Monday 25 April 2016

மறதியே_கொடை‬

அலைக்கற்றை ஊழலில்,
கும்பகோண மகாமகத்தையும்,
கல்யாண அட்டகாசத்தை மறந்தோம்,
பின்பு பத்திரிகை அலுவலக எரிப்பில்
உயிரிழந்த ஊழியர்களை மறந்தோம்!

ஒற்றைக்குடும்பம்,
தமிழ்நாட்டின் கோடீஸ்வர
முதலாளிகள் ஆனதை மறந்தோம்,

பேருந்து எரிப்பில்
உயிரிழந்த மாணவிகளை மறந்தோம்,
வயதில் மூத்த மருத்துவர்
அவமதிக்கபட்டதை மறந்தோம்,

பள்ளிக்குழந்தைகள்
உயிரிழந்ததை மறந்தோம்,
பள்ளிக்கல்வியின்
குறைபாடுகளை மறந்தோம்,

சமஸ்கிருத வாரம் கொண்டாடியதை
திருவள்ளுவர் சிலையில் மறந்தோம்,
ஈழப்படுகொலைகளை மறந்தோம்,
ஒருமணி நேர
உண்ணவிரதக் கூத்துக்களை மறந்தோம்,

சொத்து வழக்குகளை மறந்தோம்,
தொழில்கள் நலிந்து போனதை மறந்தோம்,
விவசாயிகளின் தற்கொலைகளை மறந்தோம்,

9000 கோடியை
எளிதில் இழந்ததை மறந்தோம்,
வருமானத்தின் சேமிப்புத்தொகையை
திரும்பப்பெற நிர்ணயித்த
வயதுவரம்பு கேலிக்கூத்தை மறந்தோம்
கூடங்குளத்தை மறந்தோம்,

கெய்யிலுக்கு இட்ட கையெழுத்தை மறந்தோம்,
நியூட்ரினோவை மறந்தோம்,
மக்களுக்கு எதிராக
உதிர்த்தப் பொன்மொழிகளை மறந்தோம்,

பெட்ரோல், டீசல், பால், பேருந்து
கட்டண உயர்வுகளை மறந்தோம்,
போபர்ஸ், சவப்பெட்டி,
ஆதர்ஷ் வீடுகள் என எல்லாவற்றையும் மறந்தோம்,

கொலைகள், ஊழல்கள், கொள்ளைகள்
என அவ்வப்போது மறந்தோம்
இவர்கள் அவர்கள் என எல்லோரும்
நாம் தண்ணீரில் மூழ்கியபோது
ஓடிப்போனதையும் மறந்தோம்

கழுத்தைப்பிடித்து வரிகளை வசூலித்து
மலிவான தரமற்ற பொருட்களில்
இலவசமானது நம் மானமென்பதையும் மறந்தோம்

அட மறந்தால் என்ன?
அடிக்கும் வெயிலில் நாம்
மூழ்கடித்த வெள்ளத்தை மறப்பது இயல்புதான்
இந்த வெயிலில் நிகழும் மரணங்களை
பின் ஒரு பூகம்பத்திலோ
ஆழி வெள்ளத்திலோ
மறக்கப்போவதும் அப்படித்தான்

மரங்கள், மலைகள் வளங்கள்
அழிந்து கொண்டியிருக்கும் தேசத்தில்
வண்ணத்திரை ஊழியர்களின்
சந்தர்ப்பவாத அரசியல் அறிமுகத்தில்
நாம் எல்லாவற்றையும் மறப்போம்

குடிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
சாராயம் நிறைந்திருக்கும் போதையில்
நாம் மதியை இழப்போம்
சாதியும் மதமும் கொம்பு சீவிவிட்டு
வருகையில் நாம் உயிரையும் இழப்போம்

இந்த தேர்தலில்
வருகிறவர்கள் வரலாம்
இது இலவச ஏல பூமி
பாடங்களை பள்ளியில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
மறந்துப்போகும் மனிதர்கள் நிறைந்த பூமி

எங்கள் ஒருவிரல் ஆயுதத்தை
நாங்கள் உணரும்வரை
எங்கள் முதுகெலும்பு நிமிரும்வரை
வருகிறவர்கள் வரலாம்
அதுவரை எங்களின் (மக்களின்) மறதியே‬
உங்களின் (அரசியல்வாதிகளின்) கொடை!!!
 

Thursday 21 April 2016

எது காதல், எது காதல் இல்லை?

சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தில், இரவுநேரப் பணியில் இருந்தபோது, பெண் ஊழியர்,  தான் உடனே வெளியே போகவேண்டும் என்று அழுதார்.  அப்போது இரவு மணி, பன்னிரெண்டு. நாங்கள்  அந்தப் பெண்ணிடம், "பணி நேரத்தில் எங்கே போக வேண்டும்? ஏன் போக வேண்டும்?" என்றபோது, தன் காதலர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருப்பதாகவும், உடனடியாக தான் பார்க்கச் செல்லாவிட்டால் அவர் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாகவும் சொன்னார் .

நள்ளிரவு நேரம் என்பதால் அந்த நேரத்தில் நிச்சயம் அந்தப் பெண்ணை வெளியே விட முடியாது என்று தெளிவாகச் சொல்லி மறுத்து விட்டோம். அதற்குபிறகு அந்தக் காதலன் தற்கொலை செய்யவில்லை என்று மட்டும் தெரியும், மற்றபடி அதை நான் மறந்தே விட்டேன்! எங்கோ இருக்கும் காதலனைப் பார்க்க, அந்த நேரத்தில் அந்தப் பெண்ணைத் தனியே வெளியே அனுப்பினால் அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதைப் பற்றி அந்தக் காதலன் யோசிக்கவும் இல்லை, கவலைக் கொள்ளவும் இல்லை என்பதை நினைத்து பார்த்தபோது அந்த பெண்ணின் காதல் சரியானதுதானா என அவளை எண்ணி கவலைகொண்டோம். 

இது ஓர் உதாரணம் மட்டுமே, இந்தக் காதல் காதல் என்று நாம் எதைச் சொல்கிறோம்?
ஆனால் எது காதல் எது காதல் இல்லை என்று பெரும்பாலும் பெண்களுக்கு வாழ்க்கையைத் தொலைத்த பின்னரே தெரிகிறது!  

எந்தச் சாதி என்றாலும், வீட்டில் ஆணோ பெண்ணோ குழந்தையை வளர்க்கும்போது அவர்களைப் பொம்மைகளைப் போல் வளர்ப்பதும், தன் வீட்டு செல்ல நாய்க்குட்டியைப் போல் நினைப்பதும், அவர்களின் உணர்வுகளைப் பெற்றோர் உணர்ந்து கொள்ள முடியாததற்கு ஒரு பெரும் காரணம், உணவு முதல் உடை வரை நாங்கள்தானே செய்தோம், நீ எனக்குக் கட்டுப்பட்டவள்/ வன் என்ற நினைப்பும் கூட மற்றுமொரு காரணம்!

