Tuesday, 21 February 2017

ஆங்கிலேயன் நல்லவன்

ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வுகளுக்கு ஒப்பானது காய் நகர்த்திச் சில காய்களை வெட்டி, மக்களை முட்டாளாக்கும் இன்றைய காலகட்டத்தின் அரசியல் செயல்பாடுகள்! முன்னோர்கள் ஒரே குண்டில் செத்துவிட்டார்கள், நாம் மட்டும் தினம் தினம் சாக!

சில கோடி முட்டாள்கள், நீலிக்கண்ணீருக்கும், குவார்ட்டருக்கும், பிரியாணிக்கும், சில நூறு ரூபாய் தாள்களுக்கும் ஓட்டுரிமையை விற்று விட, பலகோடி மக்கள் வருந்துவதுதான் ஜனநாயகம்!
"அரசியல் வேண்டாம் என்று வீட்டுக்குள்ளே இருந்தால், அரசியல் நம் வாழ்க்கையின் உள்ளே வரும்" என்று எங்கோ படித்த விபரீத வரிகள் தான் நினைவுக்கு வருகிறது!

மக்கள் குமுறி குமுறி பொங்குவதெல்லாம் ஆற்றாமையின் வடிகால்தானே ஒழிய தீர்வு இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்! பணம் என்ற தாளுக்கு மட்டுமில்லை, பெருத்த வன்முறையின் சூழ்ச்சிக்கும் அரசு எந்திரங்கள் பலியாகுவதன் நீட்சிதான் இப்படிப்பட்ட பின்வாசல் தந்திரங்கள்!

குமுறி வெடிக்கும் தொண்டனை மந்திரியே அடிக்கும் அவலம் கண்டு என்ன பயன், யாரிடம் புகார் கொடுப்பது, ஆட்சியையும் அதிகாரமும் அமைதியாய் பக்கத்தில் வேடிக்கைப் பார்க்கும்போது நீதி எங்கே கிடைக்கும்?

கொலையாளியின் மங்கலான புகைப்படத்தில் உள்ள துப்பை வைத்துப் பொதுமக்கள் வழக்கை முடிக்கும் துறைக்கு, துறை சம்பந்தப்பட்ட குற்றங்களின் வீடியோ ஆதாரங்கள் கூட நடவடிக்கை எடுக்கப் போதாதது எனும் போதே அந்தத்துறையின் லட்சணம் தெரியவில்லையா? இதில் அவர்கள் எங்கே மக்களுக்கு உதவுவது?

ஊழல் வழக்குகளில் இதுவரை ஆட்சியில் இருந்த, இருக்கும் அரசியல்வாதி தண்டிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்ததேயில்லை, நூறு ரூபாய்க் கட்டத்தவறினால் பொதுமக்கள் நாயினும் கீழாய் நடத்தப்படுவர், கோடிக்கணக்கில் நிகழ்த்தப்படும் திருட்டுக்கு ஊழல் என்று பெயரிட்டு, சாட்சிகள், குற்றவாளிகள் எல்லாம் தானாய் மாண்டுபோகும் வரை விசாரணை நிகழும் சட்ட அமைப்பில் மக்கள் யாரிடம் நீதிக் கேட்டு நிற்க முடியும்?

இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டில் இன்னமும் குறைந்தபட்சக் கல்விக் கூடத் தரமாய் இலவசமாய் ஆகாததற்குக் காரணம் மிகப்பெரும் மந்தைகள் மந்தைகளாகவே இருக்க வேண்டும் என்ற காரணமே ஆகும்!

இந்திய மந்தைகள் ஒன்று கூடுவது என்பது அபூர்வம், ஒன்று கூடினால், அதே மந்தைகளின் ஒரு பகுதியைக் கொண்டே சாதி, மதம், பணம், வன்முறை என்ற ஏதோ ஒன்றில் கலைத்துவிடும் கலை அரசியல்வாதிகளுக்குத் தெரியும்!

பிரிட்டிஷ் ராஜ்யத்தில் பிரிட்டிஷாரை மட்டுமே நம்பியிருந்தால் இந்த இந்தியாவை அவன் வசப்படுத்தியிருக்கவே முடியாது, ஏதோ ஒன்றில் தலையாட்டி அவனுடன் இணைந்த பெரும் இந்திய மந்தைகளின் ஒரு பகுதியே அவனுக்கு அவன் வேலையை எளிதாக்கி இருந்திருக்கிறது!

பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயன் கற்றுக் கொடுத்துப் போனதை இந்திய அரசியல்வாதிகள் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டார்கள்!

