Thursday 21 April 2016

மாற்றம்‬

டாஸ்மாக் சாராய வகைகளுக்கும், கோக், பெப்சி மற்றும் இன்ன பிற பானங்களுக்கும், "தொழிற் புரட்சி" என்ற பெயரில் கணக்கிலடாங்கா இடங்களிலும் தண்ணீர் வீணாகிறது, அரசியல்வாதிகள் மாற்றங்களைச் செய்யும் வரை, சிறு அளவில் இவைகளை உங்களால் செய்ய முடிந்தால் கொஞ்சமேனும் ‪#‎மாற்றம்‬ வரும்;

1. உங்கள் வீட்டு வாயிலில் அல்லது மொட்டை மாடியில் சிறு குவளையில் பறவைகளுக்கு அல்லது அகண்ட பத்திரத்தில் சாலையோர விலங்குகளுக்கும் சேர்த்து நீர் வையுங்கள்!

2. உங்கள் வீட்டில் அல்லது வீதியில் எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து, சில மரங்களை நட்டு வையுங்கள்!

3. முடிந்தவர்கள் வாசலில் தண்ணீர் பந்தல் வைக்கலாம், சாலையில் போகும் மனிதர்களின் தாகம் தீர்க்கலாம்!

4. வழக்கம் போலச் சாலையோரத்தில் போக்குவரத்துத்துறை காவலர்கள், இந்த அரசியல்வாதிகளுக்காக வெயிலில் காய்கிறார்கள், அவர்களும் மனிதர்களே, போகும் வழியில் சில போத்தல்களில் தண்ணீர் எடுத்துக் கொண்டு கண்ணில் படுபவர்களுக்குக் கொடுக்கலாம்!

5. காலையில் பல் விலக்க, குளிக்க என்ற உங்கள் உபயோகத்திற்கு ஷவரை, குழாயைத் திறந்து விட்டு, தண்ணீரை வீணடிக்காமல் வாளியில் பிடித்து வைத்து அளவாய் உபயோகிக்கலாம்!

6. வீட்டில் எல்லா அறைகளிலும் ஆளுக்கொரு மின்விசிறியை, குளிர்சாதன எந்திரங்களைப் பயன்படுத்தி மின்சாரத்தை வீணாக்குவதைத் தவிர்த்து முடிந்தவரை, முடிந்த நேரங்களில் ஒரே அறையில் இருந்து மின்சாரத்தை மிச்சப்படுத்தலாம்!

7. நீங்கள் வாங்கும் பழங்களில், காய்கறிகளில் இருந்து விதைகளைத் தனியே எடுத்து வைத்து இப்போதும், பின்னரும் விதைக்கலாம், நீங்கள் போகும் பாதைகளில் மண் நிறைந்த இடங்களில் அதைத் தூவிச் செல்லலாம்!

8. நன்னாரி வேரை வாங்கி வந்து, அதைக் குடிநீரில் போட்டுக் கொதிக்க வைத்து, தேவையான அளவு, பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி எடுத்து வைத்து, தேவையான போது, கால் பங்கு இந்தச் சாரையும், முக்கால் பங்கு நீரையும் சேர்த்து, சிறிதளவு எலுமிச்சை சேர்த்துக் குடிக்கலாம். மோர், இளநீர் போன்ற இயற்கையான பானங்களைக் குடிக்கலாம், வாயு நிறைத்து விற்கும் பானங்களை வாங்குவதைத் தவிருங்கள், ஒட்டு மொத்தமாக எல்லோரும் தவிர்க்கும் போது, அவர்களின் உற்பத்தியும் குறைந்துப் போகும்.
நான் குடிக்காவிட்டால் என்ன பெரிய மாற்றம் வந்து விடும் என்று நினைக்காமல், மாற்றத்தை உங்களிடம் இருந்து துவங்குங்கள். உற்பத்திக் குறைய நாளானாலும் உங்கள் உடலில் ஆரோக்கியம் மேம்படும்!

9. உப்பை அளவாய் உபயோகிக்கவும், அதிக அளவு உப்புத் தாகத்தை அதிகரிக்கும், உடலுக்கு எந்த விதத்திலும் அது உங்களுக்கு நன்மை செய்யாது, அதிலும் வெயில் காலத்தில்!

10. அதிகளவில் கீரை, காய்கறிகள் போன்ற உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!

11. உங்களின் உபயோகப்படுத்தும் நிலையில் உள்ள பழைய காலணிகளைக் குப்பையில் வீசாமல், அதைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவுங்கள்! அல்லது உங்களால் முடிந்தால் காலணிகளை வாங்கித் தரலாம்!

12. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேர்தலில் உங்கள் தொகுதியில் நிற்பவரை, கட்சி, சாதி அபிமானம் தவிர்த்து, உங்கள் தொகுதிக்கு நல்லது செய்பவரை தேர்ந்தெடுங்கள். ஏனெனில் தமிழகத்தின் இத்தகைய இன்றைய நிலைக்கு, இதுவரை நாம் கண்மூடித் தேர்ந்தெடுத்தவர்களும், அவர்களைத் தேர்ந்தெடுத்த நாமுமே காரணங்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!