Monday, 21 March 2016

தலை தூக்கும் ஜாதி வெறி கொலைகள்!

முதன்முதலாக தேமே என்று இருந்த பிள்ளையாரை வைத்து இந்து - முஸ்லிம் கலவரம் வெடித்தப்போது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பிள்ளையாரைக் கும்பிடும் நானும், நாள் தவறாமல் அல்லாவை தொழும் தோழியும் ஒன்றாக ஓர் ஓவியப் போட்டிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போதுதான், அந்த நாளில்தான் நிகழ்ந்தது அந்த வன்முறை. வழியெங்கும் ரத்தம், அவளை வீட்டில் விட, என் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர்ப் பொட்டை எடுத்து உள்ளங்கையில் ஒட்டி வைத்துக்கொண்டேன். அதைச் செய்யச் சொன்னதும் கூட முகமதியச் சகோதரர்கள்தான். மீண்டும் என் வீட்டுச் சாலைக்குத் திரும்பும்போது, உள்ளங்கையில் இருந்த பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டி வைத்துக் கொண்டேன். பொட்டில்லாமல் இருந்தபோது என்னை முஸ்லிமாகவும், பொட்டு வைத்துக் கொண்டதும் இந்துவாகவும் நான் மற்றவர் கண்களுக்குத் தெரிந்தேன்.

இந்த அடையாளத்தைத் தாண்டி வேறு எதைக் கொண்டும் கடவுள் நம்மை வேறாகப் படைக்கவில்லை, இத்தனை பிரிவினைகளும் நாமாக வகுத்துக் கொண்டதே!

ஆதி காலத்தில் அவரவர் வழக்கம் என்று ஒன்றை வகுத்துக் கொண்டு, அதுவே சாதியாக, பல குழுக்களின் சங்கமம், அவரவர் மதமாக உருவெடுத்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு மதத்துக்கும் சாதிக்கும் உள்ள வேறுபாடு என்பது, அவர்களின் வழிபாட்டு முறை, உணவு முறை, பேச்சு வழக்கு முறை, திருமண முறை, ஆடைக் காலச்சாரம் முதலானவை மட்டுமே. பல சாதிகளின் பழக்கங்கள் எந்த வகையில் மாறுபட்டாலும், ஆடை என்பது உடலை மறைப்பதற்கும், உணவு என்பது உயிர் வாழ்வதற்கும், வழிபாடு என்பது மன அமைதிக்கும், திருமணம் என்பது வம்ச விருத்திக்கும் என்ற அடிப்படை நியதிகள் மாறுவதில்லை!

கடவுள் என்று நீங்கள் யாரை கூப்பிட்டாலும், இந்த அடிப்படைகளை எந்தக் கடவுளாவது மாற்ற முடியுமா? எந்த மதமாவது சாதியாவது இதை மாற்றிச் சொல்லி இருக்கிறதா? என்று சொல்லுங்கள். உடலில் ஓடும் ரத்தம் சிவப்பாகவும், உடலின் கழிவு வெளியேறும் இடம் ஒன்றாகவும் தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும், உயர் சாதி என்பதால் கழிவுகள் வேறு வழியாகவும், கீழ் சாதி என்பதால், கழிவுகள் வேறொரு வழியாகவும் போகுமா என்ன?

கடவுள், மரம், மலை, காற்று, பறவைகள், விலங்குகள், என்பதை எல்லாம் எப்படிப் படைத்தாரோ, அதே அடிப்படையில் தான் வாழட்டும் என்று மனிதர்களையும் படைத்தார். பறவைகளும் விலங்குகளும் பசிக்காகத்தான் புசிக்கும். மனிதர்கள் மட்டும்தான் சாதிக்காகப் புசிப்பது ஏன்?

இந்தச் சாதி யாரை ஆட்டிப் படைக்கிறது?
படித்தவர்களையா, படிக்காதவர்களையா? இரண்டுமே இல்லை, சாதியை கொண்டாடுபவர்களையே இது அதிகம் ஆட்டிப்படைக்கிறது. 'அடடா சாதியாவது மண்ணாவது?' என்று சொல்லுபவர்களும் தம் குடும்பத்தில் வேறு சாதி காதல் என்று நுழைந்தால் ஏற்றுக் கொள்வதில்லை.

இவர்கள் ஏன் ஏற்றுக் கொள்வதில்லை?
ஒன்று சாதியத்தால் கட்டப்பட்ட மனதை அவர்களால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அல்லது, தம்மைச் சாரந்தவர்கள் தம்மை ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்ற பயத்தினாலும் மாற்றிக் கொள்ள முன்வருவதில்லை. அப்படியே எல்லாம் வேண்டாம் மாற்றிக் கொள்வோம் என்று நினைப்பவர்களையும் சில அரசியல் கட்சிகள் விடுவதில்லை!

ஒரே சமூகம் என்று நிறைந்த உறவினர்களின் சூழலில் வசிப்பவர்களையே சாதி அதிகம் தாக்குகிறது. பெரும்பாலும் கிராமங்களில், சிறு நகரங்களில். யாரும் கண்டுகொள்ளாத பெரு நகரங்களில், கலப்பு சாதி திருமணங்களையும் யாரும் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவதில்லை என்பதையும் கவனிக்க முடிகிறது.

மதம், சாதி எல்லாம் நாம் வளரும்போதே நம்மில் திணிக்கப்படுகிறது. இந்தச் சாதி மோதல்கள் யாரால் அதிகம் வெடிக்கின்றன?

