Monday, 21 March 2016

காட்சிப்பிழை_மனிதர்கள்‬

தினந்தோறும் விழுந்து
காயப்படும் தாழம்பூவின்
நறுமணம் காயப்படவில்லை
சிதைத்து மிதித்து அறியாமல்
செல்லும் மனிதர்களையும்
அது சபிக்கவில்லை
நடைபாதையில்
அழுக்கடைந்த உடையில்
அமர்ந்திருக்கும்
அந்த வறியவன் மட்டும்
அனுதினமும்
அதைக் கையில் ஏந்துகிறான்
ஒரு நீண்டப் பெருமூச்சில்
தான் சாய்ந்திருக்கும் அந்த
தாழம்பூ மரத்தடியிலேயே
அதை வைத்து வணங்குகிறான்
அவனை மனநிலைப் பிறழ்ந்தவன்
என்று பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்


வயிறு ஒட்டிய நாயது
ஏதோ ஒருவனின் கல்லின்
வன்மத்தில் நொண்டியது
யாரோ ஒருவனின் காமத்தில்
கர்ப்பப்பை நிரம்பிய பெண்ணொருத்தி
பஞ்சடைந்த விழிகளுடன்
பராரியாய் அந்தப் பாதையோரத்தில்
அமர்ந்திருக்கிறாள்
சூல் கொண்ட கருணையுடையவள்
அந்த நாயினை அணைத்து
ஏதோ பேசுகிறாள்
சிலர் விட்டெரிந்த உணவினை
அதற்கும் பகிர்ந்து சிரிக்கிறாள்
அவளைப் பிச்சைக்காரி என்று
பரிகசித்துக் கடக்கிறார்கள்

ஏதேதோ காரணம் சொல்லி
ஈயென ஈரப்பவர்களுக்கெல்லாம்
ஈயும் மனிதர்களையும் ஏமாளிகள் என
பட்டம் சூட்டி நகைக்கிறார்கள்

சொல்லெறிந்தால் சொல்லெறியாமல்
இருப்பவர்கள் ஊமைகளென்றும்
கல்லெறிந்தால் கல்லெறியாமல்
இருப்பவர்கள் கோழைகளென்றும்
ஏமாற்றிக் கடப்பவர்களைத் தண்டிக்காமல்
அமைதியாய்க் கடப்பவர்கள் ஏமாளிகளென்றும்
நீட்டியோ முழக்கியோ கதைக்கிறார்கள்

ஆயுதங்கொண்டு தன்னைப் பிளக்கும்
மனிதகுலத்துக்குப்
பூமியது நீரையும்
வளத்தையும் பொன்னையும்
வழங்குவதுபோல
சில மனிதர்கள் வாழ்கிறார்கள்
காட்சிப்பிழையாய் கலியுகத்தில்!

மகளிர்_தினம்‬!

அவன் என் பள்ளி நண்பன், எதையும் நோக்காது வளர்ந்த நட்பு, பத்தாம் வகுப்பு பரீட்சைக்காக முதன் முதலாக, சாதிச் சான்றிதழ் என்று ஒன்று தேவைப்படுவதை நாங்கள் அறிந்தப்போது, கொஞ்சம் விவரமான ஒருவன் "ஏய் அவன் .......சாதி, அவன்கிட்டேலாம் நீ ஏன் பேசுறே?" என்று நானும் அவனும் ஒரே சாதி என்று பறைசாற்றிக் கொண்ட ஒருவன் சொன்னான், "அடச்சே போ" என்றதோடு சாதி என்ற ஒன்றை ஒரேநாள் தெரிந்து கொண்டு ஒரு நாளில் ஒதுக்கியும் வைத்தேன்! நட்பை மட்டும் எதற்காகவும் இன்றுவரை ஒதுக்கவில்லை!

உரிமையாக வீட்டுக்கு வருபவர்களில் அவனும் ஒருவன், அம்மாவிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவான், (ஒருத்திப் பூட்டிய வீட்டைத் திறந்து, சாப்பிட்டு, தூங்கிவிட்டும் போவாள்), என்னுடைய சுயம் என்ற ஒன்றை மிகச்சரியாய், புரிந்து கொண்ட உத்தமான ஒரு நண்பன், பள்ளி இறுதியாண்டில், அவனை மாணவர் தலைவராகவும், என்னைத் துணைத் தலைமையாகவும் தேர்ந்தெடுக்கப் பணித்தபோது, "இல்லை, அவளுக்குப் பிடிக்காது" என்று ஒதுங்கி நின்று வழிவிட்டவன், பள்ளி முடித்துப் பணியில் சேர்ந்தபோதும், படிப்புடன் போட்டி நிகழ்ச்சிகள் என்று எங்கே சென்றாலும், அவன் வீட்டில் இருக்கும் அப்பா அம்மா உட்பட எந்த உறவிடமாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், உடனே பைக்கை எடுத்துக் கொண்டு வந்து பத்திரமாய் வீடு சேர்ப்பான், இன்றைக்கு வரைக்கும் தன்னுடைய தோழி புத்திசாலி என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன்!  :-p


அவனுடைய எண்ணங்களை நானும், என்னுடைய எண்ணங்களை அவனும் ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்டிருக்கிறோம், எங்கள் குடும்பங்களும் எங்கள் நட்பை உணர்ந்து கொண்டதும் மிகப்பெரும் வரம் "மனசு சரியில்லடா பேசணும் என்றால் " குடும்பமே புரிந்து கொண்டு தனிமைத் தரும், ஒரு நல்ல நிறுவனத்தில் , உயர்ந்தப் பதவியில் இருக்கிறான், எப்போது அழைத்தாலும் வருவான், எத்தனை வேலையில் இருந்தாலும், கைபேசியில் அழைத்தால் பேசுவான், ஒருபோதும் எதற்காகவும் நான் அழுவதைக் காண விரும்பாதவன் "உடுக்கை இழந்தவன் கைபோலே இடுக்கண் களையும் நட்பு " அது! இதை அவன் படிக்கக் கூட முடியாமல் ஏதேனும் ஒரு பணியில் அல்லது ஒரு பயணத்தில் பரபரப்பாய் இருக்கலாம் , ஆனால் எப்போதும் நட்பின் அழைப்பின் எல்லைக்குள் ....!

இவன் போலவே அவன், இன்னும் மற்றொருவன், யாரையும் விட்டுவிடுமோ என்று தோன்றும் அளவுக்கு நல்ல நட்புகள், நல்ல நண்பர்கள், அழகிய தோழமைகள், பள்ளியைத் தாண்டியும் சில பல நல்ல தோழமைகள், இந்த முகப்புத்தகத்தின் வாயிலாகவும் தோழமையாகிக் குடும்பத்தில் ஒருவராகிப் போன உறவுகள், இவர்களில் யார் பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் உங்கள் எல்லோருக்கும் இதுபோல அருமையானதொரு தோழமைப் பள்ளியில், கல்லூரியில் வாய்த்திருக்கும், இதைப் படிக்கும் கணம் நீங்கள் அவர்களை நினைவுகூருங்கள், போதும்!

இந்த உலகம் அழகிய மனம் கொண்ட ஆண்களாலும் நிறைந்திருக்கிறது, இந்த மனங்கள் பெருகும்போது பெண்களுக்கென்று ஒரு தினம் தேவைப்படாது, அந்த நாள் வரும்போது அது "நம்பிக்கைத் தினமாக" கொண்டாடப்படும்
அந்த நாள் வரும்வரை பெண்களைச் சக உயிராய் பாவிக்கும் அனைவருக்கும் இந்தப் பெண்கள் தினத்தில் நன்றிகள்!

