Wednesday 4 May 2016

மறதியே_கொடை‬

அலைக்கற்றை ஊழலில்,
கும்பகோண மகாமகத்தையும்,
கல்யாண அட்டகாசத்தை மறந்தோம்,
பின்பு பத்திரிகை அலுவலக எரிப்பில்
உயிரிழந்த ஊழியர்களை மறந்தோம்,

ஒற்றைக்குடும்பம்,
தமிழ்நாட்டின் கோடீஸ்வர
முதலாளிகள் ஆனதை மறந்தோம்,
பேருந்து எரிப்பில்
உயிரிழந்த மாணவிகளை மறந்தோம்,

வயதில் மூத்த மருத்துவர்
அவமதிக்கபட்டதை மறந்தோம்,
பள்ளிக்குழந்தைகள்
உயிரிழந்ததை மறந்தோம்,
பள்ளிக்கல்வியின்
குறைபாடுகளை மறந்தோம்,
சமஸ்கிருத வாரம் கொண்டாடியதை
திருவள்ளுவர் சிலையில் மறந்தோம்,

ஈழப்படுகொலைகளை மறந்தோம்,
ஒருமணி நேர
உண்ணவிரதக் கூத்துக்களை மறந்தோம்,
சொத்து வழக்குகளை மறந்தோம்,
தொழில்கள் நலிந்து போனதை மறந்தோம்,
விவசாயிகளின் தற்கொலைகளை மறந்தோம்,
9000 கோடியை
எளிதில் இழந்ததை மறந்தோம்,

வருமானத்தின் சேமிப்புத்தொகையை
திரும்பப்பெற நிர்ணயித்த
வயதுவரம்பு கேலிக்கூத்தை மறந்தோம்
கூடங்குளத்தை மறந்தோம்,
கெய்யிலுக்கு இட்ட கையெழுத்தை மறந்தோம்,
நியூட்ரினோவை மறந்தோம்,

மக்களுக்கு எதிராக
உதிர்த்தப் பொன்மொழிகளை மறந்தோம்,
பெட்ரோல், டீசல், பால், பேருந்து
கட்டண உயர்வுகளை மறந்தோம்,
போபர்ஸ், சவப்பெட்டி,
ஆதர்ஷ் வீடுகள் என எல்லாவற்றையும் மறந்தோம்,

கொலைகள், ஊழல்கள், கொள்ளைகள்
என அவ்வப்போது மறந்தோம்
இவர்கள் அவர்கள் என எல்லோரும்
நாம் தண்ணீரில் மூழ்கியபோது
ஓடிப்போனதையும் மறந்தோம்

கழுத்தைப்பிடித்து வரிகளை வசூலித்து
மலிவான தரமற்ற பொருட்களில்
இலவசமானது நம்
மானமென்பதையும் மறந்தோம்

அட மறந்தால் என்ன?
அடிக்கும் வெயிலில் நாம்
மூழ்கடித்த வெள்ளத்தை
மறப்பது இயல்புதான்
இந்த வெயிலில் நிகழும்
மரணங்களை
பின் ஒரு பூகம்பத்திலோ
ஆழி வெள்ளத்திலோ
மறக்கப்போவதும் அப்படித்தான்

மரங்கள், மலைகள் வளங்கள்
அழிந்து கொண்டியிருக்கும் தேசத்தில்
வண்ணத்திரை ஊழியர்களின்
சந்தர்ப்பவாத அரசியல் அறிமுகத்தில்
நாம் எல்லாவற்றையும் மறப்போம்

 குடிக்க தண்ணீர் இல்லாவிட்டாலும்
சாராயம் நிறைந்திருக்கும் போதையில்
நாம் மதியை இழப்போம்
சாதியும் மதமும் கொம்பு சீவிவிட்டு
வருகையில் நாம் உயிரையும் இழப்போம்

இந்த தேர்தலில்
வருகிறவர்கள் வரலாம்
இது இலவச ஏல பூமி
பாடங்களை பள்ளியில் மட்டுமல்ல
வாழ்க்கையிலும்
மறந்துப்போகும் மனிதர்கள் நிறைந்த பூமி

எங்கள் ஒருவிரல் ஆயுதத்தை
நாங்கள் உணரும்வரை
எங்கள் முதுகெலும்பு நிமிரும்வரை
வருகிறவர்கள் வரலாம்
அதுவரை எங்களின் (மக்களின்) ‪#‎மறதியே‬
உங்களின் (அரசியல்வாதிகளின்) கொடை!!!
‪#‎மறதியே_கொடை‬

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!