இது மாற, ஒரு கட்டம் வரை பெற்றோராக, ஒரு கட்டத்தில் தோழமையாக, ஒரு கட்டத்தில் ஆசானாக இருக்க வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு உண்டு!
உணர்வுகளை மதித்து, உணர்வுகளுக்கு வழிகாட்டி இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பெற்றோர்கள் தோழமையுடன் மாறி பிள்ளைகளை வளர்க்கும்போது, திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுவதோ, அல்லது ஆள் அனுப்பி வெட்டுவதோ அல்லது தூக்கு மாட்டிக் கொண்டு சாவதோ நிகழாது! “எது நடந்தாலும் என் விருப்பத்திற்கே உன் திருமணம்” என்று பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்களும் முறிந்து போகிறது,  “எப்படி இருந்தாலும் என் விருப்பம்” என்று பிள்ளைகள் செய்து கொள்ளும் திருமணங்களும் கூட முறிந்து போகிறது.  யார் விருப்பம் என்றாலும், வாழ்க்கையைச் சரியாய் அமைத்துக் கொள்ளச் சாதியைத் தவிர்த்து அடிப்படையான பல்வேறு காரணிகள் இருக்கிறது, அந்தக் காரணிகளைக் காதலிப்பவர்களும், பெற்றோர்களும் சரியாய் புரிந்து கொண்டு, அவைகளை மட்டும் சரிபார்த்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் /கொடுத்தால் அந்தத் திருமணங்கள் பெரும்பாலும் முறிவதில்லை!

அப்படியே முறிந்தாலும், உறவும் சுற்றமும் ஆதரவாய் இருந்து, வாழ்க்கையைச் சரி செய்வதற்கோ அல்லது பிறிதோர் வாழ்க்கையைச் சரியாய் அமைத்துக் கொள்வதற்கோ முன்வர வேண்டும்! இதையெல்லாம் விடுத்துப் பெற்றோர்களைக் காயப்படுத்திவிட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளின் உணர்வுகளை உயிர்களைக் கொன்று விட்டு பெற்றோர்களும் நிம்மதியாய் வாழ்ந்திடல் முடியாது!

காதல் என்று ஏன்  தோன்றுகிறது?

தோழமையற்றப் பெற்றோர் கிடைக்கப்பெற்றவர்கள், வீட்டின் சூழ்நிலை இறுக்கமாய் இருக்கும் சூழலில் வளர்பவர்கள், அம்மாவும் அப்பாவும் எதிர் எதிர் துருவங்களாய் கிடைக்கப்பெற்றவர்கள், அல்லது வேறு ஏதோ சூழலில் மனதில் வெறுமை சூழ வாழ்பவர்கள், போலியான காதலுக்கு எளிதாய்ப் பலியாகிறார்கள்! யாரோ ஒருவன் ஆறுதலாய், சில வார்த்தைகள் பேசினாலும், அவனிடம் முழுதும் சரணாகதி அடைகிறார்கள், மற்ற எல்லாமும் முக்கியமற்றதாய் போய் விடுகிறது,

அன்பிற்காக ஆறுதலுக்காக, தன் உணர்வுகள் மதிக்கபடுவதன் அவசியத்தைத் தேடிக் கொண்டே இருக்கும் பெண்களுக்குப் பெரும்பாலும் போலியான தேவதூதன்களே கிடைக்கிறார்கள், சிலருக்கு மட்டுமே காதல் கணவன் ஒரு மிகச் சிறந்த தோழனாய் அமைகிறான், அவன் எந்தச் சாதி என்றாலும்!

வறண்ட நிலத்தில் விழும் ஒரு துளி நீரில் நிலம் கிளர்ச்சிக் கொள்வதைப் போலப் பெண்ணும் ஓர் அன்பான வார்த்தையில் கிளர்ச்சிக் கொள்கிறாள், எது சரி எது தவறு, இவன் நமக்குச் சரியான வாழ்க்கை துணையா, இப்போது படிப்பை நிறுத்தி இந்தக் காதல் தேவையா, படித்து முடித்ததும், பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்கித் திருமணம் செய்யலாமே, படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல், திருமணம் செய்து கொண்டு, நாளை குழந்தைக் குடும்பம் என்றான பின்னர், நம் தேவைகளுக்கு என்ன செய்வது என்று பெரும்பாலும் பெண்கள் யோசிப்பதேயில்லை!

தேவதை என்று தன் மகளைக் கொண்டாடி விட்டு அவள் சுயமாய் எடுக்கும் முடிவுக்கு வெகுண்டு, கொலையும் செய்பவர்கள், பெற்ற பிள்ளைக்கு மணம் முடிக்க, பெண் பார்க்கும்போது, அழகையும் பணத்தையும் பார்ப்பவர்கள் கூட, அவள் தன் மகனின் குணநலனுக்கு ஏற்றவளா, அல்லது அவன் தன் பெண்ணின் குணநலனுக்கு ஏற்றவனா என்று எந்தப் பெற்றோரும் பார்ப்பதில்லை, இப்படியே ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே போகலாம்!

வீட்டில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே சமூகத்தில் பெண்கள் பலியாவதைத் தடுக்கும்.  காதல் என்றாலும், வீட்டுச் சண்டை என்றாலும், நாட்டில் நடக்கும் யுத்தம் என்றாலும், எதிலும் எங்கும் முதலில் பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! காதலுக்கு எது ஏற்ற வயது என்று சட்டம் போட்டு நிர்ணயிக்கலாம், ஆனால் உணர்வுகளுக்கு...? பதினாறு வயதில் ஓடிப்போவதும், அறுபது வயதில் காதலிப்பதும் இதனால்தான்! இவைகளை நாம் விமர்சித்து ஒன்றும் ஆகப்போவதில்லை,  சில கொலைகளையும் பல தற்கொலைகளையும் தவிர!

http://www.vikatan.com/news/vasagar-pakkam/61085-the-defenition-of-love-in-the-society.art
 

கீச்சுக்கள்

தன் வீட்டு பெண்மையை, அவள் தாயோ, மனைவியோ, மகளோ, சகோதரியோ, அத்தையோ, சித்தியோ, உறவுப்பெண்ணோ, அவளையும் மனுஷியாகப் பாவிக்கும் ஆண்கள் சூழ் உலகில், பெண்கள் தோற்றுப் போவதேயில்லை!

