Tuesday, 29 August 2017

எத்தனை கோடிகள் வரிக்கொடுத்தால்??

குறைந்த கூலி, அதிக வேலை என்று கட்டிடத்தொழிலாளர்களாக வட இந்தியர்களை வரவழைத்தீர்கள், பின்பு அப்படியே படிப்படியாக செக்யூரிட்டி வேலை, எடுபிடி வேலை என்று மொத்தமாய் அவர்கள் ஆக்கிரமிக்க, இன்னொரு பக்கம், மத்திய அரசு அலுவலகங்களில், வங்கிகளில் எல்லாம் வடஇந்திய மயம், பின்பு குற்றங்கள் அதிகரித்தது!

பின்பு இவர்களுக்காக நீங்கள் இந்திப்படித்தால் என்ன என்று நெடுஞ்சாலைகளில் தமிழ் அழிக்கப்பட்டது, சுங்கக்கட்டணம் வசூலிக்கும் சாலைகளில் இருந்து, ஐடி கம்பெனிகள் வரை இந்தியின் ஆதிக்கமே, நெல்லையில் இருந்து தமிழ்மக்களின் ஒட்டுகளை வாங்கி டெல்லிக்கு எம்பியாய் எம்பிச் சென்ற பாஜக மந்திரி முதல், தமிழகத்தின் அமைச்சர்களாய் வலம் வரும் அரசியல்வாதிகள் வரை அத்தனைப்பேரும் விடாது இந்தி மொழிக்காக பாடுபடுகின்றனர், அதனுடைய இன்னொரு நீட்சியாக "நீட்"!

ஏற்கனவே தமிழ்நாடு "வட இந்தியர்களுக்கும்" கல்விக்கூடமாய் இருந்த நிலைமாறி, இனி தமிழ்நாடு வட இந்தியர்களுக்கும், லட்சகணக்கில் செலவிட தயாராயிருக்கும் தமிழர்களுக்கும் "மட்டுமே" கல்விக்கூடமாய் இருக்கும் நிலைக்கு வந்திருக்கிறது! இனி இப்படியே போனால், காய்ச்சலுக்கு மருத்துவரிடம் போனால் கூட இந்திக்கற்றுக் கொண்டு போக வேண்டும்! தமிழ் இனி மெல்லச்சாகும் என்பதை உண்மையாக்குவது முதுகெலும்பில்லாத நம் பிரதிநிதிகள்தான், பதவிக்காக கூழைக்கும்பிடு போட ஆரம்பித்த நாள் முதல், மொழிப்பற்று என்பது தொலைய ஆரம்பித்துவிட்டது, மக்களுரிமை என்பதும் வெறும் கேலிக்கூத்தாகிவிட்டது!

இந்தித் திணிக்கப்பட்ட மாநிலங்களில் எந்த முன்னேற்றமும் மக்கள் பெரிதாக அடைந்துவிடவில்லை! வட மாநில பெண்களும் கூட தமிழ்நாட்டில் தான் மரியாதையோடு வாழமுடியும், அந்த நிலையும் கூட இனி மாறலாம், இனி மருத்துவம் தாண்டி, ஒவ்வொரு துறையிலும் இந்தி நுழையும், இன்னமும் பெண்கள் விஷயத்தில் காட்டுமிராண்டி மனநிலையில் இருந்து மாறாத ஆண்கள் பெருகி, பெண்களின் முன்னேற்றம் என்பது பெரும் அச்சுறுத்தலாக மாறலாம்!

இந்த ஆட்சியில், ஆட்சியைக் காப்பாற்றும் போராட்டமே நாள்தோறும் நிகழ்கிறது, மற்றப்படி எந்தத்துறை இயங்குகிறது என்பது யாருக்குமே தெரியாத அப்பல்லோ மர்மம் போன்றது!

மாட்டுக்குப் போராட முடிந்ததும் கூட ஆட்சியாளர்களின் தந்திரம்தான், இப்போது ஆட்சிக்காக , "நீட்" என்று நீட்டாக திணிப்பதும் அதே தந்திரம்தான், தொழிலாளிகள் தொடங்கி, விவசாயிகள், இப்போது மாணவர்கள் வரை யாரையும் விட்டுவைக்கவில்லை மத்திய அரசும் மாநில அரசும், இனி நீதிமன்றங்கள் மக்கள் உரிமையை மீட்டுக்கொடுக்குமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

இந்தக் காத்திருத்தலின் அயற்சியில், சலிப்புடன் இதைக்கேட்கிறேன், இந்தக்கல்வியை இன்னும் எத்தனை கோடிகள் வரிக்கொடுத்தால் இந்த அரசு இலவசமாக்கும்???
#நீட் #Neet

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...