சில மருத்துவ சம்பவங்கள்;
ஒரு குழந்தைக்கு வயிற்றுப்போக்கு, ஒரு பெரிய குழந்தைகள் நல மருத்துவமனை, ஒரு மருத்துவர் குழந்தைக்கு மருந்துகள் பரிந்துரை செய்கிறார், குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை, உடனே எம் ஆர் ஐ, ஸ்கேன், எக்ஸ் ரே, இன்ன பிற பரிசோதனைகள் நடக்கிறது, மேலும் ஒரு வாரம் கடக்க, இப்போது இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து கொள்கிறார்கள், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்து, அறுவை சிகிச்சை வரை முறைகள் பேசி, குழந்தையின் பெற்றவரை பயமுறுத்துகிறார்கள், பெற்றவர்களுக்கு சந்தேகம் வர, நண்பர்களின் பரிந்துரை பேரில் வேறு ஒரு குழந்தைகள் நல மருத்துவரை சந்திக்கிறார்கள், அவர் ஆய்வு கூட முடிவுகளை பார்த்து, அதில் என்ன பிரச்சனை என்று விளக்கி, ஒரு சாதாரண ஆன்டி பையோட்டிக் கொடுத்து குழந்தையின் பிரச்னையை இரண்டு நாட்களில் சரிசெய்கிறார், குழந்தை நலம்!
மீண்டும் அதே மருத்துவமனை, எட்டு வயது பெண் குழந்தையின் பிறப்பு உறுப்பு சேர்ந்து கொள்கிறது, அடைப்பு ஏற்படுகிறது, மருத்துவர்கள் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள், குழந்தையின் தந்தை, நண்பர்களின் பரிந்துரை பேரில் வேறு ஒரு மருத்துவரிடம், வேறு ஒரு மருத்துவமனையில் காண்பிக்கிறார், அந்த குழந்தை நல மருத்துவர், அந்த குழந்தையின் பிரச்னையை ஒரு சாதாரண மருந்தின் மூலமும், சில பல இயற்கை வழிமுறைகளின் மூலமும், நாலு நாட்களில் அறுவை சிகிச்சையின்றி சரி செய்கிறார்.
வேறு ஒரு பகுதியில் வேறு ஒரு தனியார் கிளினிக், ஒரு வயது குழந்தைக்கு சளி இருமல் என்று அம்மா அழைத்துச் செல்கிறார், மருத்துவர் குழந்தைக்கு ஆஸ்துமா, வாழ்க்கை முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும் என்று பரிந்துரை செய்கிறார், அம்மா வேறு ஒரு மருத்துவரிடம் செல்கிறார், மருத்துவர் இது ஒரு சாதாரண சளி காய்ச்சல் என்று மருந்து தந்து குழந்தையின் உடல்நிலையை சரிசெய்கிறார்.
வேறு ஒரு பகுதியில் வேறு ஒரு மருத்துவமனை, 12 வயது பெண் குழந்தை பள்ளியில் நடக்கும்போது வழுக்கி விழ, கையில் எலும்பு முறிவு. பள்ளி நிர்வாகம் உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள், புகழ் பெற்ற ஒரு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர், உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்ல, குழந்தையின் தாய் குழந்தை எப்படியாவது சரியாக வேண்டும் என்ற மனநிலையில் நிற்க, தந்தை மருத்துவரிடம் நேரம் கேட்கிறார், வேறு ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க, அவர், "சிறு குழந்தை, ஒரு எம் ஆர் ஐ எடுத்து விட்டு, ஒரு கட்டு போட்டால் சேர்ந்து விடும் பிறகு பிசியோதெரபி செய்து கொள்ளலாம்", என்கிறார், அதன்படியே குழந்தைக்கு அறுவை சிகிச்சையின்றி கை சரியாகிறது.
வேறு ஒரு புகழ் பெற்ற எலும்பு சிகிச்சை நிபுணர், கால்வலி என்று ஒருவர் வர, இரண்டு மூட்டுகளிலும் தேய்மானம், உடனடியாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார், செய்யவில்லை என்றால் நீங்கள் நடக்கவே முடியாது என்கிறார், சிகிச்சைக்கு வந்தவர் பிசியோதெரபி செய்து பிரச்னையை சரி செய்து கொள்கிறார், எந்த அறுவை சிகிச்சையும் இன்றி சிறப்பாக எப்போதும் போல் இயங்குகிறார்.
வேறு ஒரு மருத்துவர், குழந்தைக்கு சளி காய்ச்சல் என்று அழைத்துச்செல்ல, குழந்தைக்கு என்ன வென்று சொல்லாமேலேயே, குழந்தைக்கு டி பி மருந்துகளை மாத கணக்கில் பரிந்துரை செய்கிறார், பிறகு சில மாதங்கள் குழந்தைக்கு அந்த மருந்தை கொடுக்கிறார்கள், குழந்தையின் உடல் நிறம் மாறி உபாதைகள் ஏற்படுகிறது, மருந்து தீர்ந்து, கடையை நாட, அவர் இது டி பி மருந்து என்கிறார், பிறகு வேறு ஒரு மருத்துவரை நாட, சாதாரண மருந்தில் சளி சரியாகிறது.
வேறு ஒரு தனியார் மருத்துவமனை, ஒரு வயது குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை ஏற்பட, மூச்சு திணறி இருக்கிறது, இறந்த குழந்தையை சில மணி நேரம் உயிரோடு இருப்பதாக சொல்லி, ஒரு பெரிய தொகையை கட்டணமாக வசூலிக்கிறது.