******************
 

விதி‬

#‎அணுக்கதை‬
மனைவி நை நை என்று நச்சரித்ததால் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை, அந்த தேசிய நெடுஞ்சாலையின் நடுவே, தன் ஒரு கையில் அணிச்சையாய் கழட்டி, சேகர் தலைக்கோதி கொண்டபோது, அவன் பின்னே ஒரு மகிழுந்து தள்ளாட்டத்தில் வந்து கொண்டிருந்தது!
‪#‎விதி‬

மிகச்சாதரண மனிதர்களே

சிட்டி சென்டர் அருகே சாலையில் சிகப்பு சிக்னல், வாகனங்கள் நிற்கின்றன, இருசக்கர வாகனங்களில் இருக்கும் சிலர், கொஞ்சமாய் நிறுத்தக் கோட்டை தாண்டிச் சென்று, கொஞ்சம் தயக்கமாய் போக்குவரத்து அதிகாரியைப் பார்க்கிறார்கள், அவர் நடைபாதையோர நிழற்குடையின் கீழே சாய்ந்து அமர்ந்திருக்கிறார், மாதம் பிறந்து இரண்டு தேதி ஆகிவிட்டது அவர் அசையாமல் இருப்பதில் தெரிகிறது!

இப்போது பைக் ஓட்டிகள் அவரை விட்டு சாலையை பார்க்கின்றனர், இன்னமும் அவர்களுக்கு பச்சை விளக்கு விழவில்லை, சிறிது தூரத்தில் வண்டிகள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றன, இப்போது ஒருவன் சிக்னலைப் புறக்கணித்து முன்னே செல்கிறான், அவனைத்தொடர்ந்து மற்றவரும் முன்னே செல்ல, சரியான சிக்னலில் எதிர்ப்புறம் வந்த வாகனங்கள் பாதி வழியில் தயங்க, அதே திசையில் வேகமாய் வந்த கார் ஒன்று நிற்காமல் வேகமாய் கடுப்பில் அடித்த ஹாரனில், சிக்னலை மதிக்காதவர்கள், அந்த காரின் வேகத்துக்கு பயந்து பின்னே செல்ல சாலையின் சிக்கல் சரியானது! 

இப்படித்தான் நம்முடைய சாரசரி வாழ்க்கையும் அரசியலும், ஒருவன் மதிக்காத சட்டத்தை நாமும் எதற்கு மதிக்க வேண்டும் என்று, சட்டம் உறங்கும் போது குருட்டு தைரியத்தில் ஒருவன் செய்யும் தவறை தானும் செய்யும் மக்களைப் போல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்கின்றனர்!

அந்த தவறு கண்டுக்கொள்ளப்படாத போது தொடர்ந்து தவறுகள் நடக்கின்றன, யாரோ ஒருவன் அறச்சீற்றத்தில் பொங்க, பயந்து அடங்கும் சில மனிதர்களைப் போல, நேர்மையான அதிகாரிகளும், சுய ஒழுக்கம், கட்டுப்பாடு மிகுந்த மக்களும் மிகும்போது இந்த அரசியல்வாதிகளும் திருந்துவார்கள்!
நம்முடைய வீடு என்று நினைப்பதைப் போல, நம்முடைய நாடு என்று நினைக்க வேண்டும், என்னுடைய குடும்பம் என்று நினைப்பதைப் போல என்னுடன் வாழும் சக மனிதர்கள் என்று நினைக்க வேண்டும், இப்படிப்பட்ட நினைப்பு வரும்போது மக்களுக்கு பொறுப்பும் தானாக வரும், பொறுப்பு வந்தால் மனிதர்களின் குணங்களும் சீர்படும், சிந்தனையும் நேராகும்!

அதுவரை, சாலையில் யாரும் கேட்கவில்லை, பார்க்கவில்லையென்றால் தறிகெட்டு ஓடி, விதிமுறைகளை நசுக்கி பிற உயிர்களைக் கொன்றுச் செல்லும் சாதரண மக்களை ஆளும் அரசியல்வாதிகளும் மிகச்சாதரண மனிதர்களே, மாற்றமெனும் புரட்சி வரும்வரை!

நல்லா_இருந்த_ஊரும்_தேர்தல்_கூட்டணிகளும்‬

#‎அணுக்கதை‬
ஆட்டைக்காணோம் என்று பஞ்சாயத்துக்குப் போன சுடலையிடம், வழக்கு செலவுக்காக கோவணத்திலிருந்த வெள்ளி அரைஞாண் கொடியை உருவிக்கொண்டது தலைவர் கூட்டம்!
‪#‎நல்லா_இருந்த_ஊரும்_தேர்தல்_கூட்டணிகளும்‬

கீச்சுக்கள்

உண்மையில் எந்தக் கட்சி தலைமைக்கும், மதத் தலைமைக்கும் அறிவாளிகள் தேவையில்லை, ஆட்டு மந்தைகளே தேவை! மதச் சாயங்கள், மனிதர்களை உருவாக்குவதில்லை!

**************************

ஆயாவும் அப்பத்தாவும் "பல்லுல வேப்பங்குச்சிய தேயு, பல்வலிக்கு லவங்கத்தையும், உப்பையும் எடு"ன்னு சொன்னதெல்லாம் பழையகாலக் குப்பைன்னு ஒதுக்கி வெச்சு, "ஓ பல்வலியா, இந்தா உப்பு பேஸ்டு, பற்கூச்சமா இந்தா லவங்க பேஸ்ட்னு" நடிகைகள் நடிகர்கள் பறந்து வந்து கூவி கூவி விக்குற அதேதான் நமக்கு நாகரீகமா தெரியுது!
பாருங்க பாருங்க நாடு போகுற போக்குல சீக்கிரமே "வாவ் இதுதான் அரிசி இதுல நிறைய கார்ப்போஹைட்ரேட்ஸ் இருக்கு, இது கேழ்வரகு, இந்தக் கூழு உங்களுக்கு நிறைய சக்தித் தரும்"ன்னு மைதாவில் மார்க்கெட் பண்றவங்க எல்லாம் தானியங்களை ஒருநாள் மார்க்கெட் பண்ணுவாங்க, யாராவது நடிகையோ நடிகரோ வந்து அப்போ விளம்பரம் செய்வாங்க, விலையும் கூடிப்போகும்!
‪#‎விளம்பரம்‬!
******************************

மாற்றம் வந்துவிட்டதாய் சொல்கிறார்கள், எந்த பக்கம் பார்த்தாலும் அதே அரசியல்வாதிகள்தான், நிற்கும் திசைகளை மட்டுமே மாற்றிக்கொள்கிறார்கள்!
குடும்ப அரசியல், ஏகாதிபத்திய தலைமை, உளறல் அரசியல், சாதி அரசியல், திரை அரசியல், கோஷ்டி அரசியல், மத அரசியல்.....
மாற்றம் மாற்றம் ஏமாற்றம் இந்த ‪#‎ஓட்டரசியல்‬!

******************************
அவரவர் மனசாட்சியை மீறிய ஒரு நீதிபதி இருந்துவிட முடியாது
அந்த நீதிபதியால் மட்டுமே உலகம் இயங்குகிறது இன்னமும்!

