Thursday, 3 August 2017

அம்மா, அங்கே என்ன விட்டுட்டுப் போகாதே - பிள்ளைகளும் பெற்றோர்களும்!

"அம்மா, அங்கே என்ன விட்டுட்டுப் போகாதே", "அப்பா, அந்த அங்கிள் என்னை கிள்ளிட்டாரு", "அம்மா, தாத்தா, மாமா வ பார்த்தா எனக்கு பயமாயிருக்கு"
இது போன்ற குழந்தைகளின் கூக்குரல்களை எவ்வளவு எளிதாக பெற்றவர்கள் அலட்சியம் செய்கிறார்கள்? "அட குழந்தைங்க, அது சும்மா சொல்லுது" உளவியல் ரீதியாக குழந்தைகள் எதையும் "சும்மா" சொல்வதில்லை என்பதுதான் உண்மை!

குழந்தைகளின் மழலை வார்த்தைகள் தேனோசையென்றால், குழந்தைகளின் பயம், மற்றும் மறுப்பு வார்த்தைகள் எச்சரிக்கை ஓசைகள்!
ஏழு வயது பெண் குழந்தையை தனியே விட்டுவிட்டு குடும்பமே ஷாப்பிங் செல்ல, ஒரு குழந்தை வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்டு எரிக்கப்பட்டது, சண்டிகரில் 10 வயது பெண்குழந்தை பாலியல் பலாத்காரத்தில் கர்ப்பம், ஹரியானாவில் 15 வயது சிறுமி உறவினர் இருவரால், பெற்றவர்களை கொன்று விடுவோம் என்று பயமுறுத்தி வன்புணர்ச்சி செய்யப்பட்டு கர்ப்பம், இதுபோன்ற செய்திகள் தொடர்ந்து வருகின்றன, தொடர்ந்து பல பெற்றவர்களும் "யாரின்" மீதோ வைக்கும் நம்பிக்கையை பிள்ளைகளின் மீது வைக்காமல், பெண் குழந்தைக்கு நம்பிக்கையையோ, தங்களின் செவிகளையோ, நேரத்தையோ தராமல் அலட்சியப்படுத்துவதில் இந்த அவலங்கள் தொடர்கதையாகிறது!

"அவன் ஆம்பிளை" என்ற ஆண் பிள்ளைகளின் வளர்க்கும் முறையையும் இந்த இந்தியச் சமுதாயம் மாற்றிக்கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்!

பெண் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் நம்பிக்கையே வைப்பதில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான், பெரும் வரதட்சணை தரப்பட்டு செய்யப்படும் திருமணம், ஜார்ட்டட் அக்கவுண்டன்ட் படித்த தங்கள் பெண்ணை நூறு பவுன் நகைக்கொடுத்து, முப்பது லட்சம் ரொக்கம் கொடுத்து, 15 லட்சம் கார் கொடுத்து, ஒரு மருத்துவனுக்கு திருமணம் செய்து வைக்க, வரதட்சணைக் கொடுமையால் பெண் தாங்க முடியாத வேதனையுடனும், பயத்துடனும் பெற்றவர்களை தேடி வந்தப்போதெல்லாம், அவளின் மூன்று வயது குழந்தைக்காக, "அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்ற அதே புளித்துப்போன அறிவுரையைச் சொல்லித் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள், விளைவு, புகுந்த வீட்டு பெரிய மனிதர்கள் வேறு பெண்ணை பெரும் வரதட்சணையுடன் மகன் திருமணம் செய்து கொள்ள, மொத்த குடும்பமும் சேர்ந்து அவளைக் கொன்றிருக்கிறார்கள்! நன்றாக படிக்க வைக்கும் பெற்றோர் ஏட்டுக்கல்வியுடன், பெண்ணுக்கு
தன்னம்பிக்கையையும், உறுதியையும் வளர்த்து, வரதட்சணையாக யாருக்கோ கொடுக்கும் பணத்தை, அவளிடம் கொடுத்தால்கூட அவளின் வாழ்க்கை நல்லபடியாய் அமைந்திருக்கும் தானே?

சரி, கொடுமைகள் எல்லாம் பெண்களுக்குதானா? இல்லை, வன்புணர்ச்சி நிகழ்வுகள் பெண்குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சரிபாதி ஆண்குழந்தைகளுக்கும் நிகழ்வதாக என்சிஆர்பி கூறுகிறது!

இதற்கெல்லாம் அரசின் வினையாற்றும் வீச்சென்பது கண்துடைப்புத்தான்! ஒவ்வொரு முறையும் ஏதேனும் நிகழ்ந்தால் மட்டுமே இந்த அரசாங்கம் செயல்படுகிறது, நிர்பயா முதல் பேருந்து ஓட்டையில் விழுந்திறந்த குழந்தை முதல் நீங்களே யோசித்துப்பாருங்கள், விளைவுகள் ஏற்படும்போதே அரசு அதிகாரிகளும், ஆள்பவர்களும் விழிக்கின்றனர், அல்லது விழித்தது போல் நடிக்கின்றனர்! இதுவரை அவர்களின் குழந்தைகள் இதுபோன்ற பயங்கரங்களை எதிர்கொள்ளவில்லை, காவல்துறைக்கும் ஆளும் காய்ந்த மரங்களுக்கும் எந்தக்குழந்தைக்கு என்ன ஆனாலும் அது வெறும் எண்ணிக்கை கணக்குத்தான், சில நூறுகளையோ, சில லட்சங்களையோ நிவாரணமாக வீசி எறிந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விளம்பரம் செய்வதோடு அவர்களின் வேலை முடிந்துவிடும், ஆனால் ஒவ்வொரு பெற்றவர்களுக்கும், அவரவர் குழந்தைகள் எண்ணிக்கை கணக்கல்ல, அவர்களின் வாழ்வாதாரத்தின் நம்பிக்கை கணக்கு, ஆதலால்;

*பிள்ளைகளிடம் நேரம் செலவிடுங்கள்
*அவர்களுக்கு உங்கள் செவிகளையும் மனங்களையும் தாருங்கள்
*பிள்ளைகளை தனித்திருக்கவோ, யாரையோ நம்பி விட்டுச்செல்லாதீர்கள்
*குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுங்கள்
*ஆண்பிள்ளையையும் பெண்பிள்ளையையும் வளர்க்கும் முறையில் வித்தியாசம் காட்டாதீர்கள்
*ஆண்குழந்தைக்கும் பெண்குழந்தைக்கும் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்
*ஆண்குழந்தையோ, பெண் குழந்தையோ நல்ல உணவோடு ஆரோக்கியம் பேணுங்கள்
இருவருக்கும் உடல் பலமும் மன பலமும் அவசியம்
*குழந்தைகள் வெளியே விளையாட பார்வைக்கூர்மையாகும், அவர்களின் மீது உங்கள் பார்வையும் கவனமும் இருக்கட்டும்
*இறுதியாக குழந்தைகளின் கல்வியில், திறனில் அக்கறைக்கொள்ளுங்கள், அவர்களின் திறனில், வார்த்தைகளில் "நம்பிக்கை" வையுங்கள்
பெற்றவர்களின் நம்பிக்கையும், அன்பும், அக்கறையும் மட்டுமே குழந்தைகளைக் காத்து நிற்கும் , இடர்பாடு ஏற்பட்டாலும் அதுவே அவர்களைத் துவண்டுவிடாமல் தாங்கிநிற்கும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...