Thursday, 16 November 2017

நோஞ்சான்_மனங்கள்!

"என்ன மாதிரி பையன்கள் பாத்தா பிடிக்காது, பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும்" "நீ விரும்புறவனை விட உன்னை விரும்புறவனைக் கட்டிக்கோ" "பொண்ணுன்னா அடக்கம் வேணும்" இந்த வசனங்களைத் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள், ஒன்று ஏழ்மை, சரியான கல்வியில்லாமை, திரைப்படங்களைப் பார்த்து, தம் ஆதர்ச ஹீரோவை போன்ற "ஆணாதிக்க" திமிர்த்தனமான மனநிலைக்கு மாற்றிக்கொள்ளும் இளைஞர்கள், இன்னொன்று அளவுக்கதிகமான பணம், சுதந்திரம், பெற்றோர்களின் கவனிப்பு, கண்டிப்பு இல்லாத இளைஞர்கள், தான் நினைக்கும் எதுவும் தனக்கே கிடைத்திட வேண்டும் என்ற மனநிலை, இன்னொரு பக்கம், எது சரியாய் இருந்தாலும், பள்ளியிலும் கல்வியிலும், இதுபோன்ற பிள்ளைகளின் நட்பில் வழித்தவரும் பிள்ளைகள், சந்தோஷமாய் இருந்தாலும், துக்கமாய் இருந்தாலும், "வா மச்சி சரக்கடிக்கலாம்" இதுவே பொதுவில் அவர்களின் கொண்டாட்டமாய் இருக்கிறது, சரக்கில் ஆரம்பித்து, பின் மெதுவே வன்புணர்ச்சி, கட்டாயக் காதல், கொலை, விபத்து என்று முடிகிறது!

சில ஆண்டுகள் மணவாழ்க்கையில் காதலித்து மணந்த கணவன், குடியை விடாமல், தொடர்ந்து தன்னை துன்புறுத்தியதால், ராசிபுரத்தில் தன் நாலுவயது மகனுடன் பெண் தற்கொலைச் செய்துகொண்ட செய்தி படித்தேன், இப்போது அந்த அப்பன் என்ன செய்துக்கொண்டிருப்பான், ஒருவேளை மனசாட்சி உறுத்தினால் சிலநாட்கள் அழுது, பின் இந்தத் துக்கத்தை மறக்க என்று அதற்காகவும் குடித்துக்கொண்டிருப்பான், பின் வேறொரு பெண்ணை மணந்துக்கொண்டு இதையே தொடர்கதையாகச் செய்வான்!

ஓர் ஆணின் காதலை பெண் மறுப்பதை, ஆண்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது போலவே திரைப்படங்கள் அமைகின்றன, ஆணின் எல்லாக் கொண்டாட்டங்களுக்கு மதுவும், மாதுவும் தான் வேண்டும் எனும் கருத்தையே அவைகள் தூக்கிப்பிடிக்கின்றன, "ஆம்பளை டா" என்று சின்ன வயதில் தலையில் தூக்கி வைத்துச் செல்லம் கொஞ்சுவதில் ஆரம்பித்து, "மச்சி நீ ஆம்பளைடா" என்று உறவும் நட்பும் கொம்பு சீவுவதில் தொடர்ந்து இந்த "தோல்வியை" ஏற்றுக்கொள்ளாத மனநிலை தொடர்கிறது! அதுவும் கல்வியில் தோற்றால் கவலையில்லை, தொழிலில் தோற்றால் கவலையில்லை, எதில் தோற்றாலும் "குடி" இருக்கிறது, பெண்ணிடம் தோற்றால் மட்டும் அவளைப் பொம்மையைப் போல் பாவித்து, தன் உணர்வும், காதலும் பெரிதென்று அவளைக் கொல்லும் நிலைக்குச் செல்கிறது இந்த ஆம்பளை என்று சமூகம் வளர்த்துவிடும் மனோபாவம்!

