Tuesday, 29 August 2017

கீச்சுக்கள்

ஒருவரிடம் நேருக்கு நேர் பேசும்போது கண்களைப் பார்த்தும், தொலைபேசியில் பேசும்போதும் காதை மட்டுமில்லாமல் கருத்தையுமூன்றிப் பேசுவது குறைந்தபட்ச மரியாதையும் மனிதாபிமானமும்!
**********************************************
பெண்களுக்கெதிரான குற்றங்களிலெல்லாம், ஆட்சியாளர்களின், அதிகாரத்தின் மோசமான மௌனத்தால், பெண்கள் விஷயத்தில் இந்தியா கற்கால நாகரீகத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. இதையும் புதிய இந்தியா என்று பிரதமர் விளம்பரப்படுத்திக்கொள்ளலாம்!
**********************************************
அணுவுலைக்கு கூடங்குளத்தையும், ஹைடிரோகார்பன்களுக்கு தஞ்சையையும், காவிரிக்காக விவசாயிகளையும், நீட் போர்வையில் மாணவர்களையும், இந்திக்காக அரசுப்பணிகளையும், பதவிக்காக முதுகெலும்பையும் இழந்தவர்கள், மேகதாதுவில் அணைக்கட்டிக்கொள்ள அனுமதி அளிப்பதில் வியப்பென்ன? ஒரு ஓட்டு, மூன்று முதல்வர்கள், ஓட்டைத்திட்டங்களால் பறிபோகிறது, தமிழகத்தின் வளங்களும், எதிர்காலமும்!

#Hydrocarbon #Reservoir #Neet #Koodangkulam
**********************************************
ஒரு ஆப்பத்தை பூனைகளுக்குச் சரியாக பங்கீடுவதாக குரங்கு சொன்னதாம், உடனே ஆப்பம் தமிழ்நாடு, குரங்கு மத்திய அரசா என்று நீங்கள் கற்பனை செய்து வரிந்துக்கட்டினால் கம்பெனி பொறுப்பில்லை, முன்னோர்கள் கதையைச் சரியாக சொல்லியிருக்கிறார்கள்! அவ்வளவுதான்!
**********************************************
ப்ளூவேல் விளையாட்டை விளையாடி, 50 நிலைகள் கடந்து, மனநிலை தவறி, பிள்ளைகள் தற்கொலைச் செய்துகொள்ளும்வரை பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அடடா ஒரு ஆச்சர்யக்குறி!
****************************************************
தினமும் செய்தித்தாள்களில் சுற்றுலா சென்ற வேன், பஸ், பள்ளிப்பிள்ளைகள் சென்ற டெம்போ என்று இவையெல்லாம் எதனுடனோ மோதி விபத்தில் சிக்கி உயிர்ப்பலி என்ற செய்திகள் வந்தவண்ணம் இருக்கிறது, இந்த வாகனங்களுக்குள் ஏன் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த கூடாது? ஏன் சீட் பெல்டை இந்த வாகன வடிவமைப்புகளில் அவசியமாக்கக் கூடாது?? தெர்மாக்கோலில் அணைகட்டிய அமைச்சர் போல் விபத்தைத் தடுக்க உண்மையான லைஸென்ஸ் போதும் என்று சொல்லும் அமைச்சர்கள் இருக்கும் வரை என்னதான் செய்வது!?
*************************************************
ஹரியானவில் ஒரு சாமியாரை வளர்த்துவிட்டு, இன்று தீர்ப்புக்கு முன்னேற்பாடாக பள்ளிக் கல்லூரிகள் விடுமுறையாம், இதைத்தான் "வேலியில் போற ஓணானை எடுத்து மடியில் விட்டுகிட்டு குத்துதே குடையுதேன்னு சொன்னானாம்" என்று சொல்வார்கள்!

தமிழ்நாட்டில் இப்படித்தான் ஊருக்கு ஊர் சாமியார்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம், ஏற்கனவே ஒரு ஆசாமி பிரதமரையே விளம்பர தூதுவராக்கிவிட்டார், "பிரதமரே என் பக்கம், என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது" என்ற பறைசாற்றலே அது!

கடவுளுக்கும் தமக்கும் இடையில் இடைத்தரகர்களை மக்கள் நாடினால், இந்த நாட்டின் வளத்தையும், பெண்களையும், அரசுப்பதவிகளையும் தரகுத்தொகையென்று தரத்தானே வேண்டும்??

#சாமியார்கள்
********************************************
கொஞ்சம் மோசமான அளவிலான ஆட்சியை தரப்போவது யார் என்பதற்காக நடத்தப்படுவதுதான் நம்முடைய தேர்தல்!
******************************************
இன்னேரம் ஒரு ஆமையிடம் ஆட்சியைக் கொடுத்திருந்தால், அதுகூட வேகமாய் செயலாற்றி, மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்திருக்கும், ச்சை!
**********************************************

ஒரொயொரு சாமியார் ஹரியானாவில், அந்தச் சாமியாரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டும், அவருக்கு ஆதரவாக வன்முறை செய்து, பல பேரை கொன்று, பலருடைய உடைமைகளை கொளுத்தி சேதம் செய்து வருகிறது மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம், ஒரு மதவாத கட்சியை எங்கெல்லாம் வளர்த்து ஆட்சியைக் கொடுக்கிறீர்களோ அங்கெல்லாம் பொதுமக்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படுகிறார்கள்! கோயம்புத்தூர் இதே தவறை ஏற்கனவே செய்துவிட்டது, திருநெல்வேலி செய்திருக்கிறது, பீகார் செய்துவிட்டது, டெல்லியும் மத்தியில் ஆட்சி அமைக்க செய்திருக்கிறது, இவர்களுக்காகத்தான் இங்கே தேசபக்தர்கள் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நாள்தோறும் பொங்குகிறார்கள்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தை மாநில காவல்துறையை வைத்து ஒரே நாளில் நசுக்க மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் முடியும் போது, ஹரியானாவில் இத்தனை உயிர்பலியை தடுத்திருக்க முடியாதா? காவல்துறையே உடந்தையாகும் போது, எல்லாமும் கட்டமைக்கப்படும் போது, வடநாடு என்றாலும் தென்னாடு என்றாலும், இந்தி என்றாலும், தமிழ் என்றாலும், செத்துவீழ்பவர்கள் யாரோ ஒருவரின் பிள்ளையோ, சகோதரனோ அல்ல, வெறும் கலவரத்தில் மாண்ட பிணங்களின் எண்ணிக்கையவர்கள்!
நாட்டில் நிறைய சாமியார்கள் இருக்கிறார்கள்,அவர்களைத் தேடித்தேடி காலில் விழுந்து அவர்களை குற்றவாளிகளாக, அரசியல் பின்புலம் அதிகரிக்கும் பலசாலிகளாக மாற்றிவிடாதீர்கள்! சாமியார்களின் உதவி அரசுயல்வாதிகளுக்கு தேவை, அவர்கள்தான் மக்களை மூளைச்சலவைச் செய்து ஆட்சியாளர்கள் விரும்பும் ஓட்டுக்களாய் மாற்றமுடியும்! ஆகவே "சாமியார்கள் ஜாக்கிரதை"

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...