Thursday 3 August 2017

மனமெனும் நந்தவனம்


  
அது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடித்து, பதினொன்றாம் வகுப்பில் காலடியெடுத்து வைத்த தினம். மொத்தம் வகுப்பும் எந்தப் பாடப்பிரிவை எடுத்திருந்தாலும், கணிதத்தை ஒரு விருப்ப பாடமாக எடுத்திருந்தது. ஆசிரியர் வந்தார், அதே பத்தாம் வகுப்பு கணித ஆசிரியர், அவருக்குள் பல முன்முடிவுகள், போன வருடத்தில் இருந்தவனோ / இருந்தவளோ உருவத்தில் மாறியிருந்தாலும், திறமை என்னவோ தெரிந்துதான் போயிருக்கும் என்பது அவரது கணிப்பு. முதல் நாள் வகுப்பில் "நீங்கள் நினைப்பது போலக் கணிதம் அவ்வளவு எளிதில்லை, இந்த வருடம் நீங்கள் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்" என்றார். சலசலப்பில் இருந்த கூட்டத்தில் தேவையில்லா ஓர் இறுக்கம் சூழ்ந்து கொண்டது. அடுத்த நாள் வகுப்பில், இன்ஜினீரியரிங் படித்தே தீருவேன் / படித்துதான் தீர வேண்டும் என்ற அளவில் இருந்த மாணவர்களும், ஒரு மாணவியும், கணிதத்தை விரும்பிய மற்றுமொரு மாணவியும் மட்டுமே வகுப்பில் இருந்தனர், மற்றவர் எல்லாம் கணிதம் தவிர்த்து வேறு பாடங்களை எடுத்து சென்று விட்டனர். அந்தப்பள்ளி அந்த வருடம் மிகக்குறைந்த அளவிலேயே கணிதப் பிரிவு மாணவர்களைப் பெற்றிருந்தது!

அவ்வப்போது நான் நினைவுறுத்திக்கொள்ளும் கதை ஒன்று உண்டு, ஒரு பெரும் காலணிகள் செய்யும் நிறுவனம், ஒரு தீவில் தங்களுடைய கிளையைத் தொடங்குவதற்காக, இரு ஊழியர்களை அந்தத் தீவின் நிலவரம் பற்றி அறிய அனுப்பியது. ஒருவர் திரும்பி வந்து, அந்தத் தீவில் யாருமே செருப்பணியவில்லை, அதனால் அங்கே வியாபாரம் தொடங்குவது வீண் என்க, இன்னொருவர் திரும்பி வந்து, அங்கே யாருமே காலணி அணியவில்லை, நிச்சயம் நமக்கு நல்ல வாய்ப்பு, நம் காலணிகளைச் சந்தைப்படுத்தலாம் என்றாராம்.

ஒருவரைப் பற்றிய நம் பார்வை, நம் நோக்கு எல்லாமே சில நிகழ்வுகளாலும், நாம் வளர்க்கப்பட்ட பின்னணியினாலும், நம்முடைய எண்ண ஓட்டங்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவரைப் பற்றிய முன்முடிவை நாமாக எடுத்துக்கொள்ளும் முன், நாம் ஏன் பேசத்தயங்குகிறோம்? கசகச வென்று களைகளைப் போல் நம்மால் நினைவுகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது, அந்தக்களைகள் நமக்கு அழகானதாகத் தோன்றுகிறது, அந்தக் எண்ணக் களைகள், நம்முடைய "நான்" எனும் தன்மையால் மேலும் மேலும் உறுதிபெறுகிறது, சட்டென்று ஒரு நொடியில் அழுத்தப்பட்ட அத்தனையும், ரகசியக்களைகளாக வளர்க்கப்பட்ட அத்தனையும் வெறுப்பையும், வன்மத்தையும் வாரி உமிழ்கிறது! சாதியினால் ஏற்படும் சண்டைகளும், கொலைகளும் கூட ஒரு தலைமுறை இன்னுமொரு தலைமுறைக்கு எண்ணக் களைகளாகக் கடத்தப்பட்டவையால் விளைவதுதான்.