அதிகமாய்ப் பிற மதத்தின் மீது பிற சாதியின் மீது சகிப்பின்மை இல்லாமல் காழ்ப்புக் கொள்ளும் மனநிலையைப் பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கும் கும்பலே, சாதியின் பெயரில் இத்தனை வன்முறைகளுக்கும் காரணமாகிறது. இன்னொரு மகா மோசமான கும்பல் ஒன்று இருக்கிறது... அது மனிதர்கள் ஒன்றுபட்டுவிட்டால் ஓட்டு கிடைக்காது என்று மக்களின் சாதிய உணர்வுகளைத் தீண்டி, பிரித்தாளும் அரசியல் செய்யும் கும்பல். இதையெல்லாம் தாண்டி மக்கள் ஒன்றுபட நினைத்தாலே ஒன்று பட முடியும். இல்லையென்றால் சாதிய மத வன்முறைகளும் கொலைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்

உண்மையில் இருவேறு மதத்தைச் சார்ந்தவர்கள், இரு வேறு சாதியை சார்ந்தவர்கள் காதல் செய்யும்போது, அதீதமாய்க் காதலிக்கும் யாரோ ஒருவர் தனது வாழ்க்கை முறையை தன் இணைக்காக மாற்றிக் கொள்கிறார். பெரும்பாலும் வாழ்க்கை முறையை மாற்றாமல் அவர் அவர் விருப்பப்படி குடும்பம் நடத்துவதையும் பார்க்க முடிகிறது. சாதியை ஒழிக்கும் மிகப் பெரிய சமூக ஆயுதம் காதல் மட்டுமே என்பதை முழுமையாக நம்புகிறேன்.

ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாவிட்டாலும் சாதி என்ற ஒன்று போதுமானதாய் இருக்கிறது சிலருக்கு. சரி, மதங்களைப் பற்றி, சாதியைப் பற்றிப் பெரும்பாலான படித்த மனிதர்களின் நிலைப்பாடுதான் என்ன என்று யோசித்தால், அது வருடம் முழுதும் பெண்ணைப் பற்றி அவள் ஆடையைப் பற்றி, அவள் நடத்தையைப் பற்றிப் பலவாறாகத் தூற்றிவிட்டு, கிண்டல் செய்துவிட்டு, மார்ச் 8-ம் தேதி, பெண்ணியம் வாழ்க என்று கோஷம் போடும், வாழ்த்திடும் சில ஆண்களின் மனநிலையைப் போன்றது!

சாதி இல்லை என்று சொல்லிக் கொண்டே, அவன் என் ஊருக்காரன், என் சாதிக்காரன் என்று உள்ளுரப் பாசம் மலரும், நாற்பது பேர் நின்றிருந்தாலும், தன் சாதியைச் சார்ந்த ஆணையோ பெண்ணையோ கண்டுவிட்டால், கண்கள் பனிக்கும் இதயம் இனிக்கும் இங்கே பலருக்கு. இப்படிப் பட்ட அன்பில் கூட, கொடுக்கல் வாங்கல் என்ற ஒன்றில் பணம் என்ற ஒன்று பூதாகரமாய் நுழைந்து நஷ்டம் ஏற்பட்டால், அட சாதியாவது வெங்காயமாவது!

ஒருவரின் நடத்தையைக் கண்டு, கருணையைக் கண்டு, நல்ல மனத்தைக் கண்டு நம்மால் நட்பு கொள்ள முடிந்தால், பாராட்ட முடிந்தால், காதலிக்க முடிந்தால், உதவிட முடிந்தால், பாதுகாத்திட முடிந்தால், அங்கே மனிதம் வாழும், அட நல்லவன் எல்லோரும் என் சாதி, கேடு நினைப்பவன் எல்லாம் பிற சாதி என்று நாம் நினைக்கும்போது, சாதி எனும் நச்சுச் செடி வளரும், அதையே நாம் நாளை புசிக்க வேண்டியும் வரும்.

இதோ... இந்த வாட்ஸ்ஆப் யுகத்தில், சமூக வலைதளங்களில் சாதியத்துக்கு எதிரான குரல்களுக்கு இணையாக, சாதியத்தைத் தூக்கிப் பிடிக்கும் குரல்களும் குழுமம் அமைத்து செயல்பட்டுக்கொண்டிருப்பதை விட சமகால கேவலம் ஏதுமில்லை.

சாதி ஆதிக்க வெறியர்களின் அட்டூழியம், சாதி வெறுப்பு பிரச்சாரங்களை அனுமதிப்பது, ஆணவக் கொலைகாரர்கள் தண்டிக்கப்படாமல் தப்பிப்பது ஆகியவை எல்லாம் இத்தகைய கொலைகள் அதிகரிப்பதற்கு காரணமாக ஆகியிருக்கிறது.

சமூக சீர்திருத்த பெயர்போன தமிழகத்தில் இதுபோன்ற சாதி ஆணவக் கொலைகள் நடப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இது, தீண்டாமைக்கு எதிராகவும் சாதியத்துக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்படுத்த வேண்டியதை உணர்த்துகிறது.
இத்தகைய கொலைகள், சாதி வெறியோடும் ஆணாதிக்கத்தோடும் ஒரு பெண் தாம் விரும்பியவருடன் வாழும் உரிமையையும் பறிக்கிறது. என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இயன்றவரை சாதியத்துக்கு எதிரான குரல்களை நம் மொழியிலும் பிற மொழிகளிலும் சமூக வலைதளங்களில் மனதில் தோன்றியதைப் பதிந்து, சாதியத்துக்கு இணையப் போராட்டக் குரலை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்!

http://tamil.yourstory.com/read/de23f11c24/an-it-massacre-dalit-youth-kumuralkalum-woman
 

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...