கீச்சுக்கள்!

கங்கையில், யமுனையில் மூழ்கினால் பாவம் கரையுமென்றால், நீதிமன்றங்கள் குற்றவாளிகளை அங்கேயே அனுப்பிவிடலாம், வழக்குச் செலவாவது மிச்சமாகும்!
நதிகள் முழுதும் அசுத்தமாகும் போது குளிர்பானங்களை கொண்டு குளித்துக் கொள்ளட்டும்!

--------------------------
உனக்கும் கடவுளுக்கும் நடுவே ஆசாமிகள் எதற்கு? கடவுள் என்ன அரசியல்வாதியா, இந்த இடைத்தரகர்கள் மூலம் அவர் உனக்கு கருணைக்காட்ட?
அவரவர் மனதில் இருக்கிறார் கடவுள், தன்னையறியாதவன் யாரோ ஒரு ஆசாமியின் தொண்டனாகிறான், வாழும் நாட்களைத் தொலைத்து வாழும் கலை கற்கிறான்!

-----------------------------
இன்று அலுவலகத்திற்குச் செல்லும் வழியில், என் வாகனத்திற்கு முன்பு "இந்திய அரசு" என்று எழுதப்பட்டிருந்த ஒரு கார் மிக மிக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது!
தட் தமிழகத்தில் "அரசு இயங்கக்கூடாது" என்ற தேர்தல் நடைமுறைகளைச் சரியாய் பின்பற்றும் "மத்திய அரசு"

----------------------------------------

மக்களே, தமிழ்நாட்டுல மட்டும் சுமாரா ஆறு கோடி மக்கள், ஆளுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் மட்டும் அனுப்பி வெச்சிங்கன்னா, ........ண்ணா...அக்கா...தங்கச்சி...நான் விஜய் மல்லையாவோட கடனைக் கொஞ்சம் அடைச்சுட்டு...அப்படியே லண்டன் போய்டுவேன்....நாமதான் இந்தியாவோட கடனை அடைக்கணும்!
‪#‎தேசபக்தர்கள்‬
 -----------------------------------

இந்தச் சாமியார்கள் எல்லாம் "உனக்கு வாழுற கலையைக் கத்து தரேன்னு வா, இதைச் செய் அதைச் செய்ன்னு" சொல்லி, கோடிக்கணக்கா வசூலிச்சு வெச்சு இருக்கப் பணத்தைச் செலவு பண்ணாலே போதும், இந்தியாவில் இருக்குற கடைகோடி ஏழைக் கூட எல்லாம் கிடைச்சு நல்லா வாழ்வான், ஆனா வாழுற கலையெல்லாம் பணம் கொட்டிகிடக்குற மனசு இல்லாத பயலுகளுக்குத் தான் தேவைப்படுது!
தினம் யாரோ ஒருவனுக்குச் சோறு போடுங்க, ரோட்டில் போற விலங்குகளுக்கு மனிதர்களுக்குக் கருணை காட்டுங்க, பெரிய அளவுல சமூகத்தை மாத்த முடியலைனாலும், இன்னைக்கு முடிஞ்சத நிறைஞ்ச மனசோட செஞ்சுட்டுப் படுத்தாலே நல்லா தூக்கம் வருமே, "வாழும் கலையைத் தேடி மனம் சுருங்கி இருட்டில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களே, ச்சே வள்ளல்களே!?"
--------------------------------

ஏற்கனவே ஷேர் மார்கெட்டின் காளை உருண்டு புரண்டு கொண்டிருக்கிறது எழுந்திருக்க முடியாமல், இதில் பத்தாயிரம் கோடி தின்று, கொழுத்த பன்றி ஒன்று வெளிநாட்டுக்குப் பறந்து சென்று விட்டதென்று, படித்த முதலைகள் எல்லாம் நீலிகண்ணீர் வடிக்கிறதாம்!
மக்கள் பணத்தைத் தூக்கிக் கொடுத்தவனை எல்லாம் அரசு என்ன செய்யப்போகிறது? "அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா" என்று பத்தோடு இது ஒன்று பதினொன்று என நாமும் கடந்து போவோம், வருங்காலத்தில், "‪#‎விஜய்_மல்லையாவின்‬ கேளிக்கை வரி" ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும்!

-------------------------------------------

பெயரறியா மரம்!

பெயரறியா
அம்மரத்தினடியில்
அதன் பெயர் கேட்காமல்
அமர்ந்திருந்தேன்
பெயர் கொண்ட என்னையும்
அது பெயரிட்டு அழைக்கவில்லை
நான் ஒன்றும் கேட்கவில்லை
அதுவும் ஒன்றும் சொல்லவில்லை
ஓய்ந்து போய்ச் சாய்ந்தவளை
அன்னையாய் அணைத்து
ஏனோ துளிர்த்தக் கண்ணீரை
தந்தையாய் சாமரத்தில் விசிறி
உயிர்க்கொண்ட பெருங்கருணையாய்
மரம் உயர்ந்திருந்தது!

பெயர்களைத் தாண்டி
இப்போது நாங்கள்
பேசிக் கொள்ளத் தொடங்கினோம்
ஆழ்ந்த மௌனத்தின் தீண்டலில்
நிறைந்த காதலுடன்!

உடையாதிருக்கட்டும்

அக்கணத்தில்
உடைந்த மண்பாண்டமானது
மனது
இனியென்ன
இரும்பாலான மனம் தேடு
உன் உளிகளில் அது
உடையாதிருக்கட்டும்!

வாழ்த்துப்பா

அந்த இரங்கல் கவிதைக்குப் பதில்
ஒரு "வாழ்த்துப்பா" பாடி இருக்கலாம்
இக்கல்லறையில் நீ
இப்போதாவது!

அப்பா

என் அப்பாவின் நண்பர்கள் அவரின் பெயரை விட, சாதியை வைத்து விளித்து உறவாடிய காலகட்டம் அது, அப்போது இளநிலை பட்டப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தேன், வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு தோழியின் உறவினர், எங்கோ என்னைப் பார்த்துவிட்டு வீட்டுக்குப் பெண் கேட்டு வந்திருக்கிறார், முன்கூட்டியே தோழி எனக்குச் சொல்லாமல் என் அப்பாவிடம் மட்டும் சொல்லி இருக்கிறார்!

வந்தவர் முதுநிலை படிப்பு முடித்து, நல்ல நிலையில் இருப்பதாக அப்பாவிடம் சொல்ல, அப்பா அவரிடம், "என் மகள் உங்கள் மதத்திற்கு மாற வேண்டுமா, இல்லையென்றால் அப்படியே இருந்தால் உங்களுக்குப் பரவாயில்லையா", என்று கேட்க, வந்தவர்கள் "உங்கள் மகளைப் பிடித்துக் கேட்டு வந்திருக்கிறோம், எதுவுமே செய்ய வேண்டாம், மதம் மாறினால் நல்லது, எங்கள் உறவினர்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும்", என்று சொல்ல,
அப்பா அவர்களிடம், "என் மகள் இப்போதைக்கு யாரையும் காதலிக்கவில்லை, மகள் அப்பாவிடம் காதலைச் சொல்வாளா என்று நீங்கள் யோசிக்கலாம், அவள் காதலித்தால் முதலில் எனக்குத்தான் சொல்வாள், இப்போதைக்கு என் மகளுக்குப் படிப்பைத் தவிர எதிலும் நாட்டம் இல்லை, விருப்பமில்லாமல் இந்தத் திருமணத்தை என்னால் நடத்தி வைக்க முடியாது, உங்களை விரும்பாமல் என் மகளால் மதம் மாறவும் முடியாது, அதனால் மன்னிக்கவும்", வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்!