செல்லரித்துப் போன அரசியல் சட்டங்களை இன்னமும் மாற்ற, மேம்படுத்த நம்முடைய அரசியல்வாதிகளுக்கு மனமில்லை, சட்டம் படித்த கூட்டமும், செயல்படுத்தும் கூட்டமும் இந்த இந்திய அமைப்பில் மந்தையின் ஒரு பகுதிதான், பிரிட்டிஷ் ராஜ்யத்தில் ஒரு மந்தைத் துணைபோனது போலவே, சில நூறு அரசியல்வாதிகளின் தவறுகளுக்குப் படித்துப் பதவியில் இருக்கும் மனங்களும், படிக்காமல் அரிவாள் தூக்கும் மூளைமழுங்கடிப்பட்ட மனங்களும் ஒன்று கூடுகிறது, இந்த மந்தைகளுக்குத் தாம் வெட்டும் குழி, தமக்கே வருங்காலத்தில் வரும் என்பது இன்னமும் உரைக்காததுதான் வருத்தம்!

"ஒன்றை செய்யமுடியவில்லை என்றால் விலகியிரு!" என்பது சரியான அறிவுரைதான், ஓட்டுபோடவேண்டிய நாட்களில் ஓட்டுபோட்டிருக்க வேண்டும், யாரையும் தேர்ந்தெடுக்கப் பிடிக்கவில்லை எனில், அதற்கான மாற்றுவழியைச் சட்டம் கொண்டு சரிப்படுத்தி இருக்க வேண்டும், இதில் எதையுமே செய்ய முடியாமல் கையாலாகாத தனத்தைக் கோபத்தை ஆற்றாமையை நாம் எழுதியும் பேசியும் கரைத்துக் கொண்டிருக்கிறோம்! எதிர்க்கட்சி என்ற ஒன்றும் எதிர்ப்பை வலுவாய்க் காட்டாமல் அமைதியாய் இருக்கும்போது மக்களும் அமைதியாய் இதையெல்லாம் வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேறு வழி ஏது?

ஒடுக்கப்பட்டவனைக் கைதூக்கி விட்டிருக்க வேண்டும், பேதங்களைக் கடந்து நீயும் மனிதனே என்று சக மனிதர்களிடம் நேசம் பாராட்டி இருக்க வேண்டும், பல கோடி மக்கள் ஒன்றுகூடி நின்றிருந்தால் சில நூறு அரசியல்வாதிகளால் என்ன செய்து விட முடியும், ஆனால் நிதர்சனம் என்னவெனில் ஒருவனை நான்குபேர் ஒன்று கூடி அடிக்கும்போது பல நூறு பேர் அமைதியாய் வேடிக்கைப் பார்க்கிறோம், ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்து நான்குபேர் கொலைசெய்யும், தவறு பெண்ணின் மீதா ஆணின் மீதா என்று தர்க்கங்களில் பிரிந்து நிற்கிறோம், ஒரு குற்றம் நிகழ்ந்தால் ஓங்கிக் குரல் கொடுத்து, தடுக்காமல், வீடியோ பதிவாக எடுத்துப் பரப்பிக் கொண்டியிருக்கிறோம், இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒரு தொகுதி மக்கள் ஆளுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று தங்கள் வாக்குரிமையை விற்க தயாராகிக் கொண்டிருப்பார்கள், அந்த அறியாமையின் விளைவு ஒரு தேசத்தின் மீதே வந்து விழும்! இதுதான் இந்தியாவின் நிலை, இதுதான் மாநிலங்களில் நிலை!

கொள்ளைக்காரனும் கொலைகாரனுமான "ஆங்கிலேயன் நல்லவன்" என்று நினைக்குமளவுக்கு இறங்கியிருக்கிறது இந்தியாவின் ஆட்சியாளர்களின் ஆட்சிமுறை! எத்தனை பணம் எத்தனை அதிகாரமிருந்தாலும் ஒன்றும் உதவிடாது என்று அந்த 75 நாட்கள் எல்லோருக்கும் உணர்த்தியிருக்கும், அதை அரசியல்வாதிகள் மட்டும் இன்னமும் உணராதது வருத்தமே! வருங்காலத்தில் ஓர் அரசியல் மாற்று நிச்சயம் வரும், மாணவர்கள், இளைய சமுதாயம் களமிறங்கும், அப்போது அவர்களைப் படித்த படிக்காத கூலிப்படை எந்திரங்கள், அதிகார மட்டங்கள் அழுத்தி விடாமல் இருக்க மக்கள் ஒன்று கூடி நிற்க வேண்டும், மாற்றம் வரும்! தமிழகம் ஒளிரும்!
#SaveTN

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...