Tuesday, 29 August 2017

அட எருமைகளா, இவர்கள் துறவிகள் இல்லை

10000 bc என்று ஒரு படம், கடவுள் என்று ஒருவனை வைத்துக்கொண்டு, ஏகப்பட்ட அட்டூழியங்கள் செய்யும் அந்தக்கூட்டம், பிற பழங்குடி கூட்டங்களை அடிமையாக்கி, அந்தக்கடவுளுக்கு கோவில் என்று அடித்துத்துன்புறுத்தி வேலை வாங்குவார்கள், ஒரு பழங்குடித் தலைவன் மீட்பனாக, ஹீரோவாக இறுதியில் பல தடைகள் கடந்து, அடிமைப்பட்ட மக்களை ஒன்றினைக்கும் வேளையில், கடவுள் என்று நம்பப்படுபவன் வந்து நின்றதும், இயல்பாய் ஊறிய நம்பிக்கையில், அச்ச உணர்வில் எல்லோரும் தரையில் விழுந்து வணங்க, இறுதியில் ஹீரோ தன் வேல்கம்பை கடவுளாக மதிக்கப்படும் மனிதன் மீது "அவன் கடவுள் இல்லை" என்று சொல்லிக்கொண்டு எறிய, அந்தக்கடவுள் கொல்லப்பட்டு கீழே விழுகிறான், பின்பு ஒரு வழியாய் மக்களுக்கு வீரம் வருகிறது, விடுதலை கிடைக்கிறது!
இப்போது பஞ்சாபில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பாபா என்ற ஆசாமியால் கலவரம், கொலைகள் என்று பார்க்கும் போது, நாட்டில் எல்லா பாபாக்களையும் நினைத்துப்பார்க்க தோன்றுகிறது!

ஒருவன் காடுகளை அழித்துவிட்டு, பிள்ளைகளுக்கு மரங்களைப் பற்றி, நீர்நிலைகளை பாதுகாப்பதைப் பற்றி பாடம் எடுக்கிறான், இன்னொருவன், வாழும் வழி காட்டுகிறேன் என்று யமுனா நதியை அசுத்தமாக்கினான், இந்த ஒருவன் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு குற்றவாளியாகிறான், இன்னொருவன் கஞ்சா புகைத்து உழன்று, திடீரென்று யோகாவில் இறங்கி இப்போது தொழிலாதிபராய் மாறிவிட்டான், பிரேமானந்தா, நித்யானந்தா என்ற வரிசையில், அயோக்கியத்தனத்தில் பிற மத குருமார்களின் பங்களிப்பும் உண்டு! துறவு என்றால் எல்லா ஆசைகளையும் துறப்பது, நம் நாட்டில் சாமியார்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் பெரும்பாலும் அந்தரங்கத்தில் பல பெண்களுடன் ஆடைத்துறக்கிறார்கள், உயர்ரக வாழ்க்கை வாழ்கிறார்கள், மந்திரிகளுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்கிறார்கள், கொள்ளையடிக்கிறார்கள், பொய் சொல்கிறார்கள், வியாபாரம் செய்கிறார்கள், செல்வம் குவிக்கிறார்கள், இவர்கள் உடையின் நிறத்தைத் தவிர வேறு எதுவுமே துறவை குறிப்பதில்லை, "அட எருமைகளா, இவர்கள் துறவிகள் இல்லை, மக்களுக்கு நன்மை நினைப்பவர்கள் கூட இல்லை, இவர்கள் ஜஸ்ட் கேடுகெட்ட அயோக்கியர்கள்" என்று10000 Bc யைப்போல் இந்த 21st a c யில் யாராவது வெடியை இவர்கள் மீது போட்டு சட்டத்தின் வாயிலாகவோ, தர்மத்தின் வாயிலாகவோ கதைமுடித்தால்தான் இந்தத் தேசம் மூச்சுவிடும் நிம்மதியாய்!

மனதில் தெளிவில்லாதவர்களுக்கு, கொஞ்சம் மந்த புத்திகாரர்களுக்கு, காணும் உயிர்களிடத்தில், இயற்கையிடத்தில், கோவில்களில் உள்ள தெய்வங்களிடத்தில் வராத நம்பிக்கையெல்லாம், சாமியார்கள் என்ற போர்வையில் வரும் ஆசாமிகளிடம் வந்துவிடுகிறது!

நம் நாட்டிற்கு உடனடி தேவை மனநல மருத்துவர்களே, இல்லையென்றால் மத்திய அரசின் கருணையில் புதிய கேடி தாதாக்கள், மன்னிக்கவும், பாபாக்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!