****************************


வெயிலில்‬ (ஒரு காதல் கடிதம்)

கொளுத்தும் வெயிலில்
நீ கடுகடுவென கடந்த
நினைவுகளே சுழல்கிறது
இப்போதும் வியர்க்கிறது
ஒரு விசிறியாய்
வந்துவிடேன் அன்பே
மார்கழி பனிமூட்டம்
காணும் ஆவலில்
நானும் நகரமும்!

‪#‎வெயிலில்‬ (ஒரு காதல் கடிதம்)

மனது



நினைப்பது எதுவோ
நடப்பதும் அதுவே
விதி வழியது
வாழ்க்கையுமில்லை
கெடுமதியது
வாழ்வதுமில்லை


எண்ணங்களைச் சிதறவிட்டு
தீர்க்க முடிவது ஏதுமில்லை
எண்ணங்களில்
நம்பிக்கைக் கொண்டால்
தீராததுமில்லை

வணங்கும் கடவுளர்கள்
இதைச் சொல்ல வருவதுமில்லை
உள்ளிருக்கும் ஒன்றை
உண்மையென்று மனிதம்
அறிவதுமில்லை

கால்களை மறந்து
தூரத்தை அளந்து பயணமில்லை
எப்போதும் நிழலை
துணையென நினைத்தால்
வாழ்வில் முன்னேற்றமில்லை

நினைப்பது எதுவோ
நடப்பதும் அதுவே
இதில் ஆன்மீகமில்லை
அறிவியலுக்கு வசப்படாத
மனிதனின் மனது
வெறும் குப்பைக் கூளமில்லை!
‪#‎மனது‬

முன்னெச்சரிக்கை‬

#‎அணுக்கதை‬
"ஏன்டா நான் அவன புடிச்சு இவன புடிச்சு ரோடு கான்ட்ரக்ட் எடுத்திருக்கேன், நீ என்னடானா ஒரு வாரம் உன் ஆளுங்கள வேலைக்கு அனுப்பாமா இப்போ என்கிட்டே வந்து கூலிப் பட்டுவாடா பண்ணப் பணம் கேக்குற, என்னடா கொழுப்பா?" என்று மேஸ்திரியிடம் கத்திக் கொண்டிருந்த அமைச்சரின் பினாமி கார்மேகத்தின் அருகே வந்த பி ஏ, பணிவாய் அவர் காதுகளில் சொன்னார்,
"ஏங்க நம்ம அமைச்சர் வருஷா வருஷம் திட்டம் மட்டும் போட்டுக் காட்டிகிட்டே ஜனங்கள ஏமாத்துறார், நாம பாதி ரோடே போடாம அவரை ஏமாத்துறோம், இவன் நம்மைப் பார்த்து வேலைக்கே வராம கூலி கேக்குறான், அவன இப்பவே ரெண்டு தட்டுத் தட்டுங்க, இல்லைனா நாளைக்கே மந்திரியானாலும் ஆயிடுவான்!!!"

இறுதி_நொடி‬

வறண்ட பாலைவனத்தில்
கைக்கொள்ளா விதைகளோடு
நிற்கிறேன்
கிணற்றுத் தண்ணீர்
சுமக்கும் உனக்கு
நிழலில் நம்பிக்கையில்லை
வானம் பார்த்துக் காய்கிறேன்
அன்பு வற்றிப் போன
உன் மனதின் முன்பு!

கீச்சுக்கள்

யாரோ ஒருவரின் விருந்தில் ஊறுகாயாய் இருப்பதை விட, வறியவரின் பசி தீர்க்கும் நீர் ஆகாரமாய் இருந்து விடலாம்!
ஆணவம் நிறைந்திருக்கும் இடத்தில் அன்பிற்கு வேலையில்லை!

*********************

கட்சிகள்;
1. பிரச்சாரம் செய்ய வருபவர்கள் ஏசி கார்களில் வலம் வராமல், மொட்டை வெயிலில் முதலில் நடந்து பழகி, அவர்கள் வெட்டிய மரங்களின் வலி உணரட்டும்
2. முன்னேயும் பின்னேயும் பஜனை கோஷ்டிகளைத் தவிர்த்து வீதிகளில் மக்களோடு மக்களாய் பயணித்து, சாலையின் அவலட்சணத்தை ஜீரணிக்கட்டும்
3.நாள் முழுக்கப் பயணம் செய்து, ஆத்திர அவரசத்துக்குச் சாலையில் கட்டணப் கழிப்பிடங்களைத் தேடி, சுகாதாரத்தைச் சந்திக்கட்டும்
4. பயணக் களைப்பில் கிடைக்கும் சாதாரண உணவகங்களில் உணவு தேடி, கலப்படம் என்பதன் ஆரம்பக் கொடூரத்தை அறியட்டும்
5. கொடுமையான வெயில் பயணங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் கிடைக்கும் நீரை அருந்தி, தாகத்தின் தரத்தை உணரட்டும்!
மக்களின் இதுபோன்ற எந்த அடிப்படைப் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ளாமல், ஏசி காரில் தொண்டர்படை சூழ, பவனி வருபவர்களுக்கு, தமிழக மக்கள் என்பவர்கள் மூழ்கடிக்கும் வெள்ளத்திலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் எப்போதும்
"‪#‎வாக்காள_பெரு_மக்கள்தான்‬!"

************************

எந்தக் கட்சி என்று தெரியவில்லை, தெருவில் ஏதோ ஒரு வண்டியில், கட்சிப் பிரச்சாரம் செய்து கொண்டே சென்றார்கள், காதுக்குள் வந்து விழுந்தது எல்லாம் "இலவசம், இலவசம்" என்ற கோஷங்கள் தான்,
"அதிமுக மூணு சென்ட் நிலம் கொடுக்கிறேன் என்று சொன்னார்களே, செய்தார்களா" என்று திமுகவின் விளம்பரங்கள்,
"இந்த முறை ஒட்டுப் போட்டீர்கள் என்றால் இதெல்லாம் இலவசம்" என்று அதிமுகவின் விளம்பரங்கள்,
இப்படியே ஒவ்வொரு கட்சியின் இலவச விளம்பரங்கள், மலிவான இலவசங்களை அளிப்பதற்கு ஆட்சி எதற்கு?
வறுமையை ஒழித்து, மக்கள் சுய கௌரவத்தோடு நல்ல கல்வியையும், வாழ்வதற்கான அடிப்படைகளையும் அவர்களே அமைத்துக் கொள்ளும் சூழலை உருவாக்கி தருகிறேன் என்று எந்தக் கட்சியும் சொல்லவில்லை, உங்கள் கஜானாவில் இருந்து உங்களுக்கு அள்ளித் தருகிறோம் என்று சொல்கிறார்கள், அதில் நாங்கள் கொஞ்சம் கிள்ளிக் கொள்வோம் என்ற செய்தியும் இருக்கிறது ...
மத்தியிலும் மாநிலத்திலும் இந்த அரசியல்வாதிகளின் அறிக்கைகைகளைப் பார்க்கும்போது, இந்தியர்கள் அனைவரும் பிச்சைக்காரர்களாய், பாராரிகளாய் திரிவது போலவும், இந்த அரசியல்வாதிகள் அனைவரும் தேவலோகத்தில் இருந்து மக்களுக்காக அள்ளிக் கொடுப்பதற்கே வந்த கர்ணன்களைப் போலவும் தெருக்கூத்துக் காட்சி ஒன்று மனதில் ஓடுகிறது!
‪#‎ஓட்டரசியல்‬

