Thursday 21 April 2016

ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம்‬

#‎ஸ்ரீ_பெரும்புதூர்_தாலுகா_அலுவலகம்‬
நீதிமன்றத்தில் நில சம்பந்தமாக நாங்கள் தொடுத்திருந்த வழக்குக்காக, நீதிமன்ற வழிகாட்டுதலின் படி, கிட்டத்தட்ட ஐந்தாறு மாதங்கள் கழித்து, இன்று மதியம் மூன்று மணிக்கு ஆவணங்களுடன் ஸ்ரீ பெரும்புதூர் வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வருமாறு எங்களுக்குக் கடிதம் வந்தது.

சரியான நேரத்திற்குச் சென்னையில் இருந்து நண்பனுடன் தாசில்தார் அலுவலகத்துக்கு மதிய வெயிலில் போய்ச் சேர்ந்தபோது, தாசில்தார் இல்லை,
"அவர் கலெக்டரின் மீட்டிங்குக்குப் போயிருக்கார்" என்றார் உதவியாளர்,

"எங்களே மூணு மணிக்கு வரச் சொல்லிட்டு, இப்போ அவரு இல்லைன்னு சொன்னா என்ன அர்த்தம்?, நாங்க ஆபீசுக்கு லீவு போட்டுட்டு வந்திருக்கோம்" - நான்

"மேடம், நீங்க வரதுக்கு முன்னாடி போன் பண்ணியிருக்கலாம், எலெக்க்ஷன் டைம், கலெக்டர் கூப்பிடும்போது அவரு போயாக வேண்டி இருக்கு" - உதவியாளர்

"எலெக்க்ஷன் டைம் தான் மேடம், பட் நீங்கதானே கோர்ட்டில் இருக்குற கேசுக்காக இந்தத் தேதியிலே, இந்த நேரத்திலே வந்தாகணும் லெட்டர் போட்டு இருக்கீங்க, நீங்க போன் பண்ணிட்டு வரணும்னு சொல்லவேயில்லையே, அதிலும் போன் நம்பர் கூட இல்லை , சரி உங்க தாசில்தார் நம்பர் கொடுங்க, நான் போன் பண்றேன்"

"ஆ சார் நம்பர் லாம் கொடுக்க முடியாது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க"

சிறிது நேரம் காத்திருந்த நேரத்தில், அங்கே பொதுமக்களுக்குக் கழிவறை வசதியே இல்லை என்றார்கள், அவர்களுக்கென்று அலுவலக அறையில் இருந்த கழிவறையை உபயோகித்துக் கொள்ளச் சொன்னபோது அங்கே அந்தக் கழிவறை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதிமனிதன் முதன் முதலாகக் கட்டிய கழிவறை போன்று இருந்தது, விளக்கும் கூட இல்லை, கும்மிருட்டு!

"என்ன மேடம் உங்க ஆபீஸ்ல பாத்ரூம் கூடச் சரியா இல்லே?"
" இங்கே எல்லாம் அப்படிதாங்க, ஒன்னும் பண்ண முடியலே"
"ஏங்க எதுஎதுக்கோ ஸ்ட்ரைக் பண்றீங்க, உங்களோட அடிப்படை வசதிக்காக எதுவும் கேக்க மாட்டீங்களா?, என்னமோ போங்க"

கொளுத்தும் வெயிலில், பயணக் களைப்பில் வியர்வை பெருக்கெடுக்க, அந்த அலுவலகத்தின் சுகாதார நிலமையையும், அந்த ஊழியர்களின் வேலைச் சூழலையும் நினைத்து வருத்தப்பட்டு நொந்தபடிக் காத்திருந்தோம்...ஹ்ம்ம் ஹும்..தாசில்தார் வரும் அறிகுறியே இல்லை!

நான் உதவியாளரிடம், "ஏன் மேடம் உங்க தாசில்தாருக்கு நீங்களாவது போன் பண்ணி எப்போ வருவாருன்னு கேளுங்க"

சிறிது நேரம் கழித்து,
"மேடம், அவர் ரொம்ப முக்கியமான வேலையில் இருக்காராம், இது எலெக்க்ஷன் டைம் பாருங்க, வர சாயந்தரம் ஆகிடும்" - உதவியாளர்,
அப்போதே மணி நான்கைக் கடந்துவிட்டது

"மேடம், கோர்ட் உத்தரவுப் படி, விசாரிக்க எங்களைக் கூப்பிட்டு இருக்கீங்க, எதிர்த்தரப்பு வரவேயில்லே, நாங்க மட்டும் வந்திருக்கோம், நாங்க வந்து போனோம்ங்கறதுக்கு என்ன ஆதாரம், நாங்க வரலைன்னு நீங்க சொல்லி முடிச்சிங்கன்னா நான் என்ன செய்ய?"

"நீங்க அந்தளவுக்கு யோசிக்க வேண்டாம், நாங்க என்கொயறியே செய்யல, அதனால அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம், மறுபடியும் கூப்பிடுவோம்" - உதவியாளர்

"ஒருத்தரே நோட்டீஸ் கொடுத்துப் கூப்பிடுறீங்க, அதைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிக்காம, ஒரு குறைந்தபட்சம் தகவல் கூடச் சொல்லாம வந்தவங்களை ஜஸ்ட் லைக் தட் திருப்பி அனுப்பிறீங்க, உங்க தாசில்தார் எப்போ வருவேன், வருவேனா இல்லையா அப்படின்னு ஒரு தகவல் கூடச் சொல்லாம முக்கிய வேலைன்னு கிளம்பிப் போய்டுவார், எங்க வேலையெல்லாம் விட்டுட்டு வரப்போ அதைப் பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டீங்களா ? மறுபடியும் எப்போ வரணும்ன்னு இனிமே தான் சொல்லுவார்ன்னு சொல்றீங்க, இங்கே என்னதான் நடக்குது...?" என்று கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு கேட்க,

"சாரி மேடம், நான் என்ன சொல்றதுன்னு தெரியலை" - உதவியாளர் ...
எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை என்று நொந்தபடிச் சென்னைத் திரும்பினோம்.

"அரசியல்வாதிகளுக்குதான் பொதுமக்கள் வெறும் ஒட்டு எந்திரங்கள் என்றால், இந்த அரசுத்துறை அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு தகவல் சொல்லுவதற்குக் கூட யோசனையேயில்லையே ஏன்? தவிர்க்க முடியா காரணத்தில் சந்திக்க முடியாவிட்டாலும், தன் அலுவலகத்துக்கு நேரம் குறித்துக் கொடுத்துச் சந்திக்குமாறு தான் வரச் சொல்லியவர்களிடம், குறைந்தபட்சம் ஒரு மன்னிப்போ, அல்லது வேறு ஒரு நேரமோ குறித்துக் கொடுத்துச் செல்வதற்குக் கூட முடியாத இந்த நிலைமைக்குக் காரணம், பொதுமக்கள்தானே என்ற அலட்சியமா? அல்லது அரசு எந்திரத்தின் கோளாறா?

அரசு அலுவலங்களுக்குக் குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கூடச் சரியாய்ச் செய்து தராத அரசாங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களாலும் குறைந்தபட்ச மக்கள் சேவையைக் கூடச் சரியாய்ச் செய்ய முடியவில்லை, கட்டமைப்புக்கள் சரியானாலும், இவர்களின் மனங்களின் அலட்சியப் போக்குச் சரியாகுமா? தெரியவில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!