Thursday, 9 April 2015

இது பூக்களின் சுயத்துக்காக!


சுயம் என்பது எல்லோருக்கும் உண்டு, அது பெரியவர்கள் என்றாலும் குழந்தைகள் என்றாலும்!

1. ஆசையாய் ஓடிவரும் பிள்ளைகளிடம், தள்ளிப் போ இம்சைப் படுத்தாதே  என்று நீங்கள் தள்ளிவிடும்போது, நீங்கள் எதிர்கொள்பவர்கள் உங்களைத் தள்ளிவிட்டால் உங்களுக்கு எப்படி வலிக்குமோ அப்படித்தான் அவர்களுக்கும் வலிக்கும்

2. ஏதோ ஒரு தேவையை எதிர்நோக்கி உங்களிடம் கேட்க வரும் பிள்ளையை, பொய்யான உங்கள் காரணங்களுக்காக, அந்தத் தேவையைக் கேட்காமல் நிராகரிக்கும் போது, நீங்கள் எதிர்கொள்ளும் கையறு நிலைப் போல அவர்களுக்கும் அது நிகழும்

3. அன்பும் அரவணைப்பும் உங்களிடம் இருந்து கிடைக்கவில்லையென்றால் வளரும்போது அது கிடைக்குமிடம் நோக்கி பிள்ளைகளின் மனம் நகரும், நன்மையோ தீமையோ ஒரு விதத்தில் அந்தச் சூழ்நிலைக்குச் சூத்திரதாரியும் நீங்கள்தான்

 4. ஆசையாய் பேச வரும் பிள்ளைகளுக்கு அலுப்பும் சலிப்புமாய்ப் பதில் சொல்லி ஒதுக்கி நீங்கள் தள்ளும்போது, பிற்காலத்தில் நீங்களும் ஒதுங்க நேரிடும்

 5. கொடூரமாய் உறவுகளைச் சித்தரிக்கும் தொலைகாட்சித் தொடர்களில், மட்டமான திரைப்படங்களில், அனாவசிய அரட்டைகளில், வீண் விவாதங்களில், புரளி பேசும் தருணங்களில், நீங்கள் ஊன்றி திளைத்து, பிள்ளைகளை நிராகரித்து, அவர்களின் பிற்பாடு நடத்தையையும் ஒழுக்கத்தையும் நீங்களே தீர்மானிக்கிறீர்கள்

 6. புகையும் போதையும் சுகமென வாழும் தகப்பனே தன் பிள்ளையின் ஒழுக்கத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எமனாகிறான்

7. பிள்ளைகள் முன் சண்டையிட்டுக் கொள்ளும் பெற்றோரை ஒருநாளும் தம் நட்பாகக் குழந்தைகள் ஏற்றுக்கொள்வதில்லை 

 8. அன்பில்லாமல் உணவு படைக்கும் பெற்றோருக்குப் பின்னாளில் பிள்ளைகளிடம் இருந்து எந்தப் பாசமும் கிடைக்காது

9. வேண்டிய போது குழந்தைகளுக்கென நீங்கள் ஒதுக்காத நேரத்தை, பின்னாளில் நீங்கள் எத்தனை தர முயன்றாலும் வளர்ந்த பிள்ளைகள் அதை ஏற்காது, பிள்ளைகளின் மொழியைக் கேட்க நேரம் மறுத்த பெற்றோரின் நேரத்தைப் பற்றிப் பிள்ளைகளும் பிறகு கவலைப்படுவதில்லை

 10. நான்கு பேர் முன்னியிலையில் அல்லது நான்கு சுவற்றின் இடையில், எந்தச் சூழ்நிலையிலும் பிள்ளைகளை அடித்து, திட்டி காயப்படுத்தாதீர்கள், தவறுகள் இயல்பு, நீங்கள் தவறும்போது மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தினால் உங்களுக்குப் பிடிக்காதோ அதுபோலவே பிள்ளைகளிடம் நடந்து கொள்ளாதீர்கள்!

11.  பூக்களுக்குக் கைகால் முளைத்தது போல் இருக்கும் அவர்கள் உண்மையில் உருவில் சிறிய மனிதர்கள்தாம், அவர்கள் காயப்பட வேண்டாம், அவர்களை வழிநடத்த நல்ல உணவோடு, சிறந்த கல்வியோடு உங்கள் அன்பையும் பரிவையும், பாதுகாப்பு உணர்வையும் மட்டுமே அவர்கள் வேண்டுகிறார்கள்!

12. அன்பு செய்யுங்கள் அவமதிக்க வேண்டாம்!

1 comment:

  1. அருமை சகோதரி! நன்றிகள்

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!