படிக்காத அப்பாவினால் நான் இழந்தது எதுவுமில்லை, கற்றதே அதிகம்! சாதியை விடச் சக மனிதனின் உணர்வுகள் முக்கியமென்று அப்பாவிடம் தான் கற்றேன்! பிள்ளைகளைத் தோழமையுடன் வளர்க்க வேண்டும் என்பதையும் அப்பாவிடமே கற்றேன்!

கொலைவெறிப் பிடித்துத் திரியும் மிருகங்களும், அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் மிருகங்களும் மனித ரத்தத்தைச் சுவைப்பதை விட்டு மனிததத்தை மதிப்பதை, உணர்வுகளை மதிப்பதை எப்போது கற்றுக் கொள்வார்கள்???
‪#‎சாதி‬

சாதி‬

ஒரு தொலைக்காட்சியின் செய்தி சேனலில், தலித் இளைஞர் படுகொலை பற்றிய விவாதம், அதில் யாரோ ஒரு சாதியின் பிரதிநிதி, "காதல் என்பது காமம்" என்கிறார், அடடா, பெற்றோர்கள் பார்த்து அல்லது சாதி பார்த்து செய்யும் திருமணங்களில் உங்கள் மனைவியை நடுவீட்டில் வைத்து யாகம் வளர்த்தா குழந்தையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?
வெறும் காமம் திருமணத்திற்குச் செல்லாது, காமமா காதலா என்று புரியாத திருமணங்கள் பாதியில் முறிந்து விடும் அது காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்றாலும்,
ஒரு மண்ணும் இல்லை என்று ஒட்டிக் கொண்டிருக்கும் சில திருமணங்களும், குழந்தைகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கும், பரஸ்பரப் புரிதலில் சில திருமணங்கள் நீடிக்கும், இதில் சாதி சாதி என்று குதித்து அட ஏனடா வெறிப் பிடித்த விலங்குகளைப் போலத் திரிகிறீர்கள்?!

தன் சாதி மட்டுமே உயர்ந்தது, பிற சாதி ஆணோ பெண்ணோ தன் சாதியுடன் காதலோ திருமணமோ செய்து கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள் உடனடியாக,

"1. ஏதோ சாதியைச் சார்ந்த கொத்தனார்கள் கட்டிய வீட்டை இடித்து விட்டுத் தங்கள் சாதியைச் சார்ந்தவர்களை வைத்து வீடு கட்டிக் கொண்டு, பற்பசை முதல் படுக்கும் பாய் வரை, எல்லாப் பொருட்களையும் உங்கள் சாதிக்காரன் உற்பத்தி செய்ததா என்று பார்த்து வாங்குங்கள்,

2.உடல்நிலை சரியில்லாமல் மருத்துவரிடம் செல்லும்போது, அந்த மருத்துவர் உங்கள் சாதியா, அந்த மருத்துவமனை உங்கள் சாதியைச் சார்ந்தவனுடையதா என்று பார்த்துச் செல்லுங்கள்,
அடிபட்டு இரத்தமோ உறுப்புகளோ தேவைபட்டால் உங்கள் சாதியுடையது தான் வேண்டும் என்று கேட்டுப் பெறுங்கள்,

3. உங்கள் வீட்டின் கழிவுகளை நீங்களே சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்,

4. அணுவுலை முதல் கெயில் வரை உங்களை நோக்கி வரும் அத்தனை பயங்கரத் திட்டங்களையும் உங்கள் சாதிக்காரக் கும்பலை வைத்தே தடுத்துக் கொள்ளுங்கள்,

5. இயற்கைச் சீற்றங்களில் உங்களுக்கு ஆபத்து நேரிடும் போது, உங்கள் சாதிக்காரனையே உதவிக்குக் கூப்பிடுங்கள்,

6. இறுதியாக உங்கள் தனிமை போக்க விலைமகளிரை நீங்கள் நாட நேரிட்டால் அப்பெண்டிர் உங்கள் சாதியை சேர்ந்தவரா என்று உறுதி செய்துவிட்டு உங்கள் காமத்துக்கு வடிகால் தேடுங்கள் ...."

இனிவரும் காலங்களில் அரசாங்கம், சாதி மறுப்புத் திருமணம் செய்யும் மனிதர்களுக்குத் துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வழங்கிவிடலாம்!
‪#‎சாதி‬

தலை தூக்கும் ஜாதி வெறி கொலைகள்!

முதன்முதலாக தேமே என்று இருந்த பிள்ளையாரை வைத்து இந்து - முஸ்லிம் கலவரம் வெடித்தப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பிள்ளையாரைக் கும்பிடும் நானும், நாள் தவறாமல் அல்லாவை தொழும் தோழியும் ஒன்றாக ஓர் ஓவியப் போட்டிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போதுதான், அந்த நாளில்தான் நிகழ்ந்தது அந்த வன்முறை. வழியெங்கும் ரத்தம், அவளை வீட்டில் விட, என் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர்ப் பொட்டை எடுத்து உள்ளங்கையில் ஒட்டி வைத்துக்கொண்டேன். அதைச் செய்யச் சொன்னதும் கூட முகமதியச் சகோதரர்கள்தான். மீண்டும் என் வீட்டுச் சாலைக்குத் திரும்பும்போது, உள்ளங்கையில் இருந்த பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டி வைத்துக் கொண்டேன். பொட்டில்லாமல் இருந்தபோது என்னை முஸ்லிமாகவும், பொட்டு வைத்துக் கொண்டதும் இந்துவாகவும் நான் மற்றவர் கண்களுக்குத் தெரிந்தேன்.

இந்த அடையாளத்தைத் தாண்டி வேறு எதைக் கொண்டும் கடவுள் நம்மை வேறாகப் படைக்கவில்லை, இத்தனை பிரிவினைகளும் நாமாக வகுத்துக் கொண்டதே!

ஆதி காலத்தில் அவரவர் வழக்கம் என்று ஒன்றை வகுத்துக் கொண்டு, அதுவே சாதியாக, பல குழுக்களின் சங்கமம், அவரவர் மதமாக உருவெடுத்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு மதத்துக்கும் சாதிக்கும் உள்ள வேறுபாடு என்பது, அவர்களின் வழிபாட்டு முறை, உணவு முறை, பேச்சு வழக்கு முறை, திருமண முறை, ஆடைக் காலச்சாரம் முதலானவை மட்டுமே. பல சாதிகளின் பழக்கங்கள் எந்த வகையில் மாறுபட்டாலும், ஆடை என்பது உடலை மறைப்பதற்கும், உணவு என்பது உயிர் வாழ்வதற்கும், வழிபாடு என்பது மன அமைதிக்கும், திருமணம் என்பது வம்ச விருத்திக்கும் என்ற அடிப்படை நியதிகள் மாறுவதில்லை!

