Saturday, 27 April 2013

போராடு

தடைத் தகர்த்துச் செல்கையில்
விடியல் தெரியும் - அது
உனக்கோ பிறர்க்கோ?
காலம் பதில் சொல்லும்!


--------------------

இடியாப்பச் சிக்கல்

அன்பில் குழைந்து
ஆளுமையில் அழியும்
காதல்

திருமணத்தில் சேர்ந்து
இருமனத்தில் சேராத
பந்தம்

மடியில் சுமந்து
மனதில் சுமக்காத
தாய்மை

நம்மில் தொடரும்
நாட்பட வளரும்
நட்பு

சொல்லில் சினந்து
நொடியில் பிரிக்கும்
கோபம்

கவனம் சிதைந்து
காற்றில் கலக்கும்
உயிர்

வியர்வையில் வளர்ந்து
வெறுப்பில் வீழும்
தொழில்

தொடர்வண்டியாய் நீளும்
தோல்விக் கண்டுத் துவளும்
இடியாப்பச் சிக்கலில் இறைவன்
என்ன செய்வார் பாவம்?

ஒரு கதை பல முகம்

கோடுத் தாண்டிய சீதையால்
உங்களுக்கு இராமாயணம் கிடைத்தது
இராமனைச் சிந்தையில் வைத்த
மகளுக்கு அவனில் தெளிவுப் பிறந்தது!

சூதாடிக் கணவன்களின் மடமையைப்
பொறுத்தப் பெண்ணினால்
உங்களுக்கு மகாபாரதம் கிடைத்தது
அர்ஜுனனின் பேசா மடந்தைக்கு
பின்னாளில் உணர்வுப் பிறந்தது

கேட்டப் பாடம் ஏட்டினில்
கடந்தப் பாடம் மனதினில்!
எண்கள் சூழ்ந்த வாழ்க்கையில்
எண்ணங்கள் மாறும் மனநிலையில்
இதிகாசங்கள் தொடர்கதைகள்!

Thursday, 25 April 2013

இரண்டும் ஒன்றல்ல

நீந்திச்  செல்லும் காற்றில் கல்லெறிந்தாய்
வீழ்த்துவேன் என வீழ்ந்து விட்டாய்
நினைவில் தோற்று கனவில் தேய்ந்தாய்
காற்றில் வன்மமில்லை  - ஈரம்
உண்டு, உன்னையும்  வருடிச் செல்ல!

விளையாட்டாய் விரல்களைப் பிய்த்தெறிந்தாய்
காடழித்து ஒன்றை தனிமரமாக்கினாய் -
இன்று நிழல் வேண்டி நிலம் சாய்ந்தாய் -
மரத்திடம் கரம் இல்லை
வேர் உண்டு உன் பூமியும்  தாங்க!

ஆர்பரிக்கும் கடலன்று
ஆள்விழுங்கி குழியன்று 
ஓடுகின்ற ஓடை இது
கல்லெறிந்தது போதும்
நிற்கும் காற்றும், வீழும் மரமும்
விதைப் பரப்பி கிளைப் பரப்பும்
இனி நிற்காமல் சென்றுவிடு 
மன்னித்தல் என்பது மறத்தல் ஆகாது!

Monday, 22 April 2013

காட்சிப் பிழைவேண்டாத முதிய மரம் கொல்லையில்
முடங்கி ஆவிப் பிரிந்திட - சாய்ந்த விறகு
மாலையோடு நடுவீட்டில்
ஊர் மெச்சிட -

வறுமையில் உழன்ற தோழமை
வயிறுக் காய்ந்திட - ஓடி வந்தன
உறவுகள் வெளிச்சம் பரவிட

கொடுமை சகித்துப் பெண்மை
துன்பத்தில் உழன்றிட - துதித்துப்
போற்றியது சமூகம் பெருமைப் பொங்கிட

குடும்பம் காக்க ஒருவன்
உழைத்துக் களைத்திட - அகம் மறைத்தாள்
வீட்டுப்பெண் கனவில் திளைத்திட

இனம் அழிக்க படை அனுப்பி ஒருவன்
பாதகம் புரிந்திட - அவன் குலம்
அழிய அழுகிறான் ஒருநாள் உயிர்ப் பதைத்திட

மரம் வெட்டிக் காடழித்து
மழைக் குறைத்திட - கையேந்தி
மழை வேண்டி நிற்கிறான் தாகம் தீர்ந்திட

இருப்பதை அழித்திட்டு வேண்டி நின்றி இறைஞ்சிட
அகம் மறைத்து பொய்யுரைத்து கள்ளம் புரிந்திட
தாராத அன்பையெல்லாம் பின் கல்லறையில் கரைத்திட
பெரும் காட்சிப் பிழையோ வாழ்க்கை, பிறழாது வாழ்ந்திட??

Monday, 15 April 2013

கழுகு தேசம்!
குருவிக்குத் தேவை ஒரு தானியம்
குவிந்து கிடந்தது பிணங்கள் மட்டும்!
குருவி மரித்தது கழுகு பிழைத்தது
எளியவன் வீழ வலியவன் வாழ
கழுகின் தேசம் மெதுவாய் உதயம்! 

Omnipotent!

God’s own music
Children are laughing!

God’s own architecture
Organs are functioning!

God’s own serenity
Trees are fluttering!

God’s own sorrow
Resentments are mounting!

God’s own fate
Mankind is brawling!

Oh! My God’s existence!

பிள்ளை விளையாட்டு!

சிறிய வீட்டினுள்
ஒரு சிறு குடில்
அமைத்து - பெரு
மகிழ்ச்சி எய்துகின்றனர்
குழந்தைகள்!
பிள்ளை விளையாட்டு!

