Monday, 21 March 2016

இந்தியச்_சந்தையின்_விபரீத_நாடகங்கள்‬!

ஒர் உணவுப் பொருளையோ, மருந்துகளையோ சந்தைப்படுத்தும் போது அரசாங்க விதிமுறைகளை, தர நிர்ணயங்களை திருப்திப்படுத்துதல் அவசியம்!

ஆனால், நம் நாட்டில் இவையெல்லாம் ஒழுங்காக பின்பற்றாமல் இருப்பதற்கான உதாரணமே பல ஆண்டுகள் விற்பனையை கடந்து திடீரென நூடுல்ஸ் வகை உணவுகள் தடை செய்யப்படுவதும், பின்பு அவைகள் எப்படியோ திரும்ப சந்தைக்கு வருவதும்! இந்த மருந்துகளும் இப்படித்தான், ஆண்டுகள் பல கடந்து தடை செய்வார்கள், பின்பு நீதிமன்றத்தில் அந்த தடைக்கும் தடைப் பெறுவார்கள்!

நேற்றைய நாளிதழில் கோயம்பேடு மார்க்கெட்டில் பழங்களைப் பழுக்க வைக்க இரசாயனம் உபயோகப்படுத்தும் செய்தியை, ஆதாரத்தோடு வெளியிட்டு இருந்தார்கள், ஒரு கடைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றபோது, கடைப்பையன் தக்காளிகளின் மேல் கொசு மருந்தை அடித்ததாகவும், கேட்டதற்கு அழுகிய தக்காளிகளால் கொசுக்கள், அவைகளை அப்புறப்படுத்த நேரமில்லை என்பதால் மருந்து அடித்ததாக அவன் சொல்ல, தான் கேட்டு நொந்ததாக ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்திருந்தார்!

பல வருடங்களுக்கு முன்பு அரசாங்க மருத்துவமனை ஒன்றிற்கு சென்றபோது, சாதாரண சளி இருமலுக்கு ஒரு மருத்துவர் "எரித்ரோ மைசினை" ஒரு வேளைக்கு இரண்டு வீதம் ஒரு நாளைக்கு ஆறு மாத்திரை என ஐந்து நாட்களுக்கு சாப்பிட சொன்னார், மேற்கொண்டு நான் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் அந்த அரசாங்க பெண் மருத்துவர் பதில் சொல்ல தயாராயில்லை, அந்த மருந்துகளை நான் ஒருவேளைக் கூட சாப்பிடவில்லை, சண்டையைத் தவிர்க்க என் தாயார் வலுகட்டாயமாக என்னை அங்கிருந்து அழைத்து வந்து விட்டார்கள்! எப்போதாவது அருகிலியிருக்கும் ஆங்கில மருத்துவரிடம் செல்லும் போது அவர் ஒர் உபாதைக்கு குறைந்தது நான்கு மாத்திரைகள் எழுதித்தருவார், ஒரு வேளை மாத்திரைகளில் வேறு உபாதைகள் வந்து சேரும்!

அவ்வப்போது மருத்துவ பிரதிநிதிகள் வந்து காசோலைகள் அளிப்பதைப் பார்த்திருக்கிறேன்! நோயாளிகளுக்கு ஏற்ற நல்ல மருந்து என்றால், அதற்கு இப்படிப்பட்ட லஞ்சங்கள் தேவையில்லை! இப்படிப்பட்ட லஞ்சங்களால் தான் நல்ல மருந்துகள் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் பரிந்துரைப்பார் என்றால் அவர் நல்ல மருத்துவர் இல்லை, அப்படியென்றால் என்று நீங்கள் கேட்க வருவது புரிகிறது, இப்படித்தான் மருந்துகள் தடையென்னும் நாடகமும்!
நூடுல்ஸ் வந்தது போலவே இம்மருந்துகளும் திரும்ப வரும்!

வர வேண்டிய காசு வரும்வரை இந்தியச் சந்தையில், மேக் இன் இந்தியா என்ற ஆட்சியாளர்களின் சந்தைக் கூவலில், நீங்கள்;

மலிந்த சீனப் பொருட்களை இறக்குமதி செய்யலாம், அது உபயோகப்படுத்தும் குழந்தைகளின், மனிதர்களின் உடல்நலம் கெடுவதைப் பற்றி, சுற்றுச் சூழலைப் பற்றி கவலைவேண்டாம், காசு போதும்!

காய்கறிகளில், பயிர்களில் எந்தப் பூச்சிமருந்துகளையும் அடித்துக் கொள்ளுங்கள், அதிக நாட்களுக்கு நீங்களே அதை உண்பதைத் தவிர்க்க முடியாது!

எந்த மருந்துகளையும் சந்தைப்படுத்துங்கள், சிலரின் கஜானாவை நிரப்புங்கள் போதும், நீங்கள் சந்தைப்படுத்தும் விஷங்களில் உங்கள் சந்ததி மட்டும் தப்பிவிடாது!

எல்லா நீர் நிலைகளிலும் சாயக்கழிவுகள் முதல் அணுத்துகள்கள் வரை கலந்திடுங்கள், பரவாயில்லை, சுவிஸ் பேங்க் பணம் கொண்டு நீங்கள் தாகம் தீர்த்துக் கொள்ளலாம்!

புதிதாய் ஒரு வியாதிக்கு மருந்து வேண்டுமா, இங்கே மக்கட்தொகை ஈக்களைப் போல் உங்களுக்கு இலவசமாய் கிடைக்கும், கவனிக்க வேண்டியவர்களை கவனித்தால் போதும், எந்தக் குப்பையை வேண்டுமானலும் வந்து கொட்டுங்கள்!

மூன்றுப்பக்கமும் கடல் இருக்கிறது, அதில் நிறைய உப்பு இருக்கிறது, அது எங்களுக்குள் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை, வேண்டுமானால் வெளிநாட்டு ப்ராண்ட் பேஸ்டில் உள்நாட்டு கரியையும், உப்பையும், வேம்பையும் கலந்து எங்களுக்கே சந்தைப்படுத்துதல் போல, இங்கே இருக்கும் நீரையும், நிலத்தையும் எடுத்துக் கொண்டு, உள்நாட்டு சர்க்கரையையும், மூச்சுக்கு ஒவ்வாத கார்பன் டை ஆக்ஸைடை கலந்துக் கொடுப்பதைப் போலவும், நீங்கள் எங்கள் உப்பை எங்களுக்கே விற்று எங்களுக்கு சுரணை வருவதற்குள் எல்லாவற்றையும் சுரண்டி விட்டு ஓடி விடலாம்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...