Tuesday 21 February 2017

பாலியல் வக்கிரங்கள்

நாள்தோறும் பீகார், ஒரிசா, டெல்லி என்று வேறு மாநிலத்தில் இருந்து கட்டிட வேலைக்காக, பல்வேறு பணிகளுக்காக ஆட்கள் வந்துக்கொண்டேயிருக்கின்றர்! அதிலும் பிச்சையெடுப்பதற்கு சென்னை அவர்களுக்கு ஏற்ற ஒரு புனிதத்தளமாய் இருக்கிறது!

இவர்கள் தங்களுடைய பாலியல் வடிகாலுக்கு குழந்தைகள், முதியவர்கள், விலங்குகள் என்ற பேதமில்லாமல் பாய்வது வழக்கமான செய்தியாகிவிட்டது! (இங்கே இருப்பவர்கள் புனிதர்கள் என்று நான் கூறவில்லை)

கண் எதிரே போதையில் குழந்தையை மயக்கி பிச்சை எடுத்தாலும் காவல்துறை கண்டுக்கொள்ளாது! கமிஷன் வாங்காத துறையே இல்லை எனும்போது, அவர்களே மக்களின் பொதுசொத்தை எரிக்கும்போது, சொல்வதற்கு ஒன்றுமில்லை! 

படிப்புக்கட்டாயம் என்று சொல்லும் நாட்டில் கண் எதிரே குழந்தைகளுக்கு எதிரான அத்தனை அக்கிரமங்களுக்கும் இந்த நாட்டில் அமைதிதான் நீதி! பெண்கள் கொல்லப்பட்டால் அது டெல்லியிலா, தமிழ்நாட்டிலா என்பதைப்பொறுத்து நீதி மாறுபடும்! தமிழகத்தில் பெண் கொல்லப்பட்டால் அவளின் சாதியைக்கொண்டு நீதி மாறுபடும்!

பாலியல் வக்கிரங்களுக்கும், கொலைகளுக்கும் இவை ஏதோ ஒன்று காரணமாகிறது;

1. அதரப்பழசான சட்டம்
2. கட்டற்ற இணைய வழித்தகவல்கள்
3. சரியான பாலியல் கல்வி இல்லாமை!
4. ஆண் பெண் பேதங்கள், ஒழுக்கம் ஆணுக்கில்லை என்னும் சமுதாய அமைப்பு
5. காசுக் கொடுத்தால் மட்டுமே இயங்கும் அரசு எந்திரங்கள்
6. மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசுகள்
7. பெற்றோரின் கவனக்குறைவு, வளர்ப்புமுறை!
8. பொதுவெளியில் கடுமையான தண்டனை இல்லாத நிலை
9. பெண்களுக்கான உடல் உறுதியில், ஊட்டச்சத்தில், தற்காப்புக் கலைகளில் அக்கறைக் கட்டாத பெற்றோர் மற்றும் சமுதாயம்
10. பெண் என்பவள் "வெள்ளையாய்" "அழகாய்" "சரியான உடல் அளவுகளில்" "ஆணின் ஜட்டிக்கும்" கூட அவசியமென்னும் பிற்போக்குத்தனமான விளம்பரங்கள்!
11. ஆண் பொறுக்கியாய், ரவுடியாய் கூட இருக்கலாம், அவன் விரும்பிவிட்டால், எப்படிப்பட்டவளாய் இருந்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையென்றால் அந்தப்பெண்ணைக் கொன்று விடவேண்டும் என்று சீரழிக்கும் திரைத்துறை!
12. பெண் என்பவள் ஒருவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்யும்போது எதிர்ப்புக்காட்டாமல் இருக்க வேண்டும், பெண் என்பவள் ஒழுக்கமாய் ஆடை அணியவேண்டும் என்று பொன்னானக் கருத்துகளை உதிக்கும் அரசியல் பொறுக்கிகள்!

பாலியல் வக்கிரங்கள் என்னும் தீ ஆள்பவர்களின், அதிகாரத்தில் இருப்பவர்களின் வீட்டின் கதவைத்தட்ட வெகுநாள் ஆகாது, அப்போதாவது விழித்துக்கொள்ளட்டும் பெரிய மனிதர்கள்!
உயிரின் மதிப்பறியா மனிதர்கள் ஆள்பவர்களாகவும், காவலர்களாகவும், பெற்றோர்களாகவும் இருக்கும் தேசத்தில், பணமே பிரதானம் என்று ஓட்டுகளை விற்கும்
மந்தைகள் நிறைந்த தேசத்தில் நாம் கண்ணீர் விடுவதைத் தவிர வேறு வழியில்லை!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!