Thursday 21 April 2016

கீச்சுக்கள்

யாரோ ஒருவரின் விருந்தில் ஊறுகாயாய் இருப்பதை விட, வறியவரின் பசி தீர்க்கும் நீர் ஆகாரமாய் இருந்து விடலாம்!
ஆணவம் நிறைந்திருக்கும் இடத்தில் அன்பிற்கு வேலையில்லை!

*********************

கட்சிகள்;
1. பிரச்சாரம் செய்ய வருபவர்கள் ஏசி கார்களில் வலம் வராமல், மொட்டை வெயிலில் முதலில் நடந்து பழகி, அவர்கள் வெட்டிய மரங்களின் வலி உணரட்டும்
2. முன்னேயும் பின்னேயும் பஜனை கோஷ்டிகளைத் தவிர்த்து வீதிகளில் மக்களோடு மக்களாய் பயணித்து, சாலையின் அவலட்சணத்தை ஜீரணிக்கட்டும்
3.நாள் முழுக்கப் பயணம் செய்து, ஆத்திர அவரசத்துக்குச் சாலையில் கட்டணப் கழிப்பிடங்களைத் தேடி, சுகாதாரத்தைச் சந்திக்கட்டும்
4. பயணக் களைப்பில் கிடைக்கும் சாதாரண உணவகங்களில் உணவு தேடி, கலப்படம் என்பதன் ஆரம்பக் கொடூரத்தை அறியட்டும்
5. கொடுமையான வெயில் பயணங்களில், ஒவ்வொரு தொகுதியிலும் கிடைக்கும் நீரை அருந்தி, தாகத்தின் தரத்தை உணரட்டும்!
மக்களின் இதுபோன்ற எந்த அடிப்படைப் பிரச்சனைகளையும் தெரிந்து கொள்ளாமல், ஏசி காரில் தொண்டர்படை சூழ, பவனி வருபவர்களுக்கு, தமிழக மக்கள் என்பவர்கள் மூழ்கடிக்கும் வெள்ளத்திலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் எப்போதும்
"‪#‎வாக்காள_பெரு_மக்கள்தான்‬!"

************************

எந்தக் கட்சி என்று தெரியவில்லை, தெருவில் ஏதோ ஒரு வண்டியில், கட்சிப் பிரச்சாரம் செய்து கொண்டே சென்றார்கள், காதுக்குள் வந்து விழுந்தது எல்லாம் "இலவசம், இலவசம்" என்ற கோஷங்கள் தான்,
"அதிமுக மூணு சென்ட் நிலம் கொடுக்கிறேன் என்று சொன்னார்களே, செய்தார்களா" என்று திமுகவின் விளம்பரங்கள்,
"இந்த முறை ஒட்டுப் போட்டீர்கள் என்றால் இதெல்லாம் இலவசம்" என்று அதிமுகவின் விளம்பரங்கள்,
இப்படியே ஒவ்வொரு கட்சியின் இலவச விளம்பரங்கள், மலிவான இலவசங்களை அளிப்பதற்கு ஆட்சி எதற்கு?
வறுமையை ஒழித்து, மக்கள் சுய கௌரவத்தோடு நல்ல கல்வியையும், வாழ்வதற்கான அடிப்படைகளையும் அவர்களே அமைத்துக் கொள்ளும் சூழலை உருவாக்கி தருகிறேன் என்று எந்தக் கட்சியும் சொல்லவில்லை, உங்கள் கஜானாவில் இருந்து உங்களுக்கு அள்ளித் தருகிறோம் என்று சொல்கிறார்கள், அதில் நாங்கள் கொஞ்சம் கிள்ளிக் கொள்வோம் என்ற செய்தியும் இருக்கிறது ...
மத்தியிலும் மாநிலத்திலும் இந்த அரசியல்வாதிகளின் அறிக்கைகைகளைப் பார்க்கும்போது, இந்தியர்கள் அனைவரும் பிச்சைக்காரர்களாய், பாராரிகளாய் திரிவது போலவும், இந்த அரசியல்வாதிகள் அனைவரும் தேவலோகத்தில் இருந்து மக்களுக்காக அள்ளிக் கொடுப்பதற்கே வந்த கர்ணன்களைப் போலவும் தெருக்கூத்துக் காட்சி ஒன்று மனதில் ஓடுகிறது!
‪#‎ஓட்டரசியல்‬

**************************

அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள், அவர்கள் மக்களுக்காக மட்டுமே பணியாற்ற வேண்டும், அவர்களின் தொழிற்சங்களுக்குள் எதற்கு கட்சி நிலைப்பாடு?
கட்சி அபிமானிகளுக்கு கட்சியே சம்பளம் தரட்டுமே, உங்களுக்கு எதற்கு மக்களின் (அரசு) வேலை, மக்களின் (சம்பளம்) பணம்?


********************************

ஆட்டிசம், டிஸ்லெக்‌ஷியா குறைபாடுகளைப் போன்று, "அம்னிசியா" தமிழக அரசியல்வாதிகளின் அதிகாரப்பூர்வ குறைப்பாடாகிவிட்டது, நாளொரு பொய், பொழுதொரு அறிக்கை! நாமும் கூட அதை சகித்துக் கடந்துக் கொண்டே இருக்கிறோம் ஐந்து வருடங்களுக்கொருமுறை!
உலக நாடுகள் தேர்தல் காலத்தை "அம்னிசியா" தினமாக அறிவித்து விடலாம்!

**********************************

கணக்கற்ற வகையில் மக்களைத் துன்புறுத்துவது அதிகாரியோ, அரசியல்வாதியோ, காலம் நிச்சயம் ஒரு கணக்கில் இவர்கள் வன்முறை கணக்கை நேர் செய்யும், அது நிச்சயம் குமாரசாமி கணக்காக இருக்காது!

*******************************
ஒவ்வொரு குடும்பமும், வியாபாரமும் வரவு செலவு கணக்கில்லாமல் வரைமுறையின்றி செலவுகள் செய்ய முடியாது, ஒரு நாட்டின் வரிப் பணத்தையும் வரவு செலவு கணக்குப் புரியாமல் அள்ளித் தெளிக்க முடியாது!
ஆனால் இங்கே ஒவ்வொரு கட்சிகளும் "இலவசங்கள்" என்று வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக் கூவிக்கொண்டருக்கின்றனர். மக்களின் வரிப்பணம் மக்களுக்காகத்தான், அது மலிவான இலவசப் பொருட்களை வாரியிரைத்து, அதன் பின்னே அரசியல்வாதிகள் கொழிப்பதற்கு அல்லவே!
கல்வியையும், மருத்துவத்தையும், சுகாதாரத்தையும் இலவசமாக்குங்கள் மற்ற கட்டமைப்புகளை சீர் செய்யுங்கள், போதும், மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கு மலிவான பொருட்களை வீசியெறிந்து பிச்சைகாரர்கள் ஆக்க வேண்டாம்!
‪#‎ஓட்டரசியல்‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!