அதிலும் பெண் துணிந்து காதலைச் சொல்லிவிடக்கூடாது,ஆணை விரும்பி அவனிடம் காதலைச் சொல்லத்துணியும் பெண்களைப் பெரும்பாலான திரைப்படங்கள் எப்படிக் காட்டுகிறது என்று யோசித்துப்பாருங்கள், ஒன்று அந்தப்பெண் கருப்பாய், பின்னல் தூக்கிக்கொண்டு, பற்கள் முன்னால் துருத்திக்கொண்டு, அல்லது அவளின் காதல் காமத்தில் மட்டுமே வருவதாகச் சித்தரிக்கப்பட்டுத் தான் வரும், இதில் உங்கள் சூப்பர் ஸ்டார் முதல் சில்வர் ஸ்டார் வரை விதிவிலக்கில்லை, அறுபதைக் கடந்தும் இன்னமும் தனக்குக் குழந்தையாக நடித்த பெண்களையும் கூடக் கதாநாயகிகளாக்கி ஓடும் முதிய இளைஞர்களின் படங்களில் கூடப் பெண்களின் சித்தரிப்புத் தரம் தாழ்ந்த இருக்கிறது! இதிலும் கருப்பான பெண், பற்கள் தூக்கியிருக்கும் பெண் எல்லாம் காதலிக்கக் கூடாதா என்ன? அது எப்படிப்பட்ட வக்கிரம், எப்படிப்பட்ட வக்கிரத்தை, பெண்ணினத்தின் மேல் கட்டமைக்கிறார்கள்? அதே ஹீரோ பார்க்க சகிக்காமல் இருந்தாலும், விக் வைத்துக்கொண்டு, நோஞ்சானாய்த் தெரிந்தாலும் கூட, அவர்களும் இதுபோன்ற பெண்களைக் கண்டாலே கிண்டலடிப்பது போலச் சித்தரித்திருப்பார்கள்.

எப்படிப்பட்ட உருவமும், ஒழுக்கமும், பொருளாதார மற்றும் கல்வி நிலை கொண்ட எந்த ஆணாய் இருந்தாலும், அவனுக்குப் பிடித்துவிட்டால் பெண்ணுக்குப் பிடிக்க வேண்டும், அவள் "நோ" என்றால் அது ஏன் அவள் விருப்பமாய் மதிக்கப்படாமல் ஆணின் தன்மான பிரச்சனையாக மாற்றப்படுகிறது?

அதிலும் "முடியாது" என்று சொல்லிவிட்டால், முதலில் பெண்ணின் ஒழுக்கம் கொச்சைப்படுத்தப்படுகிறது, "ச்சீ அந்தப் பழம் புளிக்கும்" என்பது போல, மார்பிங் செய்வது, கொச்சையாய் பேசுவது, சித்தரிப்பது எல்லாம் செய்வார்கள் பலகீனமான ஆண்கள்.
"முடியாது" என்றால் முடியாதுதான், அது என்னடா பார்த்தா பிடிக்காது, பார்க்க பார்க்க பிடிக்கும், கருமம் உன்னைப் பிடிக்காது என்றால் பிடிக்காதுதான்" என்று ஏன் எந்தப் பெண்ணையும் நீங்கள் திரையில் சொல்ல விடுவதில்லை? நிதர்சனத்தில் வாழவிடுவதில்லை?

ஆட்டோ க்ராப் படம் பார்த்த உங்களுக்குப் பெண்ணின் ஆட்டோ க்ராப் படத்தை ஏற்றுக்கொள்ளமுடியுமா என்பதே சந்தேகம்தான், பெண்ணின் ஆட்டோ க்ராப் போன்ற படத்தையேனும் விமர்சனம் இல்லாமல் ஒத்துக்கொள்ள முடிந்தால், நீங்கள் உங்கள் ஆண் பிள்ளைகளை ஒழுங்காய் வளர்க்க தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம், நானும் எத்தனையோ பட விமர்சனங்களைக் கடக்கிறேன், பெரும்பாலும் எந்தப் படங்களையும் நான் பார்ப்பது கிடையாது, எனினும் எப்படிப்பட்ட கதையெனினும், "பெண்ணின்" கதாபாத்திரத்தின் வடிவமைப்பும், ஒழுக்கமும் பேசப்படுகிறது, ஏன் உங்களால் ஆணின் ஒழுக்கத்தை வரையறுக்க முடியவில்லை?