ஒரு குழந்தைத் தவழ்ந்து, நடந்து, ஓடினாலும், பெற்றவர்கள் கண்களுக்கு அது குழந்தையாகவே தெரியும், அது இயல்பு, எனினும், ஒரு குழந்தையைச் சிறந்த குழந்தையாக மாற்றுவதும், அல்லது மோசமான வழியில் நடத்துவதற்கும் எப்போதும் வறுமையோ, செல்வமோ காரணமாவதில்லை, பெற்றவர்களின், மற்றவர்களின், சமூகத்தின் எண்ண ஓட்டத்தில் அந்தக்குழந்தைக்குக் கடத்தப்படும் எண்ணங்களும் சூழலுமே காரணமாகிறது!

ஒருவரைக் கைநீட்டி அடிப்பது உடலுக்கு எத்தனை வேதனை தருமோ, அதை விட அதிக வேதனையை "சொற்களால்" காயப்படுத்தும் போது மனம் உணரும் என்பதை அவ்வப்போது என் அப்பா "வார்த்தையை விட்டுடாதே" என்பார்! வாழ்வின் மிக மோசமான காலகட்டத்தை, சில நம்பிக்கை துரோகங்களைக் கடந்தவேளையில் எல்லாம், யாரையும் நான் சபித்ததோ, கடினமான வார்த்தைகளை உமிழ்ந்து என்னை ஆற்றுப்படுத்திக்கொண்டதோ இல்லை, அதிகபட்சமாகச் சாலையில் செல்லும்போது ஏற்படும் விதிமீறல்களில் ஏதோ ஒரு சலிப்பும் எரிச்சலும் வந்தாலும், மனதிற்குள் திட்டிக்கொள்வேன், அதுவும் கூட நம் மனநிலையைப் பாதிக்கும் ஒரு விஷயம்தான் என்று விட்டுவிட்டேன்!

அவ்வப்போது காதல் தோல்விகளில் ஏற்படும் கொலைகளும், தூற்றிக்கொள்ளும் வார்த்தைகளும், அதுவரை அங்கே நிகழ்ந்த காதல் பொய் என்றுதானே எடுத்துச்சொல்கிறது? இந்தக் காழ்ப்பும் கோபமும் வார்த்தைகளும் எத்தனை விஷயங்களைப் புரட்டிப்போட்டு விடுகிறது?

அந்தச் சிறுவனின் பெயர் ஜாக், எப்போதும் அவனுக்கு அளவுக்கு மீறி கோபம் வரும், தெருவில் போவோர் வருவோர் எல்லாம் ஜாக்கைப் பற்றி அவனின் தகப்பனிடம் குறை சொல்கிறார்கள், ஜாக்கின் அப்பா ஜாக்கிடம் நிறைய ஆணிகளைக் கொடுத்து, என்றெல்லாம் நீ கோபப்படுகிறாயோ அன்றெல்லாம் ஒரு அணியைத் தோட்டத்தைச் சுற்றியிருக்கும் வேலியின் பலகையில் அடித்துவா என்கிறார், ஜாக் வேலி முழுக்க ஆணிகளை அறைகிறான். ஒருநாள் அவனின் தந்தை, "ஜாக், ஒவ்வொருமுறையும் நீ கோபப்பட்டு உமிழும் வார்த்தைகளும், உன் செய்கைகளும் இப்படித்தான் ஒரு ஆணியை அதை எதிர்கொள்பவரின் மனதில் அறைகிறது என்க, ஜாக் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. பின்பு, அவனிடம் நீ காயப்படுத்தியவரிடம் மன்னிப்பு கேள், எந்த ஒரு நல்ல செய்கை செய்யும்போதும், இங்கே நீ அறைந்த அணிகளில் ஒவ்வொன்றாய் எடுத்துவிடு என்று சொல்கிறார். ஜாக் சில மாதங்களில் வேலி முழக்க அறைந்த ஆணிகளையெல்லாம் எடுத்துவிடுகிறான், பின்பு தந்தையை அழைக்க, இப்போது தந்தைக்கு நிம்மதி. வேலி முழுக்க அணி எடுத்த இடங்களில் எல்லாம் ஓட்டைகள், வெளிப்பலகைகள் முழுதுமே ஓட்டையாய் காட்சி அளிக்கிறது. "ஜாக், அறைந்த ஆணிகளை எடுத்துவிட்டாலும், இந்த ஓட்டைகளைப் போலவே உன்னால் துன்பப்பட்டவர் மனதும் காயப்பட்டு, அதனால் தீரா தழும்புகள் ஏற்பட்டிருக்கும், புரிகிறதா?!" என்கிறார் என்பதாகக் கதை முடியும். நம்மில் பல ஜாக்குகள் இப்படித்தான் இருக்கிறோம், வீட்டில் வெளியில் என்று அகப்பட்டவரிடம் ஆணிகளை அறைகிறோம்!