கடவுள் என்று நீங்கள் யாரை கூப்பிட்டாலும், இந்த அடிப்படைகளை எந்தக் கடவுளாவது மாற்ற முடியுமா? எந்த மதமாவது சாதியாவது இதை மாற்றிச் சொல்லி இருக்கிறதா? என்று சொல்லுங்கள். உடலில் ஓடும் ரத்தம் சிவப்பாகவும், உடலின் கழிவு வெளியேறும் இடம் ஒன்றாகவும் தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், உயர் சாதி என்பதால் கழிவுகள் வேறு வழியாகவும், கீழ் சாதி என்பதால், கழிவுகள் வேறொரு வழியாகவும் போகுமா என்ன?

கடவுள், மரம், மலை, காற்று, பறவைகள், விலங்குகள், என்பதை எல்லாம் எப்படிப் படைத்தாரோ, அதே அடிப்படையில் தான் வாழட்டும் என்று மனிதர்களையும் படைத்தார். பறவைகளும் விலங்குகளும் பசிக்காகத்தான் புசிக்கும். மனிதர்கள் மட்டும்தான் சாதிக்காகப் புசிப்பது ஏன்?

இந்தச் சாதி யாரை ஆட்டிப் படைக்கிறது?
படித்தவர்களையா, படிக்காதவர்களையா? இரண்டுமே இல்லை, சாதியை கொண்டாடுபவர்களையே இது அதிகம் ஆட்டிப்படைக்கிறது. 'அடடா சாதியாவது மண்ணாவது?' என்று சொல்லுபவர்களும் தம் குடும்பத்தில் வேறு சாதி காதல் என்று நுழைந்தால் ஏற்றுக் கொள்வதில்லை.

இவர்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?
ஒன்று சாதியத்தால் கட்டப்பட்ட மனதை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லது, தம்மைச் சாரந்தவர்கள் தம்மை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்ற பயத்தினாலும் மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை. அப்படியே எல்லாம் வேண்டாம் மாற்றிக் கொள்வோம் என்று நினைப்பவர்களையும் சில அரசியல் கட்சிகள் விடுவதில்லை!

ஒரே சமூகம் என்று நிறைந்த உறவினர்களின் சூழலில் வசிப்பவர்களையே சாதி அதிகம் தாக்குகிறது. பெரும்பாலும் கிராமங்களில், சிறு நகரங்களில். யாரும் கண்டுகொள்ளாத பெரு நகரங்களில், கலப்பு சாதி திருமணங்களையும் யாரும் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவதில்லை என்பதையும் கவனிக்க முடிகிறது.

மதம், சாதி எல்லாம் நாம் வளரும்போதே நம்மில் திணிக்கப்படுகிறது. இந்தச் சாதி மோதல்கள் யாரால் அதிகம் வெடிக்கின்றன?

அதிகமாய்ப் பிற மதத்தின் மீது பிற சாதியின் மீது சகிப்பின்மை இல்லாமல் காழ்ப்புக் கொள்ளும் மனநிலையைப் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கும் கும்பலே, சாதியின் பெயரில் இத்தனை வன்முறைகளுக்கும் காரணமாகிறது. இன்னொரு மகா மோசமான கும்பல் ஒன்று இருக்கிறது... அது மனிதர்கள் ஒன்றுபட்டுவிட்டால் ஓட்டு கிடைக்காது என்று மக்களின் சாதிய உணர்வுகளைத் தீண்டி, பிரித்தாளும் அரசியல் செய்யும் கும்பல். இதையெல்லாம் தாண்டி மக்கள் ஒன்றுபட நினைத்தாலே ஒன்று பட முடியும். இல்லையென்றால் சாதிய மத வன்முறைகளும் கொலைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்

உண்மையில் இருவேறு மதத்தைச் சார்ந்தவர்கள், இரு வேறு சாதியை சார்ந்தவர்கள் காதல் செய்யும்போது, அதீதமாய்க் காதலிக்கும் யாரோ ஒருவர் தனது வாழ்க்கை முறையை தன் இணைக்காக மாற்றிக் கொள்கிறார். பெரும்பாலும் வாழ்க்கை முறையை மாற்றாமல் அவர் அவர் விருப்பப்படி குடும்பம் நடத்துவதையும் பார்க்க முடிகிறது. சாதியை ஒழிக்கும் மிகப் பெரிய சமூக ஆயுதம் காதல் மட்டுமே என்பதை முழுமையாக நம்புகிறேன்.

ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் சாதி என்ற ஒன்று போதுமானதாய் இருக்கிறது சிலருக்கு. சரி, மதங்களைப் பற்றி, சாதியைப் பற்றிப் பெரும்பாலான படித்த மனிதர்களின் நிலைப்பாடுதான் என்ன என்று யோசித்தால், அது வருடம் முழுதும் பெண்ணைப் பற்றி அவள் ஆடையைப் பற்றி, அவள் நடத்தையைப் பற்றிப் பலவாறாகத் தூற்றிவிட்டு, கிண்டல் செய்துவிட்டு, மார்ச் 8-ம் தேதி, பெண்ணியம் வாழ்க என்று கோஷம் போடும், வாழ்த்திடும் சில ஆண்களின் மனநிலையைப் போன்றது!

சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டே, அவன் என் ஊருக்காரன், என் சாதிக்காரன் என்று உள்ளுரப் பாசம் மலரும், நாற்பது பேர் நின்றிருந்தாலும், தன் சாதியைச் சார்ந்த ஆணையோ பெண்ணையோ கண்டுவிட்டால், கண்கள் பனிக்கும் இதயம் இனிக்கும் இங்கே பலருக்கு. இப்படிப் பட்ட அன்பில் கூட, கொடுக்கல் வாங்கல் என்ற ஒன்றில் பணம் என்ற ஒன்று பூதாகரமாய் நுழைந்து நஷ்டம் ஏற்பட்டால், அட சாதியாவது வெங்காயமாவது!

ஒருவரின் நடத்தையைக் கண்டு, கருணையைக் கண்டு, நல்ல மனத்தைக் கண்டு நம்மால் நட்பு கொள்ள முடிந்தால், பாராட்ட முடிந்தால், காதலிக்க முடிந்தால், உதவிட முடிந்தால், பாதுகாத்திட முடிந்தால், அங்கே மனிதம் வாழும், அட நல்லவன் எல்லோரும் என் சாதி, கேடு நினைப்பவன் எல்லாம் பிற சாதி என்று நாம் நினைக்கும்போது, சாதி எனும் நச்சுச் செடி வளரும், அதையே நாம் நாளை புசிக்க வேண்டியும் வரும்.

இதோ... இந்த வாட்ஸ்ஆப் யுகத்தில், சமூக வலைதளங்களில் சாதியத்துக்கு எதிரான குரல்களுக்கு இணையாக, சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் குரல்களும் குழுமம் அமைத்து செயல்பட்டுக்கொண்டிருப்பதை விட சமகால கேவலம் ஏதுமில்லை.

சாதி ஆதிக்க வெறியர்களின் அட்டூழியம், சாதி வெறுப்பு பிரச்சாரங்களை அனுமதிப்பது, ஆணவக் கொலைகாரர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது ஆகியவை எல்லாம் இத்தகைய கொலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக ஆகியிருக்கிறது.