**************************

அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள், அவர்கள் மக்களுக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும், அவர்களின் தொழிற்சங்களுக்குள் எதற்கு கட்சி நிலைப்பாடு?
கட்சி அபிமானிகளுக்கு கட்சியே சம்பளம் தரட்டுமே, உங்களுக்கு எதற்கு மக்களின் (அரசு) வேலை, மக்களின் (சம்பளம்) பணம்?


********************************

ஆட்டிசம், டிஸ்லெக்‌ஷியா குறைபாடுகளைப் போன்று, "அம்னிசியா" தமிழக அரசியல்வாதிகளின் அதிகாரப்பூர்வ குறைப்பாடாகிவிட்டது, நாளொரு பொய், பொழுதொரு அறிக்கை! நாமும் கூட அதை சகித்துக் கடந்துக் கொண்டே இருக்கிறோம் ஐந்து வருடங்களுக்கொருமுறை!
உலக நாடுகள் தேர்தல் காலத்தை "அம்னிசியா" தினமாக அறிவித்து விடலாம்!

**********************************

கணக்கற்ற வகையில் மக்களைத் துன்புறுத்துவது அதிகாரியோ, அரசியல்வாதியோ, காலம் நிச்சயம் ஒரு கணக்கில் இவர்கள் வன்முறை கணக்கை நேர் செய்யும், அது நிச்சயம் குமாரசாமி கணக்காக இருக்காது!

*******************************
ஒவ்வொரு குடும்பமும், வியாபாரமும் வரவு செலவு கணக்கில்லாமல் வரைமுறையின்றி செலவுகள் செய்ய முடியாது, ஒரு நாட்டின் வரிப் பணத்தையும் வரவு செலவு கணக்குப் புரியாமல் அள்ளித் தெளிக்க முடியாது!
ஆனால் இங்கே ஒவ்வொரு கட்சிகளும் "இலவசங்கள்" என்று வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக் கூவிக்கொண்டருக்கின்றனர். மக்களின் வரிப்பணம் மக்களுக்காகத்தான், அது மலிவான இலவசப் பொருட்களை வாரியிரைத்து, அதன் பின்னே அரசியல்வாதிகள் கொழிப்பதற்கு அல்லவே!
கல்வியையும், மருத்துவத்தையும், சுகாதாரத்தையும் இலவசமாக்குங்கள் மற்ற கட்டமைப்புகளை சீர் செய்யுங்கள், போதும், மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு மலிவான பொருட்களை வீசியெறிந்து பிச்சைகாரர்கள் ஆக்க வேண்டாம்!
‪#‎ஓட்டரசியல்‬

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம்‬

#‎ஸ்ரீ_பெரும்புதூர்_தாலுகா_அலுவலகம்‬
நீதிமன்றத்தில் நில சம்பந்தமாக நாங்கள் தொடுத்திருந்த வழக்குக்காக, நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து, இன்று மதியம் மூன்று மணிக்கு ஆவணங்களுடன் ஸ்ரீ பெரும்புதூர் வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வருமாறு எங்களுக்குக் கடிதம் வந்தது.

சரியான நேரத்திற்குச் சென்னையில் இருந்து நண்பனுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு மதிய வெயிலில் போய்ச் சேர்ந்தபோது, தாசில்தார் இல்லை,
"அவர் கலெக்டரின் மீட்டிங்குக்குப் போயிருக்கார்" என்றார் உதவியாளர்,

"எங்களே மூணு மணிக்கு வரச் சொல்லிட்டு, இப்போ அவரு இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்?, நாங்க ஆபீசுக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கோம்" - நான்

"மேடம், நீங்க வரதுக்கு முன்னாடி போன் பண்ணியிருக்கலாம், எலெக்க்ஷன் டைம், கலெக்டர் கூப்பிடும்போது அவரு போயாக வேண்டி இருக்கு" - உதவியாளர்

"எலெக்க்ஷன் டைம் தான் மேடம், பட் நீங்கதானே கோர்ட்டில் இருக்குற கேசுக்காக இந்தத் தேதியிலே, இந்த நேரத்திலே வந்தாகணும் லெட்டர் போட்டு இருக்கீங்க, நீங்க போன் பண்ணிட்டு வரணும்னு சொல்லவேயில்லையே, அதிலும் போன் நம்பர் கூட இல்லை , சரி உங்க தாசில்தார் நம்பர் கொடுங்க, நான் போன் பண்றேன்"

"ஆ சார் நம்பர் லாம் கொடுக்க முடியாது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"

சிறிது நேரம் காத்திருந்த நேரத்தில், அங்கே பொதுமக்களுக்குக் கழிவறை வசதியே இல்லை என்றார்கள், அவர்களுக்கென்று அலுவலக அறையில் இருந்த கழிவறையை உபயோகித்துக் கொள்ளச் சொன்னபோது அங்கே அந்தக் கழிவறை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதிமனிதன் முதன் முதலாகக் கட்டிய கழிவறை போன்று இருந்தது, விளக்கும் கூட இல்லை, கும்மிருட்டு!

"என்ன மேடம் உங்க ஆபீஸ்ல பாத்ரூம் கூடச் சரியா இல்லே?"
" இங்கே எல்லாம் அப்படிதாங்க, ஒன்னும் பண்ண முடியலே"
"ஏங்க எதுஎதுக்கோ ஸ்ட்ரைக் பண்றீங்க, உங்களோட அடிப்படை வசதிக்காக எதுவும் கேக்க மாட்டீங்களா?, என்னமோ போங்க"

கொளுத்தும் வெயிலில், பயணக் களைப்பில் வியர்வை பெருக்கெடுக்க, அந்த அலுவலகத்தின் சுகாதார நிலமையையும், அந்த ஊழியர்களின் வேலைச் சூழலையும் நினைத்து வருத்தப்பட்டு நொந்தபடிக் காத்திருந்தோம்...ஹ்ம்ம் ஹும்..தாசில்தார் வரும் அறிகுறியே இல்லை!

