Monday, 21 March 2016

மகளிர்_தினம்‬!

அவன் என் பள்ளி நண்பன், எதையும் நோக்காது வளர்ந்த நட்பு, பத்தாம் வகுப்பு பரீட்சைக்காக முதன் முதலாக, சாதிச் சான்றிதழ் என்று ஒன்று தேவைப்படுவதை நாங்கள் அறிந்தப்போது, கொஞ்சம் விவரமான ஒருவன் "ஏய் அவன் .......சாதி, அவன்கிட்டேலாம் நீ ஏன் பேசுறே?" என்று நானும் அவனும் ஒரே சாதி என்று பறைசாற்றிக் கொண்ட ஒருவன் சொன்னான், "அடச்சே போ" என்றதோடு சாதி என்ற ஒன்றை ஒரேநாள் தெரிந்து கொண்டு ஒரு நாளில் ஒதுக்கியும் வைத்தேன்! நட்பை மட்டும் எதற்காகவும் இன்றுவரை ஒதுக்கவில்லை!

உரிமையாக வீட்டுக்கு வருபவர்களில் அவனும் ஒருவன், அம்மாவிடம் கேட்டு வாங்கிச் சாப்பிடுவான், (ஒருத்திப் பூட்டிய வீட்டைத் திறந்து, சாப்பிட்டு, தூங்கிவிட்டும் போவாள்), என்னுடைய சுயம் என்ற ஒன்றை மிகச்சரியாய், புரிந்து கொண்ட உத்தமான ஒரு நண்பன், பள்ளி இறுதியாண்டில், அவனை மாணவர் தலைவராகவும், என்னைத் துணைத் தலைமையாகவும் தேர்ந்தெடுக்கப் பணித்தபோது, "இல்லை, அவளுக்குப் பிடிக்காது" என்று ஒதுங்கி நின்று வழிவிட்டவன், பள்ளி முடித்துப் பணியில் சேர்ந்தபோதும், படிப்புடன் போட்டி நிகழ்ச்சிகள் என்று எங்கே சென்றாலும், அவன் வீட்டில் இருக்கும் அப்பா அம்மா உட்பட எந்த உறவிடமாவது ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும், உடனே பைக்கை எடுத்துக் கொண்டு வந்து பத்திரமாய் வீடு சேர்ப்பான், இன்றைக்கு வரைக்கும் தன்னுடைய தோழி புத்திசாலி என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன்!  :-p


அவனுடைய எண்ணங்களை நானும், என்னுடைய எண்ணங்களை அவனும் ஆத்மார்த்தமாய் உணர்ந்து கொண்டிருக்கிறோம், எங்கள் குடும்பங்களும் எங்கள் நட்பை உணர்ந்து கொண்டதும் மிகப்பெரும் வரம் "மனசு சரியில்லடா பேசணும் என்றால் " குடும்பமே புரிந்து கொண்டு தனிமைத் தரும், ஒரு நல்ல நிறுவனத்தில் , உயர்ந்தப் பதவியில் இருக்கிறான், எப்போது அழைத்தாலும் வருவான், எத்தனை வேலையில் இருந்தாலும், கைபேசியில் அழைத்தால் பேசுவான், ஒருபோதும் எதற்காகவும் நான் அழுவதைக் காண விரும்பாதவன் "உடுக்கை இழந்தவன் கைபோலே இடுக்கண் களையும் நட்பு " அது! இதை அவன் படிக்கக் கூட முடியாமல் ஏதேனும் ஒரு பணியில் அல்லது ஒரு பயணத்தில் பரபரப்பாய் இருக்கலாம் , ஆனால் எப்போதும் நட்பின் அழைப்பின் எல்லைக்குள் ....!

இவன் போலவே அவன், இன்னும் மற்றொருவன், யாரையும் விட்டுவிடுமோ என்று தோன்றும் அளவுக்கு நல்ல நட்புகள், நல்ல நண்பர்கள், அழகிய தோழமைகள், பள்ளியைத் தாண்டியும் சில பல நல்ல தோழமைகள், இந்த முகப்புத்தகத்தின் வாயிலாகவும் தோழமையாகிக் குடும்பத்தில் ஒருவராகிப் போன உறவுகள், இவர்களில் யார் பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை, ஏனெனில் உங்கள் எல்லோருக்கும் இதுபோல அருமையானதொரு தோழமைப் பள்ளியில், கல்லூரியில் வாய்த்திருக்கும், இதைப் படிக்கும் கணம் நீங்கள் அவர்களை நினைவுகூருங்கள், போதும்!

இந்த உலகம் அழகிய மனம் கொண்ட ஆண்களாலும் நிறைந்திருக்கிறது, இந்த மனங்கள் பெருகும்போது பெண்களுக்கென்று ஒரு தினம் தேவைப்படாது, அந்த நாள் வரும்போது அது "நம்பிக்கைத் தினமாக" கொண்டாடப்படும்
அந்த நாள் வரும்வரை பெண்களைச் சக உயிராய் பாவிக்கும் அனைவருக்கும் இந்தப் பெண்கள் தினத்தில் நன்றிகள்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...