Thursday 17 August 2017

வண்ணக்குதிரைகள்


ராதிகாவை அந்த அலுவலகத்தில் தான் முதன்முதலில் பார்த்தேன், நெடுநெடுவென்ற உயரத்தில், இரண்டு கரிய முட்டைகளா, இல்லை நாவல் பழமா என்ற அளவிற்குப் பளீரென்ற பெரிய கண்கள், அழகிய கருமை நிறம், ஆமாம் அத்தனை அழகாய் இருந்தது அக்காவின் கண்கள் மட்டுமல்ல, ஈர்க்கும் அந்தக் கருமை நிறமும்தான், எனக்கு அத்தனை வசீகரமாய்த் தோன்றியது!

கிட்டத்தட்ட எட்டு வயது மூத்தவளை அக்கா என்று சொல்ல மனம் வரவில்லை, பார்த்தவுடன் நெடுநாள் பழகியது போல், "ஹேய் குட்டி" என்று வந்து அணைத்துக்கொண்டாள். கொஞ்சம் பூசினார் போல இருந்ததால் "சப்பிச் சீக்ஸ்" என்று அவ்வப்போது கன்னத்தையும் கிள்ளி எடுத்துப் பாடாய்ப் படுத்தியவளை எப்படி அக்கா சொக்கவென்று அழைப்பது. அன்றுமுதல் அவளை ராதி என்றே அழைக்கலானேன். ராதிகாவுக்குப் பெரிய பின்புலம் இருந்தது பின்னே தெரிய வந்தது, தி நகரில் பெரிய கடை வைத்திருக்கும் முதலாளியின் செல்ல மகள்களில் இவள் ஒரு மகள், சொந்தக்காலில் தான் நிற்பேன் என்று போர்க்கொடித் தூக்கி அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அந்தத் தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அமைதியாய் கஸ்டமர்களிடம் நான் பேசிக்கொண்டிருந்தால், நடுவே வந்து சத்தமாய் எதையோ கேட்டுவிட்டுக் கொஞ்சம் என்னைத் திருத் திரு வெனக் குழப்படித்து முழிக்க வைத்துச் செல்வதில் அவளுக்கு அப்படியொரு ஆனந்தம்.

பரபரப்பாய் வேலையில் மூழ்கி இருந்த ஒரு நாளில், ராதி வந்தால், "ஹேய் குட்டி, உனக்கொரு சர்ப்ரைஸ், கொஞ்சம் வாயேன்" என்றால். "குட்டி இல்லைடி எருமை, ஐ ஹவ் எ நேம்" என்ற சிடுசிடுக்க, "சரிதான் வாடி" என்று இழுத்துப்போனாள்.

ஆறடி உயரத்தில் அக்காவிற்கு ஏற்ற அளவில், மைதாவைக் குழைத்துப் பூசியது போல ஒருவன் நின்றிருந்தான். ஆமாம் அவன் வெள்ளையாய் இருந்தான், அது எனக்கு மைதாவை பூசியது போல என்றுதானே தோன்றியது. "அடடா அழகு" என்று நான் சொல்ல ராதி எதிர்பார்க்க, "பச்" என்று உதட்டைப் பிதுக்கி, "ஹலோ" என்றேன்.

இந்தப் பக்கம் கருமை நிற அழகி, அந்தப்புறம் மைதாவில் நிறத்தில் ஓர் ஆண்மகன், மன்னிக்கவும் எனக்கு அன்று அப்படிதான் தோன்றியது. அந்தக் கண்களை இதற்கு முன் எங்கோ பார்த்த ஞாபகம், அந்தக்கண்களை உற்றுநோக்கினேன், "ம்ம், சம்திங் மிஸ்ஸிங், ஒகே கேரி ஆன்" என்று நகர்ந்துவிட்டேன்.

ராதி நிறையச் சண்டைபோட்டாள், மரியாதை தெரியாதவள் என்றாள், "சரி இருந்து தொலையட்டும், போ" என்றேன்.

காதல் ஒன்று வந்துவிட்டால் தோழியின் நிலைமை கந்தல்தான், எத்தனை சொன்னாலும் ராதியின் காதல் புராணம் ஓயவில்லை. "அவன் ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம், சின்ன வயசிலே இருந்து என்னையே சுத்தி சுத்தி வாரான், ரொம்பவும் போர்ஸ் பண்ணினான், அப்புறம் ஒத்துக்கிட்டேன்" என்றவள், "ஏய் சொல்லு, நான் கருப்பாத்தானே இருக்கேன், அம் ஐ ஏ குட் மேட்ச் ஃபார் ஹிம்?" என்று சந்தேகித்தாள்.

"ஏய் லூசு, கருப்பா இருந்தா என்ன, நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு அண்டர் ஸ்டாண்டிங் ல இருக்கீங்க, உங்களுக்கு என்ன முக்கியம்ன்னு பாருங்க, போதும்"

கால வெள்ளத்தில் நான் வேறு ஒரு வேலைக்கும், ராதி ஒரு தீம் பார்க்கிலும் வேலைக்குச் சேர்ந்தாலும், தொடர்பு விட்டுப்போகவில்லை.
ராதியின் புண்ணியத்தில், ராதையின் கண்ணனுக்கு அவளே வேலையும் வாங்கிக்கொடுத்து, அவனுக்குரிய வசதிகளையும் தன் உழைப்பில் செய்துக்கொடுத்திருந்தாள்.

