Thursday, 21 April 2016

எது காதல், எது காதல் இல்லை?

சில வருடங்களுக்கு முன்பு அலுவலகத்தில், இரவுநேரப் பணியில் இருந்தபோது, பெண் ஊழியர்,  தான் உடனே வெளியே போகவேண்டும் என்று அழுதார்.  அப்போது இரவு மணி, பன்னிரெண்டு. நாங்கள்  அந்தப் பெண்ணிடம், "பணி நேரத்தில் எங்கே போக வேண்டும்? ஏன் போக வேண்டும்?" என்றபோது, தன் காதலர் மிகுந்த மனக்குழப்பத்தில் இருப்பதாகவும், உடனடியாக தான் பார்க்கச் செல்லாவிட்டால் அவர் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாகவும் சொன்னார் .

நள்ளிரவு நேரம் என்பதால் அந்த நேரத்தில் நிச்சயம் அந்தப் பெண்ணை வெளியே விட முடியாது என்று தெளிவாகச் சொல்லி மறுத்து விட்டோம். அதற்குபிறகு அந்தக் காதலன் தற்கொலை செய்யவில்லை என்று மட்டும் தெரியும், மற்றபடி அதை நான் மறந்தே விட்டேன்! எங்கோ இருக்கும் காதலனைப் பார்க்க, அந்த நேரத்தில் அந்தப் பெண்ணைத் தனியே வெளியே அனுப்பினால் அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுவதைப் பற்றி அந்தக் காதலன் யோசிக்கவும் இல்லை, கவலைக் கொள்ளவும் இல்லை என்பதை நினைத்து பார்த்தபோது அந்த பெண்ணின் காதல் சரியானதுதானா என அவளை எண்ணி கவலைகொண்டோம். 

இது ஓர் உதாரணம் மட்டுமே, இந்தக் காதல் காதல் என்று நாம் எதைச் சொல்கிறோம்?
ஆனால் எது காதல் எது காதல் இல்லை என்று பெரும்பாலும் பெண்களுக்கு வாழ்க்கையைத் தொலைத்த பின்னரே தெரிகிறது!  

எந்தச் சாதி என்றாலும், வீட்டில் ஆணோ பெண்ணோ குழந்தையை வளர்க்கும்போது அவர்களைப் பொம்மைகளைப் போல் வளர்ப்பதும், தன் வீட்டு செல்ல நாய்க்குட்டியைப் போல் நினைப்பதும், அவர்களின் உணர்வுகளைப் பெற்றோர் உணர்ந்து கொள்ள முடியாததற்கு ஒரு பெரும் காரணம், உணவு முதல் உடை வரை நாங்கள்தானே செய்தோம், நீ எனக்குக் கட்டுப்பட்டவள்/ வன் என்ற நினைப்பும் கூட மற்றுமொரு காரணம்!

இது மாற, ஒரு கட்டம் வரை பெற்றோராக, ஒரு கட்டத்தில் தோழமையாக, ஒரு கட்டத்தில் ஆசானாக இருக்க வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு உண்டு!
உணர்வுகளை மதித்து, உணர்வுகளுக்கு வழிகாட்டி இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் பெற்றோர்கள் தோழமையுடன் மாறி பிள்ளைகளை வளர்க்கும்போது, திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுவதோ, அல்லது ஆள் அனுப்பி வெட்டுவதோ அல்லது தூக்கு மாட்டிக் கொண்டு சாவதோ நிகழாது! “எது நடந்தாலும் என் விருப்பத்திற்கே உன் திருமணம்” என்று பெற்றோர் செய்து வைக்கும் திருமணங்களும் முறிந்து போகிறது,  “எப்படி இருந்தாலும் என் விருப்பம்” என்று பிள்ளைகள் செய்து கொள்ளும் திருமணங்களும் கூட முறிந்து போகிறது.  யார் விருப்பம் என்றாலும், வாழ்க்கையைச் சரியாய் அமைத்துக் கொள்ளச் சாதியைத் தவிர்த்து அடிப்படையான பல்வேறு காரணிகள் இருக்கிறது, அந்தக் காரணிகளைக் காதலிப்பவர்களும், பெற்றோர்களும் சரியாய் புரிந்து கொண்டு, அவைகளை மட்டும் சரிபார்த்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் /கொடுத்தால் அந்தத் திருமணங்கள் பெரும்பாலும் முறிவதில்லை!