சமூக சீர்திருத்த பெயர்போன தமிழகத்தில் இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகள் நடப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இது, தீண்டாமைக்கு எதிராகவும் சாதியத்துக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்படுத்த வேண்டியதை உணர்த்துகிறது.
இத்தகைய கொலைகள், சாதி வெறியோடும் ஆணாதிக்கத்தோடும் ஒரு பெண் தாம் விரும்பியவருடன் வாழும் உரிமையையும் பறிக்கிறது. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இயன்றவரை சாதியத்துக்கு எதிரான குரல்களை நம் மொழியிலும் பிற மொழிகளிலும் சமூக வலைதளங்களில் மனதில் தோன்றியதைப் பதிந்து, சாதியத்துக்கு இணையப் போராட்டக் குரலை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!

http://tamil.yourstory.com/read/de23f11c24/an-it-massacre-dalit-youth-kumuralkalum-woman
 

இந்தியச்_சந்தையின்_விபரீத_நாடகங்கள்‬!

ஒர் உணவுப் பொருளையோ, மருந்துகளையோ சந்தைப்படுத்தும் போது அரசாங்க விதிமுறைகளை, தர நிர்ணயங்களை திருப்திப்படுத்துதல் அவசியம்!

ஆனால், நம் நாட்டில் இவையெல்லாம் ஒழுங்காக பின்பற்றாமல் இருப்பதற்கான உதாரணமே பல ஆண்டுகள் விற்பனையை கடந்து திடீரென நூடுல்ஸ் வகை உணவுகள் தடை செய்யப்படுவதும், பின்பு அவைகள் எப்படியோ திரும்ப சந்தைக்கு வருவதும்! இந்த மருந்துகளும் இப்படித்தான், ஆண்டுகள் பல கடந்து தடை செய்வார்கள், பின்பு நீதிமன்றத்தில் அந்த தடைக்கும் தடைப் பெறுவார்கள்!

நேற்றைய நாளிதழில் கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களைப் பழுக்க வைக்க இரசாயனம் உபயோகப்படுத்தும் செய்தியை, ஆதாரத்தோடு வெளியிட்டு இருந்தார்கள், ஒரு கடைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றபோது, கடைப்பையன் தக்காளிகளின் மேல் கொசு மருந்தை அடித்ததாகவும், கேட்டதற்கு அழுகிய தக்காளிகளால் கொசுக்கள், அவைகளை அப்புறப்படுத்த நேரமில்லை என்பதால் மருந்து அடித்ததாக அவன் சொல்ல, தான் கேட்டு நொந்ததாக ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்!

பல வருடங்களுக்கு முன்பு அரசாங்க மருத்துவமனை ஒன்றிற்கு சென்றபோது, சாதாரண சளி இருமலுக்கு ஒரு மருத்துவர் "எரித்ரோ மைசினை" ஒரு வேளைக்கு இரண்டு வீதம் ஒரு நாளைக்கு ஆறு மாத்திரை என ஐந்து நாட்களுக்கு சாப்பிட சொன்னார், மேற்கொண்டு நான் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் அந்த அரசாங்க பெண் மருத்துவர் பதில் சொல்ல தயாராயில்லை, அந்த மருந்துகளை நான் ஒருவேளைக் கூட சாப்பிடவில்லை, சண்டையைத் தவிர்க்க என் தாயார் வலுகட்டாயமாக என்னை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார்கள்! எப்போதாவது அருகிலியிருக்கும் ஆங்கில மருத்துவரிடம் செல்லும் போது அவர் ஒர் உபாதைக்கு குறைந்தது நான்கு மாத்திரைகள் எழுதித்தருவார், ஒரு வேளை மாத்திரைகளில் வேறு உபாதைகள் வந்து சேரும்!

அவ்வப்போது மருத்துவ பிரதிநிதிகள் வந்து காசோலைகள் அளிப்பதைப் பார்த்திருக்கிறேன்! நோயாளிகளுக்கு ஏற்ற நல்ல மருந்து என்றால், அதற்கு இப்படிப்பட்ட லஞ்சங்கள் தேவையில்லை! இப்படிப்பட்ட லஞ்சங்களால் தான் நல்ல மருந்துகள் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் பரிந்துரைப்பார் என்றால் அவர் நல்ல மருத்துவர் இல்லை, அப்படியென்றால் என்று நீங்கள் கேட்க வருவது புரிகிறது, இப்படித்தான் மருந்துகள் தடையென்னும் நாடகமும்!
நூடுல்ஸ் வந்தது போலவே இம்மருந்துகளும் திரும்ப வரும்!

வர வேண்டிய காசு வரும்வரை இந்தியச் சந்தையில், மேக் இன் இந்தியா என்ற ஆட்சியாளர்களின் சந்தைக் கூவலில், நீங்கள்;

மலிந்த சீனப் பொருட்களை இறக்குமதி செய்யலாம், அது உபயோகப்படுத்தும் குழந்தைகளின், மனிதர்களின் உடல்நலம் கெடுவதைப் பற்றி, சுற்றுச் சூழலைப் பற்றி கவலைவேண்டாம், காசு போதும்!

காய்கறிகளில், பயிர்களில் எந்தப் பூச்சிமருந்துகளையும் அடித்துக் கொள்ளுங்கள், அதிக நாட்களுக்கு நீங்களே அதை உண்பதைத் தவிர்க்க முடியாது!

எந்த மருந்துகளையும் சந்தைப்படுத்துங்கள், சிலரின் கஜானாவை நிரப்புங்கள் போதும், நீங்கள் சந்தைப்படுத்தும் விஷங்களில் உங்கள் சந்ததி மட்டும் தப்பிவிடாது!

எல்லா நீர் நிலைகளிலும் சாயக்கழிவுகள் முதல் அணுத்துகள்கள் வரை கலந்திடுங்கள், பரவாயில்லை, சுவிஸ் பேங்க் பணம் கொண்டு நீங்கள் தாகம் தீர்த்துக் கொள்ளலாம்!

புதிதாய் ஒரு வியாதிக்கு மருந்து வேண்டுமா, இங்கே மக்கட்தொகை ஈக்களைப் போல் உங்களுக்கு இலவசமாய் கிடைக்கும், கவனிக்க வேண்டியவர்களை கவனித்தால் போதும், எந்தக் குப்பையை வேண்டுமானலும் வந்து கொட்டுங்கள்!

மூன்றுப்பக்கமும் கடல் இருக்கிறது, அதில் நிறைய உப்பு இருக்கிறது, அது எங்களுக்குள் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை, வேண்டுமானால் வெளிநாட்டு ப்ராண்ட் பேஸ்டில் உள்நாட்டு கரியையும், உப்பையும், வேம்பையும் கலந்து எங்களுக்கே சந்தைப்படுத்துதல் போல, இங்கே இருக்கும் நீரையும், நிலத்தையும் எடுத்துக் கொண்டு, உள்நாட்டு சர்க்கரையையும், மூச்சுக்கு ஒவ்வாத கார்பன் டை ஆக்ஸைடை கலந்துக் கொடுப்பதைப் போலவும், நீங்கள் எங்கள் உப்பை எங்களுக்கே விற்று எங்களுக்கு சுரணை வருவதற்குள் எல்லாவற்றையும் சுரண்டி விட்டு ஓடி விடலாம்!