அன்று ராதியின் தீம் பார்க் அலுவலகத்துக்குச் சென்றேன், அடடா என் ராதியா இது, எந்த விழிகளைப் பார்த்து அழகியென்று கொண்டாடினேனோ அந்த விழிகளில் ஜீவனில்லை, எந்த நிறம் பார்த்து ரசித்தேனோ அது சோபை இழந்திருந்தது. "என்ன ஆச்சு ராதி?", பதிலேதும் சொல்லாமல் அவள் கண் நோக்கிய திசையில் செல்ல, ராதையின் மைதா மாவு கண்ணன் (பின் வேறு எப்படிச்  சொல்ல?) வேறொரு மைதா கோதையிடம் அளவளாவி கொண்டிருந்தான். "என்ன இது, என்னமோ மிஸ்ஸிங் னு சொன்னேனே அது இதுதான், அவன் படிப்புக்கு உதவி செஞ்சே, வேலை வாங்கிக்கொடுத்தே, பைக் வாங்கிக்கொடுத்தே, ஹி ஹாட் யுடிலைஸெட் யு (அவன் உன்னை உபயோகப்படுத்திகிட்டான்) ", என்று நறநறவென்க

"குட்டி, அவன் காதல் இல்லைன்னு சொன்னாலும், ஒரு நண்பனா இருந்திருந்தா கூட அவனுக்கு இதெல்லாமும் நான் செஞ்சிருப்பேன், அவனுக்கு அவனோட ஏழ்மை பிடிக்கலையாம், நான் கருப்பா இருந்தாலும் (அழுகிறாள்) எதை அழகுன்னு சொன்னானோ, அதையே சொல்லி (மீண்டும் அழுகிறாள்) ...நான் கருப்பா இருந்தாலும் என்னைக் காதலிச்சது என் பணத்துக்காகத்தானாம், கருப்பா இருந்தாலும் பணம் தனி அழகை கொடுக்குமாம், என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க நினைச்சானாம், இப்போது இந்தக் கம்பெனியின் முதலாளியின் பொண்ணு ப்ரொபோஸ் பண்ணினதால, என்னை விட அவ பெட்டெர் ஆப்ஷனாம், அவனோட அம்மாவுக்கும் வெள்ளையா இருக்கறவனுக்கு நான் சரியான மேட்சா இருக்க மாட்டேன்னு பீல் பண்றங்களாம்" சொல்லிவிட்டு இன்னும் அழுகிறாள்.

அவளை அழவிட்டு அந்தக் கண்களை யோசித்துப் பார்க்கிறேன், பொய்யும் பித்தலாட்டமும் நிறைந்த நான் பார்த்த அதே ஆணின் கண்ணை அது ஒத்திருந்தது, அலைபாயும் அந்தக் கண்களை ஏன் காரணேமேயில்லாமல் எனக்குப் பிடிக்காமல் போனது என்று தாமதமாகப் புரிந்தது. "ராதி, நீ அவனை அப்படியேவா விட்டே, அவன் உன் வீட்டுக்கு பக்கத்திலே தானே? அவன் அம்மா இப்படியெல்லாம் சொல்லியிருப்பாங்களா? அவன் கதை சொல்றான், நீ ஏன் அவனை எதுவும் கேக்கலை? சரி இப்போ இங்கேயே இரு, நானே அவனை உண்டு இல்லைன்னு பண்ணிட்டு, அவன் வண்டவாளத்தை அந்தப்பொண்ணுகிட்டேயே சொல்லிட்டு வரேன்" என்றவளை, கையைப் பிடித்து இழுத்தவள்,

"குட்டி, அவளுக்கு அவன் என்னைக் காதலிச்சது தெரியும், இருந்தும் அவ அவனை இழுத்துகிட்டா, இவனும் ஓடிட்டான், இப்பவே ஓடியது நல்லதுதானே, கல்யாணத்துக்கு அப்புறம் அவளை விடவும் பணக்காரிக் கிடைச்சா அவன் ஓடுவான், அதோட குட்டி, உனக்கு ஒரு கதை தெரியுமா, என் அப்பா தராதரத்தைப் பத்தி உணர்த்த இதை எனக்குச் சொல்லுவாரு, ஜெர்மனி பிரிவுபட்டிருந்தபோது பெர்லின் சுவர் அவங்களை இரண்டா பிரிச்சு வெச்சிருந்தது, அப்போ கிழக்கு பிராந்திய மக்கள், அந்தச் சுவருக்கு அந்தப்பக்கம் உள்ள மக்களுக்கு லாரி நிறையக் குப்பைகளைப் போட்டாங்களாம், அவங்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்த மக்கள் குப்பைக்கு மாற்றா நிறையா உணவுப் பண்டங்களையும் பரிசுகளையும் சுவர் மேல அடுக்கி வெச்சு, யார்கிட்டே எது இருக்கோ அதைத்தானே தர முடியும், நாங்க உங்களுக்கு இதைத்தரோம்ன்ன்னு எழுதி வெச்சாங்களாம். யார்கிட்டே என்ன இருக்கோ அதைத்தானே அவங்க தருவாங்க, என்கிட்டே அன்பு இருந்தது, அவன்கிட்டே சூழ்ச்சி இருந்தது, அவன் சூழ்ச்சியும் பொய்யில்லை, என் அன்பும் பொய்யில்லை, அவன் நல்லா இருக்கட்டும், விட்டுடு குட்டி" என்றாள்.

அழும் அந்தக் கண்கள் அத்தனை அழகாய்த் தெரிந்தது எனக்கு. நான் கடைசியாக அந்தக் கண்களை அன்றுதான் பார்த்தேன், நான் கடைசியாகப் பார்த்த அழகிய கண்களும் அவளுடையதுதான்.


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!