Tuesday, 9 April 2013

சிதறல்கள்

அடிப்பேன் என்று சொன்னவுடன்.......அடி வாங்கி துடிப்பதுப் போன்று தரையில் துள்ளி விழுந்து புரண்டு, அடியே வாங்காமல் அடி வாங்கிய "effect" கொண்டு வருகிறார்கள் வீட்டில் வளரும் ஸ்டண்ட் மாஸ்டர்கள்!
# குழந்தைகள்

 --------------------------------------------------------------------
எந்த தவறையும் பொறுத்துக்கொள்ளும் போது, அது தவறு செய்பவனின் உரிமை ஆகிறது, உரிமை கொண்டவன் தலைவன் ஆகிறான், பொறுத்துக் கொண்டவன் அடிமை ஆகிறான்!
 ----------------------------------------------------------------------
நீரில் ஏற்படும் மாசு, நிலத்தை பாதிக்கும், நிலத்தில் ஏற்படும் மாசு, பசுமையை அழிக்கும், அழியும் பசுமை, மழையை தடுக்கும், தவறும் மழை வளத்தை குலைக்கும், வளம் குலைகையில், குற்றம் பெருகும், குற்றம் பெருகுகையில், மனவளம் தடுமாறும், மனவளம் தடுமாறுகையில், உறுதி குலையும், உறுதி குலைகையில், ஒற்றுமை குலையும், ஒற்றுமை குலைகையில், தீண்டாமை தலைதூக்கும், தீண்டாமை தலையெடுக்கையில், பிற்போக்குத்தனம் வளரும், பிற்போக்குத்தனம் வளருகையில், மீண்டும் கற்காலம் வரும்........ஆனால் இனிவரும் கற்காலத்தில் கல்லும் மண்ணுமே இருக்கும், ஆதாமோ, ஏவாளோ, ஆப்பிளோ அல்ல!
 -----------------------------------------------------------------------
திரைக்காட்சியில் காணும் சித்திகரிக்கப்பட்ட துயரத்துக்கு "உச்" கொட்டி, ஐயோ பாவம்! என்று பரிதாபப்படும் நமக்கு வாசலில் பசியால் ஒலிக்கும் ஒரு ஏழையின் யாசகக் குரல் ஒருபோதும் கேட்பதேயில்லை!  

ரசித்தது

இளங்கலை பட்டப்படிப்பின் போது, தோழியும் நானும் ஆட்டோவில் ஒரு இடத்திற்கு பயணப்பட வேண்டி இருந்தது...தெளிவாய் இடத்தை சொல்லி ஏறிய பின்பும், இது எனக்கு கட்டுப்படியாவது, இவ்வளவோ தூரம், நை நை என்று ஆட்டோ ஓட்டுனர் தகராறு செய்து கொண்டே வந்தார்...தோழிக்கு கோபம் வந்து, "உங்களுக்கு கட்டுப்படி ஆகலைனா, வண்டிய நிறுத்துங்க, நாங்க இறங்கிக்கிறோம்" என்றாள்...ஆட்டோவை நிறுத்திவிட்டு முழு தொகையையும் கேட்டு அடாவடி செய்தார் ஆட்டோ ஓட்டுனர்....நான் அருகில் இருக்கையில் தோழிக்கு வாய் சற்று நீளமாகி விடும், தட தட வென்று ஏக வசனத்தில் ஆட்டோ ஓட்டுனருக்கு இணையாய் பேச ஆரம்பிக்க, கோபத்தில் ஆட்டோ ஓட்டுனர், "உங்க ரெண்டு பேரையும் இறக்கி விடாம அப்படியே தள்ளிக் கொண்டு போய் இருக்கணும், என்ன வாய் பேசுறே நீ" என்றார்....சடாரென்று தோழி சொன்னாள், "சரி, உன் தலைவிதி எங்க கிட்டதான் முடியும் நு இருந்தா அதை மாத்த யாரால் முடியும்?"

கண்டது!

தார்பூசணிகளை தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார் ஒருவர்.
துண்டுபோட்டா பத்து ரூபாய், முழுசா வாங்குங்க முப்பது ரூபாய், கூவி கூவி அழைத்தார்.
இந்த பழத்துக்கா முப்பது ரூபாய்? குறைச்சு சொல்லு என்றார் ஒரு பெண்மணி
"அக்கா மார்க்கெட்டுக்கு போய்ப் பாரு..இதை விட அதிகம், என் மாமனாருக்கு ஐநூறு ஏக்கர் இருக்கு அதுதான் இந்த விலை" என்றார் பழ வியாபாரி.
அதுதானே பார்த்தேன் மாமனார் வீட்டு பழமா? - கிண்டலாய் பதில் வந்தது அந்த பெண்மணியிடம் இருந்து....."யக்கா"....என்று பரிதாபமாய் சொல்லிவிட்டு வேகமாய் வண்டியை உருட்டி சென்றார் வியாபாரி .
இனிமேல் எந்த உறவுமுறையை சொல்லி விற்பாரோ வியாபாரி?

விதிவிலக்கு

ஓடுகின்ற நதி நீரில்
விதைகள் கரைச் சேரும்
புற்கள் தலையெடுத்து ஆடும்
சருகுகள் நிலம் ஒதுங்கும்
மீன்கள் பயணமேகும்
ஓடாமால் மூழ்காமல்
சில கூழாங்கற்கள் மட்டும்
மணற்துகளாய்
மடிந்துகொண்டிருக்கும்!

தெரிந்தது தெளியாதது

நீர்த்திவலைகள் விலகும்வரை
விழிகள் நித்திரை கொள்வதில்லை
ஒவ்வொரு பூவாய் வைத்து
கல்லறையில் தொழுதாலும்
ஒரு உயிர்ப் பூ மறுபடி பூப்பதில்லை