Thursday, 3 August 2017

சிக்னல் கவிதைகள்

கூடவே எமனை
வேகத்தில் வைத்துக்கொண்டு
பயணிக்கும் ஆண்களுக்கு
அவர்களின் குலசாமியெல்லாம்
யாரோ ஒருவரின் வாகனத்தின்
பிரேக்கில் அமர்ந்துக்கொண்டு
அவ்வப்போது அருள்பாலிக்கிறார்
****************************************************

இருபெரும் வாகனங்களின்
இடைவெளியில்
மின்னலென நுழைந்து
கட்டைவிரலை உயர்த்திக்காட்டி
அந்த இளைஞர்கள்
பைக்கில் விரைந்தோட
வேகத்தைக் குறைத்து
வழிவிட்ட பேருந்து ஓட்டுனருக்கு
சாலைவிபத்தில் இறந்துபோன
மகன் நினைவிலாடினான்!
****************************************************
"கடவுளே,
வேகத்தை கட்டுப்படுத்தி
கொலைகள் செய்யாமல்
நான் பார்த்துக்கொள்கிறேன்
சாலைகளின் நடுவே
தடுப்புசுவரில் ஏறி
யாரும் வாகனத்தின்
முன்குதித்து
தற்கொலைச் செய்துகொள்ளாமல்
நீ பார்த்துக்கொள்!"
என்று வேண்டிக்கொண்டு
வண்டியை எடுத்தார்
அந்த வாடகை வண்டியின்
ஓட்டுநர்
****************************************************
அவனுடைய தலைக்கு
தலைக்கவசம் அணிந்துக்கொண்டு
புடவைக் காற்றில் பறக்க
பின்னே அமரவைத்துக்கொண்டு
செல்லும் கணவனை
தெய்வமெனவும்
தன் சின்னஞ்சிறிய
கைகளை
வாகனத்தின் எரிபொருள்
தொட்டியில்
எந்தப் பிடிப்புமில்லாமல்
வைத்திருக்கும் குழந்தை
தன் அப்பனை
கதாநாயகன் எனவும்
நினைத்துக்கொள்கிறது
அப்பன் கொல்கிறான்
****************************************************
பாலத்தின் இறங்கும்
வழியில் ஏறியும்
ஏறும் வழியில்
இறங்கியும்
பாதைமாறும்
பயணிகள்
பலரின் வாழ்க்கையையே
மாற்றி அமைக்கிறார்கள்
சாலையில்
****************************************************
ஒரு கத்தியின் முன்
வராத வீரம்
ஒரு கொடுமைக்கு
எதிராக
வராத வீரம்
அரச அடக்குமுறைக்கு
எழும்பாத வீரமெல்லாம்
தன்னை முந்திச்செல்லும்
வாகனத்தை ஓட்டுவது
பெண்ணென்றால்
வந்துவிடுகிறது
பெரும்பாலான ஆண்களுக்கு
சென்னை மாநகரச் சாலைகளில்!
****************************************************
நான்கு கால் நாய்
சிவப்பு ஒளிர்ந்த பொழுதில்
நம்பிக்கையுடன் சாலையை
கடக்க
இரண்டு கால் நாயொன்று
சிக்னலை மதிக்காமல்
விர்ரென்று இடைபுகுந்து
நாயை கொன்றுச்சென்றது
****************************************************

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!