Tuesday 21 February 2017

ஊழல் என்பது ஒழிக்க முடியாத ஒன்று

சமூக வலைத்தளங்களில் மக்களின் கருத்துக்கள் பற்றிய சர்ச்சையில், மக்கள் தங்கள் கருத்துகளை பகிர தடையில்லை, தலைவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லையென்றது நீதிமன்றம்!

காங்கிரஸ் ஆட்சியில் பா.ஜ.க வின் விமர்சனங்கள் நாடறியும், பெட்ரோல் விலையேற்றத்துக்கு மன்மோகன் சிங்கை மோடி முதல் சுஷ்மா சுவராஜ் வரை கழுவி கழுவி ஊற்றியதை அவர்களே தங்கள் தளத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள்!

இப்போது அதே பா.ஜ.க வை அதே காரணத்துக்காக காங்கிரஸும் விமர்சிக்கிறது! எல்லாக் கட்சிகளும் ஆளும்போது ஒரு நிலைப்பாடும், எதிர்கட்சியாக மாறும்போது ஒரு நிலைப்பாடும் கொண்டவர்கள்தான்! "உண்மையில் மக்களைப் பற்றிய சிந்தனையே கட்சிகளுக்கு ஆட்சியை இழந்து எதிர்கட்சியாக மாறும்போதுதான் வருகிறது என்பதே நிதர்சன உண்மை!"

அப்படி எதிர்கட்சியாக மாறியும் கூட மக்களுக்காக அவர்களும் கூட குரல் எழுப்பாமல் போகும்போது, ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்கள் கருத்தைப் பதிய ஒரு தளம் அவசியமாகிறது! தனியே இல்லாமலே ஒட்டுமொத்த மக்களும் ஒரு திசையில் குரல் கொடுக்கும்போது அது ஆள்பவர்களுக்கு கேட்கிறது, அவர்கள் மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியத்தை அது உருவாக்குகிறது! அப்படி நிகழ்ந்ததுதான் ஜல்லிக்கட்டு! பிற்பாடு ஏற்பட்ட அரசியல் மற்றும் வன்முறை நிகழ்வுகளில் மீண்டும் ஒரு புரட்சி எழக்கூடாது என்ற எண்ணமும், பிண்ணனியில் நமக்குப் புரியாத அதே வஞ்சக சூழ்ச்சி அரசியலும் நிறைந்திருக்கிறது!

இன்றைய காலக்கட்டத்தில் கலப்பட உணவு முதல் கட்டாய திருமணம் வரை, கொலை, கொள்ளை, ஊழல் என்று எல்லாவற்றிற்கும் மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கின்றன, பல பொதுநல வழக்குகள் நீதிமன்றங்களில் தொடங்கப்படுகின்றன, இப்படிப்பட்ட ஒட்டுமொத்த நிலைப்பாட்டில்தான் நமக்கு இன்னமும் சிறிய அளவில் நீதியென்பது சாத்தியப்பட்டிருக்கிறது! இதெல்லாம் தான் நமக்கு எஞ்சியிருக்கும் கருத்துச் சுதந்திரங்கள்!

எப்போதும் பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் பழித்துக் கொண்டு, ஒரு தேசம் அதே அளவுக்கு வன்முறையை காஷ்மீரில் நடத்துவதைக் கண்டிப்பது இதே கருத்துச் சுதந்திரம்தான்! ஓட்டு வங்கியில் மதத்துக்கு அப்பாற்பட்ட எல்லா மதங்களையும் உள்ளடக்கிய மனிதர்களை வைத்துக்கொண்டு மத்திய மந்திரி, "கடற்கரைப் போராட்டத்தில்" முஸ்லீம்கள் தொழுகை நடத்தினார்கள் என்று பேசியதும் கூட கருத்துச் சுதந்திரம்தான்!
பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமையில், பாலியல் பலாத்கார செய்திகளில், மத்திய மந்திரிகள் உதிர்த்த பொன்மொழிகள், மற்றும் தமிழர்களுக்கு எதிராக, எச்.ராஜா, சுப்பிரமணிய சுவாமி பாடிய வசைகள் யாவும் கருத்துச் சுதந்திரம்தான்!