கடுமையாய் வசைபாடும் ஒருவரிடம், புன்னகையை மட்டும் பரிசளித்துவிட்டு அமைதியாய் சென்று விடுங்கள், எல்லோரும் புத்தரில்லை என்று ஒவ்வொருவரும் வசைபாடிக் கொண்டே இருந்தால், இங்கே சலசலப்பும் கண்ணீரும் மட்டுமே மிஞ்சும்! புத்தர் பிச்சையெடுக்கும் வேளையில் தொடர்ந்து ஒரு பெண்மணி அவரை வசைபாட, பொறுக்க முடியாத சீடர்களை ஆற்றுப்படுத்திய புத்தர், "நாம் ஒருவரிடம் பிச்சை கேட்கிறோம், அவர் கொடுப்பதை நாம் மறுத்துவிட்டால் அந்தப்பொருள் அவரிடம் இருந்துவிடும், பொருளுக்கு நிலைமை இப்படியென்றால், ஒருவர் நம் மனம் ஏற்காத வார்த்தைகளில் நம்மை வசைப்பாடும்போது, நாம் அதை ஏற்காமல் மௌனமாய் நகர்ந்துவிடும்போது அது அவர்களிடமே தங்கிவிடுகிறது" என்றாராம்! தனிமனிதர்களிடம் கோபமாய்ப் பேசுவதோ, வன்முறையில் இறங்குவதோ, வஞ்சித்து ஏமாற்றுவதோ, தூற்றுவதோ வீரம் இல்லை, எல்லாவற்றிற்கும் அன்பையோ, மன்னிப்பையோ பரிசளித்து நகர்ந்துவிடுவதே வீரம்!

சமீபத்தில் ஒரு காணொளிப் பார்த்தேன், செடிகளுக்கும் நினைவும் உணர்வும் உண்டு என்ற சில ஆய்வுகளின் தொகுப்பு அது. நல்ல வார்த்தைகளைக் கேட்கும் செடி வேகமாய்ச் செழித்து வளர்கிறது, கடினமான வார்த்தைகளைக் கேட்கும் செடி வாடுகிறது, தன் துணைச் செடியை ஒருவன் வெட்டிசாய்க்க, பலபேருக்கு மத்தியிலும் ஒரு செடி அவனை மட்டும் அடையாளம் காண்கிறது, தன் பயத்தினை அதிர்வலைகளாக வெளிப்படுத்துகிறது! அஃறிணை என்று மனிதர்கள் வரையறுத்திருக்கும் செடிகளுக்கே நல் வார்த்தைகள் தேவைப்படும்போது, உயர்திணை மனிதர்களுக்கு அது எத்தனை இன்றியமையாதது என்பதை அறிவோம். ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பது முதுமொழி, வெல்வதற்கு வழிகாட்டுகிறோமோ இல்லையோ ஒருவரையும் கொன்றுவிடாமல் பார்த்துக்கொள்வோம்! நெஞ்சில் எழும்பி, ஆத்திரத்தில் நாவில் துடிக்கும் சொற்களை, உதடுகளின் வழி தப்பிவிடாமல், விரல்களின் வழி தப்பிவிடாமல் ஒரு நிமிடம் கட்டுப்படுத்தினால், ஒரு தழும்பு தவிர்க்கப்படும்தானே?

எல்லோரின் எண்ணங்களிலும் நாம் புகுந்து வரமுடியாது, அவரவர் மனதில் இருப்பது என்ன என்ற முன்முடிவுகளைத் தவிர்த்து, ஒரு நிமிடம் நம் மனதில் உள்ள களைகளை அகற்றிவிட்டால் நம்முடைய மனம் என்பது நந்தவனம்தான், மனம் மணம் பரப்பட்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!