் மீதே அவனும் காய்ந்து கொண்டிருந்தான்
 ஆறு சேறாக மாறிக்கொண்டிருந்தது!

 ஆறு ஆறு என நீராக ஓடிக்கொண்டிருந்தை
 கல்லெறிந்து  கலக்கி சேறு சேறு என
 இகழ்ந்து கொண்டிருந்தான் அவனும்,
அந்த வார்த்தைகளை நான் கேட்டிருக்கிறேன் 
அந்த அவமானத்தை இதற்கு முன் கடந்திருக்கிறேன்,
எங்கோ எவளோ என்னைப் போல ஏதோ
ஓர்  ஆற்றின் குறுக்கே பாய்ந்திருக்கலாம்
ஏதோ ஒரு தண்டவாளத்தைக் கடந்திருக்கலாம்
ஒரு நாளின் இருபத்து மணி நான்கு நேரத்தில்
வயிற்றுக்கு ஈயாத ஓர்  ஒலி மரண ஓலமாய்
செவிகளை அறைகிறது - அதைவிட
நாராசமாய் அவன் வார்த்தைகள் இதயத்தை
கிழிக்கிறது - கல்லெறிந்து ஆற்றை
கலக்கிக்  கொண்டிருக்கும் அவன் யாகம்
தீரப்போவதில்லை - மனிதர்களும் 
கற்களோடு 
வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

ஏனோ ஆறாய் சேறாய் நீராய்
மாறிக்கொண்டிருக்கும் ஆற்றை
அந்த இருட்டின்
மூலையில் இருந்தே  உற்றுப்பார்க்கிறேன்,
ஆற்றுவாரின்றி ஆறும் - தேற்றுவாரின்றி நானும்!

பெண்ணுக்குப்  பெண்ணே துணையென
ஆற்றின் நிலை பொட்டில் அறைய,
மேலெங்கும் சேற்றை இறைத்த
வார்த்தைகளின் வறுமையைப் 
பொறுத்துக்கொண்டு,
ஆற்றைச் சலனப்படுத்த விரும்பாமல்
ஒற்றையடிப்  பாதையில் நீராய்ப் பாய்கிறேன்,
விதைகளைச் செழிப்பாக்கிப்  பின்
ஒருநாள் கடலில் கலந்துவிடும்
விதிப்பயணத்தின் வழியில்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு! 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!