கீச்சுக்கள்

 
பிள்ளைகள் மற்றும் என் அம்மாவுடன் பள்ளிக்குச் சென்று திரும்புகையில், குயின் மேரிஸ் கல்லூரியின் எதிரே உள்ள காவல்துறை அலுவலகத்தை ஒட்டி ஒரு மாநகரப் பேருந்து செல்கிறது, அதன் அருகில் என் கார், ஒரே நேர்கோட்டில் அருகருகே செல்கிறோம், திடீரென்று ஒரு ஸ்கூட்டிப் போல் ஏதோ ஒரு இரு சக்கர வாகனத்தில் எவனோ ஒருவனும் அவனின் பின்னே அவன் தோள் பற்றிய படி அக்கல்லூரி மாணவியும், இடதுபுறத்தில் இருந்து குறுக்கு வாட்டில் கண்மண் தெரியாத வேகத்தில் பாய, நான் சட்டென்று ப்ரேக்கை அழுத்த, பக்க வாட்டில் பல்லவன் கவனிக்காமல் இன்னும் கொஞ்சம் முன்னே வந்து சுதாரித்து ப்ரேக்கை அழுத்த, மயிரிழையில் உயிர் தப்பினார்கள் அவர்கள் இருவரும்! தலைக்கவசம் இருவருக்கும் இல்லை! தொண்டைவரை வந்து, பிள்ளைகளைக் கருதி நான் விழுங்கிய செந்தமிழ் வார்த்தைகளை, பேருந்து ஓட்டுனர் அவர்களை நோக்கி வீச, காதல் பறவைகள் வேறு திருப்பத்திற்கு பறந்து விட்டது!
நிச்சயம் அவர்கள் தெய்வீகக் காதலர்களாய் தான் இருக்க முடியும்! 🤔

குழந்தை வளர்ப்பு, மாபெரும் பொறுப்பு!

இன்று மைலாப்பூர் சாய்பாபா கோவிலை விட்டு வெளியே வரும்போது ஒரு குடும்பம் தன் ஒன்றரை வயது பெண் குழந்தையைக் கோவிலிலேயே மறந்து (!) விட்டு விட்டு சென்று விட்டனர்.
யாரோ ஒரு தம்பதி தனியே இருந்த அந்தக் குழந்தையை தன் மகள்தான் அழைத்துக் காட்டியதாகவும், "இது உங்கள் குழந்தையா" என்று என்னிடமும் வேறு சிலரிடமும் கேட்டுக் கொண்டிருந்தனர். குழந்தையின் கையில் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன், குழந்தையின் கழுத்து, கைகள், காதுகளில் தங்க நகைகள்(!).

சிறிது நேரம் நாங்கள் ஒவ்வொருவராய் கேட்டுக் கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தையின் சித்தப்பா என்று ஒரு இளைஞர் வந்தார், "அம்மாவை கூப்பிடுங்கள்", என்று சொல்ல, நாலைந்துப் பெண்களுடன் அந்த ஆணும் என ஒரு குடும்பமே உள்ளே வந்தது, ஒருவர் முகத்தில் கூட, குழந்தையைத் தொலைத்த பதட்டமோ வருத்தமோ இல்லை, "என் குழந்தைதான், கவனிக்காமல் விட்டு விட்டோம்" என்று சதாரணமாகச் சொல்லி குழந்தையை வாங்கிக் கொண்டார் அப்பெண்மணி! 

"ஏம்மா குழந்தை விஷயத்தில் இவ்வளவு அஜாக்ரதையா இருக்கலாமா, அதுவும் இவ்வளவு நகைகளைப் போடலாமா?!" என்று ஒவ்வொருத்தர் சொன்னவைகளையும் அவர்கள் காதில் வாங்கினதுப் போலவே தெரியவில்லை!

குழந்தையும் அழ, உண்மையில் அவர்கள்தான் சொந்தமா என்று சந்தேகம் எழ, குழந்தையை பாதுகாத்த அங்கே நின்றிருந்த ஒரு தகப்பன் அவர்கள் பின்னேயே சென்று பார்த்து விட்டு வந்தார்!

அவர்கள் உணர்வு எப்படிப்பட்டது என்பதை விட்டுவிடுவோம், எனினும் சில விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்;

குழந்தையின் பாதுகாப்பு எங்கு சென்றாலும் முக்கியம், குழந்தையின் கைகளை விட்டுவிடாதீர்கள், உங்கள் பார்வையிலேயே அவர்கள் இருக்க வேண்டும் வீடு என்றாலும் பொது இடங்கள் என்றாலும்!

குழந்தையே பெரும் செல்வம், அச்செல்வத்திற்கு பொன் நகைகள் எதற்கு? அப்புன்னகைக்கு முன் எந்தப் பொன் நகையும் மின்னுவதில்லை! ஆசைக்காக நகைகள் அணிவித்தாலும், இது போன்ற பொது இடங்களிலும், பள்ளிக்கு அல்லது விளையாடப் போகும் போதெல்லாம் அவைகள் எதற்கு?

பணத்தையோ நகையையோ நீங்கள் மீட்டு விடலாம், உங்கள் குழந்தையைத் தொலைத்துவிட்டால்...? வேண்டாம், யோசிக்கவே வேண்டாம், பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள் உயிருள்ள செல்வத்தை!

ஸ்மார்ட் போனோ அல்லது வேறு எந்த போனோ குழந்தைகளுக்கு அவை எதற்கு, பதினான்கு வயது வரை செவியின் உள்ளூருப்புகள் வளர்ச்சிபெறும் நேரத்தில், கைப்பேசிகளுடனான விளையாட்டு குழந்தைகளுக்கு தீங்கையே தரும்!

குழந்தை வளர்ப்பு, மாபெரும் பொறுப்பு, பார்த்துக் கொள்ள வேண்டும்!

கீச்சுக்கள்!

உண்மையில் இப்போது ஆங்கிலேயர் ஆட்சி வசம் நாம் இருந்திருந்தால், நமக்கு சுதந்திரமே கிடைத்திருக்காது, ஏனெனில் வெட வெடவென்று விடலைகளைப் போல் கையில் இரண்டே அரிவாள்களில் பல நூறு பேர்கள் பார்த்திருக்க அத்தனை நிதானமாய், கொடூரமாக கொலை செய்து போகிறார்கள், இந்தக் கோழைகளுக்கு நடுவே, மிஷின் கன்களும், பீரங்கிகளுமாய் ஆங்கிலேயர் வந்திறங்கியிருந்தால், இந்தியாவிற்கு தலைமுறைகளைக் கடந்தும் சுதந்திரம் என்ற ஒன்று
எட்டாக்கனியாகியிருக்கும்!

---------------------------------------

பதினைந்து வயதில் படிப்பை நிறுத்திவிட்டு, தன் சாதிக்குள் பத்து பதினைந்து வயது வித்தியாசத்தில் தன் பெண்னெனும் நாய்குட்டிக்கு தகப்பன் திருமணம் செய்து வைத்தால் அது தெய்வீகம், அங்கே அந்த பதினைந்து வயது குழந்தையிடம் உடலுறவுக் கொண்டாலும் அது காலச்சாரம்!
இருபது வயதில் சம வயதின் வேறு சாதியில் பெண் மணமுடித்தால் அது அரிப்பு, வெற்றுக் காமம்!
சாதியைக் கூர்தீட்டிய நேரத்தில் பெண்ணுக்கு வாழ்க்கையைப் பற்றி எடுத்துச் சொல்லி அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையை செம்மைப்படுத்தியிருக்கலாம் தானே சாதியைக் கொண்டாடும் தகப்பன்களே?!

