அவர்கள் வியாபாரம் செய்ய வந்தார்கள்
இவர்கள் முழுக்கவே வியாபாரிகள்
அவர்கள் நம் நாட்டைச் சுரண்டினார்கள்
இவர்களும் பொதுத்துறைகளை விற்று
தனியார் கடன்களை தள்ளுபடி செய்து
அதையே செய்துக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் பிரிவினைகளை வளர்த்தார்கள்
இவர்கள் பிரிவினைகளில்தான் செழிக்கிறார்கள்
அவர்கள் கொத்துக்கொத்தாக
மக்களை கொன்றார்கள்
இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக
உதவாத திட்டங்களின் மூலம்
பிரிவினை அரசியல் மூலம்
மக்களை கொல்கிறார்கள்
அவர்கள் வரலாற்றில் கொஞ்சமே கொஞ்சம்
அறிவுடன் செயல்பட்டார்கள்
இவர்கள் மறைகழண்ட அறிவோடு
நிறைய ஆணவத்தோடு
நாளும் வரலாற்றை திரிக்கிறார்கள்
அவர்களின் அரசி பெண்
பெண்ணுரிமை பேணினார்கள்
இவர்கள் தலைமை நடிகர்கள்
நாளும் வன்கொடுமைகளை மறைத்து
பாலியல் குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறார்கள்
அவர்கள் சுயநலத்துக்கேனும் நாட்டின்
கட்டமைப்பை பலப்படுத்தினார்கள்
இவர்கள் வியாபாரிகளின் சுயநலத்துக்காக
இருக்கும் வளங்களை
அழித்துக்கொண்டிருக்கிறார்கள்
அவர்களிடமும்
இந்த நாட்டின் எட்டப்பன்கள் கட்சி மாறி
மதம் மாறி கொள்கை மாறி
பிறர் ரத்தத்தை உறிஞ்சினார்கள்
இவர்களிடமும் மாநிலத்துக்கு மாநிலம்
எட்டப்பன்கள் பதவிக்காக பணத்திற்காக
பல்லிளிக்கிறார்கள்
சொந்த மண்ணின் மொழி, உரிமை
அழிக்கிறார்கள்
அவர்கள் மொத்தமாய் சுரண்டி
ஓடிவிட்டார்கள்
இவர்கள் மொத்தமாய் சுருட்டிக்கொண்டு
நம்மை தேச விரோதி என்று விரட்டுகிறார்கள்
அவர்களும் கொள்ளையர்கள்தான்
இவர்களும் கொடூரர்கள்தான்
அவர்களிடமிருந்து விடுபட 200 ஆண்டுகளானது
இவர்களிடமிருந்து விடுபட
சூடும் சுரணையும் மிகும் ஆண்டு வரவேண்டும்
எதை வேண்டுமானாலும் செய்
எனக்கு பதவியைக் கொடு என்று அடிபணிகிறார்கள்
சாதித்தலைமைகள் மதப்போர்வையில்
இவர்களை நம்பும் மக்களோ
உரிமைகளை பறிகொடுத்து ஒரு கேடுகெட்ட வரலாற்றை
வருங்காலத்திற்காக விட்டு வைக்கிறார்கள்
அவர்களும் இவர்களும் யாரென்று உலகுக்குத் தெரியும்
ஆனாலும் குருட்டுப்பூனைகளாய் மக்கள்
விடியல் வரும் காலமே உண்மையானச் சுதந்திரம்!
No comments:
Post a Comment