வங்கி வரிசையில் மக்கள் பலமணிநேரம் இரண்டாயிரம் ரூபாய்க்காகவும், உழைத்தப் பணத்தை செலுத்த நின்றபோதும் "ஊழல்வாதிகள் எல்லாம் வரிசையில் நிற்கின்றனர்" என்று அந்த ஊழல்வாதிகள் தேர்ந்தெடுத்த பிரதமர் சொன்னதும் அதே கருத்துரிமையின் ஆணவம்தான், "திருமணம் கூட நின்றுவிட்டது!" என்று கேலிசெய்து சிரித்து பின் நாட்டிற்கு வந்தப்பின் வேறு அலைவரிசையில் கண்ணீர் விட்டு முழங்கியதும் அதே கருத்துரிமைதான்!
மக்களின் கருத்துகளைத் தேசத்துரோகம் என்றால், தமிழக மக்களைப் பொறுக்கிகள் என்றும், வன்கொடுமைகளில் பெண்களின் நிலையை விமர்சித்தும் ஆளுங்கட்சியில் இருக்கிற மந்திரிகள் உறுப்பினர்கள் உதிர்க்கும் கருத்துகளை அந்தக்கட்சியோ, பிரதமரோ கண்டித்ததாய் செய்திகள் இல்லை!

மக்களோ பிரதமரோ முதல்வரோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த உறுப்பினரோ, யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது, அதே போல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை விமர்சிக்கும்போது தரக்குறைவான வார்த்தைகளை மக்கள் பிரயோகப்படுத்துவது எப்படி கண்டனத்துக்குரியதோ அதைவிடவும் அதிக கண்டனத்துக்குரியது, முதலாளிகளாகிய மக்களை, அவர்கள் பணியில் அமர்த்தியிருக்கும் தேர்ந்தெடுத்த பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் உறுப்பினர்களும் விமர்சிப்பதும், அதை கண்டுகொள்ளாமல், அமைச்சர்களின் தனிப்பட்ட கருத்தென்று கடந்துப் போவதும்!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் (article 19) ஆர்டிகள் பத்தொன்பது கருத்துரிமையை வரையறுத்துள்ளது, ஒருவரை தரக்குறைவாக (defamation) பேசுவது குற்றம் என்று சொல்கிறதே தவிர, பிரதமரை விமர்ச்சிக்கவே கூடாது, அது தேசத்துரோகம் என்று வரையறுக்கவில்லை!

நம் மக்களுக்கு பெண்களை விமர்சிப்பதில் வரைமுறையே கிடையாது, தொழிலில், பணியில், அரசியலில், பொதுவாழ்க்கையில் என்று பெண்கள் வெளியே வரும்போது, அவர்களை நிலைகுலைய வைக்க அவர்களின் ஆடையைப்பற்றியும், தனிப்பட்ட வாழ்க்கையைப்பற்றியும் கூட்டியும் குறைத்தும் பேசுவதே வழக்கம், அதே பழக்கம்தான் அதே ரீதியில் அரசியல்வாதிகளை அவர்கள் ஊழலைக்கொண்டு, மறந்த வாக்குறுதிகளைக் கொண்டு விமர்சிக்கும் போது, அது தடம் மாறி தனிமனித தாக்குதலாக கீழ்த்தரமான வார்த்தைகளில் முடிகிறது!

"ஊழல் என்பது ஒழிக்க முடியாத ஒன்று, அரசியல்வாதிகள் ஊழல் செய்வதென்பது தவிர்க்கமுடியாத ஒன்று" என்பதெல்லாம் அரசியல் சட்டத்தில் இல்லை, இருப்பினும் சுதந்திரத்திற்குப் பின்னான அடிமைப்பட்ட இந்தியாவில் இத்தகைய மனநிலையை ஆள்பவர்கள் மக்களுக்கு தங்கள் "சிறப்பான" ஆட்சியின் வழி தந்திருக்கிறார்கள்! அதே அணுகுமுறைதான், பிரதமரை, அதிகாரத்தில் உள்ளவர்களை "விமர்சிப்பதும்" கூட "தேசத்துரோகம்" என்று மக்கள் மனதில் பதிய வைக்க முனைகிறது!

ஆள்பவர்களுக்கு எதிராக, அவர்களின் ஊழலுக்கோ மக்களை சிரமத்திற்குள்ளாக்கும் காரியத்திற்கோ விமர்சனமே கூடாது என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டால், கருத்துரிமை என்னும் ஆக்ஸிஜன் குழாய்க்கொண்டு மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் மக்களாட்சி, முழுதும் முடிந்து, அரசாட்சி மலரும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!