Thursday, 21 April 2016

மிகச்சாதரண மனிதர்களே

சிட்டி சென்டர் அருகே சாலையில் சிகப்பு சிக்னல், வாகனங்கள் நிற்கின்றன, இருசக்கர வாகனங்களில் இருக்கும் சிலர், கொஞ்சமாய் நிறுத்தக் கோட்டை தாண்டிச் சென்று, கொஞ்சம் தயக்கமாய் போக்குவரத்து அதிகாரியைப் பார்க்கிறார்கள், அவர் நடைபாதையோர நிழற்குடையின் கீழே சாய்ந்து அமர்ந்திருக்கிறார், மாதம் பிறந்து இரண்டு தேதி ஆகிவிட்டது அவர் அசையாமல் இருப்பதில் தெரிகிறது!

இப்போது பைக் ஓட்டிகள் அவரை விட்டு சாலையை பார்க்கின்றனர், இன்னமும் அவர்களுக்கு பச்சை விளக்கு விழவில்லை, சிறிது தூரத்தில் வண்டிகள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றன, இப்போது ஒருவன் சிக்னலைப் புறக்கணித்து முன்னே செல்கிறான், அவனைத்தொடர்ந்து மற்றவரும் முன்னே செல்ல, சரியான சிக்னலில் எதிர்ப்புறம் வந்த வாகனங்கள் பாதி வழியில் தயங்க, அதே திசையில் வேகமாய் வந்த கார் ஒன்று நிற்காமல் வேகமாய் கடுப்பில் அடித்த ஹாரனில், சிக்னலை மதிக்காதவர்கள், அந்த காரின் வேகத்துக்கு பயந்து பின்னே செல்ல சாலையின் சிக்கல் சரியானது! 

இப்படித்தான் நம்முடைய சாரசரி வாழ்க்கையும் அரசியலும், ஒருவன் மதிக்காத சட்டத்தை நாமும் எதற்கு மதிக்க வேண்டும் என்று, சட்டம் உறங்கும் போது குருட்டு தைரியத்தில் ஒருவன் செய்யும் தவறை தானும் செய்யும் மக்களைப் போல அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தவறு செய்கின்றனர்!

அந்த தவறு கண்டுக்கொள்ளப்படாத போது தொடர்ந்து தவறுகள் நடக்கின்றன, யாரோ ஒருவன் அறச்சீற்றத்தில் பொங்க, பயந்து அடங்கும் சில மனிதர்களைப் போல, நேர்மையான அதிகாரிகளும், சுய ஒழுக்கம், கட்டுப்பாடு மிகுந்த மக்களும் மிகும்போது இந்த அரசியல்வாதிகளும் திருந்துவார்கள்!
நம்முடைய வீடு என்று நினைப்பதைப் போல, நம்முடைய நாடு என்று நினைக்க வேண்டும், என்னுடைய குடும்பம் என்று நினைப்பதைப் போல என்னுடன் வாழும் சக மனிதர்கள் என்று நினைக்க வேண்டும், இப்படிப்பட்ட நினைப்பு வரும்போது மக்களுக்கு பொறுப்பும் தானாக வரும், பொறுப்பு வந்தால் மனிதர்களின் குணங்களும் சீர்படும், சிந்தனையும் நேராகும்!

அதுவரை, சாலையில் யாரும் கேட்கவில்லை, பார்க்கவில்லையென்றால் தறிகெட்டு ஓடி, விதிமுறைகளை நசுக்கி பிற உயிர்களைக் கொன்றுச் செல்லும் சாதரண மக்களை ஆளும் அரசியல்வாதிகளும் மிகச்சாதரண மனிதர்களே, மாற்றமெனும் புரட்சி வரும்வரை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!