வேறு ஒரு எலும்பு சிகிச்சை மருத்துவமனை, கீழே விழுந்த ஒருவர் கைவலி என்று வர, இரண்டு லட்சம் கட்டணம் உடனடியாக செலுத்தி அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்படுகிறது, அவர் வேறு ஒரு அரசாங்க மருத்துவமனைக்கு செல்ல, அது ஒன்றும் இல்லை பிஸியோதெரபி போதும் என்று அறிவுறுத்தப்பட்டு சரி ஆகிறது.
வேறு ஒரு தனியார் கிளினிக், சளி காய்ச்சல் என்று வரும் மக்களுக்கு, மருத்துவர் தவறாது நான்கு ஆன்டி பையோட்டிக் மருத்துவர் எப்போதும் பரிந்துரை செய்வார், இன்னொருவர் அதிக வீரியம் உள்ள மருந்தை பரிந்துரை செய்வார், கேள்வியின்றி மக்கள் மருந்தை விழுங்க நிரந்தர நோயாளிகளாக மாறுவர்.
இதெல்லாம் சில சம்பவங்கள் மட்டுமே, இன்னமும் பல பெற்றவர்களுக்கு மருத்துவர் சொல்வதே வேதம் என்ற மனநிலைதான், காய்ச்சல் என்பது வியாதி அல்ல, அது ஒரு அறிகுறி என்பதும், பரசிட்டமோல் மாத்திரையை மூன்று நாட்களுக்கு மேல் தொடர்ந்து விழுங்க கூடாது, காய்ச்சலின் மூல காரணியை கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்பது கூட தெரியவில்லை, தொடர்ந்து மாத்திரையை விழுங்க அது கல்லீரலை பாதிக்கும் என்பதை அறியவும் இல்லை அதை நவீன வியாபார மருத்துவர்கள் சொல்வதும் இல்லை, மூல காரணியை கண்டறிய ஒரு ரத்த பரிசோதனை செய்யும்போது, எல்லா சோதனையையும் செய்யவும் சொல்வதில்லை, டெங்குவுக்கு ஒரு தரம், பிறகு சிக்கன் குனியாவா, இல்லை மலேரியாவா, டைபாய்டு காய்ச்சலா இப்படி ஒவ்வொரு முறையும் பரிசோதனைகளை இழுக்கும் மருத்துவமனைகளும் உண்டு, எவ்வளவு நாள் இருக்கிறீர்களோ அவ்வளவு கட்டணம். அதுவும் காப்பீடு என்றால் ஒருவித கட்டணம், பணமாக தந்தால் ஒரு கட்டணம்.
இருவேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள், மருத்துவமனைகள் இருக்கின்றன, கட்டணம் அதிகம் என்றாலும் எப்படியாவது உயிரை காப்பாற்றி விட வேண்டும் என்ற மருத்துவமனைகள் இருக்கின்றன, உயிரை பற்றி கவலையில்லை, முடிந்தவரை கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடித்துவிட வேண்டும் என்று சில மருத்துவமனைகள் இருக்கின்றன, எனக்கும் குழந்தைகள் உண்டு, நியாய தர்மம் உண்டு என்று நோயாளிகளை சிரத்தையாய் காக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள், குடும்பம் வேறு தொழில் வேறு, நியாய தர்மம் இல்லை என்ற ரீதியில் செயல்படும் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
சிறப்பான பல மருத்துவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இருக்கிறார்கள், சிறப்பான மருத்துவம் அரசு மருத்துவமனையிலும் உண்டு, மாபெரும் வித்தியாசம் என்ன வென்றால், செவிலியர்களின் பணி தனியார் மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிறப்பாக இருக்கும், அரசு மருத்துவமனைகளில், ஆள் பற்றாக்குறை அல்லது வேறு காரணம் சொல்லி அந்த செவிலியர் பணிகளை நம் உடன் இருப்பவரே செய்ய வேண்டும், கழிவறை சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் மாபெரும் கேள்விக்குறி சில அரசு மருத்துவமனைகளில். ஆனால் மருத்துவர்களை நிச்சயம் நம்பலாம்.
மொத்தத்தில் நல்லவர்கள் நியாயமற்றவர்கள் எல்லா துறைகளிலும் உண்டு, மக்களுக்கு ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வைக்க வைக்கும் கல்வி அவசியம், குறிப்பாக பெண் கல்வி மிக அவசியம். மருத்துவர்கள் சொல்வது எல்லாம் வேதம் இல்லை, மாறி வரும் சுற்றுப்புற சூழலில், மருத்துவம் பெரும் வியாபாரமாகி நிற்கிறது, இதில் நம்முடைய ஆரோக்கியத்தை, குழந்தைகளின் ஆரோக்கியத்தை நம்மை சார்ந்தவர்களின் ஆரோக்கியதாய் பேணுவது அவசியமாகிறது, வண்ணமயமான விளம்பரங்களில், உணவுகளை வண்ணமயாக மாற்றிக்கொள்வது கேடையே விளைவிக்கும். மருத்துவரை நாடினால் கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தி கொள்வதில் தவறில்லை, அறுவை சிகிச்சை என்று வரும்போது, நாட்பட்ட சிகிச்சை நீண்டுகொண்டே போனாலோ, வேறு ஒரு மருத்துவரை கலந்து ஆலோசிப்பது அவசியம்.
எல்லாத் துறையையும் போல இன்று மருத்துவத்துறையும் மாறி இருக்கிறது, நல்லது கேட்டது என்பதை நாமே அலசி ஆராய வேண்டும், நெருங்கிய உறவுகளின் சிகிச்சையில் உணர்வுகளைக் கொண்டு முடிவெடுப்பதை விட்டுவிட்டு (கொஞ்சம் சிரமம்தான்), கொஞ்சம் புத்தியை கொண்டு கேள்விகள் கேட்டு தெளிந்து முடிவெடுப்பது நல்லது!
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment