Wednesday, 16 August 2017

உரிமை இல்லாத ஜனநாயகம்

அரசின் திட்டங்கள் எதை விமர்சித்தாலும், மோடியை கண்மூடித்தனமாக எதிர்க்கிறோம் என்பார்கள், உண்மையில் இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், புதிது புதிதாய் திட்டங்கள் இயற்றினாலும், அதை செயல்படுத்துவது யாரென்று பாருங்கள்! அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்று உயர்நிலை முதல் கடைநிலை வரையிலான ஊழியர்களில் எந்த மாற்றமும் இல்லை!

ஒரு கட்சி ஊழலுக்கு ஆதரவாய் இருந்தாலும், இன்னொரு கட்சி ஊழலுக்கு ஆதரவை சதவீத அளவில் விலக்கிக்கொண்டாலும், பெரும்பாலான அரசு அலுவலகங்களில் காசைக்கொடுக்காமல் வேலையை முடிக்க முடியுமா? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!

சுவச் பாரத் என்று மூன்று வருடங்களாக முழங்கி, கொள்ளை கொள்ளையாக வரிக்குவித்தும், அதே தரமற்ற சாலைகள், அதே அறுந்து தொங்கும் பலவிதமான ஒயர்கள், சாலையில் குப்பைகளை பறக்கவிடும் அதே குப்பை லாரிகள், எந்த மாற்றத்தை பார்ததுவிட்டோம் நாம்?

கச்சா எண்ணெயின் விலை அதிகமான போது, பெட்ரோல் டீசல் விலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக, அவர்களின் இந்த மூன்று வருட ஆட்சியில், கச்சா எண்ணெய் விலை குறைந்தும், இன்னமும் விலையை கூட்டிக்கொண்டே போவதும், ஒரே வரி என்று முழக்கமிட்டு, பெட்ரோல் டீசலை மட்டும் அதில் சேர்க்காமல், காங்கிரஸின் ஜிஎஸ்டி யை எதிர்த்துவிட்டு, 18 சதவீதம் என்று இருந்ததை 28 சதவீதம் என்றாக்கி, வாகனங்களுக்கு 43 சதவீதம் என்று ஏற்றுவதெல்லாம் எந்த யோக்கியத்தனத்தில் வரும்?

இத்தனைப் பெயரில் வரி வாங்கி, ராணுவத்தை பலப்படுத்துகிறார் மோடி என்று வழக்கம்போல தேச பக்தர்கள் கருத்து தெரிவித்தார்கள், அந்த வாதத்திலேயே சுவச் பாரத், க்ருஷிக் கல்யாணி என்று வாங்கியதெல்லாம் கண்துடைப்பு என்றாகிறது, இந்திய ராணுவத்தின் டாங்கிகள் இப்போது அதற்கான போட்டியில் பாதியிலேயே வெளியேறிவிட்டது என்ற செய்தியும் வரும்போது, ராணுவமும் இந்தக் கதிதான் என்றால் இதெல்லாம் எங்கே போகிறது என்று பார்த்தால், 1100 கோடி பிரதமரின் சுற்றுலா செலவு என்று ஆர்டிஐ தகவல் சொல்கிறது!

மோடி நல்லவர், பாஜக நல்லவர்கள் என்றே வைத்துக்கொள்வோம், ஒரு அரசாங்க மருத்துவமனையில் 60 லட்ச பாக்கித்தொகைக்காக 60 குழந்தைகள் உயிரிழக்க, பத்துகோடி நிவாரணம் அளிக்கிறேன் என்கிறது அரசு, பத்துகோடி ரூபாய் 60 உயிர்களை திரும்பக்கொண்டு வருமா? 60 லட்சம் மக்களின் பணம், அதைக்கொடுக்கமுடியாத அரசு, அதேமக்கள் பணத்தில் 10 கோடி கொடுக்கிறேன் என்கிறது, ஒரு ஆட்சியின் லட்சணத்தை இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்!

கதிராமங்கலத்தில் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் எடுப்போம் என்கிறது ஓஎன்ஜிசி, ஏற்கனவே ஏற்பட்டுள்ள கசிவுகளுக்கு என்ன காரணம் என்று எந்த செய்தியும் இல்லை, கூடங்குளத்தில் இயங்காத நிலையங்களுக்கும், அணுவுலை வெடித்தால் என்ன ஆகும் என்றும் யாருக்கும் தெளிவில்லை!
போபால் விஷவாயு வழக்குக்காவது போராட மனிதர்கள் இருந்தார்கள், அணுவுலை விபத்தேற்பட்டால் புல்பூண்டு கூட மிஞ்சாது!

இப்போதைகெல்லாம் இணையம் வழியாக ஒரு பிறப்புச்சான்றிதழையும், இறப்புச் சான்றிதழையும் மட்டுமே காசுக்கொடுக்காமல் வாங்க முடிகிறது, மற்றதெல்லாமும், இதுவும் கூடவும் கேள்விக்குறிதான் இந்தியாவில்!
இந்தியாவில் போலி மருந்துகளை உற்பத்திச் செய்யலாம், கலப்பட உணவுப்பொருட்களை விற்கலாம், தேசப்பற்று பேசி சீனப்பொருட்களை அடையாளம் காணலாம், ஆனால்இறக்குமதி ஆவதை அரசு தடைச்செய்யாது, குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் கொல்லலாம், எந்த அரசுத்துறையின் அலட்சியத்திலும் உயிர்களை இழக்கலாம், விபத்துக்கள் ஏற்படலாம், அப்போதெல்லாம் அரசு இழப்பீடுகள் தரும், நீதிமன்றங்கள் குற்றவாளிகளுக்கு வயதாகும் வரை அல்லது சாகும்வரை விசாரித்து, குற்றவாளிகள் இல்லையென்று தீர்ப்பெழுதும்! மக்கள் மந்தைகளைப்போல வழக்கம் போல ஓட்டுப்போடுவோம்
அதே அரசுத்துறை அதிகாரிகள், அதே ஊழல் எந்திரங்கள், அதே கட்சிகள்,அதே அதரப்பழசான சட்டங்கள், அதே ஓட்டு எந்திரங்கள், எந்த பாதிப்பு நேர்ந்தாலும் நிவாரணம் பெற்றுக்கொண்டு ஊமையாகும் மக்கள், பொய்வழக்குகளினால் விலகிப்போகும் மக்கள், தனக்கு எதுவும் நேரும்வரை வலியுணராத மக்கள், இப்படி அதே மக்கள், மாற்றம் என்பது எங்ஙனம் வரும்?

உலகிலேயே மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத, மனித உரிமை பற்றிய புரிதலும், வழிகாட்டுதலும் இல்லாத ஒரே ஜனநாயக நாடு, நம் நாடாகத்தான் இருக்கமுடியும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...