நான் உதவியாளரிடம், "ஏன் மேடம் உங்க தாசில்தாருக்கு நீங்களாவது போன் பண்ணி எப்போ வருவாருன்னு கேளுங்க"

சிறிது நேரம் கழித்து,
"மேடம், அவர் ரொம்ப முக்கியமான வேலையில் இருக்காராம், இது எலெக்க்ஷன் டைம் பாருங்க, வர சாயந்தரம் ஆகிடும்" - உதவியாளர்,
அப்போதே மணி நான்கைக் கடந்துவிட்டது

"மேடம், கோர்ட் உத்தரவுப் படி, விசாரிக்க எங்களைக் கூப்பிட்டு இருக்கீங்க, எதிர்த்தரப்பு வரவேயில்லே, நாங்க மட்டும் வந்திருக்கோம், நாங்க வந்து போனோம்ங்கறதுக்கு என்ன ஆதாரம், நாங்க வரலைன்னு நீங்க சொல்லி முடிச்சிங்கன்னா நான் என்ன செய்ய?"

"நீங்க அந்தளவுக்கு யோசிக்க வேண்டாம், நாங்க என்கொயறியே செய்யல, அதனால அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம், மறுபடியும் கூப்பிடுவோம்" - உதவியாளர்

"ஒருத்தரே நோட்டீஸ் கொடுத்துப் கூப்பிடுறீங்க, அதைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிக்காம, ஒரு குறைந்தபட்சம் தகவல் கூடச் சொல்லாம வந்தவங்களை ஜஸ்ட் லைக் தட் திருப்பி அனுப்பிறீங்க, உங்க தாசில்தார் எப்போ வருவேன், வருவேனா இல்லையா அப்படின்னு ஒரு தகவல் கூடச் சொல்லாம முக்கிய வேலைன்னு கிளம்பிப் போய்டுவார், எங்க வேலையெல்லாம் விட்டுட்டு வரப்போ அதைப் பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா ? மறுபடியும் எப்போ வரணும்ன்னு இனிமே தான் சொல்லுவார்ன்னு சொல்றீங்க, இங்கே என்னதான் நடக்குது...?" என்று கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்க,

"சாரி மேடம், நான் என்ன சொல்றதுன்னு தெரியலை" - உதவியாளர் ...
எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று நொந்தபடிச் சென்னைத் திரும்பினோம்.

"அரசியல்வாதிகளுக்குதான் பொதுமக்கள் வெறும் ஒட்டு எந்திரங்கள் என்றால், இந்த அரசுத்துறை அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு தகவல் சொல்லுவதற்குக் கூட யோசனையேயில்லையே ஏன்? தவிர்க்க முடியா காரணத்தில் சந்திக்க முடியாவிட்டாலும், தன் அலுவலகத்துக்கு நேரம் குறித்துக் கொடுத்துச் சந்திக்குமாறு தான் வரச் சொல்லியவர்களிடம், குறைந்தபட்சம் ஒரு மன்னிப்போ, அல்லது வேறு ஒரு நேரமோ குறித்துக் கொடுத்துச் செல்வதற்குக் கூட முடியாத இந்த நிலைமைக்குக் காரணம், பொதுமக்கள்தானே என்ற அலட்சியமா? அல்லது அரசு எந்திரத்தின் கோளாறா?

அரசு அலுவலங்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூடச் சரியாய்ச் செய்து தராத அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களாலும் குறைந்தபட்ச மக்கள் சேவையைக் கூடச் சரியாய்ச் செய்ய முடியவில்லை, கட்டமைப்புக்கள் சரியானாலும், இவர்களின் மனங்களின் அலட்சியப் போக்குச் சரியாகுமா? தெரியவில்லை!

கீச்சுக்கள்!

கூவத்தை சுத்தப்படுத்துவோம் என்று ஒவ்வொரு முறையும் ஓட்டுக் கேட்கும்போது ‪#‎வாக்குறுதி‬ தந்தார்கள், ஆமை வேகத்தில் அந்தப் பணியை அமைத்துக் கொண்டார்கள், பொறுத்துப் பார்த்த கூவம் வானத்திடம் முறையிட, வானம் தானே வந்து கூவத்தை கழுவித்தள்ளியது, இப்போது கச்சத்தீவை மீட்போம் என்கிறார்கள், மத்திய அரசும் அதற்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை என்பது போலவே இருக்கிறது, இருக்கும்! பார்த்துக் கொண்டே இருங்கள், ஏதோ ஒரு பூகம்பத்தில் கச்சத்தீவும் தானாய் நகர்ந்து வந்து ராமேஸ்வரத்திடம் ஒட்டிக்கொள்ளும்! 🤔

********************************************
மதிய வெயிலில் வெளியே சென்றிருந்தேன், நான்கு வயது மதிக்கத்தக்க தன் மகனுடன் சாலையைக் கடக்க ஒரு வறிய தாய் நின்று கொண்டு இருந்தார், வெயில் படாமல் இருக்க தன் புடவையின் முந்தானையை அவன் தலையில் போர்த்தியப்படி!
‪#‎அம்மான்னா‬ சும்மா இல்லைடா, நான் இதுபோன்ற அம்மாக்களை மட்டுமே சொல்கிறேன்! 😇

**************************************************
சில மாதங்களுக்கு முன்பு ஆளுங்கட்சியின் ஆபிசர், ஏதோ ஓர் அலுவலுக்குச் செல்ல வழியெல்லாம் போஸ்டர் ஒட்டி வழக்கம்போல் வரவேற்பு அமர்க்களப்பட்டது, செல்லும் வழியில் ஆஆ என்று போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டே சென்றபோது, ஒரு புறம் கூட்டத்தில் சில பெண்கள் யாரோ ஒருவரிடம் "இருநூறு ரூபாய்" எப்போது தருவீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள், அதற்கும் முன்பு இதே போன்று ஒரு வாக்குவாதத்தை, முன்னாள் எதிர்கட்சியின் ஒரு கூட்டம் முடிந்தபின்பு, இருநூறு ரூபாய் பணத்திற்கும், ஒரு சேலைக்கும் வரிசைக் கட்டி நின்றவர்களிடமும் காண வாய்த்தது!
லாரி, டெம்போ, வேன் என்று பலத்தரப்பட்ட வாகனங்களில் மக்கள் கூட்டம் ஒவ்வொரு கட்சிக்கும் அழைத்து வரப்பட்டு ஆள் பலம் காண்பிக்கப் படுகிறது, இதில் வருத்தம் என்னவென்றால், இதுவரை மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளும், கூட்டணியில் இருந்து கும்மியடித்த கட்சிகளும், பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்தும், வறுமையான ஒரு நிலையில் இருந்து தங்கள் வாழ்வை, தங்கள் குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்ட போதிலும், இன்னமும் ஒரு சேலைக்காகவும், இருநூறு ரூபாய் பணத்திற்காகவும் வேகாத வெயிலில் வாடி நிற்கும் நம் மக்களின் ஏழ்மை நிலையை மட்டும் மாற்றவேயில்லை இந்தக் கட்சிகள், மாறவும் இல்லை ‪#‎மக்கள்‬ என்னும் இந்த ஏழை முதலாளிகள்!

