Friday 4 August 2017

அப்பாவின் கரங்கள்

Image may contain: one or more people, people standing and outdoor

பெண் பிள்ளையென
மகிழ்ந்து
தளிர் கரங்களை
பற்றியிருந்த
அப்பனின் கரங்கள்
காப்புக் காய்ச்சி
முரட்டுத்தனமாயிருந்தது

பெண்ணின்
விழியில்
மொழியில்
நடையில் எல்லாம்
அப்பனின் மனம்
லயித்திருந்தது

காற்றில் நம்பிக்கை
வரைந்து
எழுத்தில் உறுதிப்பெறும்
உலகத்தில்
மதிப்பெண் பட்டியல்
எதுவாய் இருந்தாலும்
கண்ணை மூடி
கையெழுத்திடும்
அப்பனின் அன்பில்
நம்பிக்கையிருந்தது

புறம்பேசும் உலகில்
பெண்ணின் இளகிய
எண்ணம் இதுவென
உறுதியாய் இருந்த
அப்பனின் வார்த்தையில்
எப்போதும்
உண்மையிருந்தது

அறியாப்பிள்ளையின்
ஓவிய ஆர்வத்திற்காக
ஓய்வில்லாமல் உழைத்து
எடுத்துவந்த
கூலியை
அள்ளித்தரும்
கணக்கற்ற நேசமிருந்தது

பெண்ணின்
தவறுக்கெல்லாம்
செய்கையில்
வார்த்தையில்
வன்முறை தவிர்த்து
பாங்காய் எடுத்துச்சொன்ன
வார்த்தைகளில்
கருணை இருந்தது

தன்னிடம் ஓயாது
வாயடிக்கும் பெண்
மேடைகளில் முழங்கி
வெற்றிக்கோப்பைகளை
எடுத்து வந்த போதெல்லாம்
அப்பனின் பார்வையில்
பெருமிதம் இருந்தது

கூடிக்கொண்டே போன
பட்டங்களில்
குவித்துக்கொண்டே போன
வெற்றிகளில்
என் மகளுக்கு இது
சாதாரணம் என்ற
அப்பனின் வார்த்தைகளில்
கர்வம் மிகுந்திருந்தது

பொன்னில்லை
பொருளில்லை
உனக்குச் செல்வம்
கல்விதான் என்ற
அப்பன்
வாரித்தந்த
புத்தகங்களில்
அவனுக்கு மறுக்கப்பட்ட
கல்வியின் வாட்டமெல்லாம்
தீர்த்துவிடும்
வேகமிருந்தது

நம்பிக்கைத் தந்த
அப்பன்
பெண் நம்பிக்கை
கொன்று
நோயில் விழுந்து
பிணமானான்
கடைசி நொடிகூட
விழிப்பார்க்க முடியாமல்
கண்மூடினான்
அப்பன் கேட்ட
மகிழுந்தை
வாங்கமுடியா நேரத்தில்
இறுதியாத்திரையை
ஒரு மகிழுந்தில்
முடித்துவைத்தாள் மகள்
விழி முடிய அப்பனின்
கண்களில் உறைந்த கண்ணீரில்
பெண்ணுக்கு ஏதோ
செய்தியிருந்தது

தனித்து நின்ற மகளுக்கு
வாழ்க்கையின் போராட்டங்களில்
பற்றிய கரங்களில்
மட்டுமே மென்மையிருந்தது
அந்தக் காப்புக் காய்ச்சிய
முரட்டுக் கரங்களின்
மலரினும் மெல்லிய
மனம் கொண்ட அப்பன் மட்டும்
எப்போதும் அவளுக்கு
வாய்க்கப்போவதில்லை
அப்பனின் இறுதிச் செய்தியும்
தாமதமாய் அவளுக்குப்
புரிந்திருந்தது!

அம்மைக்குப் பிறகு
தாய்மையின் அன்பு கிடைக்கலாம்
அப்பனுக்குப் பிறகு
பெண்ணுக்கு
வேறொரு அப்பனில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!