Wednesday 4 May 2016

மரணமெனும் விடுதலை


நடு இரவில்
நடுமார்பில் நறுக்கென
தைத்த வலியை
யாரிடம் சொல்வதென 
யோசிக்கையில்
 பூட்டிய கதவுகளின்
 பின்னே இருந்தது
 பூட்டிய மனங்களே யென
உணர்ந்தபோது
அவனுக்கு  
 வியர்க்க ஆரம்பித்திருந்தது 

 உற்றத்தோழனிடம்
 உரைக்கவும் மனமில்லை
 அவனுக்கு வெற்றிடமில்லை
 இவன் போனால் இன்னொருவன் 

 உறவுகளிடம் கடனில்லை
 அவர்களுக்கும் சுமையில்லை
 பதினாறு நாள் காரியத்தில்
 எல்லாம் கரைந்துவிடும் 

அப்படியும் இப்படியுமாக
 ஒவ்வொரு கதவுகளையும்
 அந்தக் கடைசி நிமிடங்களில்
 மனதின் வழியே திறந்து பார்க்கிறான்
 தோற்ற பாடம் முதல்
 கற்ற  பாடம் வரை
 அந்திமத்தின் நிழல்கள் படிகிறது 

 தனித்திருந்த அந்த இரவின் இருளில்
 பின்னோக்கியக் காட்சிகளை விட
 மரணம் அத்தனை பயங்கரமாய் இல்லை
 அவனுக்கு 

 வாய்க்கு ருசியாய் ஓர் உணவும்
 காதுக்கு இனிமையாய் ஒரு பாடலும்
 காதலில் தோற்காத ஒரு பொழுதும்
 சாய்ந்து கொள்ள ஒரு தோளும்
 இனி வந்தாலும் அவனுக்கு நேரமில்லை 

 மனதில் தட்டிய கதவுகள் அத்தனையும்
 சுயநலக் கூட்டுக்குள் ஒடுங்கியிருக்க
 அவனுக்கு மூச்சிரைத்தது
 அவனின் வேதனை பொறுக்காமல்
 அவனின் ரத்தம் மட்டும் இதயம் விட்டு
 மூக்கின் வழி எட்டிப்பார்க்க
 ஒரு கடைசிப் புன்னகையில்
 உயிர்விட்டான் அவன்
 விடியலில் திறக்கப்போகும்
 அத்தனை கதவுகளுக்காகவும்


 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!