***************************************************************
எத்தனை போட்டிகளையும் எதிர்கொள்ளலாம், பொறாமைகளை எதிர்கொள்வதுதான் சிரமமாய் இருக்கிறது, அதுவும் முற்றிலும் பலரின் வாழ்க்கையை அழிக்க முற்படும் தீவிர அழுக்கடைந்த மனங்களை எதிர்கொள்ளும் போதும், கடக்கும் போதும் அத்தகைய கணங்களும், அம்மனிதர்களின் முகங்களும் பெரும் அயற்சியையே தருகிறது இந்த நவீன உலகத்தில்!
*****************************************************************
விஜயகாந்த் நாக்கைத் துருத்திக் கையை ஓங்குகிறார், அவர் பிரச்சனை அவருக்கு! மற்றும் ஒருவர் ஒருவரை அடித்தார் பின்பு செல்பி எடுத்து ஆறுதல் படுத்தினார்! ஆனால் மறுபுறம் ஒருவரின் தரிசனத்திலேயே பல பேர் மோட்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்!
‪#‎அரசியல்‬

*******************************************************************
ரேஷன் கடைகளில் போடுவது "அம்மா அரிசி இல்லை" அது "மோடி அரிசி", மத்திய அரசு 32 ரூபாய் மானியம் தருகிறது
- மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
ச்சே, எவ்வளவு பெரிய மனசு!? நான் கூட மக்களோட வரிப்பணத்தில் தான் இதை செய்யுறாங்கன்னு நினைச்சுட்டேன்!!!

*******************************************************************



மாற்றம்‬

டாஸ்மாக் சாராய வகைகளுக்கும், கோக், பெப்சி மற்றும் இன்ன பிற பானங்களுக்கும், "தொழிற் புரட்சி" என்ற பெயரில் கணக்கிலடாங்கா இடங்களிலும் தண்ணீர் வீணாகிறது, அரசியல்வாதிகள் மாற்றங்களைச் செய்யும் வரை, சிறு அளவில் இவைகளை உங்களால் செய்ய முடிந்தால் கொஞ்சமேனும் ‪#‎மாற்றம்‬ வரும்;

1. உங்கள் வீட்டு வாயிலில் அல்லது மொட்டை மாடியில் சிறு குவளையில் பறவைகளுக்கு அல்லது அகண்ட பத்திரத்தில் சாலையோர விலங்குகளுக்கும் சேர்த்து நீர் வையுங்கள்!

2. உங்கள் வீட்டில் அல்லது வீதியில் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து, சில மரங்களை நட்டு வையுங்கள்!

3. முடிந்தவர்கள் வாசலில் தண்ணீர் பந்தல் வைக்கலாம், சாலையில் போகும் மனிதர்களின் தாகம் தீர்க்கலாம்!

4. வழக்கம் போலச் சாலையோரத்தில் போக்குவரத்துத்துறை காவலர்கள், இந்த அரசியல்வாதிகளுக்காக வெயிலில் காய்கிறார்கள், அவர்களும் மனிதர்களே, போகும் வழியில் சில போத்தல்களில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கண்ணில் படுபவர்களுக்குக் கொடுக்கலாம்!

5. காலையில் பல் விலக்க, குளிக்க என்ற உங்கள் உபயோகத்திற்கு ஷவரை, குழாயைத் திறந்து விட்டு, தண்ணீரை வீணடிக்காமல் வாளியில் பிடித்து வைத்து அளவாய் உபயோகிக்கலாம்!

6. வீட்டில் எல்லா அறைகளிலும் ஆளுக்கொரு மின்விசிறியை, குளிர்சாதன எந்திரங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை வீணாக்குவதைத் தவிர்த்து முடிந்தவரை, முடிந்த நேரங்களில் ஒரே அறையில் இருந்து மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்!

7. நீங்கள் வாங்கும் பழங்களில், காய்கறிகளில் இருந்து விதைகளைத் தனியே எடுத்து வைத்து இப்போதும், பின்னரும் விதைக்கலாம், நீங்கள் போகும் பாதைகளில் மண் நிறைந்த இடங்களில் அதைத் தூவிச் செல்லலாம்!

8. நன்னாரி வேரை வாங்கி வந்து, அதைக் குடிநீரில் போட்டுக் கொதிக்க வைத்து, தேவையான அளவு, பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து வைத்து, தேவையான போது, கால் பங்கு இந்தச் சாரையும், முக்கால் பங்கு நீரையும் சேர்த்து, சிறிதளவு எலுமிச்சை சேர்த்துக் குடிக்கலாம். மோர், இளநீர் போன்ற இயற்கையான பானங்களைக் குடிக்கலாம், வாயு நிறைத்து விற்கும் பானங்களை வாங்குவதைத் தவிருங்கள், ஒட்டு மொத்தமாக எல்லோரும் தவிர்க்கும் போது, அவர்களின் உற்பத்தியும் குறைந்துப் போகும்.
நான் குடிக்காவிட்டால் என்ன பெரிய மாற்றம் வந்து விடும் என்று நினைக்காமல், மாற்றத்தை உங்களிடம் இருந்து துவங்குங்கள். உற்பத்திக் குறைய நாளானாலும் உங்கள் உடலில் ஆரோக்கியம் மேம்படும்!

9. உப்பை அளவாய் உபயோகிக்கவும், அதிக அளவு உப்புத் தாகத்தை அதிகரிக்கும், உடலுக்கு எந்த விதத்திலும் அது உங்களுக்கு நன்மை செய்யாது, அதிலும் வெயில் காலத்தில்!

10. அதிகளவில் கீரை, காய்கறிகள் போன்ற உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!

11. உங்களின் உபயோகப்படுத்தும் நிலையில் உள்ள பழைய காலணிகளைக் குப்பையில் வீசாமல், அதைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவுங்கள்! அல்லது உங்களால் முடிந்தால் காலணிகளை வாங்கித் தரலாம்!

12. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேர்தலில் உங்கள் தொகுதியில் நிற்பவரை, கட்சி, சாதி அபிமானம் தவிர்த்து, உங்கள் தொகுதிக்கு நல்லது செய்பவரை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் தமிழகத்தின் இத்தகைய இன்றைய நிலைக்கு, இதுவரை நாம் கண்மூடித் தேர்ந்தெடுத்தவர்களும், அவர்களைத் தேர்ந்தெடுத்த நாமுமே காரணங்கள்!

அரசியல்‬

வெள்ளத்தில் வராதவர்களுக்காக
மக்கள்
வெயிலில் சாகிறார்கள்!!!
‪#‎அரசியல்‬

சதுரங்கம்‬!

