Tuesday, 29 August 2017

விதைப்பதே_முளைக்கும்

கணினியில் விளையாடும் ப்ளூ வேல் விளையாட்டில் 50 நிலை விளையாடி, தன்னை வருத்திக்கொண்டு, சாகும் பிள்ளைகள், கவனிக்காத மேல்தட்டு பெற்றோர்கள்

ஆசிரியை செய்த அவமரியாதை தாங்க முடியாமல் 12 வயது சிறுமி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை, அப்பா ஆட்டோ டிரைவர்
பெற்றோர் எந்த நிலையில் இருந்தாலும், பிள்ளைகளிடம் பெரிதாக எதையோ தவற விடுகிறோம், அவர்களுக்கான நம்பிக்கையை விதைக்க மறந்துவிடுகிறோம்! 😞

சில செய்திகள் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்;

1. மதிப்பெண்கள் பிள்ளைகளின் அறிவை, திறமையை பறைசாற்றுவதில்லை

2. நீங்கள் எப்படி படித்தீர்கள்? எல்லா பாடத்திலும் எப்போதும் முதல் மதிப்பெண் பெற்றீர்களா? ஆம் எனில், உங்களின் அந்த அறிவு உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் எப்படி பயன்படுகிறது? இல்லையெனில், உங்கள் பிள்ளைகளை வருத்தாதீர்கள்

3. உங்களைப் பொதுவெளியில் உங்கள் மேலாதிகாரியோ, உங்கள் உறவோ, "நீ ஒன்றுக்குமே லாயக்கில்லாதவன்" என்று இகழ்ந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்? அதே வேதனையை ஏன் உங்கள் பிள்ளைக்கும் யாரோ ஒருவரின் பிள்ளைக்கும் தருகிறீர்கள்?

4. ஆசிரியர்களாக உங்கள் அறிவு பூகோளத்திலோ, விலங்கியலிலோ, சரித்திரத்தில் மட்டுமே, உங்களுக்கு எல்லாமும் தெரிந்துவிடுவதில்லை, பிள்ளைகள் எப்படி எல்லாவற்றிலும் அறிஞர்களாய் திகழ வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?

5. பாடம் நடத்தும்போது அந்தப் புத்தகத்தில் இருக்கும் கருத்துக்கு உங்களால் புத்தகத்தைத் தாண்டி உதாரணங்கள் சொல்ல முடிகிறாதா?? பிள்ளைகளின் கேள்விக்கு உங்களால் பதட்டமில்லாமல், எரிச்சலில்லாமல், புரியும் வகையில் பதில் சொல்ல முடிகிறாதா? தெரியவில்லை, அப்புறம் சொல்கிறேன் என்று எந்தக்கேள்விக்காவது தன்னம்பிக்கையோடு பதில் சொல்லியிருக்கிறீர்களா? ஆம் எனில், நீங்கள் நல்லாசிரியர், இல்லையெனில் வேறு பணியை தேடிக்கொள்ளுங்கள்!

6. உருவத்திலும், நிறத்திலும் எந்தக் குழந்தையும் ஒரே மாதிரி அச்சு வார்த்தது போல் இல்லை, (அப்படியிருந்தால் நாட்டில் கலாச்சார காவலர்களுக்கும் குழப்பம் வந்துவிடும்) அப்படியிருக்கும் வேளையில், கல்வியிலும், திறமையிலும் எல்லாக்குழந்தைகளும் ஒன்று போலவே இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்ப்பார்க்கிறீர்கள்?

7. அனைத்துக் குழந்தைகளும் ஒன்றுபோலவே தானாகவே பயின்று, தானாகவே திறமைசாலிகளாகிவிட்டால் பள்ளிகள் எதற்கு? ஆசிரியர்கள் எதற்கு?

8. கடைசியாய் உங்கள் குழந்தைகளிடம் அல்லது வகுப்பில் பிள்ளைகளிடம் எப்போது பேசி வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்தீர்கள்?

9. எதுவாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் பயமின்றி தைரியமாக பேசுமா? அப்படி கடைசியாக பேசியது எப்போது, அப்போது உங்கள்எதிர்வினை என்ன? வன்முறையா, அலட்சியமா? அன்பா?

10. எந்த உணவைக் கொடுக்கிறீர்களோ அதற்கேற்ப ஆரோக்கியம், நீங்கள் எப்படி நடந்துக்காட்டுகிறீர்களோ, எதைப் எப்படி எந்த நேரத்தில் பிள்ளைகளின் மனதில் விதைக்கிறீர்களோ அதற்கேற்பவே பிள்ளைகளின் மனவளர்ச்சி!
#விதைப்பதே_முளைக்கும்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!