அப்படியே முறிந்தாலும், உறவும் சுற்றமும் ஆதரவாய் இருந்து, வாழ்க்கையைச் சரி செய்வதற்கோ அல்லது பிறிதோர் வாழ்க்கையைச் சரியாய் அமைத்துக் கொள்வதற்கோ முன்வர வேண்டும்! இதையெல்லாம் விடுத்துப் பெற்றோர்களைக் காயப்படுத்திவிட்டுப் பிள்ளைகளும், பிள்ளைகளின் உணர்வுகளை உயிர்களைக் கொன்று விட்டு பெற்றோர்களும் நிம்மதியாய் வாழ்ந்திடல் முடியாது!

காதல் என்று ஏன்  தோன்றுகிறது?

தோழமையற்றப் பெற்றோர் கிடைக்கப்பெற்றவர்கள், வீட்டின் சூழ்நிலை இறுக்கமாய் இருக்கும் சூழலில் வளர்பவர்கள், அம்மாவும் அப்பாவும் எதிர் எதிர் துருவங்களாய் கிடைக்கப்பெற்றவர்கள், அல்லது வேறு ஏதோ சூழலில் மனதில் வெறுமை சூழ வாழ்பவர்கள், போலியான காதலுக்கு எளிதாய்ப் பலியாகிறார்கள்! யாரோ ஒருவன் ஆறுதலாய், சில வார்த்தைகள் பேசினாலும், அவனிடம் முழுதும் சரணாகதி அடைகிறார்கள், மற்ற எல்லாமும் முக்கியமற்றதாய் போய் விடுகிறது,

அன்பிற்காக ஆறுதலுக்காக, தன் உணர்வுகள் மதிக்கபடுவதன் அவசியத்தைத் தேடிக் கொண்டே இருக்கும் பெண்களுக்குப் பெரும்பாலும் போலியான தேவதூதன்களே கிடைக்கிறார்கள், சிலருக்கு மட்டுமே காதல் கணவன் ஒரு மிகச் சிறந்த தோழனாய் அமைகிறான், அவன் எந்தச் சாதி என்றாலும்!

வறண்ட நிலத்தில் விழும் ஒரு துளி நீரில் நிலம் கிளர்ச்சிக் கொள்வதைப் போலப் பெண்ணும் ஓர் அன்பான வார்த்தையில் கிளர்ச்சிக் கொள்கிறாள், எது சரி எது தவறு, இவன் நமக்குச் சரியான வாழ்க்கை துணையா, இப்போது படிப்பை நிறுத்தி இந்தக் காதல் தேவையா, படித்து முடித்ததும், பெற்றோரிடம் பேசி அனுமதி வாங்கித் திருமணம் செய்யலாமே, படிப்பும் இல்லாமல் வேலையும் இல்லாமல், திருமணம் செய்து கொண்டு, நாளை குழந்தைக் குடும்பம் என்றான பின்னர், நம் தேவைகளுக்கு என்ன செய்வது என்று பெரும்பாலும் பெண்கள் யோசிப்பதேயில்லை!

தேவதை என்று தன் மகளைக் கொண்டாடி விட்டு அவள் சுயமாய் எடுக்கும் முடிவுக்கு வெகுண்டு, கொலையும் செய்பவர்கள், பெற்ற பிள்ளைக்கு மணம் முடிக்க, பெண் பார்க்கும்போது, அழகையும் பணத்தையும் பார்ப்பவர்கள் கூட, அவள் தன் மகனின் குணநலனுக்கு ஏற்றவளா, அல்லது அவன் தன் பெண்ணின் குணநலனுக்கு ஏற்றவனா என்று எந்தப் பெற்றோரும் பார்ப்பதில்லை, இப்படியே ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டே போகலாம்!

வீட்டில் ஏற்படும் மாற்றங்கள் மட்டுமே சமூகத்தில் பெண்கள் பலியாவதைத் தடுக்கும்.  காதல் என்றாலும், வீட்டுச் சண்டை என்றாலும், நாட்டில் நடக்கும் யுத்தம் என்றாலும், எதிலும் எங்கும் முதலில் பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! காதலுக்கு எது ஏற்ற வயது என்று சட்டம் போட்டு நிர்ணயிக்கலாம், ஆனால் உணர்வுகளுக்கு...? பதினாறு வயதில் ஓடிப்போவதும், அறுபது வயதில் காதலிப்பதும் இதனால்தான்! இவைகளை நாம் விமர்சித்து ஒன்றும் ஆகப்போவதில்லை,  சில கொலைகளையும் பல தற்கொலைகளையும் தவிர!

http://www.vikatan.com/news/vasagar-pakkam/61085-the-defenition-of-love-in-the-society.art
 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!