#‎அணுக்கதை‬:
அந்த நகராட்சியில் இருந்த மாபெரும் குடிநீர் ஏரியில், ஒரு நகரத்தின் மொத்த சாக்கடைகளைச் சேர்க்கும் பணிக்காக எண்ணூறு கோடி ஒதுக்கப்பட்ட செய்தி கேட்டு, அந்தத் தெருவில் குடியிருந்த சேகர் கொதித்தார், "இருக்குற ஒரே ஏரியை இப்படியா செய்வார்கள்? நாமாவது ஏதேனும் செய்தாக வேண்டும்" என்று புலம்பிய அவர், மக்களிடம் கையெழுத்து வேட்டை நடத்த, வளர்ந்து வரும் போராட்டத்தின் வீரியத்தைக் கண்டு, அதிகாரிகள் காயை நகர்த்த, அடுத்த நாள் சேகர் பாக்கெட்டில் இரண்டு கஞ்சா பொட்டலங்களோடு கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்!
‪#‎சதுரங்கம்‬!

எனக்கென்ன?

மொத்தமாய் கொட்டிய மழைநீரை
குடிநீராய்
சேர்த்து வைக்கத் தெரியவில்லை,
அதை சவநீராய் ஆக்கிக்கொண்டோம்,
இப்போது வறண்ட பூமிதனில்
வெயிலிலும் வாடிச் சாகிறோம்!

வற்றாத ஜீவநதிகள் என்றாலும்,
அதில் பிணங்களை வீசி
மோட்சம் தேடுகிறோம்
சொட்டு நீரில்லாமல்
மறுபக்கம்
தானாய் மோட்சம் அடைகிறோம்!
சுவைக்காக உண்டு
அது செரிக்க
வாயு பானம் வேண்டி
குடிநீரையும் தானாமாக்கினோம்
பின் உயிர் தாகம் தீர்க்க
ஒரு சொட்டு நீருக்கும்
தவித்துப் போகிறோம்!
மரம் வெட்டினால் என்ன
காடழித்தாலும் என்ன
மணற் கொள்ளையடித்தால் என்ன
ஆலைகள் நீர் உறிஞ்சினால் என்ன
கனிமங்களைச் சுரண்டினால் என்ன
சாயக்கழிவுகள் கலந்தால் என்ன
என்ன என்ன
எனக்கென்ன என்று
இருந்துக் கொண்டோம்
அப்படித்தான் இருக்க வேண்டுமென
நிறுத்தப்பட்டோம்!
நேசித்த ஒருவரின்
மரணத்தில் பொங்கும்
வெற்றுக் கருணையைக் கூட
காட்டவில்லை நாம்
இயற்கையை அழித்தப்போதும்!
நம்மை காக்க பூமி காக்க
இயற்கை காக்க வேண்டும்
அட அதற்கு
இனியேனும் போரிட வேண்டும்
‪#‎எனக்கென்ன‬ என்ற மனதிடம்!

Tuesday 12 April 2016

மண(ன) விலக்கு


நேர்கோட்டில் 
இருபத்தோர் புள்ளிகளிட்டு
ஒவ்வொரு இருபுள்ளிகளுக்குமிடையே
மேலும் புள்ளிகள் அடுக்கி
ஒவ்வொன்றாய் குறைத்து ஒன்றில் நிறுத்தி
அரிசிமாவை கட்டைவிரலுக்கும் 
ஆட்காட்டி விரலுக்கும் இடையில் 
சன்னமாய் சிறைப்பிடித்து 
புள்ளிகளைக் கம்பிகளாய் 
சேர்த்து வளைத்து 
மலர்த்தோட்டம் நானெழுப்ப 
மயிலிறகாய் நீ வந்தாய் 

தரைக்கோல மலர்க்கூட்டம் 
மணம் வீசும் விந்தையென 
வார்த்தைகளில் கோலமிட்டு 
ஏதோ ஒரு புள்ளியில் லயித்திருந்த 
வேளையில் 
நீயும் ஒரு புள்ளியாய் வந்து சேர்ந்தாய் 

புன்னகையில் புள்ளிக்குக் கோடிட்டு
சிறிது வண்ணம் கூட்ட 
கோலமிடும் கோலத்தின் 
எழிலில் கரைந்த காலமென்று 
மாளாது பூ வீசி 
தோட்டம் வளர்த்தாய்

வளர்த்த தோட்டமென் உரிமையென்று
புள்ளிகளுக்குப் பின் 
தொடர்புள்ளிகள் வைத்து 
கம்பிகளைச் சுற்றி 
வேலியெழுப்பி உரியவனனாய்

எழுப்பிய வேலியினுள்
மதில்சுவர் எழுப்பி 
என் கனவுகளையும் சிறைப்பிடித்து 
மலர்த்தோட்டம் அழித்து 
முட்காடு சமைத்தாய்

முட்காட்டின் வெளிச்சக்கீற்றில்
மருவி மயங்கி 
இடைப்பட்ட ஏதோ ஒரு புள்ளியில்
இணைந்த நீயும் நானும் 
புள்ளிகளுக்கு அப்பாற்பட்டு
கலைந்ததொரு கோலத்தில் 
ஏதேதோ வண்ணம் தீட்டி 
அழகூட்டுவதாய் அவ்வப்போது
அமைதியடைந்தோம்
எப்போதும் இறங்கிப்போகும்
என் தோல்வியில் 
நீயும் வென்றவனானாய்! 

நீ நீயென காதலற்று 
கசக்கும் புள்ளிகளை 
விடியலில் தொடங்கிய
கோலத்தின் நினைவில் 
மீண்டும் மீண்டும் இட்டு 
தரைக்கோலமாய் தாழ்ந்திருந்தேன்
நீ என் காதலில் நிறைந்திருந்தாய்! 

காதலே உன் 
சுயநல அகதரிசனத்தின் வெப்பத்தின்
ஏதோ ஒரு புள்ளியில் 
அகமதிர்ந்து நிலைக்குலைந்து
முன்பிட்ட இருபத்தொரு புள்ளிகளின் 
கடைசி வரிசையின் ஒற்றைப்புள்ளியை
அழிக்கத்தொடங்குகிறேன்
ஐந்து விரல்களும் 
பின்வரிசையில் இருந்து
தொடங்கியிருக்கும் பணியில்
எறும்புகள் சிதறுகின்றன 
ஏசும் உறவினர்களைப் போல
பாவி நீ என்று பதறி ஒடுகின்றன 
அழகியல் சிதைந்த கோலத்தை
சீர்படுத்த வராதவர்களின் எள்ளலில்
நிற்காது நகர்கிறேன்
ஆரம்பித்த புள்ளியில் விரல்களை 
நான் நிறுத்திய போது
மலர்கள் அழுகி உரமாகியிருந்தன
என் உதிரத்துக்குள்! 

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!