நேர்கோட்டில்
இருபத்தோர் புள்ளிகளிட்டு
ஒவ்வொரு இருபுள்ளிகளுக்குமிடையே
மேலும் புள்ளிகள் அடுக்கி
ஒவ்வொன்றாய் குறைத்து ஒன்றில் நிறுத்தி
அரிசிமாவை கட்டைவிரலுக்கும்
ஆட்காட்டி விரலுக்கும் இடையில்
சன்னமாய் சிறைப்பிடித்து
புள்ளிகளைக் கம்பிகளாய்
சேர்த்து வளைத்து
மலர்த்தோட்டம் நானெழுப்ப
மயிலிறகாய் நீ வந்தாய்
தரைக்கோல மலர்க்கூட்டம்
மணம் வீசும் விந்தையென
வார்த்தைகளில் கோலமிட்டு
ஏதோ ஒரு புள்ளியில் லயித்திருந்த
வேளையில்
நீயும் ஒரு புள்ளியாய் வந்து சேர்ந்தாய்
புன்னகையில் புள்ளிக்குக் கோடிட்டு
சிறிது வண்ணம் கூட்ட
கோலமிடும் கோலத்தின்
எழிலில் கரைந்த காலமென்று
மாளாது பூ வீசி
தோட்டம் வளர்த்தாய்
வளர்த்த தோட்டமென் உரிமையென்று
புள்ளிகளுக்குப் பின்
தொடர்புள்ளிகள் வைத்து
கம்பிகளைச் சுற்றி
வேலியெழுப்பி உரியவனனாய்
எழுப்பிய வேலியினுள்
மதில்சுவர் எழுப்பி
என் கனவுகளையும் சிறைப்பிடித்து
மலர்த்தோட்டம் அழித்து
முட்காடு சமைத்தாய்
முட்காட்டின் வெளிச்சக்கீற்றில்
மருவி மயங்கி
இடைப்பட்ட ஏதோ ஒரு புள்ளியில்
இணைந்த நீயும் நானும்
புள்ளிகளுக்கு அப்பாற்பட்டு
கலைந்ததொரு கோலத்தில்
ஏதேதோ வண்ணம் தீட்டி
அழகூட்டுவதாய் அவ்வப்போது
அமைதியடைந்தோம்
எப்போதும் இறங்கிப்போகும்
என் தோல்வியில்
நீயும் வென்றவனானாய்!
நீ நீயென காதலற்று
கசக்கும் புள்ளிகளை
விடியலில் தொடங்கிய
கோலத்தின் நினைவில்
மீண்டும் மீண்டும் இட்டு
தரைக்கோலமாய் தாழ்ந்திருந்தேன்
நீ என் காதலில் நிறைந்திருந்தாய்!
காதலே உன்
சுயநல அகதரிசனத்தின் வெப்பத்தின்
ஏதோ ஒரு புள்ளியில்
அகமதிர்ந்து நிலைக்குலைந்து
முன்பிட்ட இருபத்தொரு புள்ளிகளின்
கடைசி வரிசையின் ஒற்றைப்புள்ளியை
அழிக்கத்தொடங்குகிறேன்
ஐந்து விரல்களும்
பின்வரிசையில் இருந்து
தொடங்கியிருக்கும் பணியில்
எறும்புகள் சிதறுகின்றன
ஏசும் உறவினர்களைப் போல
பாவி நீ என்று பதறி ஒடுகின்றன
அழகியல் சிதைந்த கோலத்தை
சீர்படுத்த வராதவர்களின் எள்ளலில்
நிற்காது நகர்கிறேன்
ஆரம்பித்த புள்ளியில் விரல்களை
நான் நிறுத்திய போது
மலர்கள் அழுகி உரமாகியிருந்தன
என் உதிரத்துக்குள்!
No comments:
Post a Comment