சட்டையில்லாமல் ஆண் திரிந்தால் பரவாயில்லை, குடித்துவிட்டு ஆண் திரிந்தால் பரவாயில்லை, ஒரு பெண்ணின் காதலை ஆண் மறுத்தால் பரவாயில்லை, ஒருத்தியை திருமணம் செய்வதாய் வாக்களித்து ஆண் ஏமாற்றினால் பரவாயில்லை, மனைவி இறந்ததும் மறுநாளே ஆண் மறுமணம் செய்தால் பரவாயில்லை, ஊதாரியாய் உழைப்பின்றித் திரிந்தால் பரவாயில்லை, வேளைக்கு ஒருத்தியை காதலித்தால் பரவாயில்லை, ஊருக்கு ஒருத்தியை கல்யாணம் செய்தால் பரவாயில்லை, ஆட்டோகிராப் கள் வந்தால் பரவாயில்லை, இதில் ஒன்றை பெண் செய்தால், அந்தப் பெண்ணை, அவள் குடும்பத்தை எத்தனை கேவலப்படுத்த முடியுமோ அத்தனை கேவலப்படுத்துவீர்கள்!

ஒழுக்க விதிகளை இருவருக்கும் பொதுவில் வைக்காமல், பெண்ணுக்குக் கோட்பாடுகள் விதிக்கும் இந்தச் சமூகத்தில் சுவாதிகள், நவீனாக்கள், விநோதினிகள், சுப்ரஜாக்கள், ஹாசினிகள், விஷ்ணுப்ரியாக்கள், இன்னமும் பெயர் தெரியாத அனாமிக்காக்கள் என்று விதவிதமாய்ப் பெண்கள் சீண்டப்பட்டுக் கொல்லப்படுவார்கள், கடுமையான சட்டத்தை இயற்றாத, செயலாற்றாத, ஆண் பிள்ளைகளை வழிபடுத்ததா இந்தச் சமூகமும், சட்டங்களும், ஆட்சியாளர்களும், விதைத்ததை ஒருநாள் அறுவடை செய்வார்கள், அப்போது இங்கே மாற்றம் ஏற்படலாம்!

அப்படியேதான் இருக்கிறது

ஒரு திரைப்படத்தால்
அரசியல் கொதிக்கிறது
ஒரு திரைப்படத்தால்
கலாச்சாரம் பொங்குகிறது
ஒரு திரைப்படத்தால்
கட்சிகள் ஆக்ரோஷமடைகிறது
ஒரு திரைப்படத்தால்
மதங்கள் கலவரங்கள்
செய்கிறது
விடியலில் தொடங்கி
பொழுது சாயும்வரையில்
எத்தனைப் பார்த்தாலும்
சமுதாயம் என்னவோ
அப்படியேதான் இருக்கிறது
ஒருவேளை திரைப்படங்களை
பார்க்காததால்
வந்த விளைவோ?! 🤔

போராட்டம் சூழ் உலகு

Image may contain: 1 person, swimming

விழுந்த ஒவ்வொரு
கல்லிலும்
ஒருத்தி மூழ்கிப்போனாள்
விழுந்த ஒவ்வொரு
கல்லையும்
படிக்கட்டுக்களாக்கி
ஒருத்தி நீர்மேலெழும்பி
மூச்சுவிட்டாள்
எல்லா களத்திலும்
முயல்பவளே
மூச்சுவிடுகிறாள்
போதுமென்பவள்
முடிந்து போகிறாள்
போராட்டம் சூழ்
உலகில்!

லயிப்பு

Image may contain: sky, bird, nature and outdoor

கூண்டிலிருந்து
விடுபட்ட பறவையின்
இறகொன்று
நெடுநேரம்
காற்றில்
மிதந்துக்கொண்டிருந்தது!

