Tuesday 21 February 2017

இங்கே_உயிர்கள்_விற்பனைக்கு

நகர நிர்வாகம் மோசமாகி
நகரம் மழைநீரில் தத்தளித்தால்
சில நூறு மக்கள் இறந்துபோனால்
சில நூறு ரூபாய்கள் மக்களுக்கு!

நீர் மேலாண்மை மோசமாகி
வறட்சி மேலோங்கி
விவசாயிகள் தற்கொலைச் செய்துகொண்டால்
சில நூறு ரூபாய்கள் விவசாயிகளுக்கு!

குடியால் குடிகெட்டு
கொலையிலோ விபத்திலோ
யாரேனும் மரணமடைந்தால்
சில நூறு ரூபாய்கள் குடும்பத்துக்கு!

காமம் மிகுந்து
எளிதாய் உயிர்களைக் களவாடி
பெண்களையும் குழந்தைகளையும் கொன்றால்
சில நூறு ரூபாய்கள் குடும்பங்களுக்கு!

நிலத்தில் வாயு எடுத்து
தனியார் கொழிக்க
நிலம் மலடாகி வாழ்வாதாரம்
பொய்த்துப்போனால்
சில நூறு ரூபாய்கள் குடும்பங்களுக்கு!

சில ஆயிரம் ரூபாய் கடன்களைக்
கொடுக்க முடியாமல்
கல்வியைத் தொடர முடியாமல்
மாணவன் தற்கொலைச் செய்துக்கொண்டால்
சில நூறு ரூபாய்கள் அவன் குடும்பத்துக்கு!

கட்சி அபிமானத்தில்
பேருந்திலோ பள்ளியிலோ குளத்திலோ
பெண்களைக் குழந்தைகளை மக்களை
யாரோ சிலர் எரித்தாலும் புதைத்தாலும்
சில நூறு ரூபாய்கள் அவரைச் சார்ந்தோர்க்கு!

கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகள்
பிச்சை எடுத்தாலும்
அதிலும் சில நூறுகள் அதிகாரவர்க்கத்துக்கு!

யாரின் மின்சாரத்துக்கோ கூடங்குளம் அமைக்க
யாரின் நலத்துக்கோ குழாய் பதிக்க
யாரின் கழிவுகளையோ கொட்ட நிலம் சமைக்க
தமிழகப் பூமி சில கோடி ரூபாயில் தனியாருக்கு!

இத்தனையும் மறக்க
எஞ்சியிருக்கும் சாம்பலையும் விற்க
சில நூறு ரூபாய்கள் போதும்
இந்த அடிமை கூட்டத்துக்கு!
தமிழகம் விற்பனைக்கு
என்ற அறிவிப்புப் பலகை மட்டும்
காணவில்லை
அதை ஏதோ ஒரு மந்திரி
திருடிக் கொண்டு போயிருக்கலாம்
அல்லது யாரோ ஒருவன்
சில நூறு ரூபாய் கூலிக்காக
எங்கோ ஒரு மூலையில்
உருவாக்கிக் கொண்டிருக்கலாம்!

#இங்கே_உயிர்கள்_விற்பனைக்கு

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!