Thursday 2 April 2015

பிச்சையெனும் அவலம்!



அவசரக் கதியில் வாகனங்கள் விரையும் திருவான்மியூர் சாலையில், அவ்வப்போது கண்ணில் பட்ட மூன்றரை வயது குழந்தை ஒன்றை, நேற்று வாகனத்தில் கடக்கும் போது மிக அருகில் காண நேரிட்டது, நின்று நிதானிக்க அவகாசம் தராத வாகனத்திரளில், அந்தக் குழந்தையின் அழுக்கடைந்த ஆடைகளும் கோலமும் ஏதோ ஓர் இம்சையை உள்ளுக்குள் அழுத்திச் சென்றது, நாங்கள் கைகோர்த்திருக்கும் சில காப்பகங்களில் ஒன்றைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண் குழந்தையின் நலனுக்கு எங்களுடன் ஒத்துழைக்குமாறு  பேசி, அலுவலகக் குழுவின் உதவியோடு அந்தக் குழந்தையைத் தேடிச் சென்றால், ஓர் அரைமணி நேர இடைவெளியில் அந்தக் குழந்தை அங்கில்லை!

 அங்கிருந்த ஒரு போக்குவரத்து அதிகாரி, "ஏன் அந்தக் கும்பலைத் தேடுகிறோம், யார் சொல்லி எங்கள் குழு அவர்களைத் தேடுகிறது" என்று பதட்டத்துடன் கேள்விக் கேட்டதை அறிந்த போது, அவரின் ஏதோ ஒரு வருமானம் பாதிக்கக் கூடாது என்ற பதட்டம் மட்டுமே புரிந்தது, காப்பகத் தோழர்கள் அந்தக் குடும்பத்தை இன்று தேடிக் கண்டுப்பிடித்து, அவர்களிடம் பேசியபோது, ஏதோ ஒரு வடமாநிலத்தில் இருந்து அவர்கள் வந்திருப்பதாகவும், கணவர் இறந்து விட்டதால் இங்கே பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்துவதாகவும் சொல்ல, அந்தப் பெண்ணின் குழந்தையை நாங்கள் காப்பகத்தில் சேர்த்து அந்தக் குழந்தைக்குப் புகலிடமும், நல்ல கல்வியும் தருவோம், அவர்கள் குழந்தையைப் பார்த்துச் செல்லலாம் என்று எத்தனை எடுத்துக்கூறியும் அந்தக் கும்பல் மறுத்துவிட்டது........கனரக வாகனங்கள் விரையும் சாலையில், விபத்து பற்றிய பயமில்லாமல், குழந்தையின் உயிரைப் பற்றிய அக்கறையில்லாமல், மூன்று வயது பெண் குழந்தையை யாருடைய துணையும் இன்றிப் பிச்சை எடுக்க வைக்க இருக்கும் மனது, அந்தக் குழந்தைக்கு வரும் கல்வி வாய்ப்பை ஏற்பதில் இல்லை.

ஓர்  ஆய்வின்படி இந்தியாவில் நாற்பது லட்சம் பிச்சைகாரர்கள் இருக்கிறார்கள் (லஞ்சம் கேட்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் தவிர்த்து) அதில் தோரயமாக அறுபதினாயிரம் பேர் தலைநகரில் (டெல்லி) இருக்கிறார்கள்,

நாடெங்கும் பிச்சை எடுக்கும் கும்பல், குழந்தையை வைத்து வருமானம் தேடும் போக்கு பெருகிக் கொண்டே இருக்கிறது, சக மனிதர்கள் என்று நாம் சொல்லும் தீர்வையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.......இனி என்ன செய்வது? எப்போதும் போல் பிச்சையிட்டு கடந்து செல்வதா? இல்லை பிச்சை மறுத்து நம் மனதை வதைத்துக் கொள்வதா?

இதுபோன்ற எந்தக் கொடுமைக்கும், மண்சோறு சாப்பிட்டு, அலகு குத்தி காவடி தூக்கி என்று கோவில்களில் அலைமோதும் அமைச்சர்கள் கூட்டம் ஏதும் செய்யாது,காவல்துறையும் சட்டமும் கூட ஏதும் செய்யாது ....குறைந்தபட்சம் மோடி ஜி, இவர்கள் எல்லோரும் இந்திதான் பேசுகிறார்கள், தமிழ் பேசும் மடையர்கள் தாம் உங்களுக்கு ஓட்டுப் போடவில்லை, ஒட்டுப்போட்ட இந்த இந்தியர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
 ஆப் கி பார் ...ப்ளீஸ் இந்தப் பிச்சைகாரர்களையும் கொஞ்சம் பார்

 (புகைப்படம்: கூகிள்)
 



No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!