#லயிப்பு

வெற்று விளம்பரம்

இரண்டு நாட்களுக்கு முன்பு லஸ்ஸிருந்து மந்தைவெளி சிக்னலை அடைய முக்கால்மணிநேரமும், அங்கிருந்து சிக்னலுக்காக அரைமணிநேரமும் காத்திருக்க வேண்டியிருந்தது, சிக்னலை கடக்க நேரமும் இடமும் கிடைத்தப்போது, அங்கே காவல்துறைக்குப் பதில் பொதுமக்களில் இருவர் போக்குவரத்தைச் சீர்செய்துக் கொண்டிருந்தார்கள், நேரே போக முடியாது, "லெப்ட்டுக்கா போங்க" என்று விடாப்பிடியாய் திருப்பிவிட, அங்கிருந்து இடதுபுறம் சென்று, செட்டிநாடு பள்ளிக்கடக்க மீண்டும் ஒரு மணிநேரம் ஆனது, அட என்னதான் ஆச்சு இன்னைக்கு என்று சிக்கித்திணறி வாகனத்தில் நீந்த, சற்றுத்தொலைவில் பல்லவன் ஒன்று ப்ரேக் டவுனாகி நின்றிருந்தது, அதையும் தாண்டி இயல் இசைக்கல்லூரியைக் கடக்க மீண்டும் அரைமணிநேரமானது, அந்த நெரிசலிலும், புகையிலும், வயிற்றைப் பிரட்டிக்கொண்டு வாந்தி வரும்போல் தோன்ற, எங்கேயும் வாகனத்தை ஓரம் கட்டவும் முடியாமல் மேலும் முன்னேற, ஒரு வழியாய் அந்தக்காட்சி கண்ணில் பட்டது, எம்ஜிஆர் கல்லூரிக்கு முன்பு சாலைப் பழுதுப்பட்டிருக்க, காவல்துறை, சில ஆட்களைக் கொண்டு பள்ளங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர், காவல்துறை அதிகாரிகள் சிலர் குனிந்து செப்பனிட்ட பாதையை தொட்டுப்பார்க்க மும்முரமாக ஒருவர் (அதேத்துறையைச் சார்ந்தவர்) அதை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார், இதே போல வேறொரு இடத்திலும் காவல்துறை, ஆட்களை வைத்து சாலையைச் சீர்செய்ய அதையும் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார் ஒருவர், ஏற்கனவே "மழையில் சாலையைச் சீர்செய்த காவல்துறை" என்ற புகைப்படத்தைக் வாட்ஸ் ஆப்பிலும் ஃபேஸ்புக்கிலும் கண்டது நினைவுக்கு வந்தது! 

எந்தத்துறையாய் இருந்தாலும் மனிதர்கள்தானே, புகழை விரும்பாத மனிதரில்லை, எனினும் இதுபோல் அசாதரண வேலைகளை செய்யும் காவல்துறையை பாராட்டும் வேளையில், தம் துறைச்சார்ந்த கடமையை சரியாக செய்தாலே, (அதாவது ஒரு சாதாரணனைக்கூட பயமில்லாமல் காவல்துறையை நம்பிக்கையுடன் நாடச்செய்யும் அளவுக்கு) பெரும் அசாதாரண பெருமை காவல்துறைக்கு வந்து சேருமே என்ற எண்ணம் எழுந்தது!

முதல்வர் வருகிறார், பிரதமர் வருகிறார் எனும்போது மொத்த போக்குவரத்து காவல்துறையும் தெருவில் நிற்கிறது, ஓட்டுப்போட்ட பொதுஜனம் எத்தனை நெரிசலில் சிக்கினாலும், பெரும்பாலான நேரங்களில் அதை சரிசெய்வது அதே பொதுஜனமே, போக்குவரத்துத்துறை இல்லை! பல வருடங்களாக இராயப்பேட்டை சிக்னல் இயங்குவதில்லை, அப்படியே சரிசெய்யப்பட்டாலும் அது நிலைப்பதில்லை, பெரும்பாலான நேரங்களில் காவல்துறையும் இல்லை, இதுபோல சாலைகள் சென்னையில் ஏராளம்!
சாலை முழுவதும் ஆக்கிரமிப்புகள், விதிகளைப் புறந்தள்ளி மிதிக்கும் மக்கள் கூட்டம், நேரத்திற்கும் தேவைக்கும் ஏற்ப சில விதிமீறல்களை மட்டும் பாய்ந்து பிடிக்கும் காவல்துறை!

எது எப்படியோ வெற்று புகழ் விரும்பும் அரசியல்வாதிகளைப் போல, கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கும் துறை, உண்மையில் மக்களின் துறையாக மாறினால் அதை நிச்சயம் உலகெங்கும் பரப்பிக் கொண்டாடுவோம்!

