Wednesday, 16 August 2017

நினைவுப்பரிசு



 சமைத்த உணவை
ஆறவைத்தால்
சுவையில்லையென்றாய்
எழுதத் தொடங்கிய வரிகளை
முடிக்காவிட்டால் அது
படைப்பில்லையென்றாய்
காண வந்த நட்பிடம்
பேசா விட்டால்
நட்பில்லையென்றாய்
நினைத்த வியாபாரம்
கிடைக்காவிட்டால்
லாபமில்லையென்றாய்
உலகம் சுற்றும் நேரங்களில்
பேசவும் நேரமில்லையென்றாய்
எதையும்
உடனே உடனேயென்றுக்
கொண்டாடும்
உன் பரந்த ரசிக மனதுக்கு
காத்திருக்கும் காதலின்
ஒவ்வொரு கணத்தையும்
நான் நினைவூட்ட
முயலும் போதெல்லாம்
காத்திருந்தலில்
எனக்கொன்றும்
கனமில்லையென்றாய்

கணங்களை யுகங்களாக்கி
நான் தேய்ந்துப்போகும்
வேளைகளில்
உன் கைகளில் எண்ணப்படும்
ரூபாய் நோட்டுகளின்
சில தாள்கள்
நானாக இருந்திருந்தால்
இழக்கும் ஒவ்வொரு நொடியும்
பணவிரையம் என்று
நீ பதறியிருப்பாய்
புதிய வியாபாரத்தின்
கச்சாப் பொருளாய்
நான் மாறியிருந்தால்
மனதில் மகுடமென
நினைவைவிட்டு நீக்காமல்
தீபமென நீ
என்னை ஏற்றிவைத்திருப்பாய்

அவைகளாக நான் இல்லாமல்
உன் காதல் மனைவியாக
மட்டும் ஆனதில்
உன் உணர்வுகள் விழிக்கும்வரை
என்னைக் காத்திருக்கப் பழிக்கிறாய்
நானும் நினைவுகளைச்
சேமிக்கிறேன் நாள்தோறும்
உனக்குப் பரிசளிக்க
என்னிடம் எஞ்சியவைகளாய்!!!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!