---------------------------------------------------------------
ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் நாட்டையே இழந்த உணர்வில்லாமல், அவனுடைய ஊதியத்தில் சுகித்திருந்தது ஒரு கும்பல், அன்றைய நிலைக்கு சற்றும் சளைத்ததல்ல இன்றைய மத, சாதி பிடிவாதங்களில், சதுரங்க ஆட்டம் போல கட்டமைக்கப் படும் மீடியா செய்திகளில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றிருக்கும் மக்களின் மனநிலை!

--------------------------------------------------
இந்த தேசப் பக்தர்கள், மாட்டுக்கறி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், பெரிய நட்சத்திர உணவகங்கள், மாட்டுத்தோலில் காலணிகள், ஆடைகள், இன்ன பிற பொருட்களை விற்கும், ஏற்றுமதி செய்யும் பெரிய பணக்கார வியாபாரிகளை நெருங்காதது ஏன்? அதையே அணிந்து நடக்கும் பேஷன் ஷோக்களுக்கு ஏன் செல்லவில்லை? பசுவை தேசிய விலங்காக அறிவித்து இந்த எல்லா வியாபரங்களையும் தடை செய்வதுதானே?
ஒருவேளை உண்பவதுதான் தவறு, கொன்று ஏற்றுமதி செய்வது தவறில்லையோ?
உண்மையில் மதத்தின் பெயரில், பசுவின் பெயரில் நடக்கும் எதுவும் இந்து தர்மமோ, அரசியல் சட்டத்தின் நியதியோ அல்ல, தனிப்பட்ட காழ்ப்புணர்வில், தனிப்பட்ட அரசியல் வியாபர லாபங்களுக்காகவே நடக்கின்றன வன்முறைகள், அதுவும் எளிய மக்களின் மீது!
----------------------------------------------------


கீச்சுக்கள்!

நீர் கூட சுழற்சிப் பெறுகிறது,
காற்றாக, மேகமாக, மீண்டும் நீராக,
அன்பு மட்டும் சில வேளைகளில்
ஒரு வழிப்பாதையாக நீர்த்துப் போகிறது,
லாப நஷ்ட கணக்குகளில்!

-------------------------------

தளும்பும் எதுவும் விரயம்தான்!
Anything overwhelming is a waste!

-----------------------------------------------

More than revolution all we need is self correction!
சென்னை ஃட்ராபிக்ல் மாட்டிகிட்டா இப்படித்தான் தத்துவம் தோணும்! 😣
----------------------------------------------

உலகத்தின் எளிதான விஷயமும், கடினமான விஷயமும் ஒன்றே ஒன்றுதான், அது அன்பு காட்டுவது அல்லது வெளிப்படுத்துவது!

----------------------------------------------------

ஆசைகள் நீர்த்துப் போகும் போது
பணம் என்பது வெற்றுத்தாள்களாக மாறுகிறது!

----------------------------------------------------------


மத்திய அரசு மீதான ஒரு சாமானியரின் 10 விமர்சன குறிப்புகள்

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது வாக்களித்த மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின்னர் கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏகத்துக்கும் அறிவிப்புகள் வெளியாகிவிட்டன.
அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க மதவாதம், சகிப்பின்மை, மாட்டிறைச்சி சர்ச்சை, மானியங்களை ஒழிக்க நினைக்கும் அரசு, தலித் விரோத ஆட்சி, மாணவர்கள் மீதான அடக்குமுறை, எனத் தொடங்கி சமீபமாக தொழிலாளர் வட்டி விகிதங்களில் மாற்றம் என பல்வேறு விமர்சனங்களுக்கு பாஜக அரசு உள்ளாகியுள்ளது. 

வாக்களித்த ஒரு சாமானியராக நான் பாஜக அரசில் எதிர்ப்பது என்ன...? எதிர்பார்ப்பது என்ன? 

1. பொன் மகள், பொன் மகன் திட்டங்களை உங்களின் குழந்தைகளுக்காக, அவர்களின் எதிர்கால நலனுக்காக ஒன்பது சதவீகித வட்டி என்று மாபெரும் ஆர்ப்பாட்டத்துடன் அறிமுகப்படுத்திய திட்டத்தில், வந்த வேகத்தில் இப்போது வட்டியைக் குறைக்கும் அறிவிப்பும், அதே வேகத்தில் வருகிறது, இப்போது குழந்தைகளின் எதிர்கால நலனைப் பற்றிய மத்திய அரசின் அக்கறை எங்கே போயிற்று? 

2. ஒருவர் மாத சம்பளத்திற்கு வேலைக்குச் சேரும்போது, முதலாளிகள் அந்த ஊழியரின் சம்பளமென அவர்கள் பங்காக அந்த ஊழியருக்கு செலுத்தும் வைப்புத் தொகையை கணக்கிட்டே அவனின் சம்பளத்தின் சேமிப்பு என்பார்கள். இதில் மாத மாதம் வைப்புத் தொகையை பிடித்தம் செய்து, வரி விலக்கென்று ஒரு சிறு சதவீகிதத்தை அளித்து, மிச்சத்தை அவனுக்கு சம்பளமெனத் தருவார்கள். அப்படி ஒவ்வொரு ஊழியரும் வட்டியின்றி அரசுக்கு பி.எஃப். என்ற பெயரில் தரும் பல லட்சம் கோடிகள் அரசுக்கு இலவச முதலீடு! 

இந்த முதலீட்டையும் இலவசமாக பெற்றுக் கொண்டு, முதலீடு செய்தவன் பணத்தை திரும்பப் பெற நினைக்கும்போது, உனக்கு 56 வயதாகட்டும், அப்பொழுது முழுத்தொகையைப் பெற்றுக் கொள், அதுவரை கடனாய் ஒரு தொகையைப் பெற்றுக்கொள் என்பது எத்தகைய கேலிக் கூத்து என்று யோசித்துப் பாருங்கள். இந்த சேமிப்பு கடைசி காலத்தில் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதற்கு முன்பே அவசர அவசிய தேவையின்போது எளிதில் பயன்படுத்த முடியாதது வேதனைதானே? 

3. ஒரு சீட்டுக் கம்பெனியில் பணம் போடுகிறீர்கள் அல்லது ஒரு கம்பெனியின் ஷேர்களில் முதலீடு செய்கிறீர்கள், இவர்கள் உங்கள் முதலீட்டில் வட்டியென்றோ அல்லது அபராதம் என்றோ பணத்தைக் பிடித்துக் கொண்டாவது உங்கள் முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தர முடியாவிட்டால் என்ன ஆகும்? வழக்குகள் பாயும், கம்பெனிகள் திவாலாகும்..... ஆனால் ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது, நம்முடைய முதலீட்டைத் திருப்பித் தர ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் விதிமுறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இது எவ்வகையில் நியாயம். 