பூமி

சில நேரங்களில் சில நாய்களுக்கும், பூனைகளுக்கும் இரக்கப்படும்போது, "மனுஷனுக்கே ஒன்னுமில்ல, இதுங்களுக்கு இரக்கப்பட்டு என்னவாகப் போகுது?" என்ற விட்டேத்தியான பதில்களை கடந்ததுண்டு, மாட்டுக்கறி பிரச்சனை வந்தபோது, உணவு என்ற அடிப்படையை மீறி, வீம்புக்காக, சில மனிதர்கள் மாடுகளை, கன்றுகளை வெட்டிய செய்திகளைக் கடந்ததுண்டு! மனிதர்களையும் கூட சிலமனிதர்கள் சாதிய அடிப்படையில் மிருகங்களைப் போல நடத்துவதும், கொல்வதும் உண்டு, உண்மையில் யோசித்துப் பார்த்தால் இந்த உலகம் மனிதர்களுக்கானதல்ல, இது பிற விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், ஊர்வனவைகளுக்கும், நீந்துபவைக்குமானது!
இந்த உலகத்தின் இயக்கம், பிற உயிர்கள் அழிந்துப்போனால் நின்றுபோகும், மனித உயிர்கள் அழிந்துப்போனால் இந்தப் பூமிக்கு கேடு வராது, ஏனேனில் மனித உயிரினத்தைப் போன்று எந்த உயிரினமும் வாழும் பூமிக்கு கேடு விளைவித்ததில்லை, மனித இனத்தைப் போன்று கண்மூடித்தனமாக உணவுச்
சங்கிலியை அழித்ததில்லை, ஆதலால் இந்த உலகம் பிற உயிர்களால் இயங்குகிறது, உணவுச்சங்கிலியை மதித்து, உயிர்களை வாழவிட வேண்டும், உணவு தவிர்த்து, அலங்காரத்துக்காகவும், அழகுக்காகவும், வீம்புக்காகவும் அதை வெறிப்பிடித்த மனிதர்களாய் வேட்டையாடுதல் தவிர்த்து வாழ்ந்தால், இந்தப்பூமி இன்னும் பல தலைமுறைகளுக்கு மிச்சமிருக்கும்!
#பூமி #Earth

த்தூஊஊஊஊ_வென_தூவும்_மழை

No automatic alt text available.


இந்தத் தேசத்தில்
மக்கள்
தண்ணீரில் மூழ்கி
மடிகிறார்கள்
வறட்சியில் வாடி
மறைகிறார்கள்

சில்லறை கடன்களுக்காக
வங்கியின் பிடியில்
சாகிறார்கள்
விவசாயத்தை நம்பி
மண்ணில்
சாய்கிறார்கள்

மேடு பள்ளங்களான
சாலைகளில்
சிக்கி உடல்
சிதறுகிறார்கள்
கந்து வட்டிக்கொடுமையால்
தீக்குளித்து
எரிகிறார்கள்

கல்விக்கனவு கலைந்து
தூக்கில் தொங்குகிறார்கள்
பேருந்து ஓட்டையில்
மின்தூக்கியில்
நீச்சல் குளத்தில்
ஆழ்துளை கிணறுகளில்
டெங்கு காய்ச்சலில்
பிள்ளைகள்
பலியிடப்படுகிறார்கள்
கட்டிடங்கள் இடிந்து
சமாதியாடைகிறார்கள்

விசாரணை கைதிகளாக
சாமன்யர்கள்
மாண்டுபோகிறார்கள்
சிறைச்சாலைகளை
ஊழல் குற்றவாளிகள்
ஏமாற்றித் திரிகிறார்கள்

போலி மருந்துகளில்
உயிர் துறக்கிறார்கள்
கலப்பட உணவில்
கண்மூடுகிறார்கள்
சாதிமத பூசல்களில்
மண்டையுடைக்கப்படுகிறார்கள்

எதிர்த்துப்பேசுபவர்கள்
காணாமல் போகிறார்கள்
பிள்ளைகளும் பெண்களும்
புணரப்படுகிறார்கள்

யாரோ குழந்தைகள்
தெருவில்
பிச்சைக்காரர்களாக்கப்படுகிறார்கள்
சாராயக்கடைகளில்
பல அப்பன்கள்
சாந்தியடைகிறார்கள்
கொத்தடிமைகள்
நகரெங்கும் விரவிக்கிடக்கிறார்கள்

உழைத்தப்பணம் மாற்ற
வங்கியின் வாசலில்
ஏழைகள் சுருண்டுவிழுகிறார்கள்
கோடியில் கொள்றையடித்தவனின்
கணக்குகளை கைகழுவுகிறார்கள்

இத்தனையும்
நிகழும் நாட்டில்
வெள்ளைவேட்டிகளும்
அதிகாரச்சீருடைகளும்
குர்தாக்களும் பைஜாமக்களும்
கொஞ்சமும் கூச்சக்கறையின்றி
பற்களைக் காட்டிக்கொண்டு
வீதியுலா வருகிறது
"கர்ர் த்தூஊஊஊஊ"
என்று பெருமழை
ஆர்ப்பரிக்கிறது!