Thursday, 21 April 2016

கீச்சுக்கள்!

கூவத்தை சுத்தப்படுத்துவோம் என்று ஒவ்வொரு முறையும் ஓட்டுக் கேட்கும்போது ‪#‎வாக்குறுதி‬ தந்தார்கள், ஆமை வேகத்தில் அந்தப் பணியை அமைத்துக் கொண்டார்கள், பொறுத்துப் பார்த்த கூவம் வானத்திடம் முறையிட, வானம் தானே வந்து கூவத்தை கழுவித்தள்ளியது, இப்போது கச்சத்தீவை மீட்போம் என்கிறார்கள், மத்திய அரசும் அதற்கும் எனக்கும் சம்பந்தமேயில்லை என்பது போலவே இருக்கிறது, இருக்கும்! பார்த்துக் கொண்டே இருங்கள், ஏதோ ஒரு பூகம்பத்தில் கச்சத்தீவும் தானாய் நகர்ந்து வந்து ராமேஸ்வரத்திடம் ஒட்டிக்கொள்ளும்! 🤔

********************************************
மதிய வெயிலில் வெளியே சென்றிருந்தேன், நான்கு வயது மதிக்கத்தக்க தன் மகனுடன் சாலையைக் கடக்க ஒரு வறிய தாய் நின்று கொண்டு இருந்தார், வெயில் படாமல் இருக்க தன் புடவையின் முந்தானையை அவன் தலையில் போர்த்தியப்படி!
‪#‎அம்மான்னா‬ சும்மா இல்லைடா, நான் இதுபோன்ற அம்மாக்களை மட்டுமே சொல்கிறேன்! 😇

**************************************************
சில மாதங்களுக்கு முன்பு ஆளுங்கட்சியின் ஆபிசர், ஏதோ ஓர் அலுவலுக்குச் செல்ல வழியெல்லாம் போஸ்டர் ஒட்டி வழக்கம்போல் வரவேற்பு அமர்க்களப்பட்டது, செல்லும் வழியில் ஆஆ என்று போஸ்டர்களைப் பார்த்துக் கொண்டே சென்றபோது, ஒரு புறம் கூட்டத்தில் சில பெண்கள் யாரோ ஒருவரிடம் "இருநூறு ரூபாய்" எப்போது தருவீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள், அதற்கும் முன்பு இதே போன்று ஒரு வாக்குவாதத்தை, முன்னாள் எதிர்கட்சியின் ஒரு கூட்டம் முடிந்தபின்பு, இருநூறு ரூபாய் பணத்திற்கும், ஒரு சேலைக்கும் வரிசைக் கட்டி நின்றவர்களிடமும் காண வாய்த்தது!
லாரி, டெம்போ, வேன் என்று பலத்தரப்பட்ட வாகனங்களில் மக்கள் கூட்டம் ஒவ்வொரு கட்சிக்கும் அழைத்து வரப்பட்டு ஆள் பலம் காண்பிக்கப் படுகிறது, இதில் வருத்தம் என்னவென்றால், இதுவரை மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளும், கூட்டணியில் இருந்து கும்மியடித்த கட்சிகளும், பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்தும், வறுமையான ஒரு நிலையில் இருந்து தங்கள் வாழ்வை, தங்கள் குடும்பத்தாரின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்ட போதிலும், இன்னமும் ஒரு சேலைக்காகவும், இருநூறு ரூபாய் பணத்திற்காகவும் வேகாத வெயிலில் வாடி நிற்கும் நம் மக்களின் ஏழ்மை நிலையை மட்டும் மாற்றவேயில்லை இந்தக் கட்சிகள், மாறவும் இல்லை ‪#‎மக்கள்‬ என்னும் இந்த ஏழை முதலாளிகள்!

***************************************************************
எத்தனை போட்டிகளையும் எதிர்கொள்ளலாம், பொறாமைகளை எதிர்கொள்வதுதான் சிரமமாய் இருக்கிறது, அதுவும் முற்றிலும் பலரின் வாழ்க்கையை அழிக்க முற்படும் தீவிர அழுக்கடைந்த மனங்களை எதிர்கொள்ளும் போதும், கடக்கும் போதும் அத்தகைய கணங்களும், அம்மனிதர்களின் முகங்களும் பெரும் அயற்சியையே தருகிறது இந்த நவீன உலகத்தில்!
*****************************************************************
விஜயகாந்த் நாக்கைத் துருத்திக் கையை ஓங்குகிறார், அவர் பிரச்சனை அவருக்கு! மற்றும் ஒருவர் ஒருவரை அடித்தார் பின்பு செல்பி எடுத்து ஆறுதல் படுத்தினார்! ஆனால் மறுபுறம் ஒருவரின் தரிசனத்திலேயே பல பேர் மோட்சம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்!
‪#‎அரசியல்‬

*******************************************************************
ரேஷன் கடைகளில் போடுவது "அம்மா அரிசி இல்லை" அது "மோடி அரிசி", மத்திய அரசு 32 ரூபாய் மானியம் தருகிறது
- மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
ச்சே, எவ்வளவு பெரிய மனசு!? நான் கூட மக்களோட வரிப்பணத்தில் தான் இதை செய்யுறாங்கன்னு நினைச்சுட்டேன்!!!

*******************************************************************



No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...