4. உங்களின் அவசர தேவைகளுக்கு நகைக்கடன், தனிநபர் கடன் பெறுகிறீர்கள், வீடு கட்ட வீட்டுக் கடன் பெறுகிறீர்கள், இப்படி ஒவ்வொன்றுக்கும் நீங்கள் அரசு சார்ந்த அல்லது அரசுடமையாக்கப்பட்ட அலுவலகங்களில், வங்கிகளில் ஏன் தனியார் அமைப்புக்களிடம் கூட கடன் வாங்கும் போதும், அரசு மற்றும் தனியார்கள், அவற்றுக்கென நம்மிடம் நிர்ணயிக்கும் வட்டி எட்டு சதவீகிதத்தில் இருந்து பதிமூன்று சதவீகிதம் வரை இருக்கிறது, அதுவும் வீட்டுக் கடனில் வட்டி விகிதத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள், நாம் எந்தக் கேள்வியையும் கேட்டு விட முடியாது. இதைப்போலவே வங்கிகளில் நீங்கள் பல்வேறு திட்டங்களில் செலுத்தும் எந்தத் தொகைக்கும் ஆறு முதல் எட்டு சதவீகிதத்திற்கு மேல் வட்டிக் கிடையாது! அதாவது, அவர்களிடம் நீங்கள் வாங்கும் கடனுக்கு, வட்டியை அவர்கள் நிர்ணயம் செய்வார்கள், உங்களிடம் பெறும் முதலீடு என்கிற கடனுக்கு உங்களுக்கு எவ்வளவு வட்டித் தருவது என்று அவர்களே முடிவு செய்வார்கள்! 

5. வட்டியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும், அரசு வங்கிகள் நம்மை முதலீட்டில் ஏமாற்றாது என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு, "ஒரு வங்கி திவாலாகும் நிலை ஏற்பட்டால், நீங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வைத்திருந்தாலும், வைத்திருக்கும் ஒவ்வொரு கணக்குக்கும் அதிகபட்சமாய், உங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும்", இதை வங்கிப் பற்றிய விதிமுறைகளில் படித்தது. நாம் படிக்க முடியாத படி நுணுக்கி எழுதப் பட்டிருக்கும் விதிமுறைகளை எல்லா ஆவணங்களிலும் நன்றாக படித்துப் பாருங்கள் கையெழுத்திடும் முன்பு! 

6. வரி கட்டிய வருமானத்தை செலவு செய்யும்போதும் ஒவ்வொன்றுக்கும் வரியை கட்டுகிறோம், யாரோ சிலர் வரி ஏய்த்து, வாங்கிய கடனை ஏய்த்து நாட்டை விட்டு ஓடும்போதும், ஆராயாமல் கொடுத்தவனுக்கும் தண்டனையில்லை, ஓடினவனுக்கும் தண்டனையில்லை, பணத்தை இழந்த மக்களுக்கே மீண்டும் புதிய வரிகளில், சலுகைப் பறிப்புகளில் மீண்டும் மீண்டும் தண்டனை! 

7. பல கோடி மக்கள் உணவில்லாமல் தவிக்கும்போது, பல கோடி பெண்களும், குழந்தைகளும் பல்வேறு வன்முறைக்களுக்கு ஆளாகும் போது, பல கோடி குழந்தைகள் கல்வியில்லாமல், உணவில்லாமல் தவிக்கும் போது இதை மாற்றும் வழிமுறைகளுக்குத் திட்டம் தீட்டாமல், சில தனிமனிதர்கள் நடத்தும் உலக கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும், சிலரின் பாதுகாப்புக்கும் மக்கள் பணத்தை செலவு செய்யும் செயல்பாட்டினை என்னவென்று கூறுவது? 

8. எண்ணெயில் சுற்றுகிறது விலைவாசி என்று அறிந்தும், கச்சா எண்ணெய் விலை குறைந்துக்கொண்டே இருந்த போதும் சளைக்காமல் விலையை உயர்த்திக் கொண்டு வரி வருமானத்தை உயர்த்திக் கொண்டு, விலைவாசியை ஏற்றுகிறார்கள். அரசியல்வாதிகளிடம் இருந்து கருப்புப் பணத்தை மீட்காமல், ஊழலை ஒழிக்காமல், மக்களின் மானியங்களை மட்டும் விட்டுக் கொடுக்கச் சொல்கிறார்கள். 

9. இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதளத்திற்கு வீழ்ந்துக் கொண்டே இருக்கும் காரணங்களில் பல்வேறு காரணங்களில், இறங்குமுகமாகிக் கொண்டிருக்கும் ஏற்றுமதியும், அதைச் சார்ந்து தயங்கிக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களின் தயக்கமும் முக்கிய காரணங்கள். முதலீட்டாளர்களின் தயக்கங்களுக்கு என்ன காரணம், அவரவர் நாடுகளின் நிலவரமும், நம் நாட்டு ஆட்சியாளர்களின் மாற்றங்களுக்கான நடவடிக்கைகளின் மந்த நிலையே காரணம்! 

10. இப்படிப்பட்ட பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் போது, மந்திரிகள், கட்சிகாரர்கள் எல்லாம் "அவன் நாக்கை வெட்டினால் பணம் தருகிறேன்", "பாரத் மாதா கி ஜெ சொல்லவில்லையென்றால் நாட்டை விட்டு வெளியே போ", "அவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு", "பெண்கள் வீட்டுக்குள் அடங்கி இருந்தால் அவர்கள் ஒழுங்காய் இருந்தால் பாலியல் கொடுமை நிகழாது", "கோஷம் போடும் மாணவனெல்லாம் தீவிரவாதி", "பசுவை இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் ஏற்றுமதி செய்யலாம், இங்கே உண்பது தவறு, .........." என்று கணக்கிலாடங்கா பொன் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டேயிருந்தால், பிரதமர் ஆட்சி செய்வது எப்படி? 

எந்தக் கட்சியாய் இருந்தாலும், ஓட்டுப்போட்ட அனைத்து மத, சாதி, இன, மொழி நிறங்களை சார்ந்த மக்களை கருத்தில் கொள்ள வேண்டும், எத்தனை விதமாகவும் வரிகளைச் சுமத்துங்கள், அதை ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் தானமாக்கி விட்டு மக்களின் கழுத்தை நெறிக்காதீர்கள்!
அடிப்படைகளைச் சாத்தியமாக்கி விட்டு சாமியார்களைப் கூப்பிட்டுக் கொண்டாடுங்கள், அதுவரை மக்களாட்சி என்பதை சாத்தியப்படுத்தும் ஆட்சியைத் தாருங்கள், எல்லா வகையிலும்! 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-10-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8381252.ece?widget-art=four-rel
 

Friday, 4 March 2016

பிச்சை வரி!


வரியென நூறில்
முப்பது ரூபாய் பிடுங்கி
உண்ணும் உணவில்
சேவை வரி பிடுங்கி
வாங்கிய பொருட்களுக்கு
விற்பனை வரி பிடுங்கி
கல்வி வரியெனப் ஒன்றைப் பிடுங்கி
அப்படி இப்படி என்று பிடித்தது போக
சில பல முதலாளிகளின்
சில கோடி வரிகளை
ரத்துச் செய்து
நிலத்தையும் நீரையும்
காற்றையும் பணத்தையும்
ஒன்றுபோலவே ஊழலில்
சேதப்படுத்தும் அரசு
மீதமென
விட்டு வைத்திருக்கும்
என் கையில் உள்ள சில்லறைகளை
வீதி வழியே இரந்து நிற்கும்
என்னிலும் வறியவர்க்கு
ஈந்து தீர்க்கிறேன்
என் கையிருப்பின் கடைசி நாணயம்
தீரும்போது
நீண்டு கொண்டிருக்கும்
இந்தப் பிச்சைக்காரர்களின் வரிசையில்
ஓர் எண்ணிக்கை நானாகக் கூடும் நாளை